இது மாதிரி இருந்தாப் போதும் - 2

06 May 2008 · சுரேகா சுந்தர்

பென்சிலோட இன்னோரு தன்மை பாத்தீங்கன்னா, அதை வச்சு எழுதணும்னா, அதை கூர்மைப்படுத்திக்கிட்டே போகணும்.அது தன்னை கரைச்சுக்க அனுமதிக்கும். அப்பதான் தெளிவா எழுதமுடியும். ஒரு தடவை மழுங்கிட்டா, அப்படியே இருக்காம, தன்னை கூர்மைப்படுத்திக்கிட்டு மறுபடியும் பழைய மாதிரி எழுத ஆரம்பிச்சுடும்.
அதேமாதிரிதான். நாமும் நம்பளை வளத்துக்கணும். ஒரு படிப்பு படிச்சுட்டா, அடேயப்பா நாந்தான் இந்த ஊர்லயே ரொம்ப படிச்சவன்னு நினைப்பு நமக்கு வந்து, தன்னை வியக்க ஆரம்பிச்சுடுறோம். ஆனா அது ரொம்ப ஆபத்து. . நாம இந்த உலகத்தில் கத்துக்கவேண்டியது எவ்வளவோ இருக்கு. இன்னிக்கு ஒரு வெற்றியை சந்திக்கிறீங்கன்னா..அதை உடைக்க அடுத்த ஆள் தயாரா இருக்கும். அதுக்குள்ள நாம நம்ம அறிவை வளத்துக்கிட்டு அந்த வெற்றியை தக்க வச்சுக்கணும். எந்தத்துறைல இருந்தாலும், அதில் இன்னும் என்னன்ன புதுமை இருக்குன்னு கத்துக்கிட்டு மாற்றத்தை ஏத்துக்கத்தயாரா இருக்கணும்.
            வெற்றிங்கிற விஷயத்தில் பென்சில் எப்பவுமே தன்னை சமரசம் பண்ணிக்கிறது கிடையாது. கொஞ்சம் மழுங்கிப்போனாலும் தன்னை கூர்மைப்படுத்திக்க அனுமதிக்கும். ஆனா நமக்கு , அறிவு விஷயத்துல போதும்ங்கிற மனசும், பண விஷயத்துல போதாதுங்கிற மனசும் இருக்கு. அது அப்படியே மாறினா போதும். வெற்றிக்கு நிரந்தர நண்பனா ஆகிடலாம். நிம்மதியாவும் இருக்கலாம்.
நல்ல வெற்றியாளனுக்குள்ள அறிகுறியே , பாராட்டுகளை தலைக்குள்ள ஏத்திக்காமலும், விமர்சனங்களை மனசுல ஏத்திக்கிட்டும் இருக்குறதுதான். பென்சிலை சீவும்போது வலிக்கிறமாதிரிதான் இருக்கும். ஆனா பலன்? அழகான எழுத்து..! அதுமாதிரிதான் விமர்சனங்களைத்தாங்கினாத்தான் நம்மால் நம்பளை மெருகேத்திக்கிட்டு ஜொலிக்கமுடியும்.

பென்சிலோட அடுத்த பண்பு, ஒரு விஷயத்தை தப்பா எழுதிட்டா ரப்பரை வச்சு அழிச்சு மீண்டும் திருத்த அனுமதிக்கிறது.. இப்ப எல்லாம் பெரும்பாலான பென்சில்ல ரப்பரும் சேந்தே வருது. அதாவது தன் தவறுகளை ஏத்துக்குற மனப்பக்குவத்தை ரொம்ப எளிமையா புரியவைக்குது பென்சில்.

நாம ஒரு சிறந்த மனிதனா ஆகணும்னா, முதல் தகுதியே செஞ்ச தப்பை ஒத்துக்கிறதுதான். ஆனா நாம அதிகபட்சமா தப்பை ஒத்துக்கிறதே இல்லை. மேலும் அடுத்தவுங்களை அந்த தப்புக்கு பலிகடா வேற ஆக்குவோம். யாருமே கிடைக்கலைன்னா வேற ஏதாவது காரணம் சொல்லி தப்பிக்கப்பாப்போமே தவிர கடைசிவரைக்கும் நாம செஞ்சது சரிதான்னு நிரூபிக்கப்பாப்போம்.

மொக்கச்சாமி ஒரு பெரிய தென்னந்தோப்புல தேங்கா திருடலாம்னு போனாராம். மரத்திலயும் ஏறியாச்சு ! ஆனா அந்த நேரம்பாத்து தோப்போட சொந்தக்காரர் வந்துட்டாரு. ! ஆஹா இப்ப என்னடா பண்றதுன்னு மொக்கச்சாமியும் மெதுவா இறங்க் ஆரம்பிச்சாரு! அதை தோப்புக்காரர் பாத்துட்டாரு.! உடனே அவர் சத்தமா...ஏய் மொக்கச்சாமி..எதுக்குடா மரத்துமேல ஏறின? ன்னு கேட்டார்.

உடனே நம்ம மொக்கச்சாமி...இல்ல.. எங்க வீட்டு ஆட்டுக்கு புல்லு புடுங்கலாம்னு போனேன்..ன்னாரு! அங்க எங்கடா புல்லு இருக்கும்? ன்னாரு தோப்புக்காரரு. அங்க புல்லு இல்ல! அதான் எறங்கிட்டேன்ன்னாரு மொக்கச்சாமி! தோப்புக்காரர் எத்தனைபேரைப்பாத்திருப்பாரு? அதுக்கப்புறம் அவர் மொக்கச்சாமியை உரிச்சாருங்கறதெல்லாம் வேற விஷயம்!
ஆனா இப்படி சமாளிக்கிறதெல்லாம் எத்தனை நாளைக்குத்தாங்கும்? கெட்டிக்காரன் புளுகு எட்டே நாளில் தெரியும் னுவாங்க! அதிகமா நம்ம ஆளுங்க பொய் சொல்றதே தன் தவறை மறைக்கிறதுக்காகத்தான்.
விருமாண்டி படத்துல கமலஹாசன் ஒரு பிரச்னையில் தப்பு பண்ணிடுவாரு.. அன்னிக்கு ராத்திரியே அந்த எதிரி வீட்டுக்குப்போய் சொல்லுவாரு... மன்னிப்புக்கேக்கறவன் வீரன்...மன்னிக்கிறவன் மாவீரன். நான் வீரன்.. நீ எப்புடி? அப்படின்னுவாரு.
தப்பை ஒத்துக்க ஆரம்பிச்சுட்டாலே நம்ம மேல சமூகத்தில் ஒரு மரியாதை வந்துடும். நாமும், தப்பு செய்ய யோசிப்போம். சமாளிச்சுடலாம்னு நினைக்கிறதாலதான் அதிகமா தவறு செஞ்சுட்டு மாட்டிக்கிட்டு முழிக்கிறோம். இனிமேல் காரணங்களைக்கைவிட்டு, தீர்வுகளைத்தேடினாலே போதும்.
பென்சிலோட அற்புதமான குணமே செஞ்ச தப்பை ஒத்துக்கிட்டு அதை சரிபண்ண தயாரா இருக்குறதுதான். ! அதை கடைபிடிச்சாலே நமக்கு தலைவனுக்குள்ள தகுதி வந்துருச்சுன்னு அர்த்தம்.

கடைசியா.....பென்சிலை எத்தனை துண்டா உடைச்சாலும் ஒவ்வொரு துண்டும் பென்சில்தான்.அதேபோல எத்தனை துன்பம் வந்தாலும் , கவலைப்படாம நம்ம இயல்பு மாறாம இருந்தாலே நாமதான் இந்த உலகத்தில் வெற்றிக்கு மொத்தக்குத்தகைதாரர்.

எனவே பென்சில் போல் வாழுங்கள். வெற்றிக்கோடுகள் வரையுங்கள்...என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →