திரைப்பாடல் நினைவுகள்





     

 திரைப்படப்பாடல்கள் இந்தச் சமூகத்தில், நம்முடன் பிணைந்துவிட்டதாகவே உணர்கிறேன். ஏதோ ஒரு காலகட்டத்தில் நமக்கு அறிமுகமான பாடலை இப்போது கேட்கும்போது அதே காலகட்டம் நினைவுக்கு வந்து ஒரு ரம்மியத்தையோ, சோகத்தையோ கிளறிவிட்டுவிடுகிறது.

        நான் சிறுவயதில் பல ஊர்களில் படித்த நினைவுகள் பாடல்களோடு ஒன்றிப்போய் , அந்தக் காலகட்டங்கள் இன்றும் ஸ்லைட் ஷோக்களாகவும்,. சில நேரங்களில் 16mm படங்களாகவும் ஓடுகின்றன.

குழந்தைப்பருவத்தில்.. ‘ என்னடீ ராக்கம்மா..பல்லாக்கு நெளிப்பு’ பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதையே பாடிக்கொண்டிருப்பேன் என்று அம்மா சொல்லுவார்கள். அதிலும் நான் சொல்லும் என் நெஞ்சு குலுங்குலடி..! என்ற வார்த்தைக்காக எல்லோரும் திரும்பத் திரும்பக் கேட்பார்களாம்.

       ’மலர் கொடுத்தேன்..கைகுலுங்க வளையலிட்டேன்’ – இந்தப்பாடலை திருச்சி வானொலி நிலையத்தின் திரைகானம் நிகழ்ச்சியில் கேட்டதும் ..அந்த வளையலிட்டேன் என்ற வார்த்தை உள்ளேயே நுழையாமல்…நான் பட்ட அவஸ்தை..அப்பப்பப்பா…! தனியாகச் சொல்லிவிடுவேன். பாட்டோடு சேர்த்துப் பாடும்போது.. கை குளுங்க என்று வந்துவிடும். பின்னர் அதைச் சரி செய்து, கைகுலுங்க என்றால்…வலையலிட்டேன் என்று வரும்.. பல நாட்கள் அதை வகுப்பறையில் பாடிப்பார்த்திருக்கிறேன். ரத்னாபாய் டீச்சர்.. நான் ஏதோ அறிவியல் பாடத்தைச் சொல்லிப்பார்க்கிறேன் என்று நம்ம்ம்பி விட்டுவிடுவார்கள். பின்னர் நீண்ட நாட்களுக்குப்பிறகு, அந்தப்படம் –திரிசூலம்- கறம்பக்குடி முருகன் தியேட்டரில் பார்க்க நேரிட்டபோது.. அடுத்த கவலை பீரிட்டது.

     சிவாஜி..இந்தப்பாட்டை, மிகவும் அநாயாசமாக பாடுகிறாரே.. அதான் இந்த ஆளை நடிகர் திலகம் என்கிறார்கள் என்று நினைத்தேன். அப்புறம்தான் தெரிந்தது..அந்த அநாயாசத்துக்குச் சொந்தக்காரர் டி.எம்.எஸ் என்று..

       பிறகு.. தகிட ததிமி தகிட ததிமி தந்தானா… என்னைக் கட்டிப்போட்ட பாடல், அதை முதலில் கேட்டது, இலுப்பூரில்  4ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கும்போது , ஒரு சலூன் ரேடியோவில் . அதுவும் பாடிப்பார்க்கவே முடியாமல் பல நாள் என்னை அலைக்கழித்தது.. தகிட தகிமி என்று வரும்.. பின்னதை சரி செய்ய நினைத்தான் ததிட ததிமி என்று வந்து அலைப்பறை செய்யும்.
     
      அந்த சலூன் அண்ணன், கமல் போலவே முடி வெட்டியிருப்பார். அவருக்கு எங்கிருந்துதான் அப்படி ஒரு போஸ்டர் கிடைக்குமோ தெரியாது. அந்தக் காலகட்டத்தில் வெற்றிகரமாக ஓடும் படத்தின் போஸ்டர் , அவரது கடைக்குள் ஒட்டியிருக்கும். அதன்படி சலங்கை ஒலி பட போஸ்டர் ஒட்டியிருக்க, அதில் கமல் காலைத்தூக்கி ஆடும் ஒரு போஸ் இருக்கும். அதைக்காட்டி, இந்தப்பாட்டுல ஆடும்போது எடுத்த போட்டாவைத்தான் நான் போஸ்டராக்கி ஒட்டினேன் என்று சொன்னார். அன்றிலிருந்து அவரையே கமலாக எண்ணி வியக்க ஆரம்பித்தேன். பிறிதொரு நாள் சலங்கை ஒலி பார்க்கும்போதுதான் தெரிந்தது, அந்த போஸ் தகிட ததிமிக்கு ஆடியது இல்லை. நாத வினோதங்களுக்கானது என்று… பயபுள்ள பொய் சொல்லியிருக்கு!

       சங்கீத ஜாதிமுல்லையை மிகவும் லேட்டாகத்தான் கேட்டேன். அப்போது நாங்கள் கறம்பக்குடியில் இருந்தோம். எஸ்.பி.பி என்பவர் மேல் வெறிபிடித்து அலைந்த காலகட்டம் அது..!! அந்தப் பாடல் முதன்முதலில் கேட்ட கதையே மிகவும் நீளம்..!! பள்ளியிலிருந்து, மதிய உணவுக்கு வீட்டுக்கு வந்துவிட்டு, திரும்பச் செல்லும்போது தாமதமாகிவிட்டால், சீனி கடைமுக்கத்திலிருந்து NNL (முன்னால் அதன் பெயர் PTR) பஸ்ஸில் தொற்றிக்கொண்டு பேருந்து நிலையத்தில் இறங்கிவிடுவது வழக்கம். செக்கர் அண்ணன் டிக்கெட்டெல்லாம் கேட்கமாட்டார். அப்படி ஒருநாள் பஸ்ஸில் ஏறிவிட்டேன்…

        ‘திருமுகம் கண்டு பழகுமோ…அறிமுகம் செய்து விலகுமோ? என்ற வரியில் கேட்க ஆரம்பித்து கலக்கி எடுத்துவிட்டது அந்தப்பாடல்..! பாட்டு ரொம்ப பெரிசு..! ஒரு நிமிடப் பயண தூரத்தில் என்ன கேட்டுவிடமுடியும்..? பள்ளிக்கூட பெல் அடிக்கவில்லை.. முடிந்தவரை நின்று கேட்டுவிட்டுத்தான் நகர்ந்தேன். பிறகு அந்தப்பாடலை எங்கெல்லாம் கேட்டேன் என்று ஒரு மிகப்பெரிய பட்டியலே உண்டு.

      குழலூதும் கண்ணனுக்கு குயில்பாடும் பாட்டுக்கேட்குதா? – முதல் முறையே வசீகரித்த பாடல், அதை மிகவும் சிலாகித்து வகுப்பறையில் பேச…என் நண்பன் ஒருவன் தன் வீட்டு டேப் ரெக்கார்டரில் கேட்கலாம் என்று அவன் வீட்டுக்கு அழைத்துச் சென்றான். அன்று மாலை , அவன் அக்கா அந்தப்பாடலை போடவே விடவில்லை. சரியாக 5 மணிக்கு போடச் சொன்னார். நாங்களும் தினம் தினம் கேட்டு ரசித்தோம். சில நாட்களுக்குப் பிறகு, எதேச்சையாக அவர்கள் வீட்டைக் கடக்கும்போது அதே பாடல்..!! நேரம் 5 மணி! அப்புறம்தான் தெரிந்தது.. எதிர்வீட்டு ஆசிரியரின் மகனுக்கும் அந்தப்பாடலை கேட்கப் பிடிக்கும் என்று..!!

     ’தேவதை இளம் தேவி! என்னைச் சுற்றும் ஆவி..!! ‘ இந்தப்பாடல் தென்காசியில் கேட்டது…! அணைக்கரைத் தெருவின் கடைசி வீடு லிப்டன் டீ மாமாவுடையது. அந்த வீட்டு ஹரீஷ் அண்ணன் ஒரு சிறிய பெட்டி ஒன்றிலிருந்து கிளம்பும் ஒயர்களை தனது காதில் வைத்துக்கொண்டு , தலையை ஆட்டிக்கொண்டிருந்தார். அவர் தலையசைக்கும் அழகுக்காகவே நின்று பார்த்துக்கொண்டிருந்தேன். கேக்குறியாடா? என்று அவர் சொன்னதும்.. பாய்ந்து சென்று அருகில் நின்றேன். காதில் வைத்தார்…அப்போது..கேட்ட வரிகள்… ‘’தேவமுல்லையே….!! என்று ஆரம்பித்தது…பின்னர் ஒரு முறை அந்தப்பாடலை…கேசட்டை ரீவைண்ட் செய்து கேட்கவைத்தார். அதன்பிறகு.. நான் வானொலியில் பணியாற்றும்போது தேடித்தேடி மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாவது ஒலிபரப்புவேன். ஆனாலும்..முதல் முறை கேட்ட வாக்மென் அனுபவம் இன்னும் காதுக்குள்ளேயே இருக்கிறது.

      இன்னும் பல பாடல்கள் நினைவுகளை வருடி.. சில நேரங்களில் அந்த நேரத்தில் சாப்பிட்ட உணவுகூட நினைவுக்கு வருகிறது.. அதே வாசனையுடன்..!! அம்மா என்றழைக்காத உயிரில்லையே - பாடல் அறந்தாங்கி அம்மா மெஸ்ஸின் சாம்பார் வாசனையையும் சேர்த்தே வைத்திருக்கிறது. 

ஜுலி ஐ லவ் யூ – தென்காசியில் , நான் கர்ச்சீஃபில் கொட்டிக்கொண்ட பாண்ட்ஸ் பவுடர் வாசனை..!!

தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே ! - இலுப்பூர் ஆர்.ஸி பள்ளியின் மடத்துக்குள் இருக்கும் கொய்யாப்பழ வாசனை..!

    ராசாவே!  உன்னை நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க.. – எங்கள்  லட்சுமிப் பசுவின் கன்றுக்குட்டி வீட்டுக்குள் ஓடிவந்தபோது பரவிய கன்றுக்குட்டி வாசனை இன்னும் நாசிக்குள்…
      


     இன்றும் இந்தப்பாடல்கள் நினைவுகளைக் கிளறி…சில நேரங்களில் சின்னப்பிள்ளையாகவே இருந்திருக்கலாமோ என்று எண்ண வைக்கிறது.

       இதயக்கோவில் படத்தின் அனைத்துப்பாடல்களும் மனதை வருடினாலும், வானுயர்ந்த சோலையிலே - பாடல் மிகவும் நெருக்கமானது. அது எனக்கு பாட்டுப்போட்டியில் முதல் பரிசு பெற்றுத்தந்த பாடல். ! அந்தப்படத்தின் கேசட்டை என் நண்பன் சத்யா வாங்கினான். அவனுக்காக ஒரு ஆம்ப்ளிஃபயர் நான் செய்து தந்தேன். அதைக் கேட்டுவிட்டு, பாப்புலர் சலூனில் இருப்பதுபோல் சில் சில் என்று வரவேண்டும் எனக் கேட்டான். நானும் பல பாஸ்-ட்ரபிள் போர்டுகளை மாற்றி மாற்றி முயற்சி செய்துபார்த்தேன்.  அப்புறம் ச்சில்லிங் எஃபட்டுக்காக ட்வீட்டரும் வாங்கி மாட்டியாயிற்று. மீண்டும் பாப்புலர் சலூன் சென்று கேட்டால், அந்த எஃபக்ட் நம்மிடம் இல்லை. பின்னர்தான் எனக்குத் தெரிந்தது. சலூனில் சப்-ஊஃபரே இல்லை. அனைத்துமே ட்வீட்டர்தான் என்று..!! கடைசிவரை சத்யாவுக்கு சலூன் எஃபக்ட் வரவில்லையே என்று வருத்தம்தான்!


     காரணமே இல்லாமல், வாய் அடிக்கடி முணுமுணுக்கும் பாடல் ஒன்று உண்டு.    பூந்தேனில் கலந்து…பொன்வண்டு எழுந்து..சங்கீதம் படிப்பதென்ன..?  ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு தருணத்தில் நான் முணுமுணுத்துவிடும் பாடல் இது…!  இதன் நினைவுதான் மிகவும் ஆழமானது. இலுப்பூரில் வேல்முருகன் தியேட்டரில் ஏணிப்படிகள் பார்த்துவிட்டு வரும்போது அந்த அக்காவைப் பார்த்தேன். ஷோபா போலவே தெரிந்தாள். இரண்டு நாட்களில் பள்ளியில் சர்க்கஸ் கூட்டிச் சென்றபோது அந்த அக்கா  அங்கு, கம்பியில் நடந்து காட்டிக்கொண்டிருந்தாள். அடுத்த வாரத்தில் இலுப்பூர் பேருந்து நிலையத்தில் அவளும், ஒரு இளைஞனும் பிணமாகக் கிடந்தார்கள். 

   ஒவ்வொரு பாடலும் ஜீவனைக் கட்டிப்போட இதுபோன்ற நினைவுகளும் கயிறாகிறது என்று எண்ணுகிறேன்.



Comments

  1. Superb narration!.Loved your memories!

    ReplyDelete
  2. பூந்தேனில் கலந்து இப்பவும் முனுமுனுக்கற பாட்டு. நீயா நானாவில் ஒரு சமயம் திரைப்படப்பாடல்கள் பத்தி பேசினாங்க. அப்ப அந்த பாடல்களை விட்டா நமக்கு வேறு வழியே கிடையாது. ஆனால் அந்த பாடல்களினால் நமக்கு காதலை, வாழ்க்கையை கற்றுக்கொடுததுன்னு நினைக்கிறேன். அப்படின்னு சொன்னாரு கோபிநாத். நிஜம்தான்னு எனக்கு தோணினிச்சு.

    பதிவு நல்லா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றிங்க!

      ஆமாம்.. நமது பால்யத்தில் நமக்குள் விழுந்த பாட்டுக்கள் மட்டும்தான் நம்மை முணுமுணுக்க வைக்கின்றன..!! இப்போதைய குழந்தைகளுக்கும் அதுதான் நிலை!

      Delete
  3. சூப்பர்.எந்த சூழ்நிலையில் முதல் முதலாய் ஒரு பாடலை கேட்கிறோமோ அது மனசில் பதிந்து விடுகிறது. சில பாடல்களின் அர்த்தம் புரியாமல் சத்தமாய் வீட்டில் பாடி முதுகில் நாலு சாத்து வாங்கியதுண்டு.வெள்ளை புறா ஒன்று போனது கையில் வராமலே என்ற பாடல் என்ன காரணம் என்பது தெரியாமலே எனக்கு மிகவும் பிடிக்கும்.கொஞ்சம் யோசித்துட்டு ஒரு பதிவே போடணும்.

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா..! பதிவாகப் போடுங்க!

      Delete
  4. நான் காலேஜில் படிக்கிறபோது காதலுக்கு மரியாதை...என்னை தாலாட்ட வருவாளா கேட்டேன்...அது என் வாழ்க்கையே அமைத்து விட்டது...காதலை பெற்றுத்தந்த பாடல்...ஏர்டெல் காலர் ட்யூன் ஆரம்பித்த முதல் இன்று வரை எனது மொபைலில் அதுதான் ஒலிக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். எல்லோருக்கும் ஏதாவது ஒரு பாடல், வாழ்வோடு ஒன்றிவிடுகிறது. உங்களுக்கு அமைந்தது அருமையான பாடல்.. வாழ்த்துக்கள்!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !