பழனி..
என்ன சார்..
ஏன்ப்பா இந்தப்பெரிய வண்டிய வச்சிக்கிட்டு
ரொம்பதூரம் வந்துட்டு போற..அதுவும் ரொம்ப பெட்ரோல் சாப்டுதுன்னு சொல்ற!
அதுனால பஸ்ஸுல வந்துட்டுப்போயேன்...பிரச்னையே இல்லை!
பரவாயில்ல சார்..நான் பாத்துக்குறேன்.
அடுத்தநாள்
சார்...
என்னப்பா பழனி..
இன்னிக்கு லீவு போடலாம்னு நினைச்சேன் ..நீங்க ப்ரான்ச்சுக்கு வரேன்னு சொன்னீங்களாம். அதுனால இன்னிக்கு வந்துடுறேன் சார்..ஆனா நாளைக்கு ஒரு நாள் லீவு வேணும் சார்!
சரிப்பா..ஆனா நான் கொஞ்சம் லேட்டாத்தான் வருவேன். அதுக்கு முன்னாடி பெண்டிங் வேலையெல்லாம் பாத்துடு !
சரி சார்..!
அன்று நண்பகல் வரை பழனியிடமிருந்து எந்தத்தகவலும் இல்லை.!
ஆனால் அவன் அலுவலகத்துக்கு வரவும் இல்லை!
என்ன ஆயிற்று என்று கேட்கலாமென்று செல்லுக்கு தொடர்புகொண்டால், அது அணைந்திருந்தது.
சில நிமிடங்களில் பழனியிடமிருந்து போன்..!
சார்..
என்னப்பா ! ஏன் இன்னும் ஆபீஸ் வரலை போல?
நான் ஆபீசுக்கு வந்துக்கிட்டிருந்தேன்.
சரி..
அப்ப ஒரு அம்மா குழந்தைகளோட ரோட்டை க்ராஸ் பண்ண வந்தாங்க
வண்டியப்பாத்ததும் அவங்க நின்னுக்கிட்டாங்க..ஆனா குழந்தையைப்பிடிக்காம விட்டுட்டாங்க
திடீர்ன்னு நாலுவயது பெண் குழந்தை குறுக்க வந்துடுச்சு..!
ஆஹா மோதிரப்போறோமேன்னு நினைச்சு ப்ரேக் போட்டேன். பைக்கோட கீழ விழுந்துட்டேன்.
அய்யய்யோ எதாவது அடிபட்டுருச்சா?
இல்ல சார்! ஒரு கீறல்கூட இல்லை சார்..! ஆனா அதைவிட பெரிசா நடந்துருச்சு சார்!
என்னப்பா..
அந்தக்குழந்தை மேல பைக் விழுந்துருச்சு !
அய்யய்யோ அப்புறம்..
குழந்தை பேச்சு மூச்சில்லாம கிடந்துச்சு!
ஆஹா..
உடனே எடுத்துக்கிட்டு ஆஸ்பத்திரிக்கு ஓடினேன்.
என்ன ஆச்சு!?
ஆனா ஆஸ்பத்திரியில் , குழந்தை இறந்து போச்சுன்னு சொல்லிட்டாங்க சார்!
அய்யய்யோ....என்னப்பா சொல்ற..? குழந்தை இறந்து போச்சா?
ஆமா சார்..நான் இப்ப ஜி ஹெச் சுக்கு வந்திருக்கேன். குழந்தையை போஸ்ட்மார்ட்டத்துக்காக கொண்டுபோயிருக்காங்க!
இப்ப என்ன சார் செய்யிறது?
எனக்கு கிடுகிடுவென்று ஆடிவிட்டது.
நம்மிடம் வேலைபார்க்கும் ஒரு ஊழியர், விபத்து நடந்துவிட்டது என்று சொன்னால் , பாத்துப்போகவேண்டியதுதானே என்று கூறிவிட்டு, முடிந்தால்
அவரைச்சேர்த்திருக்கும் மருத்துவமனையில் போய்ப் பார்த்துவிட்டு வரும் மனநிலையில் உள்ள நான், விபத்தில் இன்னொரு உயிர் போய்விட்டது எனும்போது ஸ்தம்பித்துப்போய்விட்டேன். அதுவும் ஒரு குழந்தை எனும்போது என்னால் சில நிமிடங்கள் அடுத்த கட்டத்தைப்பற்றி யோசிக்கவே முடியவில்லை.
உடனே போலீஸ் ஸ்டேஷனில் அவரைச் சரணடையச்சொல்லிவிட்டு,
அதற்குப்பிறகு, உள்ளூர் போலீஸ் உயர் அதிகாரிகள் தெரிந்தவர்கள் என்பதால், அவர்களிடம் பேசி அவர்கள் மூலமாக அந்த ஊர் போலீஸ் அதிகாரிகளிடம்
பேசி, பழனி மேல் உண்மையிலேயே தவறில்லை என்பது விசாரிக்கப்பட்டு, அவர் அனேகமாக இன்று அல்லது நாளை பிணையில் வெளிவருவார்.
இந்தச்சம்பவம் சில கேள்விகளையும் பதில்களையும் தந்திருக்கிறது.
1. எப்போது வாகனத்தை வெளியில் எடுத்தாலும், விபத்து நடந்து நமக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாது என்றுதான் நாமும் , நம் உறவினமும் எண்ணுவோம். நம்மால் இன்னொரு உயிரும் போய்விடக்கூடாது என்று எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.
2. நம்மால் ஒரு விபத்து ஏற்பட்டு ஒரு உயிர் போய்விட்டால், அது சட்டப்படி மிகப்பெரிய தவறு அல்ல! கவனக்குறைவாக வண்டி ஓட்டியதற்காக அபராதம் ரூபாய் 250 கட்டினால் போதும். குற்றவாளிக்கு பெயிலும் உடனே கிடைத்துவிடும்.
3. போலீஸாரைப்பொறுத்தவரை விபத்தில் யார் இறந்தாலும், ஒன்றும் அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. அவனுக்கு சிபாரிசு இருந்தால், அவனுக்கு கொஞ்சம் சலுகைகள் அதிகம்தான்.
4. வண்டி ஓட்டிச்சென்றவன் இவன், குழந்தையை பிடித்துக்கொள்ளாதவர் அந்தத்தாய்... ஆனால் மரண தண்டனை ஏன் அந்தக்குழந்தைக்கு அளிக்கப்பட்டது ?
இது எதுமாதிரியான வாழ்வமைப்பு?
5. விபத்துகளை எதிர்பார்க்கவேண்டாம். ஆனால் நடந்துவிடாமல் தவிர்ப்பதற்கு கடைசிவரை முயற்சிக்கவேண்டும்.
தயவு செய்து...வாகனங்களை ஓட்டும்போது...யாருக்கும் எதுவும் நடந்துவிடாமல் மிகவும் ஜாக்கிரதையாக செல்லுங்கள் நண்பர்களே! எத்தனையோ குழந்தைகள் கனவுகளுடன் சாலையின் இருபுறமும் காத்திருக்கின்றன.