பெயருக்கு முன்னால்



 

           பிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு.
     அதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும். 

எங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்! பள்ளியில் சுந்தர்…! 

     வீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா..! அடுத்தவீடுதான் .என்று சொல்லி, வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

           அனேகமாக எங்கள் தெருவில் எல்லோருக்கும் அந்தப்பிரச்னை இருந்தது. எனக்காவது பரவாயில்லை. இரண்டு பெயர்களும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். சிலருக்கு வீடுகளில் கூப்பிடும் பெயரில் பல்வேறு ஆச்சர்யங்களும், அதிர்ச்சியும் ஒளிந்திருக்கும்..


எங்கள் வீட்டுக்கு வைக்கோல் கொண்டுவரும் பெரியவரைக் கூப்பிடும் பெயர் கூளார்.! எதிர்வீட்டு பெரியம்மாவை அழைக்கும் பெயர் அக்கம்மா ! அவரின் அக்கா பெயர் பட்டம்மா! அவர்களின் இயற்பெயர் அனேகமாய் நாங்கள் அறிந்திருக்கவே இல்லை.

     பெயர் வைப்பது வைபோகமாகக் கொண்டாடப்பட்டாலும், ஆண்டாண்டு காலம் நம்மை அடுத்தவர் அழைக்கும் பெயர் கணநேரத்தில் வைக்கப்பட்டு விடுகிறது. காரணப்பெயர் நிலைத்துப்போய் , காகிதப்பெயர் ஒளிந்து நிற்கிறது. அதையும் மீறி பதிவுலகம், எழுத்து என்று வரும்போது, நாமே ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறோம்



  சில நேரங்களில் காரணப்பெயரை வேண்டாமென்று நினைத்தாலும், இறுக ஒட்டிக்கொண்டுவிடுகிறது. பின்னர் அதுவே பழகிப்போய் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் வந்துவிடுகிறது.. சில நேரங்களில் காரணமில்லாத பெயர்கள் காலாகாலத்துக்கு வருகிறது.

   எங்கள் அத்தையின் மூன்றாவது மகனுக்கு ‘இண்டாயி’ என்று பெயர்..! இன்றுவரை அதற்கான சரியான அர்த்தம் எங்கள் யாருக்கும் தெரியாது. இப்போதுதான் அவன் இயற்பெயர் சொல்லிக்கூப்பிடுகிறோம்.

என் நண்பன் ஒருவனை நாங்கள் அழைக்கும் பெயர் – அப்புரு, அவன் உண்மையான பெயர் அந்தோணி ராஜேந்திரன். 

    இன்னொரு நண்பனை மாரிமுத்து என்று அன்போடு அழைத்துவந்தோம். ஒருமுறை திருவிழாவுக்கு வாங்கடா என்று அவர்கள் கிராமத்துக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வினையை வீட்டுக்கு அழைத்துச்சென்றான். ஆரம்பத்தில் வீட்டில் அனைவரிடமும் கண்ணைக்காட்டிக்கொண்டே இருந்தான். அவன் அக்கா ஒரு முறை..கூ..மாரிமுத்து ! என்று அழைத்ததை கவனித்தாலும் அர்த்தம் தெரியவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு நானும், இன்னொரு நண்பனும் ஊரில் நடக்க ஆரம்பிக்க, எங்களைப்பார்த்து ஒரு பெரிசு..’ கூளையன் கூட்டாளிகளா?’ என்று கேட்டார். நாங்கள் குழப்பமாக, ‘இல்லை! மாரிமுத்து வீட்டுக்கு வந்திருக்கோம் என்றோம். ஓ! இப்படித்தான் பேரு வச்சிக்கிட்டு பள்ளிக்கூடத்துல திரியிறானா அந்தக் கூளையன்? என்று பெரிசு கேட்க, எங்களுக்கு ஏரியலில் துவைத்ததுபோல் 'பளிச்'சென்று விளங்கியது. பின்னர் இரண்டு ஆண்டுகள், மாரிமுத்து என்ற பெயரை அவனே மறக்குமளவுக்கு கூளையனுக்குக் கொடி ஏற்றிவிட்டோம்.

      என் தூரத்து உறவுக்காரப்பையன் ஒருவனை ‘அய்யா’ என்றுதான் அவன் குடும்பம் அழைக்கும். நிறைய குடும்பங்களில் ‘தம்பி’, சின்னவனே, ராஜா, குட்டி என்ற பெயர்கள் மிகப்பிரபலமாக இருக்கும். கொஞ்சம் அன்பான பிள்ளையை ‘சாமீ’ என்று அழைப்பார்கள்.

    கிராமங்களில் அழைக்கும் பெயர்களில் இருக்கும் நையாண்டி உலமறியாதது. பெருமூக்கன், கோழிவாயன், சிலுப்பி, செண்ட்டரு, பாவாடை, சொம்பு, ஊத்தை, புளிச்சட்டி, கிளீனு, எலந்தப்பழம்…இவர்களெல்லாம் நான் சந்தித்த கிராமத்து மனிதர்கள்.! இவர்களது உண்மையான பெயர் இன்றுவரை எனக்குத்தெரியாது.
        
        வட இந்தியக்குடும்பங்களில் மிகவும் வேடிக்கையான பெயர்கள் இருக்கும். ஜிக்கு, பப்லூ, பண்ட்டி, முன்னா, சோனு, புஜ்ஜு என்று அழைக்கும்போது மூன்றெழுத்தில் அவர்கள் காட்டும் அன்பு வியக்கவைக்கும். நான் டெல்லி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, எனக்கு ஒரு வட இந்திய அதிகாரி இருந்தார். அவர் பெயர் சதீஷ் அஹுஜா..! ஆனால் போனில் பேசும்போது ‘மைன் டிங்கி போல்ரஹாஹூம்! என்று ஆரம்பிப்பார். எனக்குச் சிரிப்பாக வரும்.

       நான் தஞ்சையில் வேலை பார்த்தபோது சொல்யூசன் என்ற சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் ஒரு பெரியவர் அறிமுகமானார்.. சிறுவயதிலிருந்தே அந்தப்பெயர்தான் என்றார். யார் வச்சாங்க? என்று கேட்டபோது புன்னகைத்தார். 
   சில மாதங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சென்று பார்த்தேன். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் பேச ஆரம்பித்து, உங்க உண்மையான பெயர் என்ன என்று கேட்டேன். 

        இதுவரைக்கும் யாருமே கேட்கலை! நீயாவது கேட்டியே? பாவம் எல்லாருக்கும் அவுங்க அவசரம். என்றுவிட்டு…’ரமணி’ என்று புன்னகைத்தார். 
 
     ’நான் சைக்கிள் கடையில் வேலை பாத்தப்ப ஒரு புள்ளையப் பாத்தேன். அதுவும்  பாக்கும். ரெண்டுபேருக்கும் பிடிச்சுப்போச்சு! ஏஞ்சொல்லு? அது பேரும் ரமணி! அதூட்டு சைக்கிளைப் பஞ்சர் பாக்க அன்னிக்கு கடையில சொலூஷன் இல்லை. மழைத்தூறல் வேற,! நானே அலைஞ்சு திரிஞ்சு வாங்கியாந்து ஒட்டிக்குடுத்தேன். அது சந்தோசத்துல வரேன் சொல்யூஷன்னு சொல்லிட்டுப் போச்சு! அதான் நானே அந்தப்பேரை வச்சுக்கிட்டேன்.!’ என்றார்.

அவுங்க எங்க ? என்றேன். 

அதெல்லாம் எதுக்கு? நாந்தான் தனியா இருக்கேனே! பத்தாதா? என்றார்.

பின்னர் நான்கைந்து நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, சைக்கிள் கடையைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. பக்கத்துக்கடைப் பையன் சொன்னான். 

‘அண்ணே! விசயம் தெரியாதா? சொல்யூஷன் காலியாயிருச்சு!’

Comments

  1. அன்பின் சுரேகா - ஏதாசும் ஒரு கருவ எடுத்துக்கிட்டு ஒரு இடுகை போடற திறமைக்குப் பாராட்டுகள் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  2. சொல்யூஷன் காலியாகிடுச்சு என திக்கென்று முடித்த விதம் சிறுகதை முடிந்த மாதிரி இருந்தது

    ReplyDelete
  3. வாங்க சீனா சார் ! அன்புக்கு நன்றி!

    ReplyDelete
  4. வாங்க மோகன் குமார்!

    நன்றிங்க!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !