பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.
1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ
வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு
ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன்
சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து
காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும்
குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த
நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.
கதை நிகழ்காலத்துக்கு வருகிறது.
அர்விந்த்
என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா! அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா
(ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி, அவளைச்சுற்ற ஆரம்பித்து,
சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.
சீனா,
இந்தியாவில் ஆபரேஷன் ரெட் என்ற ஒரு தாக்குதலை திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் நியமிக்கும்
ஆள், டாங்.லீ.(ஜானி). அவன்மூலம் இந்தியாவில் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வந்த கொடிய
நோய்க்கிருமியை ஒரு நாய் மூலம் பரப்பி, இந்தியா கைபிசைந்து நிற்கும்போது, அதற்கான மருந்தைக்
கொடுத்து, பதிலாக சீனா கேட்பதை இந்தியாவைச்
செய்யவைக்கலாம் என்பதுதான் திட்டம். மேலும், இந்த மூலிகை ரகசியம் தெரிந்த, ஒரே ஆளான போதி தர்மரின்
டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து மீண்டும் அவரது வம்சாவளி மூலம் போதி தர்மரை கொண்டுவரும்
முயற்சியில் இருக்கும் ஸ்ருதியைக் கொல்லும் பணியும் டாங் லீக்குத் தரப்படுகிறது.
போதிவர்மரின் வாரிசான அரவிந்தை , சுபா நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் தொடர்ந்து, அவனது டி என் ஏவை எடுத்து ஆராய முயற்சிப்பது அவனுக்குத் தெரியவருகிறது. இது பற்றி அவன் சுபாவிடம் கேட்க, அவள் கூறும் தகவல்களில் பற்றிக்கொள்கிறது பரம்பரை டி என் ஏவுக்கும், அதை பலி வாங்க நினைக்கும் சீன டாங்குக்குமான பகை!
டாங்கின் மிகப்பெரும் சக்தி என்ன? அரவிந்த்துக்கு
போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி? போன்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன்,
அறிவியல் கலந்து அழைத்துச்செல்கிறது மீதிக்கதை.!
தமிழன் கற்றுக்கொடுத்த வித்தையை , தமிழனுக்கு
எதிராகவே பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பதுதான் அடிநாதம். அது மிகச்சிறிய முடிச்சில்
ஆரம்பித்து, பிரம்மாண்டத்தைத்தொடுகிறது.
அதையும் மீறி, நம் தேசத்தின் அறிவியல் என்பது
வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம்
என்று கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்!
ஒரு புராணக்கதையுடன் , நிகழ்காலத்தைப் புனையும்போது
ஒரு சமூகக்காரணம் இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது திரை நியதி! அதை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
இயக்குநரின் பெயர் போடும்போது எழுந்த கைதட்டல் மற்றும் விசில் ஒலியே அவரைப்பற்றிய எதிர்பார்ப்பின்
வெற்றி!
ஷாவ்லின் கோவில் வரலாறு, குங்பூவில் சூறாவளி
உருவாக்கும் முறை, பல்லவ, சீன கால உடைகளில் கவனம், போதிதர்மனின் குதிரைப்பயண நிலப்பரப்புகள்
என பார்த்துப் பார்த்து செய்த குழு முயற்சியைப் பாராட்டவேண்டும்.
எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல்,
சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து
கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது
என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
போதிதர்மனான சூர்யாவை சீன மக்கள் எதிரியாகப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான புன்னகையுடன் குதிரையைப்பிடித்துக்கொண்டு வெளியேறும் காட்சியில், அவமானப்படும்போது இருக்கவேண்டிய அமைதியைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் சூர்யா!.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு! அவரது அறுபது வயதுக்குப் பின்னும் பேரன்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம்.!
வித்தியாசமான குரல் வளத்துடன், நல்ல தமிழ்பேசும்
நாயகியாக ஸ்ருதிஹாசன்! காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் தன்
அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம்.! அவர் கூறுவது வேறு! ஆனாலும்
ஆடியன்ஸ் கமல், கமல் என்று கத்தாமல் அந்தக்காட்சி முடியவில்லை.
படத்தின் அடுத்த ஹீரோ...வில்லனான ஜானி! சிறு
கண்ணில் சீற்றம் காட்டி, தன் வித்தையை வெளிப்படுத்துவதில் பின்னுகிறார். ஒவ்வொருவராகப்
பார்த்து அடிக்க அனுப்பும் காட்சியில் அவருக்கும் கைதட்டல் அள்ளுகிறது.
அந்தச் சாக்கடை அள்ளும் தொழிலாளியும், பை
வைத்த பெண்ணும் குங்பூ சண்டை போடும்போது அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு ஹீரோவைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும்.
சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.! விளையாடியிருக்கிறார் மனிதர். ! ஒரு தவம்போல்
சண்டைக்காட்சி அமைத்திருப்பது தெரிகிறது. தமிழ்ப்படத்துக்கு இது மிகவும் புதிது. அந்நியனின்
கராத்தேவும், 7ம் அறிவின் குங்பூவும் முழுக்க வேறு விதமாகத் தெரியவைத்திருக்கிறார்.
இசையில் கொஞ்சம் கஜினி வாசனை! அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான்
தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும்
விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை? சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின்
ஏன் வேலைக்கே போவதில்லை? இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக்
காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா? என சிறு சிறு கேள்விகள் எழுந்தாலும், சுவாரஸ்யமான
திரைக்கதை தலையைத் தடவிக் கூட்டிச்செல்கிறது.
எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு வித்தியாசமான புனைவுடன் கூடிய பொழுதுபோக்குப்படம் பரிமாறப்படுகிறது.

