உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம்.
வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே இந்திய வரைபடத்தை எந்த
மாநிலத்துக்காரர் பார்த்தாலும், அண்டை மாநிலத்தின் மீது சின்ன சினமாவது ஏற்படுவது தவிர்க்கமுடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.
ஆளவந்தானில் கமல் சொல்லுவார். ' அவ ரொம்ப நல்லவ' - அதை, உன் மனசாட்சிய விட்டு சொல்லச்சொல்லிப்பாருன்னு அவலட்சணமும்,அவ நம்பிக்கையும் நிறைந்த முகத்தை வைத்துக்கொண்டு! அதே மனநிலைதான் நம் தேசத்தைப்பற்றி நினைக்கும்போதும் வரும் இயல்புக்கு இன்றைய சூழலில், நாம் வந்துவிட்டோம்.
வெள்ளையர்களை எதிர்த்தவரை தெரியாத மாநில நிறங்கள், இப்போது தெரிய ஆரம்பித்ததற்கு அடிப்படைக்காரணம் நமது இனவாத, மொழிவாத, பிரிவினைவாத அரசியல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
பக்கத்து மாநிலக்காரன் வந்தால் , இங்கு இடம் கிடையாது என்று அடித்து விரட்டும் ஆட்களை வளர்த்துவிடும் வரைக்கும் எதுவும் தெரியாததுபோல் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசின் செயலில் இருக்கும் அஹிம்சை எத்தனை சதவீதம் ?
அணையின் உயரத்தை கொஞ்சம் கூட உயர்த்திக்கொள்ளக்கூடாது என்றும் அதனால் பயன்பெறும் மாநிலத்தை , எக்கேடாவது கெடட்டும் ஆனால் இதை வைத்துதான் எங்கள் அரசியலை நடத்தமுடியும் என்ற கேவலமான நோக்கத்தினுள் இருப்பது தீவிரவாதம்தானே ?
பக்கத்து மாநிலத்துக்கு தண்ணீர் தரமுடியாது என்று தலைமுறைகளாக போராடியது போக, அந்த மாநில ஊடகங்கள், திரைப்படம், திருவள்ளுவர் என அனைத்தையும் பகிஷ்கரிக்கும் மனோபாவத்தினுள் இருப்பது எத்தனை பெரிய மிதவாதம்?
மாநிலத்துக்குள் மாநிலங்களை உடைத்து, மொழி ரீதியான மாநிலம், இன ரீதியான மாநிலம் என்று பிரித்தாளும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்களிடம் இருந்து அப்படியே வாங்கிக்கொண்டு செயல்படும் இவர்களின் செயலில் அன்பையும் ஒற்றுமையையும் எதிர்பார்ப்பது நமது மடைமை தவிர வேறொன்றுமில்லை!
தினம் தினம் வேற்றுமாநிலத்தின்மேல் ஒருவிதமான வெறுப்பையே உமிழ வைத்து அதை உரமாகக்கொண்டு வேர் பிடித்துவளரும் இத்தகைய கேவலமான அரசியலைவிட தீவிரவாதம் எதுவாக இருக்கமுடியும். ?
இவர்களெல்லாம் மொத்தமாக கொத்துக் கொத்தாக கொல்வதில்லை. கொஞ்சம் கொஞ்சமாக நம் சமூக அமைப்பையே சிதைத்துக்கொண்டிருக்கிறார்கள். அரசியல் ஆதாயக்கொலைகள், நில ஆக்கிரமிப்புக்கொலைகள், பிடிக்காத ரௌடி
என்கௌண்ட்டர்கள், கடத்தல் கொலைகள், ஜாதிக்கலவர துப்பாக்கிச்சூடுகள், என எண்ணிலடங்கா காரணங்களுடன் நாள்தோறும் தேசம் முழுவதும் வெளியாகும் பத்திரிக்கைகளின் பக்கங்களை நிரப்பிக்கொண்டிருக்கும் இவற்றின் எண்ணிக்கை
தீவிரவாதத்தாக்குதல்களின் பாதிப்பைவிட அதிகம் என்பதை அதிர்ச்சியுடன் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
நம் தேசத்தின் சாபக்கேடாக, தனிமனித அரசியல் வளர்ச்சிக்காக தூண்டப்படும் அனைத்துத்தீவிரவாதங்களையும் தினம் தினம் செய்தித்தாள்களில் ,சர்வசாதாரணமாகப் புரட்டிக் கொண்டிருந்துவிட்டுத்தான் இத்தகைய பெரிய கொலைகளை எதிர்க்க முற்படுகிறோம் என்பது மிகவும் அவமானகரமானது !
எல்லா மாநிலங்களின் பிரச்னைகளை வேடிக்கை பார்த்துக்கொண்டு பஞ்சாயத்தும் செய்யத்தெரியாமல், அவர்களில் ஒருவரைக்கூட பகைத்துக்கொள்ளவும் முடியாமல், 'நீயும் நல்லவன் - அவனும் நல்லவன் - பிரச்னையை அப்படியே தொடருங்க - என்று ஒரு வளும்பல்தனமான பதிலாகவோ, ' நீங்க சொல்றதுதான் சரி ' என்ற ஒரே பதிலை பிரச்னைக்குரிய இருமாநிலங்களிடமும் சொல்லிக்கொண்டிருக்கும் கயமைத்தனம் நிறைந்த, ஒற்றுமையில் எந்தவொரு நம்பிக்கையும் இல்லாத மத்திய அரசின் கீழ் இருந்துகொண்டுதான் -அது எந்தக்கட்சியின் ஆட்சியின்கீழ் இருந்தாலும் சரி - கடந்த ஒரு தலைமுறையாக தீவிரவாதத்தை அழிப்பது பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என்பது சுளீரென்று அடிக்கும் உண்மை!
இனி அரசின் தீவிரவாதத்தை பார்ப்போம்....
(அட..இது என் 100 வது பதிவு... 101 - ல் தொடருவோம் !)
