தள்ளிப்போட்டால்....!

22 Apr 2008 · சுரேகா சுந்தர்

இன்னிக்கு பாக்கவேண்டிய இந்த பதிவை அப்புறம் பாத்துக்கலாம்னு தள்ளிப்போட்டீங்கன்னா ..இந்த விஷயம் உங்களுக்கு தெரியாமலேயே போயிருக்கும். நல்ல வேளை தள்ளிப்போடலை.!

ஒரு சினிமா நாளைக்கு ரிலீஸ் ஆகுதுன்னா...என்னமோ நாளைக்கே அதோட ரீல் எல்லாத்தையும் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிடுவாங்கங்கிற மாதிரி...ரொம்ப வேகமா..கூட்டத்துல சட்டை கிழிஞ்சாலும் பரவாயில்லைன்னு முதல்நாள் முதல் ஷோ பாத்தேன்னு சொல்லிக்கிற பெருமைக்காகவே போய் பாத்துட்டு வந்து லந்து பண்ணிக்கிட்டிருப்போம்.

அதை ஒரு வாரம் தள்ளிப்போட்டா சந்தோஷமா இரைச்சல் இல்லாம படம் பாக்கலாம்.

நம்ம கூடப்படிச்ச நண்பன் ஒரு வேலைக்கு அப்ளை பண்ணும்போது, நான் நாளைக்கு பண்ணிக்கிறேண்டான்னு சொல்லிட்டு அப்புறம் கடைசி நாள் , நேத்திக்கே முடிஞ்சுபோச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டிருக்கும்போதே...அப்ளை பண்ணின நண்பனுக்கு அந்த வேலை கிடைச்சுட்டா , ச்சே! எனக்கு அதிர்ஷ்டமே இல்லைன்னு புலம்பிக்கிட்டிருந்திருப்போம். (இப்படி பலப்பல புலம்பல்களுக்கு காரணமே தள்ளிப்போடுதல்தான்)

முதல்நாளே அதை உடனே தள்ளிப்போடாம செஞ்சிருந்தா நமக்கும் வேலை கிடைச்சிருக்கும்.

அப்படின்னா எதை தள்ளிப்போடணும் , எதை தள்ளிப்போடக்கூடாதுன்னு கட்டாயம் தெரிஞ்சிக்கணும்.

முக்கியத்துவம் இல்லாத விஷயங்களை தள்ளிப்போடணும்
முக்கியத்துவம் உள்ள விஷயங்களை உடனே செய்யணும்!
ஆனா..
எதுக்கு முக்கியத்துவம் கொடுக்குறதுங்கிறதுல, தெளிவா இருக்கணும்!

நாம எதையுமே தள்ளிப்போடாதவரா இருந்தா, முதல் நாள் முதல் ஷோ பாக்குறதும் தப்பே இல்லை!

நம்ம மொக்கச்சாமியும் அவரோட நண்பரும்.. ஒரு காட்டு வழியா போயிக்கிட்டு இருந்தாங்க.. அப்பன்னு பாத்து ஒரு சிங்கம் வந்துருச்சு.. உடனே அதுக்கிட்டயிருந்து தப்பிக்கிறதுக்காக ரெண்டு பேரும் ஓட ஆரம்பிச்சாங்க! சிங்கம் துரத்த ஆரம்பிச்சுடுச்சு! வேகமா ஓடிக்கிட்டிருக்காங்க! ஒரு இடத்தில் மொக்கச்
சாமி...குனிஞ்சு அவரோட ஷூ லேசை நல்லா கட்டிக்கிட்டிருந்தாரு. அப்ப ஓடிக்கிட்டிருந்த நண்பர் கேட்டாரு.. என்ன மொக்கச்சாமி! சிங்கம் தொறத்துது. இப்ப பாத்து ஷூ லேசை கட்டிக்கிட்டிருக்க நம்மளை எப்ப அந்த சிங்கம் பிடிக்கப்போகுதோன்னு பயத்தோட ஓடிக்கிட்டிருக்கோம்.அதோட வேகத்துக்கு ஈடு குடுத்து வேகமா ஓட் வேண்டாமா? ன்னு கேட்டாரு. அப்ப மொக்கச்சாமி பொறுமையா சொன்னாரு. சிங்கத்தோட வேகத்துக்கு ஈடு குடுக்க முடியுமான்னு தெரியலை.ஆனா என்னைப் பொறுத்தவரைக்கும் உன் வேகத்துக்கு ஈடு குடுத்து உன்னைவிட முன்னாடி ஓடிட்டேன்னா போதும் ..அதுக்கிட்டயிருந்து தப்பிச்சுருவேன்.

இப்படித்தான் நாமளும் ஓடவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம். எந்த விஷயத்தையுமே தள்ளிப்போட்டோம்னா நம்மளை விட வேகமா ஓடறவுங்களுக்கு அந்த விஷயத்தில் வெற்றி காத்துக்கிட்டிருக்கும்.

நாம அன்றாட வாழ்க்கைல எத்தனை இடங்களில் தள்ளிப்போடுறதை பயன்படுத்துறோம்.?


அடுத்த பஸ்ல போயிக்கலாம்!
நாளைக்குதானே கடைசி நாள் ,நாளைக்கு டிடி எடுத்துக்கலாம். (ஆனா நாளைக்கு பேங்க் ஸ்ட்ரைக்குன்னு உங்களுக்கு தெரிஞ்சிருக்காது)
வர்ற ஞாயித்துக்கிழமை வண்டிய துடைச்சுக்கலாம்!
இந்த வாரக்கடைசில மேசைல இருக்குற குப்பையை ஒழுங்கு பண்ணிறலாம்!
பதில் மெயில் அப்புறம் போட்டுக்கலாம்ன்னு இப்படி பலப்பல ஒத்திப்போடல்கள்!

இதுதான் உங்களை வெற்றியை அணுக விடாமல் தடுக்கும்னா நம்பவா போறீங்க? ஆனா அதுதான் உண்மை!

மருத்துவமனைகள்ல சொல்றதை கேட்டிருப்பீங்க! அரை மணி நேரத்துக்கு முன்னாடி கொண்டுவந்திருந்தா உயிரை காப்பாத்திருக்கலாம்.
எக்ஸாம் ஹால்ல சொல்லியிருப்பாங்க! இவ்வளவு நேரம் கழிச்சு வந்தா எப்படிப்பா உள்ள விடுறது?
ஒரு வாடகை வீடு பாத்திருப்பீங்க! நாளைக்கு பேசி முடிச்சுறலாம்ன்னு தள்ளிப்போட்டுட்டு அடுத்த நாள் போய் நின்னீங்கன்னா அடடே! நேத்து சாயங்காலமே ஒருத்தர் வந்து அட்வான்ஸ் குடுத்துட்டு போயிட்டாரே..ஸாரிங்க! ன்னு அந்த வீட்டுக்காரரு சொல்லுவாரு!

இதெல்லாம் சரியான திட்டமிடல் இல்லாம ஒத்திப்போடறதோட விலை! எப்பவுமே நல்ல விஷயங்களை தள்ளிப்போடாம உடனுக்குடன் செஞ்சு பழகுங்க! முதல்ல கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஆனா அப்புறம் அது பழகிப்போச்சுன்னா வெற்றியும் உங்களுக்கு பழகிப்போகும்.

நல்ல தொழிலுக்கு ஒரு இலக்கணம் சொல்லுவாங்க! நாளைய ஆர்டர்! இன்றைய டெலிவரின்னு! நாளைக்கு வரப்போற வேலைக்கு தள்ளிப்போடாம இன்னைக்கே தயாரா இருக்கணும்னுதான் அதுக்கு அர்த்தம். ஏன்னா சில சமயம் வேலை எவ்வளவு இழுக்கும்னு நமக்கே கூட தெரியாது.

மொழி படத்துல பிரகாஷ்ராஜும், பிருதிவிராஜும் பேசிக்கிட்டிருப்பாங்க! பிருதிவிராஜ் சொல்லுவாரு..ச்சே! கல்யாணம் ஆகலைன்னு சொன்னா வீடே தரமாட்டேங்கிறாங்க! அதுக்கு நடுவயசுக்காரரா இருக்கும் பிரகாஷ்ராஜ் பரிதாபமா சொல்லுவாரு..எனக்கு கல்யாணம் ஆகலைன்னு சொன்னா பொண்ணே தரமாட்டேங்கிறாங்க! திருமணத்தை தாமதிக்காம பண்ணியிருந்தா இந்த கொடுமை இருந்திருக்காது.

முடிஞ்சவரைக்கும், எந்த காரியத்தையும் தள்ளிப்போடாம உடனே செஞ்சு பாருங்க! அந்த காரியம் ரொம்ப சுலபமா முடியும். ஏன்னா தள்ளிப்போடப்போடத்தான் சுமை அதிகரிக்கும்.

இப்ப இந்த பதிவை படிச்சு முடிச்ச உடனே...இதுவரைக்கும் செய்யாம தள்ளிப்போட்டு வச்சிருந்த விஷயங்களெல்லாம் லிஸ்ட் எடுத்து , விறுவிறுன்னு செய்ய ஆரம்பிச்சீங்கன்னா வெற்றிதான்!
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →