குடும்ப அமைப்பும் கோபிநாத்தும்

18 Feb 2008 · சுரேகா சுந்தர்

சமீபத்தில் ஒரு ரோட்டரி சங்க விழாவில், விஜய் டிவியில் நீயா?நானா? நடத்தும் திரு.கோபிநாத் அவர்களை பேசக்கூப்பிட்டிருந்தார்கள்.

அவர் பேசுவதற்கு முன்..கூட்டத்தில் இருந்த பார்வையாளர்களால் பேசப்பட்ட வார்த்தைகள் :

' இவர் என்ன பேசப்போறாரு?'

'நம்மை விட்டு கேள்விகேக்கச்சொல்லி அவரை பதில் சொல்லவைக்கலாமே?'

'இந்தவாட்டி நடிகர் யாரையும் கூப்பிடலை இல்லையா? அதனால் பிரபலத்துக்காக கூப்பிட்டிருப்பாங்க!'

இவர்களுக்கெல்லாம் கேமிரா முன்னால் நின்னாத்தான் பேசவரும்..இங்க எப்படி? என்ன பேசிடப்போறாங்க!'

'டிவில நிறையதடவை டேக் வாங்கி பேசலாம். இங்க அப்படி இல்லைல்ல..! பாரு ஒரு 15 நிமிஷம் பேசிட்டு இறங்கிடுவாரு'

என்றெல்லாம் விவாதம் நடந்து கொண்டிருந்தது.

அவர் பேசும் நேரம் வந்தது.மேடையேறினார்...ஒப்பனை எதுவுமில்லாத சாதாரண முகம். நம்ம ஊர் வங்கியில் வேலைபார்க்கும் ஒரு அன்பான ஊழியரின் பாவனை.!

பேச ஆரம்பித்தார்...!

'எனக்கு நகைச்சுவையாகவோ, ஜோடனைகளுடனோ பேச வராது. மேலும் அவ்வாறு பேச நான் வரவில்லை..சில முகத்தில் அடிக்கும் நிஜங்களைக்கூறுகிறேன்.' இப்படி ஆரம்பித்து அவர் எடுத்துக்கொண்ட விஷயம்..நமது குடும்ப உறவுகள் மற்றும் அதன் மதிப்பை நாம் எவ்வாறு அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லப்போகிறோம் என்றுதான்.!

குடும்பம் என்ற முழுமையான அமைப்பு எல்லா நாடுகளிலும் இருந்தது. ஆனால் பொருளாதார ஏற்றத்தையும், தொழில் வளர்ச்சியையும் சந்தித்தபோது குடும்பம் என்ற அமைப்பை பேணுவதில் அனைத்து தேசங்களும் தோற்றுப்போயின.!

உதாரணமாக, நம் நாட்டில் 500 ரூபாய் சம்பளத்தில் வேலை பார்க்கத்தொடங்கி, கடைசியாக 5000 ரூபாய் வாங்கி ஓய்வு பெற்றவரின் மகன், தகவல் தொழில் நுட்பத்துறையில் முதலிலேயே 25000 ரூபாய் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்து விடுகிறான். அப்போது அவன் அதற்கேற்றார்ப்போல் செலவு செய்ய ஆரம்பிக்கிறான். இரவு நேரம் கழித்து வீடு வருகிறான். அவனிடம் உங்கள் சம்பள கணக்குகளையோ, தாமதத்தை குற்றமாகவோ பார்த்தால் கண்டிப்பாக அந்த குடும்பப்படகில் ஓட்டை விழுவது நிச்சயம்.!

இதே போன்ற தருணத்தை சமாளிக்க முடியாமல்தான் , தலைமுறை இடைவெளியை நிரப்பமுடியாமல் எல்லா மேற்கத்திய தேசங்களும் தோற்றுப்போயின. அங்கெல்லாம் குடும்பம் என்ற அமைப்பே இல்லை.! திருமணத்திற்குப்பிறகு பெற்றோரை தன்னுடன் வைத்துக்கொள்ளும் முறையையே அவர்கள் மறந்து யுகங்களாகின்றன. சீனாவும் குடும்ப அமைப்பை பேணுவதில் தோற்றுவிட்டது.

ஒருமுறை பல்வேறு தேசங்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வெளிநாட்டுக்கு சென்றிருந்தபோது...ஒரு சக பத்திரிகையாளர் திருமணத்தைப்பற்றி கேட்டபோது..எனக்கு தகுதியான பெண்ணை என் அப்பா பார்ப்பார் என்று கூறியதை நம்ப முடியாமல், அப்படியா..அவருக்கு பிடித்த பெண்ணை அவரல்லவா திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கேட்டாராம். அதற்கு இவரும், என் அப்பாவின் அப்பா பார்த்த பெண்ணைத்தான் என் அப்பா மணந்துள்ளார் என்று கூறினாராம்.

இது போன்று பல சம்பவங்களையும், நம் தேசத்தின் இன்றைய நிலையையும் உடைத்து வைத்துவிட்டு...தீர்வுக்கு வந்தார்.

நம் குடும்ப அமைப்பு சிதறாமல் பார்த்துக்கொள்ளவேண்டிய பொறுப்பு இன்றைய இளம் தலைமுறையிடத்தில் இல்லை..! பெரியவர்களிடத்தில் தான் உள்ளது..! மாற்றங்களை ஏற்றுக்கொள்ளப்பழகுங்கள்! எவ்வளவு தாமதமானாலும் உங்கள் வீட்டுக்குத்தானே வருகிறான். காத்திருந்து திட்டும் வழக்கத்தை கைவிடுங்கள். அவனுக்கு இருக்கும் வேலை அழுத்தத்தை புரிந்து கொள்ளுங்கள் ! ஆதரவாகப்பேசுங்கள்! இயல்பாகவே உங்கள்மேல் பாசம் அதிகமாகும். இவர்களை விட்டு போனால்தான் நிம்மதி என்ற எண்ணத்தை அவனுக்கு தூண்டுவது நமது செயல்கள்தான். ! அதை நிறுத்துங்கள்.! அன்புடன் அவனை அணுகுங்கள்! அவனுக்கு கிடைக்கும் அதிகப்படியான பணத்தை எப்படி செலவழிக்கிறான் என்று வேடிக்கை பார்த்துவிட்டு பின்னர் மெதுவாக வழிமுறைகளைக்கூறுங்கள்.!

எல்லா நாடுகளும் இன்னும் இந்தியாவைக்கண்டு பொறாமைப்படுவது பொருளாதார வளர்ச்சிக்காகவோ., அறிவு முதிர்ச்சிக்காகவோ இல்லை.. குடும்ப அமைப்புக்காகத்தான். அதைப்பேணவேண்டிய ஒரு இக்கட்டான காலகட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். கொஞ்சம் விட்டுப்பிடிக்கப்பழகுங்கள். இல்லையேல் இந்தியாவும் குடும்ப அமைப்பை இழக்கவேண்டிய தருணம் வந்துவிடும்.

இவ்வாறு சுமார் ஒரு மணி நேரம் பேசினார்.

திரு.கோபிநாத்தின் பேச்சில்...அப்படி ஒரு தமிழ்.! பிரவாகமாக பேசுகிறார். வேகமாக தமிழ் வார்த்தைகள் வந்து விழுந்து கைகொடுக்கின்றன.
வார்த்தைகளின் அழுத்தம் கொடுக்கவேண்டிய இடத்தை கணித்து வாக்கியத்தை அமைத்து, எழுதி வைத்துக்கொள்ளாமல்.. ....அழகு!
எளிமையான அணுகுமுறை.! உண்மையான தேச நலம் சார்ந்த நோக்கம் - பேச்சில் தெரிகிறது.

முதலில் இவரை சாதாரணமாக எண்ணி பேசியவர்களில் ஒருவரது முகத்தில் அப்படியொரு ஆச்சர்யமும், தெளிவும்..! கோபிநாத்தின் பேச்சை ஆர்வமில்லாமல் பார்க்க (கேட்க) ஆரம்பித்த கூட்டம், அவர் பேசி முடிந்தபின் ஏகோபித்த குரலில் சொல்லிய ஒரே வார்த்தை.!

கலக்கிட்டாருய்யா!

← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →