2008ன் தீபாவளியை
இனிதாகக்கொண்டாடினோம்.
திரையரங்குகளில்
எங்க ஊர் ரசிகர் கூட்டம்
அம்மாவுக்கு மோர் விடினும்
கட் அவுட்டுக்கு பீர் விட்டாலும்,
சென்ற ஆண்டு
20000 புள்ளிகளில் இனித்துப்போட்ட
பங்குச்சந்தை கோலம்
8000 புள்ளிக்கோலமாய், இளித்துக்கொண்டே
சுருங்கினாலும்,
சட்டைப்பையில் பணம் கொண்டு சென்று
கைப்பையில் வாங்கியவர்,
கைப்பையில் பணம் கொண்டு சென்று
சட்டைப்பையில் தக்காளி வாங்கினாலும்,
கடன்பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினார் இலங்கை வேந்தன் என்று
எழுதிய சமூகம்,
கடன்பட்டால் போதும் !
தள்ளுபடி காப்பாற்றும்
என்ற தரத்துக்கு வந்தாலும்,
தமிழனுக்கு குரல் கொடுத்தால்
இறையாண்மை என்ற பெயரில்
ஆண்மைக்குறைப்பு அறுவைசிகிச்சை
நடந்தாலும்,
இருண்ட காலம் என்ற ஒன்றை
இன்றே காட்டுகிறோம் என்று
இயன்றவரை முயற்சி செய்யும்
அரசின்கீழ் இன்வர்ட்டர் போட்டு வாழ்ந்தாலும்,
2008ன் தீபாவளியை
இனிதாகக்கொண்டாடினோம்.!
இப்போதுதான் நாங்கள்
சகிப்புத்தன்மை என்ற பெயரில்
சத்தற்றுப்போய்விட்டோம்
அன்றொரு நாள்
அக்கிரமம் செய்த
நரகாசுரனை நசுக்கித்தான்
இந்தத்திருநாளுக்கு வித்திட்டோம்!
என்றாவது ஒருநாள்
மீண்டும் வெற்றி பெறுவோம் !
ஏனெனில்
எங்களுடன் ஹிதேந்திரனும்
ராதாகிருஷணனும் இறந்தும்,
இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!
எங்கள் மனிதநேயம்
அந்த நாளில்
மகத்தான உலகம் காட்டும்!