மகளென்னும் தேவதை!

21 Oct 2009 · சுரேகா சுந்தர்

காணாமல் போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது!

பால் காய்ச்ச வைத்திருந்த
பாத்திரத்தைக்காணவில்லை
என்று அம்மா அலற, அது
குப்பைக்கூடைக்குள்ளிலிருந்து
எட்டிப்பார்க்கிறது !

தொலைக்காட்சியின்
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்!
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது!

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது!
உங்கள்செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.!

படுக்கையறையில்
இடம்மாறிய பலபொருட்களை
கண்டுபிடிப்பதே பாதிநாள் பணியாய்
வேலைக்காரி கூறுகிறாள் !

அசந்த நேரங்களில்
தண்ணீர்ப் பாத்திரங்கள்
தலையில் ஊற்றியதுபோக
மீதத்துடன் நிற்கின்றன!

கதவுகளின் சாவித்துவாரங்களெங்கும்
குச்சிகள் அடைக்கப்பட்டு
அவசரத்துக்கு பூட்டமுடியலை
என்று அத்தனைபேரும்
அலறுகிறோம்.!

அம்மா என் புத்தகத்தின்
ஆறாம் பக்கத்தை காணலை!
அலறுகிறான் அஸ்வின்!


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு!

நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை,
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு!

என் மகளென்னும் தேவதை
நடமாட ஆரம்பித்துவிட்டாள்!

அவள் எச்சில் படாத இடமிருந்தால்
எங்கள் வீட்டில் காட்டுங்கள்!
அவளிடம் தரச்சொல்கிறேன்
அன்பான ஒரு எச்சில் முத்தம் !









← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →