நெஞ்சுரமிருந்தால், லஞ்சம், பஞ்சாகும்!

08 Feb 2012 · சுரேகா சுந்தர்





                                      



        

 ’அன்புடன் கிரண்பேடி’ நிகழ்ச்சியை விஜய் டிவிக்காக நான் இயக்கியபோது அறிமுகமான நண்பர் ஆண்ட்ரூ தனூஜ் குமார்.! ஒரு தனியார் விளம்பர நிறுவனம் மற்றும் ஆலோசனை நிறுவனம் நடத்திவருகிறார். அவரது CHIC CONSULTANCY என்ற நிறுவனம்தான் அந்த கிரண்பேடி நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.

உண்மையில் நாட்டில் ஊழல் குறையவேண்டுமென்றால், மக்களின் தட்டிக்கேட்கும் மனோபாவம் வளரவேண்டும் என்ற கருத்தை ஆழமாகக் கொண்ட மனிதர்.! ஒத்த கருத்துடையவர்கள் நாங்கள் என்பதால், மிகவும் எளிதாக ஒட்டிக்கொண்டோம். மிக அருமையாக கிதார் வாசிப்பார்.(என் கிதார் குரு! J )  கடந்த கிறிஸ்துமஸின் பொழுது, எங்கள் வீட்டுக்கு ஒரு அற்புதமான நண்பர்கள் குழாத்தோடு வந்து, கீதங்கள் இசைத்துச் சென்றார். நேர்மை பற்றி பேசிக்கொண்டிராமல், செயலில் காட்டும் நல்ல நண்பர்.! கேட்டால் கிடைக்கும் என்பது பற்றி நாங்கள் பலமுறை பேசியிருக்கிறோம்.



      அவர் புதிதாக ஆரம்பித்த தனது நிறுவனத்துக்காக TIN எண் வாங்குவதற்காக, ஆயிரம் விளக்கு வணிகவரித்துறை அலுவலகம் சென்றிருக்கிறார். உண்மையில் அந்த வேலைக்கு அரசு நிர்ணயித்த கட்டணம் ரூ.500 மட்டுமே. ஆனால், அங்கிருந்த துணை வணிகவரி ஆணையர் ஜெயலட்சுமி மேலும் 5000 ரூபாய் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்று சொல்லியிருக்கிறார்.

இவர், அதெல்லாம் எங்க கம்பெனியில் தர வழியில்லை. அரசாங்கம் என்ன தொகை கட்டச்சொல்லியிருக்கோ அதான் கட்டிட்டேனே என்று பொறுமையாக பதில் சொல்ல,



உடனே, இவர் விண்ணப்பத்தைப்  பார்த்துவிட்டு இது நொட்டை, இது நொள்ளை என்று குறை சொல்லி திருப்பிக் கொடுத்திருக்கிறார்கள். இவரும் விடாக்கண்டராய் நொட்டை , நொள்ளையெல்லாம் சரிசெய்துவிட்டு மீண்டும் சென்றிருக்கிறார். அந்த பெண்மணி நக்கலாக..



’ஏன் சார்..! படிச்சிருக்கேங்கிறீங்க…! இந்த ஃபார்மாலிட்டி எல்லாம் உங்களுக்குத் தெரியாதா?’ என்று சொல்ல..



’விண்ணப்பத்தை பூர்த்தி பண்ணி, பணம் கட்டறதுதானே ஃபார்மாலிட்டி! அதைத்தான் செஞ்சுட்டேனே’?… என,



’உங்களோட பெரிய தொந்தரவா(!) போச்சு! அது தவிர, தரவேண்டிய அமவுண்ட் கொண்டு வந்தீங்களா? சரி தொலையுது..உங்களுக்காக(?) ஆயிரம் குறைச்சுக்கிறேன். நாலாயிரமா தாங்க!’



’அந்த அமவுண்ட்டுக்கு ரசீது குடுப்பீங்கன்னா நான் தரேன் மேடம்..!’



’யோவ்! அதெல்லாம் தரமுடியாது.. ! நீங்க எப்படி டின் நம்பர் வாங்குறீங்கன்னு பாக்குறேன் என்று வம்பாகப் பேசியிருக்கிறார்



இதில் பெரிய விஷயம் என்னவென்றால், இரண்டாம் முறை பணம் கேட்டது முதல், நொட்டை சொன்னது வரை ஆண்ட்ரூ தன் மொபைல் போனில் அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவாக எடுத்துவிட்டார்.



அதை எடுத்துக்கொண்டு அன்றே லஞ்சஒழிப்புத்துறை அலுவலகத்துக்குச் சென்றுவிட்டார். அங்கு அந்த வீடியோவைப் போட்டுக்காட்டி, விபரம் சொல்ல, அவர்கள் மிகவும் சிறப்பாக நடந்துகொண்டு, புகாரை எழுதி வாங்கிக்கொண்டு, அந்த பெண்ணிடம் செல்பேசியில் பேசச் சொல்லியிருக்கிறார்கள்.

அதன்படி பேச ஆரம்பித்து, ஸ்பீக்கர் போனில் போட்டு மொத்தத்தையும் போட்டு வாங்கி, மேலும் அந்த அதிகாரிகளில் ஒருவரே, ஆண்ட்ரூவின் ஆடிட்டர் போலப் பேசியிருக்கிறார்.



’என்ன சார்! உங்க க்ளையண்ட்டுக்கு எந்த விபரமும் தெரியாதா? கமர்ஷியல் டாக்ஸ் ஆபீசுக்கு வந்தா இதெல்லாம் சகஜம்ன்னு சொல்லுங்க சார்! நாளைக்கு வந்து பணத்தைக் குடுத்துட்டு வேலையை முடிச்சுக்குங்க சார்!’ என்று அந்த பெண்ணும் அதிகாரமாகப் பேசிவிட…முதல் ஆதாரம் சிக்கியது.!



பற்றிக்கொண்டது பரபரப்பு!



அடுத்தநாள், லஞ்ச ஒழிப்புத்துறையினர் ஆண்ட்ரூவிடம் ரசாயனம் தடவப்பட்ட நான்கு ஆயிரம் ரூபாய் நோட்டுக்களைக் கொடுத்து, எப்படிக் கொடுக்கவேண்டும் என்று ஒத்திகையும் பார்க்க வைத்து, கல்வித்துறையிலிருந்து இரண்டு அதிகாரிகளை சாட்சியத்துக்கு தயார் செய்து, அதில் ஒருவரை அவர் கூடவே அனுப்பி வைத்துவிட்டு, பின்னாலேயே வந்துவிட்டனர்.



அந்த அம்மாவின் டேபிளுக்கு ஆண்ட்ரூ செல்கிறார். கூட வந்திருப்பவரைக் காட்டி,



இவர் யாரு? என்று அந்தப் பெண்மணி கேட்க,



எங்க அக்கவுண்ட்டட் மேடம்.! இனிமே கமர்ஷியல் டாக்ஸ் மேட்டரெல்லாம் இவர்தான் பாக்கப்போறாரு..!



ஓஹோ..!, சரி..நம்ப மேட்டர் என்னாச்சு?



ஸாரி மேடம்..! எனக்கு உங்க ஃபார்மாலிட்டி தெரியலை ! இப்ப நீங்க சொன்ன நாலாயிரம் கொண்டுவந்திருக்கேன்.



ஸ்…ஏன் சத்தமா பேசுறீங்க..? ஓக்கே. அதை அப்படியே டேபிள் மேல் வையுங்க!



இவர் வைக்க, அந்த பணத்தின் மீது தனது கால்குலேட்டரை வைக்கிறார்.



எப்ப மேடம் என் டின் நம்பர் கிடைக்கும்?



செக்‌ஷன் க்ளார்க் இன்னிக்கு லீவு! நாளைக்கு வந்து வாங்கிக்குங்க!



சரி மேடம் என்று சொல்லிக்கொண்டே , அந்த அம்மா, பணத்தை கையால் தொடவில்லையே என்று நினைத்துக்கொண்டே, கீழே நின்றுகொண்டிருக்கும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகளுக்கு போன் செய்ய… அவர்கள் மாடியேறி தபதபவென வந்துவிடுகிறார்கள்.



மூத்த அதிகாரி..



மேடம்.. நாங்க லஞ்ச ஒழிப்புத் துறைலேருந்து வரோம்..! மிஸ்டர் ஆண்ட்ரூகிட்ட TIN நம்பர் தர்றதுக்காக, லஞ்சம் வாங்கின குற்றத்துக்காக உங்களைக் கைது பண்றோம்.’



எது..? நான் எப்ப லஞ்சம் வாங்கினேன். அவர்தான் பணத்தை என் டேபிள் மேல வச்சாரு! என்று அந்த அம்மா பதற..



அதெல்லாம் எங்களுக்குத் தெரியும்..! நீங்க வக்கச்சொன்னீங்க! வச்சாரு! அப்புறம் கால்குலேட்டரை எடுத்து ஏன் அதுக்கு மேல வச்சீங்க! என்று ஆண்ட்ரூவுடன் வந்த சாட்சிய அதிகாரி சொன்னபிறகுதான்…தான் வலையில் சிக்கிக்கொண்டது உறைத்திருக்கிறது அந்த லஞ்சப் பெருச்சாளிக்கு!



பின்னர்…ஆண்ட்ரூவைப் பார்த்து..ஒரேயடியாய் அழுது..அரற்றி..



என்ன சார். இப்படி பண்ணிட்டீங்க! அய்யய்யோ அய்யய்யோ..! என் மரியாதை போச்சே..மானம் போச்சே என்று அலறிக்கொண்டே போலீஸ் வண்டியில் ஏறியிருக்கிறார். அன்றே, நீதிமன்ற உத்தரவுப்படி புழலில் அடைக்கப்பட்டார்.



ஆண்ட்ரூவின் TIN எண் தானாக அடுத்த நாள் கடிதத்தில் வந்து சேர்ந்துவிட்டது. வெறும் ஐநூறு ரூபாய் செலவில்..!!

         
     இதில்..பணத்தை விட்டுவிடுவோம். ஏதோ ஒருமுறை நுழைவுத்தேர்வு எழுதி ஒரு அரசு நாற்காலி கிடைத்துவிட்டது என்பதற்காக ஆண், பெண் பேதமின்றி ஆட்டம்போடும் இதுபோன்ற சொறிநாய்களிடம், நம் படிப்பு, அறிவு, அனுபவம் இவற்றையெல்லாம் அடகு வைக்கவேண்டுமா என்று ஒரு நிமிடம் யோசித்தால், லஞ்சம் கொடுக்க மனது வராது.  அப்படிக் கொடுத்துப் பழக்கியதால்தான். இவர்கள் ஆட்டத்துக்குத் துணைபோக அரசியல்வாதிகளையும் சேர்த்துக் கெடுத்து நாட்டையே சூறையாடுகிறார்கள். பந்தாவுக்கு மட்டுமே மயங்கிய அரசியல்வாதிகளுக்கு பணத்தைக் காட்டியவர்கள் அதிகாரிகள்தான்!



   எல்லாவற்றையும் விடுவோம். அரசு அலுவலகத்தில், அந்த வேலைக்குரிய பணத்தை மட்டும் கட்டிவிட்டு, லஞ்சமில்லாமல்- முடிந்தால் அந்த ஆளை லஞ்ச ஒழிப்புத்துறையிடம் மாட்டிவிட்டு-  வேலையை முடித்துப்பாருங்கள். அன்றிரவு தூக்கத்தின் நிம்மதிக்கு நான் உத்தரவாதம் தருகிறேன்.






டிஸ்கி:
                                            





      நண்பர் ஆண்ட்ரூவுக்கு வாழ்த்துச் சொல்ல விரும்பினால் aliceandy@gmail.com க்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பலாம். நல்ல உள்ளங்கள் துணைக்கு இருப்பது அவரை பயமின்றி, இன்னும் உற்சாகமாகச் செயல்பட வைக்கும்.

தொடர்பான செய்திகள் :

லஞ்ச ஒழிப்பில் உதவி தேவையென்றால் கேட்டால் கிடைக்கும் அமைப்பை kettaalkidaikkum@gmail.com என்ற மின்னஞ்சலில் அணுகினால், ஆட்டம் களைகட்டும்.!




← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →