Monday, February 6, 2017

மகிழ்ச்சி # 2சமீபத்தில் ஒரு நிகழ்வில், கவிஞர் ஸ்டாலின் சரவணன் உயிர்மை வெளியீட்டில் ஆரஞ்சு மணக்கும் பசி என்ற தலைப்பில் தான் எழுதிய கவிதை நூலைக் கொடுத்தார். ஆனந்த விகடனில் அவரது பல கவிதைகளைப்படித்த ருசியில் நானும் உடனே படிக்கத்துவங்கினேன். 

எழுத்தின் வலிமை அந்த மொழியைக் கையாளுபவனின் வார்த்தைப்பிரயோகங்களில் உள்ளது ! அந்த வகையில் ஸ்டாலின் சரவணன் வார்த்தைகளை வண்ணப்படுத்தி உலவவிட்டிருக்கிறார். பொதுவாக, வலிந்து புரியாத வார்த்தைகளைத் திணிக்கும் கவிதைகளிலிருந்து காத தூரம் ஓடும் என்னைப்போன்றவர்களுக்கு, வரம் போல, எளிய வார்த்தைகளுடன் காட்சிப்படுத்தலாகவும், கற்பனைச் சிதறலாகவும், அழகான கவிதைகள் ஒவ்வொரு பக்கமும் வரவேற்கின்றன. 

தூக்கம், கனவு, குருவிகள்,சமகால அரசியல் , சமூக அவலம், இழையோடும் நகைச்சுவை, இயல்பு மனிதர்கள் , இயற்கை, பண மதிப்பு நீக்கம் என்று புகுந்து புறப்பட்டிருக்கிறது பல புதுக்கவிதைகள் !!

 மனிதர்களை நேசிக்கும் மனிதருக்குள்ளிருந்து வந்த மனித வாழ்வின் பார்வைக்கோணங்களை கவிதைகளாகப் பார்க்க முடிகிறது.

சில கவிதைகள் மனதுக்குள் படிந்து விடுகின்றன. சில... அட! நாம நினைச்ச மாதிரியே நினைச்சிருக்காரே என்று இருக்கிறது. பல.. அட !இந்தக்கோணத்தில் சிந்திச்சதே இல்லையே என்று இருக்கிறது.

பல கவிதைகள் ஒரு கதையையே சொல்லிவிடுகின்றன. சில அந்தக்காட்சிக்குள் நம்மைக்கொண்டுபோய் அமர்த்துகின்றன. ஒரு சில குப்பென்று சிரிக்க வைக்கின்றன. ஒருசில உட்கார்ந்து சிந்திக்க வைக்கின்றன. இவ்வளவு வார்த்தைகளையும் கோர்த்து இயல்பாக கவிதை சொன்ன ஸ்டாலின் சரவணனுக்கு வாழ்த்துக்கள் சொல்வதுதான் முறை !

நூலின் தலைப்பான ஆரஞ்சு மணக்கும் பசி என்ற கவிதையே பசியில் இருக்கும்போது வரும் ஆரஞ்சு மணத்தை உருவகப்படுத்தி புனையப்பட்டிருக்கிறது. படித்துப்பார்த்தால் ஆரஞ்சு மணம் வரும் ஆபத்து இருக்கிறது !

மேலும், கவிதைகளுக்கு தலைப்பிடுவதே ஒரு கலை ! அதிலும் அசத்தல் ஸ்டாலின் சரவணனுக்கு கைகூடியிருக்கிறது. நான் இரசித்த ஒருசில தலைப்புகள்

வண்ணக் கணக்கு
கானற் பெரும்பழங்கள்
மின்சாரமுண்ட எலிக்குஞ்சு
பூ வாசம் வீசும் கொலைகள்
பேய்களும் ஆண்ட்ரியா டாப்ஸியும்
ஒரு பாட்ஷா மாணிக்கமானார்
நீல நிறத்திலொரு துரோகம்
ஆரஞ்சு மணக்கும் பசி


இருவர் பேசிக்கொண்டிருக்கும்போதோ, ஒரு மேடைப்பேச்சிலோ , மேற்கோள் காட்டப்படும் வகையில் இருக்கும் கவிதைகள் சாகாவரம் பெற்றுவிடுகின்றன. சச்சிதானந்தத்தின் “நினைவில் காடுள்ள மிருகம்” துவங்கி, பிரமிளின் “சிறகிலிருந்து பிரிந்த இறகு” வரை பல கவிதைகள் இன்றுவரை பேசப்பட்டுக்கொண்டிருக்கும்போது, சமகாலத்தில் மேற்கோள் காட்டப்படும் கவிதைகள் குறைந்திருப்பதாக உணர்கிறேன்.

கவிஞர் தங்கம் மூர்த்தியின் சில கவிதைகளை பல மேடைகளில் மேற்கோள் காட்டப்படுவதை பார்த்திருக்கிறேன். அதுபோல ஸ்டாலின் சரவணனின் சில கவிதைகளை நன்கு மேற்கோள் காட்டலாம் !


“எங்கோ பெய்த மழையை
என் சன்னலில் விசிறிச் செல்கிறது
ஒரு சின்னக் குருவி”

இனிமேல் மழையையும், குருவியையும் சேர்த்தோ, தனித்தனியாகவோ பார்த்தால் நிச்சயம் இந்தக்கவிதை நினைவுக்கு வரும்!


“அம்மாக்குருவி
அப்பாக் குருவி
பாட்டிக்குருவியைக்
கொன்று புதைத்த
சவப்பெட்டியைக்
காதில் தூக்கி வைத்து
சாலையில் கடந்து செல்லும்
ஒருவனைத் துரத்திச்
செல்கிறது ஒரு
சின்னஞ்சிறு குருவி”

என்று முடிக்கும்போது, செல்போனை எடுத்து பார்த்துக்கொண்டேன்.

“வானம் பெரிது
அது
ஒரு சொட்டு
ஏந்த இயலாது.

சொட்டென்பது
ஆகச்சிறியது
அதில்
வானம் பார்க்கலாம்”

என்று சொன்னதின் அர்த்தத்தில் ஆயிரம் வானம் தெரிந்தது!

சமூக யதார்த்தங்கள் குறித்துப்பேசும்போது மெல்லிய நகைச்சுவை ஊசியால் நறுக்கென்று குத்தி விட்டிருக்கிறார் !
அதுவும் குர்குரே என்ற தலைப்பிட்ட கவிதையை முதலில் படித்துவிடுங்கள் !!

அதில் வரும்

”தினவேறியத் தோள்களோடு
காளைகளை அடக்கிய
சேர சோழ பாண்டிய வாரிசுகள்
குவார்ட்டர் பாட்டில் மூடியைத்
திறக்க விரல்கள்
நடுநடுங்கிக்கொண்டிருக்கின்றனர்!”

என்ற வரிகள் சொல்லும் உண்மை நிலை கொஞ்சம் பதைக்கத்தான் வைக்கிறது.

வார்த்தைப்பிரயோகங்கள்தான் பெரிய பலமாக இருக்கிறது. ஒரு கவிதையில் பேருந்தில் ஒலிக்கும் இளையராஜா பாடலை ஒருவன் ஜெபித்துக்கொண்டிருந்தான் என்று சொல்லியிருப்பது அழகு ! 
அடுத்தவருக்குக் குழிபறிப்பவனின் நகக்கண்களில் மண் துகள்களை யோசித்ததாகட்டும்.. கடல் திருடிச்சென்ற தடம் கப்பலின் அடியில் மூச்சு முட்ட நெறிபடுகிறது என்று சொன்னதாகட்டும் ரசிக்க வைக்கிறது.

சரி !  இந்தக் கவிதை நூலை வாசித்து, வாழ்த்தியது மட்டும்தான் எனக்கு மகிழ்ச்சியா ? என்றால்... இல்லை!

ஸ்டாலின் சரவணனை ஒரு கவிஞராக மட்டுமே தெரிந்த எனக்கு,  கவிதை நூலைப்பெற்றுக்கொண்ட அன்றுதான் , எனது தொடக்கப்பள்ளி ஆசிரியை கஸ்தூரி டீச்சரின் மகனென்று தெரிந்தது. !!

எங்க டீச்சர் மகன் சூப்பரா கவிதை நூல் எழுதியிருக்கான் என்பதுதான் இரட்டிப்பு மகிழ்ச்சி !!1 comment :

  1. அன்பும் மகிழ்ச்சியும்

    ReplyDelete

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...