நானோ சர்வீஸ்..கேட்டால் கிடைக்கும்



     





     நானோ கார் வாங்கும்போதே, சர்வீஸுக்கான புத்தகமும் கொடுத்தார்கள். அதில் முதல் இலவச சர்வீஸுக்கு – 1500 கிலோமீட்டர் அல்லது மூன்று மாதங்கள் – இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று போட்டிருந்தார்கள். நானும் முதல் மூன்றுமாதம் கழித்து பார்த்தால், 750 கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. (அந்தக்காலகட்டத்தில் நான் நிறைய வெளி மாநிலங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், காரைப் பயன்படுத்த வாய்ப்பே  கிடைக்கவில்லை) இன்னும் கொஞ்சம் ஓட்டிவிட்டுக்கொடுத்தால்தானே வண்டி சர்வீஸ் விட்டதற்கு அர்த்தம் இருக்கும் என்று நானும் பொறுமையாக இருந்தேன்.

அப்புறம் கொஞ்ச நாட்கள் சென்னைக்குள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு திருப்பதி பயணம், சென்று வந்தால், 1400 என்று காட்டியது. ஓக்கே இந்தவாரம் சென்றுவிடலாம் என்று நினைக்கும்ப்போது ஒரு திடீர் திருச்சி பயணம்… போய்விட்டு வந்து பார்த்தால் 2200 கிலோமீட்டர் ஓடிவிட்டது என்று போட்டிருந்தது. ஆஹா…சர்வீஸ் செய்யவேண்டிய கட்டத்தை கடந்திருக்கிறதே என்று உடனே நானோவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்ட்டருக்கு ஓட்டிச்சென்றேன்..
அங்குதான் ஆரம்பமானது கச்சேரி !

     நல்ல இன்முகத்துடன் வரவேற்று , சர்வீஸ் ஷீட் எல்லாம் போட்டவர்கள். கிலோமீட்டர் ரீடிங்கைப் பார்த்தவுடன்,
ஸாரி ஸார்..! இந்த வண்டிக்கு இலவச சர்வீஸ் செய்யமுடியாது..! எங்க சர்வீஸ் லிமிட்டை விட 700 கிலோமீட்டர் அதிகமா ஓடியிருக்கு.. நீங்க 650 ரூபாய் கட்டவேண்டியிருக்கும் என்றார்கள்.

நானும், அதே இன்முகத்துடன்..

 1400 கிலோமீட்டர் ரீடிங் காட்டும்போது அர்ஜெண்ட்டா திருச்சி போறேன்.. திண்டிவனத்துக்கிட்ட 1500 காட்டுது… அங்கயே அப்படியே நிறுத்திட்டு, சர்வீஸ் செஞ்சுதான் நான் வண்டியை எடுத்திருக்கணுமா என்றேன்.


அது தெரியாது சார்… வேணும்னா டாட்டா மோட்டார்ஸ் காரங்ககிட்ட நேரா பேசிக்குங்க என்றார்.

முதலில் டோல் ஃப்ரீ எண்ணுக்கு அழைத்து விபரம் சொன்னேன். அந்த இளைஞர் ,
அது ஒண்ணும் பிரச்னையே இல்லை சார்.. முதல் சர்வீஸ் 1500 கிலோமீட்டர்க்குள்ள நீங்க செஞ்சிருக்கணும்.. விட்டுட்டீங்க.. இப்போ, இரண்டாவது இலவச சர்வீஸுக்கான ஸ்லிப்பைக் கொடுத்து, இந்த சர்வீஸை இலவசமா செஞ்சுக்குங்க என்று ஆலோசனை சொன்னார்.

இது பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டே, இரண்டாவது இலவச சர்வீஸ் ஸ்லிப்பைப் பார்த்தேன். 10000 கிலோமீட்டர் அல்லது ஒரு ஆண்டு என்று போட்டிருந்தது. அதாவது 2200 கிலோமீட்டர் ஓட்டியிருந்த நான் 10000 கிலோமீட்டர் ஓட்டினால் செய்துகொள்ளவேண்டிய சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.

சுர்ரென்று ஏறியது..

சர்வீஸ் ஸ்டேஷனில்..
நீங்க சர்வீஸ் செஞ்சு வச்சாலும், இல்லைன்னாலும் இந்தப் பிரச்னை தீராமல் நான் காரை திரும்ப எடுக்கப்போவதில்லை என்று சொன்னேன்.

அவர்களும்..
நாங்க சர்வீஸ் செஞ்சு வச்சுடுறோம் சார். டாட்டாவிலிருந்து உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்யச்சொல்லி ஒரு மெசேஜ் வந்தா போதும் என்றதுடன், டாட்டாவின் தமிழக டிவிஷன் மேனேஜரின் மெயில் ஐடியும் தந்தார்கள்.

வீட்டுக்கு வந்தேன்.

அவருக்கு ஒரு மெயில் அடித்தேன். அதன் சாராம்சம் இதுதான்..!!

    1500  கிலோமீட்டர் அல்லது 3 மாதம் என்று போட்டிருக்கிறீர்கள். அவசர வேலையாகச் செல்லும்போது மீட்டர் ரீடிங் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது. 700 கிலோமீட்டர் வித்தியாசத்தில் சர்வீஸ் செய்ய முடியாது என்று சொல்லும் உங்கள் சட்டம்,  7800 கிலோமீட்டர் வித்தியாசத்தில்  10000 கிலோமீட்டருக்கான இரண்டாவது சர்வீஸை இப்போதே செய்துகொள்ள எப்படி ஒத்துக்கொள்கிறது.?

   சர்வீஸ் செய்யாமல் ஓட்டி, அதனால், வண்டி ஏதேனும் பழுதாகியிருக்கும் பட்சத்தில், நான் முன்னரே சர்வீஸ் செய்யாததால்தான் இது நேரிட்டது என்று ஒத்துக்கொள்வேன். அப்போது நான் இலவச சர்வீஸ் கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், வண்டி நன்றாக இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டிய சர்வீஸைத்தான் கேட்கிறேன். அதற்கு சட்டதிட்டங்களைக் காரணம் காட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது.

நிறுவனம்,  இதயமுள்ள மனிதர்களால் அமையவேண்டுமே அன்றி இற்றுப்போன சட்டங்களால் அல்ல!


  நான் டாட்டா மீது நம்பிக்கையும், பற்றும் வைத்திருப்பதால்தான் நானோ வாகனத்தை வாங்கினேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு வாடிக்கையாளரை உங்களை விட்டு விலகவைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.


இவ்வாறு அனுப்பிய மெயிலுக்கு பதிலாக, அடுத்த நாளே அந்த மேலாளர் நேரடியாக தொலைபேசினார். முதலில், எதுவும் செய்யமுடியாது என்பதுபோல் ஆரம்பித்தார். மீண்டும் , அவரிடம் சூழலைச் சொன்னேன். அவரும்.. எங்கள் நிறுவன விதிப்படி.. மூன்று மாதத்துக்குள் இந்த சர்வீஸை முடித்திருக்க வேண்டும். இருந்தாலும், உங்கள் மெயிலில் இருந்த நியாயத்தைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்ய அனுமதி அளித்திருக்கிறோம்.  என்று சொன்னார்.

சிறிது நேரத்தில், சர்வீஸ் ஸ்டேஷன் மேலாளர் அழைத்து

” நீங்க நேரடியா கம்பெனியை தொடர்புகொண்டு பிரச்னையை முடிச்சுக்கிட்டீங்க சார்..! ஆனா நிறைய கஸ்டமர் நேரா எங்களைத் திட்டிட்டு , பணத்தையும் கட்டிட்டு போறாங்க சார்.. மற்றபடி, உங்கள் கார் ரெடி சார்! எடுத்துச் செல்லுங்கள்!!! என்றார்.

சென்றேன் . எடுத்தேன். வந்தேன்..!!

அதனால்தான் அழுத்திச் சொல்கிறோம். கேட்டால் கிடைக்கும்!



Comments

  1. அன்பின் சுரேகா - உண்மை உண்மை - கேட்டால் பெரும்பாலும் கிடைக்கும் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி சீனா சார்..!!

      Delete
  2. சுரேகாஜி,

    எல்லா வாகன தயாரிப்பு மற்றும் சர்வீஸ் இப்படித்தான் இருக்கு. நீங்கள் மேலிடத்தில் கேட்டு செய்துள்ளீர்கள், ஆனால் இந்த இலவச சர்வீசே ஒரு கண் துடைப்பு என்பது இன்னொரு கொடுமை, உங்க வண்டி குறைவாக ஓடி இருப்பதால் இலவச சர்வீஸ் போதும் இல்லைனா , தனியா செய்துக்கொள்வது நல்லது.

    எஞ்சின் ஆயில் போடுவதில் சரியாகவே செய்வதில்லை, நீண்ட தூரம் ஓடிய பின் முழுசாக எஞ்சின் ஆயிலை டிரெயின் செய்துவிட்டு ,புதுசாக மாற்ற வேண்டும்,ஆனால் உள்ளே இருக்கும் பழைய ஆயிலில் ,புதுசாக ஊற்றி ,எல்லா ஆயிலையும் கருப்பாக்கிடுறாங்க.

    எஞ்சினில் சத்தம் அதிகமா வருதேன்னு ஒரு தனியார் சர்வீசில் விட்டப்போது தான், இந்த உண்மையை அவர்கள் சொன்னார்கள், இது போல பட்டதும் ,படாததுமா சர்வீஸ் செய்து அனுப்புகிறார்கள்,இலவச சர்வீஸ் என்றப்பெயரில்.

    ReplyDelete
    Replies
    1. அதுவும் சரிதான்..!! இந்த மாசம் ஒரு தனியார் மெக்கானிக்கிடம் காட்டிவிடுவோம்.!!

      Delete
    2. சுரேகாஜி,

      உங்களுக்கு ஆயில் முழுசா மாற்றும் அளவுக்கு ஓடி இருக்காது, ஒரு 25,000 கி.மி பக்கம் வரும் போது கண்டிப்பா முழுசா ஆயில் மாற்றிக்கொள்ளலாம்(நானோவுக்கு என்ன கி.மினு தெரியலை)

      ஒரு ஸ்டிக் விட்டு பார்த்து கருப்பா இருந்தா மாற்றனும்,ஆனால் ஃப்ரீ சர்வீசில் ஆயில் குறைந்த அளவுக்கு மேல ஊற்றுறாங்க.இதனால் மொத்த ஆயிலும் கருப்பாகி பயனில்லை என்பதையே சொன்னேன்.

      ஃப்ரீ சர்வீசின் போதும் ,முழுசா ஆயில் மாத்துங்க , ஆயில் பில் பே செய்வதாக சொல்லி செய்துக்கொள்ள முடியும்.உங்களுக்கு அனேகமா 10,000 கி.மி இல் அப்படி செய்து கொள்ளலாம்.

      குறிப்பிட்ட தூரத்துக்கு பிறகு,நாலு வீலும் கழற்றி ரொட்டேட் செய்து மாட்டிக்கொள்ள வேண்டும், இல்லைனா ஒரு பக்கமா டயர் தேயும், நானோவில் ,மாறுபட்ட முன் பின் சக்கரம் ஆச்சே , அதற்கு ஏதேனும் ஐடியா சொன்னாங்களா?

      நானோவில் லாங் போறிங்க ,அதுவே பெரிய விஷயம் தான்.

      Delete
  3. வாழ்த்துக்கள்.
    நானோ காரிலேயே இவ்வளவு நெடுந்தொலைவு பயணங்களா???!!! வியப்பான ஒன்றுதான்.

    ஆனால் நினைவூட்டலுக்காக : அவர்கள் நிறுவனத்தின் வாதத்திலும் ஒரு தொழில் நுட்ப காரணம் உள்ளது.
    //சர்வீஸ் செய்யாமல் ஓட்டி, அதனால், வண்டி ஏதேனும் பழுதாகியிருக்கும் பட்சத்தில், நான் முன்னரே சர்வீஸ் செய்யாததால்தான் இது நேரிட்டது என்று ஒத்துக்கொள்வேன். அப்போது நான் இலவச சர்வீஸ் கேட்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், வண்டி நன்றாக இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டிய சர்வீஸைத்தான் கேட்கிறேன். அதற்கு சட்டதிட்டங்களைக் காரணம் காட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது. //

    இந்த தாமதமான சர்வீஸின் விளைவு நீண்டகால அளவில் என்னவாக இருக்கும் என்று யாராலும் உறுதி கூற முடியாது. மேலும் காரின் வாழ்நாளில் பல இடங்களில் நிறுவனத்தில் ஆட்கள் மாறலாம், எனவே இதனை ஆவணப்படுதுகிறார்கள். நாளை நீங்கள் வேறு எதோ ஒரு வாரண்டி கிளைம் என்று போக வேண்டி இருந்தால் அந்த பழுதிற்கு முதல் சர்வீஸ் தாமதம் கூட காரணமாக இருக்க கூடும்!!!.

    மற்றபடி, உங்களின் கருத்து மற்றும் சொல்ல வந்த விஷயத்தில் எந்த மாற்றும் இல்லை.

    //அவருக்கு ஒரு மெயில் அடித்தேன். அதன் சாராம்சம் இதுதான்..!!//
    இதை படித்ததும் நினைவுக்கு வந்த வேறொரு உபயோகமான தகவல் பதிவு - புகார் / குறை தெரிவித்தல் என்பதும் எப்படி இருக்க வேண்டும் என்பதைப் பற்றி டோண்டு அவர்களின் வலைப்பூவில் கண்டது. : http://dondu.blogspot.in/2009/09/25092009.html

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    ReplyDelete
    Replies
    1. நல்ல விஷயம் சார்..!! அவர்களும் அந்த விபரத்தை விளக்கினார்கள். வண்டியை சும்மா வைத்திருந்தாலும் சொன்ன தேதியில் சர்வீஸ் செய்துகொள்வது நல்லது என்றார்கள்.

      டோண்டு சாரின் பதிவை கேட்டால் கிடைக்கும் முகநூலில் பகிர்ந்திருக்கிறேன்.

      Delete
  4. "நான் டாட்டா மீது நம்பிக்கையும், பற்றும் வைத்திருப்பதால்தான் நானோ வாகனத்தை வாங்கினேன். இதுபோன்ற சம்பவங்கள் ஒரு வாடிக்கையாளரை உங்களை விட்டு விலகவைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்."


    கேட்டால் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அழுத்தமாக பதிவு செய்துள்ளீர்கள்.
    பதிவிற்கு நன்றி சார்

    ReplyDelete
  5. கேட்டால் கிடைக்கும் என்பது உண்மை.
    //நினைவில் காடுள்ள மிருகத்தைப் பழக்கமுடியாது. நான் அந்த மிருகம்..! இதோ..காடு நோக்கி!//
    இது என்ன?

    ReplyDelete
    Replies
    1. எனக்கு மிகவும் பிடித்த வரிகள்.. சச்சிதானந்தம் எழுதியது...!! அதில் என்னை இருத்திப் பார்க்கிறேன்... அதான்..!

      Delete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !