பொருள் ஒழுங்கு!

நம்ம மொத்த வாழ்நாள், சராசரியா 80 ஆண்டுகள்ன்னு வச்சுக்கிட்டா தூங்குறதில் சுமார் 30 ஆண்டுகள் போயிடும்! மீதமிருக்கும் 50 ஆண்டுகளில் நம்ப வேலை நேரமா சுமார் 15 ஆண்டுகள் போயிடும். அப்புறம் குளிக்க, சாப்பிட, சொந்த வேலைகள் பார்க்கன்னு தனித்தனியா கணக்குப்போட்டுக்கிட்டே வந்தா ஒவ்வொண்ணும் ஒரு கணிசமான இடத்தைப்பிடிச்சுக்கும். இந்த பட்டியலில்
மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளைப்பிடிச்சுக்கிற ஒரு தேவையில்லாத விஷயம் இருக்குன்னு புள்ளிவிபர அறிஞர்கள் கண்டுபிடிச்சுருக்காங்க! அது எது தெரியுமா? நாம் ஏதாவது ஒரு பொருளை இடம் மாத்தி வச்சுட்டு தேடுறதுக்கு செலவழிக்கும் நேரம்தான்!

மொத்த வாழ்நாளில் 3 ஆண்டுகளை நம்முடைய ஒரு தவறுக்காக செலவழிக்கும் நேரத்தில் என்னவெல்லாம் செய்யலாம்? ஆனா அதை நாம் ஜஸ்ட் லைக் தட் புறந்தள்ளிட்டுப் போயிடுறோம்.

ஏன் இப்படி நடக்குது? ஒரு பொருளின் தேவையும் , தேவையின்மையும் நமக்கு முதலில் தெரியலை! ஜப்பானிய தொழில் நேர்த்தி ஒண்ணு இருக்கு அதுக்கு 5எஸ் ன்னு பேரு!

செய்ரி..செய்ட்டன்...செய்சோ..செய்கெட்ஸு...மற்றும் சிட்சுகே ஆகிய ஐந்துதான் அது! இதில் முதல் இரண்டு விஷயங்களைத்தான் நாம் இப்ப பாக்கப்போறோம்.

செய்ரின்னா தேவையில்லாததை அகற்று! இதுதான் ரொம்ப முக்கியமான அம்சம். நாம் எங்காவது வெளியூர் போயிட்டு வந்தா அந்த பஸ் அல்லது ரயில் டிக்கெட் இன்னபிற காகிதங்களை அப்படியே வைப்போம். அதேபோல் பல்தேய்க்கும் பேஸ்டிலிருந்து, முக க்ரீம் வரை எல்லாப்பொருட்களின் அட்டைப்பெட்டியையும் அங்கங்கே போட்டு வைத்திருப்போம். ஒரு கட்டத்தில் தேவையில்லாத பொருட்கள் நிறைஞ்சு போய் தேவையான பொருட்களை தேட வச்சுடும்.ஒரு பொருள் வாங்கினா அதன் ரசீதை ஓரிடத்தில் பத்திரப்படுத்தாமல் அப்படியே போட்டுட்டு, அந்தப்பொருள் ரிப்பேரானா அதற்கான வாரண்ட்டிக்காக நாம் அந்த ரசீதைத்தேடும்போது வீடே அமளி துமளியாகும். ஒரு காலகட்டத்தில் நாம் தேடவேண்டிய பொருளின் அடையாளம் கூட மறந்து போயிருக்கும்.!

இப்படித்தான் மொக்கச்சாமி ஒரு கடைக்கு டிவி வாங்கபோனார். உள்ளே நுழைஞ்சதும் இடதுபுறம் பார்த்துட்டு...இந்த டிவி என்ன விலை? ன்னார் . உடனே கடைக்காரர்..உங்க பேர் என்னன்னார். நம்ம ஆளும் பேரைச்சொன்னார். உடனே மொக்கைச்சாமிக்கு டி வி விக்கிறதில்லைன்னார் கடைக்காரர்.! அடுத்தநாள் யாரும் கண்டுபிடிக்கமுடியாத மாறுவேஷத்தில் போனார் மொக்கைச்சாமி. போய் அந்த டிவி என்ன விலை? ன்னார். மறுவிநாடி கடைக்காரர்...யோவ் மொக்கச்சாமி உனக்கு டிவி விக்கிறதில்லை போய்ட்டு வா! ன்னார். மொக்கச்சாமியும் விடலை..ஒருவாரம் கழிச்சு சுத்தமா மொட்டை அடிச்சுக்கிட்டு பக்காவா தன்னை மாத்திக்கிட்டு கடைக்குள்ள போய் இந்த டிவி என்ன விலை? ன்னார். கடைக்காரருக்கு வந்ததே கோபம்..! என்ன மொக்கச்சாமி! எத்தனை தடவை சொன்னாலும் கேக்கமாட்டேங்குற! உனக்கு டி வி விக்கிறதா இல்லைன்னார். மொக்கச்சாமிக்கு ஒரே ஆச்சர்யமா போச்சு! அய்யா கடைக்காரரே..எனக்கு நீங்க டி வி விக்கவே வேண்டாம். ஆனா எப்படி பொசுக்குன்னு நாந்தான் வந்துருக்கேன்னு கண்டுபிடிச்சீங்கன்னு கேட்டாரு! கடைக்காரர் சொன்னாரு! உன்னைத்தவிர வேற எந்த முட்டாளும் இத்தனை தடவை மைக்ரோ வேவ் ஓவனைப்பாத்து டிவி ன்னு நினைச்சு விலை கேட்டதில்லை...ஒரு பொருளை அடையாளமே கண்டுபிடிக்க முடியாத உனக்கெதுக்கு டி.வி ன்னார் ! இப்படி இருந்தா அப்புறம் எப்படி விளங்கும்?

நமக்கு பொருட்களை அடையாளம் வச்சு இனங்கண்டு ஒரு ஒழுங்கா வைக்க பெரிய பயிற்சியெல்லாம் தேவையில்லை. தினசரி அதை ஒரு நடவடிக்கையா செஞ்சுக்கிட்டிருந்தாலே போதும். ஜப்பானிய 5எஸ் இதைத்தான் சொல்லுது!

செய்ட்டன்னா — தேவையானவற்றை ஒழுங்கு படுத்துங்கிறதுதான் அடுத்தது !
தேவையில்லாததை கழிச்சுக்கட்டிட்டாலே தேவையானதை சுலபமா ஒழுங்குபடுத்திடலாம். எது தேவையில்லாதது?ங்கிறதுதான் பெரிய கேள்வி..! இதுக்கு ப்ரண்ட்ஸ் படத்தில் வடிவேலு சொல்லும் பதில்தான் நல்லா இருக்கும். நீ புடுங்குறது எல்லாமே தேவையில்லாத ஆணிதான்!! ன்னுவார். கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க ! அது கட்டாயம் தேவையில்லாத பொருள்தான். அதுக்காக நான் சொன்னேன்னு கடந்த இரண்டு ஆண்டுகளா தொடாத உங்க வீட்டுப்பத்திரத்தை எடுத்து வீசிடாதீங்க!

வீட்டை , அலுவலகத்தை ஒழுங்கா வச்சுக்குறது ஒரு கலை! நாம ஒரு பொருளை கவனமில்லாம போட்டுவிட்டு தேடும்போதுதான், ஆஹா..! அதை ஒழுங்கா வச்சிருக்கலாமோன்னு தோணும். மேலும்

நாளைலேருந்து மிகச்சரியா வச்சுக்கணும்னு திட்டம்போடுவோம். ஆனா அடுத்த நாளும் அதே பொருளைத்தேடுவோம். இப்படி தினசரி பைக் சாவி தேடும் வீடுகள் நம் நாடு முழுதும் இருக்கு!

தேவையானவற்றை ஒழுங்குபடுத்த, அலுவலகம் மாதிரியே வீட்டிலும் கோப்புகளைப்பயன்படுத்தலாம். எல்லாப்பொருட்களுக்கும் அடையாளப்பெயர் ஒட்டி வைக்கலாம். வீட்டில் உள்ள சின்னவர்களையும்

அப்படியே பழக்கலாம். வீடா மியூசியமான்னு கேட்கப்படும் கேள்விக்கு ஒரு பதில் இருக்கு! மியூசியம்... பார்வைக்கு! ஆனால் வீடு...பயன்ப்டுத்த ! ஆக அடுக்குவதுதான் சிறந்தது.

இந்த ஒழுங்கின் வெற்றி என்னவா இருக்கணும்னா.. வீட்டிலோ, அலுவலகத்திலோ எந்த ஒரு பொருளையும் அடுத்த பத்துவினாடிகளுக்குள் கையில் எடுக்க வைக்கணும். தளராமல் இதைச்செய்து

வெற்றியும் அடுத்த பத்துவிநாடிகளுக்குள் உங்களை அடைய என் உளமாரந்த வாழ்த்துக்கள் !

Comments

  1. 5S பற்றிய அறிமுகக் குறிப்பு, மிக அருமை!

    தமிழில் இது மாதிரியான அறிமுகப் பதிவுகள் இன்னும் வளரவேண்டும், படிப்பவருக்குப் பயன்தரவேண்டும்!

    மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  2. வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!

    உங்கள் அன்புக்கு மிக்க நன்றி!

    5எஸ் பற்றி நீண்ட நாட்களாக நிறுவனங்களுக்கு நான் பயிற்சியளித்து வருகிறேன்.
    உங்கள் அக்கறைக்கு மிக்க நன்றி!

    ReplyDelete
  3. ரொம்ப நல்ல, என்றைக்கும் பயனுள்ளதாயிருக்கிற பதிவு சார்..
    வீட்டுப்பத்திரம் உவமானம் உங்களுக்கே உள்ள நகைச்சுவை டச்.. :)

    ReplyDelete
  4. ஆஹா இவ்வளவு விஷயங்களையும் இவ்வ்ளோ நாள் எங்கே வைத்திருந்தீர்கள்...நிறைய எழுதுங்க சார்! மற்ற S பற்றியும் அறிய ஆவல்!

    ReplyDelete
  5. வாங்க அன்புடன் மணிகண்டன்!

    மிக்க நன்றி!

    ReplyDelete
  6. வாங்க அன்புடன் அருணா!

    அதான் சொன்னேனே...ஓடுமீன் ஓட..என்று..!

    நீங்க நினைக்கிற அளவுக்கெல்லாம் சரக்குள்ள ஆளில்லை நான்! உங்க கால்குலேசன் ரொம்ப தப்பு!

    சும்மா ஜல்லியடிச்சுக்கிட்டிருக்கேன்.! :)

    ReplyDelete
  7. //கடந்த 6 மாதமாக எந்தப்பொருளை பயன்படுத்தலைன்னு பாருங்க ! அது கட்டாயம் தேவையில்லாத பொருள்தான். அதுக்காக நான் சொன்னேன்னு கடந்த இரண்டு ஆண்டுகளா தொடாத உங்க வீட்டுப்பத்திரத்தை எடுத்து வீசிடாதீங்க!//
    இதை மிக ரசித்தேன்.

    5 எஸ் பற்றி எதும் தெரியாது, ஓரளவு நீங்கள் கூறும் ஒழுங்கை வாழ்வின் கடைப்பிடித்து, வாழ்பவன்
    எனும் வகையில் தங்கள் பதிவு
    மகிழ்வைத் தந்தது.
    அனைவரும் பின்பற்ற வேண்டியது.

    ReplyDelete
  8. Hi Suren,

    We do follow 5S but at times its pain to follow the rules.....

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !