பெற்றோரின் அன்பில்
பூரித்தல் இன்பம்!
நண்பர்கள் நட்பில்
நனைதலும் இன்பம்!
என்று எங்கள் இன்பம்
என்றென்றும் இன்பம்?
எண்ணி எண்ணி
மாய்ந்ததில்
எழுந்தன சில
வார்த்தைகள்!
வார்த்தைகளைக் கோர்த்து
வரிகளாக்கி
நிமிர்ந்து பார்த்தால்
எட்டிப்பார்த்து மகிழ்விக்கின்றன
என்னுள் அத்தனை
உறவினமும்!
வெளியூரில் வேலை கிடைத்து
வெற்றிகாணச் செல்லும்
வெறியுள்ள இளைஞனை
சற்று நிறுத்திக் கேளுங்கள்!
தம்பீ ! எங்கு தங்குவாய் !
' மாமன் வீடு இருக்கிறது.
அங்குதான் தங்குவேனென்பான்.
கட்டாய வேலையாக
கல்கத்தா செல்லுங்கள்!
புகைவண்டி நிலையம் வந்து
கூட்டிச்செல்வான்
அக்காள் மகன்!
பொருளாதார இக்கட்டை
புறங்கையால் தள்ளிவிட்டு
புத்துணர்வு கொள்ளும்
ஒற்றை மனிதனின்
மகிழ்ச்சிக்குப்பின்னால்
முகம் தெரியாத சித்தப்பாவின்
பண உதவி மறைந்திருக்கும்!
ஆளே இல்லாத ஊருக்கு
உங்களை அனுப்பிவிட்டு
அடுத்த மணி நேரத்தில்
அங்கொருவன் வந்து சேர்ந்து
இருவரும் பேசத்தொடங்கி
நன்கு பழகி உங்களுக்குள்
விளிக்கும் நாள் வரும்போது
வயதில் மூத்திருந்தால்
'அண்ணே'
வயது குறைந்திருந்தால்
'தம்பீ'
சம வயதிருந்தால்
'மாப்ளே'
என்றழைத்து
நட்பையும் உறவாக
மாற்றித்தான் மகிழ்வீர்கள்!
சில நாட்கள் முன்னர்
சிதறுண்டு கிடந்த நீங்கள்
ஒரே வாழ்க்கையில்
நுழைந்த பின்னர்
பெயர் சொல்லி அழைக்காமல்
உறவு சொல்லி அழைக்க
எந்த சட்டம் சொல்லியது?
அதுதான் இல்லை
உங்கள் 'சந்தோஷம்' சொல்லியது!
பெரியவர் ஒருவர்
உங்களை வழிநடத்த
நல்வழி கண்டு
நயம்பெற வாழும் நீங்கள்
அவரை உலகுக்கு
அறிமுகப்படுத்துவது
'இவர் எனக்கு அப்பா மாதிரி' !
கதை சொல்லும் யாவரும்
கண்ணிய கதைகள்
அன்பாகச் சொன்னபின்னர்
அந்தக்கால கதைகளுக்கு
அவர்கள் இடும் அடையாளம்
' பாட்டி சொன்ன கதை'
அப்பா அம்மா இல்லையென்றால்
அநாதை என்கிறோம்
அத்தனை அநாதைகளும்
விடுதிக்கு வருவதில்லை
வராத அவர்களுக்கு
அன்பான உறவிருக்கும்!
- உறவுகள் தொடரும்....
(கவிதையாவே நினைத்து படிக்கவும். இதன் பின்னணியில் ஒரு தகவல் இருக்கிறது )