சங்கரின் காதல் - 2

சங்கரின் காதலைச் சொன்னதில்
எனக்கு கடுமையான அதிர்ச்சி!
ஒருபக்கம் என்னடாது இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு எடுத்துருக்கானேன்னு !
மறுபக்கம்..இவனுக்கெல்லாம் காதலிக்க பொண்ணு கிடைக்குதே, நாமளும்தான் இருக்கோமேன்னு புகைச்சல் வேற !

சரிடா...இருந்தாலும் இதெல்லாம் தப்புடா ! நீ மரியாதையா அந்தப்பொண்ணை அவுங்க வூட்டுல விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையப்பாருன்னு லேசான வில்லத்தனத்துடன் நான் சொல்ல,

பரவாயில்ல மாப்புள ..! செஞ்சது செஞ்சுட்ட ! நல்லபடியா போய்ட்டுவான்னு என் நண்பன் சொல்ல...

சங்கருக்கு வந்ததே கோபம்..
என்னது? உங்கிட்ட ஆசீர்வாதமோ அட்வைஸோ வாங்கவா நான் வந்தேன்.! நீங்கள்லாம் ப்ரெண்டாடா.. ? நட்புன்னா என்னன்னு தெரியுமா? உங்களுக்கு எங்க தெரியப்போகுது...இந்த வயசிலேயே பிஸினஸ் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கங்கிற திமிரு! சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க! ன்னு அடுத்த அதிர்ச்சி கொடுத்தான்.

என்னது? காசா?

ஆமா ! கிளம்புற அவசரத்துல காசைப்பத்தி யோசிக்கலை! எங்கிட்ட காசு சுத்தமா இல்ல! அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்..? அதான் உங்கிட்ட குடுத்து வச்சிருக்கேன், வாங்கிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்னு அடுத்த குண்டை தூக்கிப்போட்டான்.

காசெல்லாம் தரமுடியாது! - இது நான்!

போனாப்போறான்டா ! ஏதாவது குடுத்தனுப்புவோம்...நம்பளை நம்பி வந்துருக்கான்! - இது என் நண்பன்!

என்னடா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க! மரியாதையா காசைக்கொடுத்து
அனுப்பிவைங்கடா! பெத்த அப்பா அம்மாக்கிட்டகூட சொல்லிக்காம ,வாழலாம்னு ஓடிப்போக உங்ககிட்ட வந்து நிக்கிறேன் பாரு...! என்னையச்சொல்லணும்! என்னமோ உண்மையிலேயே குடுத்துவச்சவன் மாதிரி கோவிச்சுக்கிட்டான்.

நான் பிடிவாதமா மறுத்தேன். டேய் இந்தக்காச வச்சுக்கிட்டு 3 நாள்கூட ஓட்டமுடியாது! அப்புறம் எப்படிடா சமாளிப்ப?

இல்ல..! கோயமுத்தூர்ல எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவுங்க வேலை வாங்கித்தந்துருவாங்க! சமாளிச்சுருவேன்.

சரிடா..வேலயே கிடைச்சாலும் ஒரு மாசம் கழிச்சுத்தானே சம்பளம் கிடைக்கும்...! அதுவரைக்கும் என்ன பண்ணுவ? நான் இப்ப கிளம்பாத....உன்னைய கொஞ்சம் ஸ்டடி பண்ணிக்கிட்டு ஓடிப்போன்னு சொல்றேன்.

டேய் என்னடா இவன் இவ்வளவு விதண்டாவாதமா பேசுறான்..! என் நிலைமையப்புரிஞ்சுக்குங்கடா ! அந்தப்புள்ள காத்துக்கிட்டிருக்கு ! இப்ப உங்க அட்வைஸெல்லாம் வேண்டாம்டா...காசுதான் வேணும்...நண்பன்னா அவனவன் வேன் வச்சு கூட்டிட்டுப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைக்கிறாய்ங்க..நீங்க என்னடான்னா பிச்சைக்காசு(!) 1000 ரூவாய்க்கு அழுவுறீங்க! - நாங்கள் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை குடுக்காதது மாதிரி ராவடி பண்ண ஆரம்பிச்சான்.

என் வாதம் பலவீனப்பட ஆரம்பிக்க, என் நண்பன் காசை எடுத்துக்கொடுத்துட்டான்.

அப்பவும்....என்னமோ அவன் சோத்தில் மண்ணள்ளிப்போட்டமாதிரியே
முறைச்சுக்கிட்டே...போய்ட்டு வரேன்டா..! உன் காசை மணியார்டர் பண்ணி வச்சுடுறேன் னான்.

அப்புறம் அவனை மறந்தே போனோம்....!

7 வருஷத்துக்கப்புறம் , கோயம்புத்தூரில் ஒரு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு உதவி செய்யப்போனப்ப, பாத்திரம் வாங்க ஒரு பெரிய கடைக்குப் போனோம். பாத்திரமெல்லாம் வாங்கிட்டு , பேர் வெட்டணும்னா அங்க வாசல்ல உக்காந்திருக்கிறவர்க்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, பாத்திரத்தைக்கொண்டு போய் வச்சா...பேர் வெட்டுற எடத்தில்...அட..! நம்ம சங்கரு!

பாத்தவுடனே...டேய் ! சங்கரு! எப்படிடா இருக்க?

திடீர்ன்னு எழுந்தான்..என் சட்டையப்பிடிச்சான்..!

நீயெல்லாம் ப்ரெண்டாடா..? நட்புன்னா என்னன்னு தெரியுமாடா?

எனக்கு ஒண்ணுமே புரியலை! என்ன ஆச்சு இவனுக்கு?

ஏண்டா..நாங்கதான் பணம் குடுத்துத்தானே அனுப்பி வச்சோம்!

அதத்தாண்டா சொல்றேன்....ஏன்டா அனுப்பி வச்சீங்க! ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல..! ஓடிவந்து...சரியான வேலை இல்லாம, நாங்க ரெண்டுபேருமே செரமப்பட்டு ....அந்தப்புள்ளயும் வேலைக்குப்போய்,
தெனம் சண்டை போட்டுக்கிட்டு - பொழப்பே நாறிப்போச்சு..! என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களேடா...- இன்னும் பேசிக்கொண்டே போனான்.

அன்னிக்குத்தான் நான் உண்மையிலேயே மண்டை காஞ்சேன்...!

Comments

  1. UNMAIYELEY SINDHIKKA VAITHA KADHAI EN ENDRAL DINAM DINAM NAMMA OORIL NADAKKUM ORU VISHAYAM INGE ARIYAMAI RENDU PAKKAMUM IRUKKUM KADHALIKUM BODHU FIGURA CORRECT PANNITOMNU ULAGATHAIYE MARAKKA VENDIYATHU APPARAM EN VAZHKAI POCHENU AZHA VENDIYATHU

    ReplyDelete
  2. வாங்க உங்களோடு நான்!
    ஆமாங்க !
    ஆனா இதில் நான் அவன் நட்புக்குக்கொடுக்கும் விளக்கத்தை நினைச்சுத்தான் சிரிச்சுப்பேன்.

    ReplyDelete
  3. இது நெச சம்பவமுங்களா கதைங்களா? நெச்மானது மாறியே கீதுங்கோ. நல்லா எழுதி இருக்கிங்க சுரேகா. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ம் என்னத்த சொல்ல அவன் தலைவிதி உங்களுக்கு 1000 ரூவா நட்டம்.

    ReplyDelete
  5. நிஜம்தான் சஞ்சய்..!
    எல்லாம் உங்க ஊர்லதான் க்ளைமாக்ஸே!
    :)

    ReplyDelete
  6. வாங்க சிவா.!
    ஆமாங்க ! 1000 ரூவா நட்டத்தைவிட
    நடுரோட்டில் பாத்திரத்தில் பேர் வெட்றவன் ஏன் சுரேகா சட்டையப்பிடிக்கிறான்னு சொந்தமெல்லாம் கூத்தடிச்சதுதான் ஹைலைட்!

    ReplyDelete
  7. அச்சச்சோ பாவம் அண்ணா :((

    ReplyDelete
  8. வாங்க ஸ்ரீமதி..!

    ஆமா. நாந்தான் பாவம்!
    :)

    ReplyDelete
  9. போச்சா போச்சா ஆயிரம் ரூபாய் போச்சா

    ReplyDelete
  10. அடங்கொன்னியா ...!!! எங்கியோ போற குப்புசாமி ... எம்மேல வந்து துப்புசாமி ..... ங்குற கதையால்ல இருக்குது.....!!! சரி ... இதுவும் ஒரு நல்ல அனுபவம் உங்குளுக்கு....!!!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !