இன்றே சொல்லவேண்டிய நன்றி!

06 May 2010 · சுரேகா சுந்தர்










திருமணம் மீது எனக்கிருந்த பயத்தைவிட, அதற்குப்பின் தேவைப்படும் பொறுப்புணர்ச்சியின் மீதுதான் அதிக ஐயம் இருந்தது.சரியான நேரத்துக்கு வீட்டுக்குத்திரும்பமுடியுமா? சொல்லும் பொருட்களை வாங்கிவர முடியுமா? ஓவராகப் பேசினால் சமாளிக்கமுடியுமா? இவற்றை மீறி, நம்மால் ஒரு பெண்ணுக்கு எந்த ஒரு கெடுதலும் வந்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தேன்.

அவர்கள் வீட்டிலிருந்து தாயும், தந்தையும் ஒரு பரபரப்பான மாலை நேரத்தில் வீட்டுக்கு வந்து என் பெற்றோரைச்சந்தித்தார்கள். நாங்கள் ஒரு நாள் அவர்கள் வீட்டுக்குச்சென்றோம். போனால் ' சரி ' என்றுதான் சொல்லுவேன் என்ற நிபந்தனையுடன் போனேன். ஒரு பெண்ணைப் பார்த்து உன்னை எனக்கு ஏதோ ஒரு காரணத்தால் பிடிக்கவில்லை என்று கூறுவதில் எனக்கு எப்போதும்
விருப்பமிருந்ததில்லை. நிராகரிப்பின் வலியை நானும் உணர்ந்திருந்ததால்...!


திருமணமும் நடந்தது.

அவள் வீட்டுக்குள் வந்ததிலிருந்து எந்த ஒரு பெரிய மாற்றத்தையும் என் வாழ்வில் ஏற்படுத்திவிடாமல் சகஜமான வாழ்க்கையை அப்படியே வாழவைத்தாள். என் பெற்றோரிடம் தகுந்த மரியாதையுடனும், அன்புடனும் வித்தியாசமின்றியும் பழகினாள். அவர்களும் அப்படியே! நான் சொல்வதை ஆரம்பத்திலிருந்தே தெளிவாக கவனித்தாள். தன் விருப்பு வெறுப்புகளை தெளிவாக என்னிடம் கூறினாள். ஆனால் அதை வலியுறுத்தாமல், அவளுக்கு சில வலிகள் இருந்தபோதும் அதனுடனேயே சிரித்துக்கொண்டே பழகினாள்.

என்னை, என்னைவிட அதிகம் கவனித்துக்கொண்டாள்.

எனக்கான வேலைகளை சிரமேற்கொண்டாள்

எங்கள் வாரிசுகளை கண்ணும் கருத்துமாக வளர்க்க ஆரம்பித்தாள்.

தாய்வீட்டில் காலை எட்டுமணிக்குக்குறையாமல் தூங்குபவள், அதிகாலை எழுந்து பம்பரமாகச் சுழன்றாள்.

வெளியில் நான் எப்படி ஒழுங்கைக் கடைப்பிடித்தாலும், வீட்டில் என் ஒழுங்கின்மையைச் சகித்துக்கொண்டு சரிசெய்தாள்.

வீட்டுக்குள் நுழையும்போது உள்ளத்தில் பூப்பூக்குமாறு எப்போதும் பார்த்துக்கொண்டாள்.

தவறுகள் செய்துவிட்டு, அழகாக மன்னிப்புக்கேட்டு மறக்கச்செய்தாள்.

எல்லாவற்றையும் மீறி, நான் என்ன சம்பாதித்தாலும், அதைப்பற்றி கவலையே படாமல், என்னிடம் இன்றுவரை இதை வாங்கு அதை வாங்கு என்று என் உயிரை வாங்காமல் கொடுத்ததை வைத்து குறைவின்றி குடும்பம் நடத்துகிறாள். என் லட்சியத்திலும் கூட நிற்கிறாள்.

நான் தொழில் மீதான அக்கறையைக்குறைத்துக்கொண்டு, திரைத்துறைக்குப் போகிறேன் எனும்போது ' உங்களுக்கு எது சரின்னு படுதோ செய்யுங்க' என்று எனக்கான பாதையில் ரத்தினக்கம்பளமாய் விரிகிறாள்.

அவளுக்கென்று நான் என்ன செய்திருந்தாலும், அவளுக்காக ஒதுக்காத நேரத்துக்கு வருந்துகிறேன். என்றாவது எனக்கும் அவளுக்கும் மட்டுமே ஒதுக்க கொஞ்சம் நேரம் தா! என்று காலத்திடம் கடன் கேட்டு நிற்கிறேன்.


இதோ.. திருமணமாகி, நாளையுடன்...ஏழு ஆண்டுகள் ஓடிவிட்டன.

ஹேமா.... எனக்கு மனைவியாக வந்த தோழியே! உன்னோடு வாழும் இந்த வாழ்வுக்கு நன்றி!!





← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →