சுகம் எங்கே?


கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம்.

இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார்.

ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல்.
இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார்.
இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ!


சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது.

ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சமூகப் பிரசங்களில் காலம் கழிப்பவர். குடும்பத்தைப்பற்றி சிறிதும் நினைப்பதில்லை. மனைவியை இழந்தவர். மீரா, பாலு என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. ஆனந்தனும் முத்தண்ணாவும் தங்களது தாயுடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். முழுக்குடும்பமும் ஆனந்தனின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

ஆனந்தன் ஒரு வேலையாக பயணிகள் படகில் செல்லும்போது, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயலும் உஷாவைக்காப்பாற்றுகிறான். அவளுடன் பேசி தன் வீட்டுக்குக்கூட்டி வருகிறான். உஷா சிறுவயதிலேயே பெற்றோரையும் , திருமணமானவுடனே கணவனையும் இழந்து, மைத்துனரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை முடிவெடுத்தவள். அன்றிலிருந்து ஆனந்தனை தெய்வமாகவே வழிபட ஆரம்பித்துவிடுகிறாள். உள்ளத்துக்குள் உண்மையான காதலும் துளிர்க்கிறது.

ஆனால், ஆனந்தனுக்கு, முத்தண்ணா தான் பிரசங்கம் செய்யுமிடங்களில் பார்த்த புத்திசாலிப்பெண் மாணிக்கத்தை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அது ஆனந்தனின் சம்மதத்துடன் நடந்தும் விடுகிறது. ஆனந்தன் ரசனை மிக்கவன். மாணிக்கமோ நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பானவள். பிரசங்கி, அதிகம் படித்த மமதை கொண்டவள். அவள் ஆனந்தனை இம்மியளவும் மதிக்காமல், அவனது ரசனையான அணுகுமுறைகளை, தன் உணர்வால் பார்க்காமல், அறிவால் பார்த்து முட்டாள்தனமென்று சொல்லி அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். உஷாவின் இருப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி அவளை அவமானப்படுத்துகிறாள். ஆதலால், உஷா ஒரு மகளிர் விடுதியில் போய் தங்கிக்கொள்கிறாள்.

இந்நிலையில், ஆண் வர்க்கமே தனக்கு அடிமை என்று தன் அழகில் பெருமை கொண்ட சஞ்சலா என்ற நடிகையை இன்ஷூரன்ஸ் பாலிஸி விஷயமாக ஆனந்தன் சந்திக்கிறான். அவனது அலட்சியம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவனை வசியம் செய்ய தன்னாலான எல்லா முயற்சிகளும் எடுத்து மயக்கிவிடுகிறாள்.

மாணிக்கத்துக்கு ஒரு செல்வந்தரான, படித்த நண்பன் தனஞ்செயன். அவனும் சேர்ந்துகொண்டு ஆனந்தனின் குடும்பத்தையே அவமதிக்கிறார்கள். இதை முத்தண்ணா மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அதே தனஞ்செயன் சஞ்சலாவின் வீட்டுக்குள்ளும் தன் செல்வத்தை வைத்து நுழைந்து, ஆனந்தனை சஞ்சலாவை வைத்து கேவலப்படுத்துகிறான்.

இந்நிலையில், சஞ்சலாவே கதி என்று ஆனந்தன் மதுவின் பிடியில் மயங்கிக்கிடக்க, இதை அறிந்த உஷா, அவனை சஞ்சலாவின் வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறாள். ஆனந்தன் ஒரு குடிசைப்பகுதி மக்களுக்கு உதவும் வக்கீலாக உருவெடுக்கிறான். இருவரும் அதே குடிசைப்பகுதியில் புதிய வாழ்க்கை வாழத்துவங்குகிறார்கள். என்றாவது மாணிக்கத்துக்கு ஆனந்தனை தாரை வார்க்க வேண்டியிருக்கும் என்று உஷா பயந்துகொண்டே இருக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

அதில் தனஞ்செயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், இப்போதுதான் ஆனந்தன், உஷாவின் நற்பண்புகள் தெரியவந்ததாகவும், சுகம் என்பது அறிவில் இல்லை என்பதைப்புரிந்துகொண்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ்வதே நியாயம் என்றும், தனக்குப்பிறக்கும் குழந்தைக்கு ஆனந்தன் அல்லது உஷா என்றே பெயர் வைக்கப்போவதாகவும் எழுதியிருக்கிறது என்று முடிகிறது நாவல்.

இந்தக்கதையில் பல்வேறு யுக்திகளை மிகவும் அற்புதமாகக்கையாண்டிருக்கிறார் காண்டேகர். அவை..... .


(தொடரும்)

Comments

  1. பொறுமையா கதை படிக்கும் காலம் நேரம் வாய்க்கனும்.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !