காகங்களல்ல! மேகங்கள்!

27 Sep 2009 · சுரேகா சுந்தர்









நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில்
இத்தனை தவறு செய்கிறீர்கள்?
மேலதிகாரியின் மெயிலில் 
அனலாய்க் காய்கிறது வேலையிடம்!

சாதம் ஏன் இனிக்கிறது?
பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே
குழம்புக்கிண்ணம் பக்கத்தில்
கொக்கரித்துச் சிரிக்கிறது.

ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட
பாழாய்ப்போன சரக்குகூட 
சகலத்துக்கும் உதவிசெய்யும்
சகோதரனாய்த் தோன்றுகிறது!

வாகனம் ஓட்டிக்கொண்டே
சிந்தித்ததில் வழியெங்கும்
வசவுப்போக்குவரத்தின் 
வாய்கொள்ளா இரைச்சல்!

இருந்தாலும் மாப்பிளை நீ
இப்படி எழுதியிருக்கக்கூடாது!
சூப்பர்டா என்றவன் கூட
சூத்திரம் சொல்லித்தருகிறான் !

இதுக்கு என்ன பதில் எழுதலாம்?
அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்!
எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து
என்னைக் கொல்லாமல் விடாதுபோல!

இத்தனை நாள் காத்திருந்த
எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்!
தேடித்தேடித் தின்னும்
பின்னூட்டங்கள் கசக்கின்றன.

மனம் நோகவேண்டாமென்று
மட்டுறுத்தினாலும் பின்னூட்டம்
பெருகுகிறது.
கூரான வார்த்தைகளால்
குறையாமல் விழுகிறது குருதி!

அந்தப்பதிவை மட்டும்
அனேகம்பேர் படிக்கக்கூடாதே..
அல்ப ஆசை ஒன்று
ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்!


சொன்னது சரிதானென்று
சொக்காய் கிழிய வாதிடலாம்!

சொன்னது முற்றிலும் தவறே என்று
சொக்கவைத்து காலில் விழலாம்!

அப்படிச்சொல்லவே இல்லை என்று
அழித்துவிட்டு அரசியல் செய்யலாம்!


ஒரு எழவும் எழுதாமல்
ஒழுங்காக இருந்திருக்கலாம்.!

'ஒளியத்தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த கதையா'

பதிவூடகம் கொஞ்சம் மேலேன்னு
சோக்கா சொன்னய்யா சுரேகா!


(இப்ப இருக்குற  ' ட்ரெண்ட'  பாத்துட்டு எண்ணத்தில் தோன்றியது ! )



நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்!  

இது ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும் என்று நினைத்தபோது வந்த வார்த்தைகள்தான் இவை!  :)

திரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்!

பதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்!

சிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்!

குட் டச்! பேட் டச்! குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்!

எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!

எத்தனையோ திரைப்படங்களின் இலவசக்  காட்சி வழங்கிகள் நாம்! 

பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!

நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!

நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!

அழகாகச்சிந்திப்போம்..! 
அனைவரையும் அரவணைப்போம்!  
தெரியாமல் தவறுசெய்தால் 
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!

மீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் !

கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →