உங்க வீட்டுக்குள்ள ஒருத்தன் நுழையுறான். !
என்ன குழம்பு? ங்குறான். யாருன்னே தெரியலை!
இருந்தாலும் 'வெண்டைக்காய்' ன்னு சொல்லிக்கிட்டிருக்கும்போதே
நான் வெண்டைக்காய் வாங்கின கடையிலதான் நீயும் வாங்கின!
அதுனால இந்த வெண்டைக்காயும், அதவச்சு செஞ்ச குழம்பும் இப்ப என்னுது! அதுக்கும்மேல இனிமே வெண்டக்காயை வச்சு எது பண்றதா இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்த சொல்லு.. அப்பதான் அதைப்புடுங்கிட்டுப்போக வசதியா இருக்கும்! நானே வந்து வாங்கினதால அந்த காய்கறிக்கடையையும் நாந்தான் எடுத்துக்குவேன். அதெப்புடி என் வெண்டக்காய வச்சு சமைக்கிற எடத்துல டிவி, பைக்கெல்லாம் வச்சிருக்க! ன்னு அடிச்சு நொறுக்கிட்டு போயிடுறான்.
இப்புடி ஒருத்தன் வந்து அடாவடி பண்றதுக்கும்
கர்நாடகா அடாவடி பண்றதுக்கும் பெரிய வித்யாசம் ஒண்ணே ஒண்ணுதான்.
அது வெண்டைக்காய்...இது பல மனிதர்களின் வயிறுக்காய்..!
ஆமா..நான் தெரிஞ்சும் - தெரியாமத்தான் கேக்குறேன்
என்னய்யா நடக்குது இங்க ? ஒகேனக்கல் என்ன ஜப்பான்லயா இருக்கு? (அவன் கூட இவ்வளவு பண்ணமாட்டான் போல இருக்கே!)
அப்ப நாம எந்த நாட்டில இருக்கோம். இந்தியாங்குறது உண்மையிலேயே ஒரே தேசமா? இல்ல சும்மா உலுலுவாங்காட்டிக்கும்.....வேசமா? (எதுகைமோனையா இருந்தாலும் எரிச்சலாத்தானே வருது)
எதை எடுத்தாலும் விட்டுக்கொடுத்து போற ஆளை இளிச்சவாய்ன்னு சொல்லுவாங்க! அவன் சிரிக்காதவனாகவே இருந்தாலும்கூட! மொத்த உடம்பும் விட்டுத்தர்ற விஷயத்துக்குக்கூட வாய்க்குத்தான் கெட்ட பேரு.......இளிச்ச வாய்!
இந்திய தேச வரைபடத்துல கடைசில தாவாங்கட்டைக்குப்பக்கத்துல
பெரிய இளிச்சவாய் ஒண்ணு இருக்குடோய்ன்னு எல்லா மாமாநிலமும்
ரவுண்டு கட்டி அடிச்சாலும், வாங்கிட்டு இருக்குறதுக்கு...
நம்ம சொரணை செத்துப்போய் பல நூற்றாண்டா ஆகிப்போச்சோன்னு
தோணுது.!
முன்னாடி ஒரு கொசுவத்தி பதிவுல
காமெடியா ஒரு விஷயம் சொல்லியிருந்தேன்.
Unlimited க்கும் ஒரு limit இருக்கு!
இப்ப அதே மாதிரிதான்
சகிப்புத்தன்மைக்கும் ஒரு சகிப்புத்தன்மை இருக்கு!
அதுக்கும் மேல போனா..... என்ன பண்றதுன்னு யோசிக்காம
ரௌத்ரம் காட்டுறதுதான் நல்லது!
இதே நெய்வேலி, கர்நாடகத்தில் இருந்தா இந்த பதிவை அடிக்கமுடியாம
மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் ஏதாவது ஒரு புத்தகத்தை மேஞ்சுக்கிட்டுதான் இருக்கமுடியும். இந்நேரம் பீஸைப்புடுங்கிருப்பாங்க! அவுங்களுக்கு பிரச்சனை வேணும் அவ்வளவுதான்! நியாயமா ? கிலோ என்ன விலைன்னுருவாங்க! ஏன்னா கர்நாடகத்தனம்னா இதுதான்.
அதுக்கும்மேல நம்ம வீட்டுக்கும் பக்கத்துவீட்டுக்கும் பெரிய பிரச்னை நடந்துக்கிட்டிருக்கு! ஊர் நாட்டாமை உங்க வீட்டுக்குள்ள வந்து சமையல் அறையில் வந்து தண்ணிகுடிச்சுட்டு கண்டுக்காம வெளில போனா எப்புடி இருக்கும்? அதுவும் நாட்டாமை வீட்டுலதான் நம்ம அண்ணனும் வேலை பாக்குறாரு!
அப்படித்தான் பண்ணிக்கிட்டிருக்காங்க சோனியா அம்மா! காரைக்குடிக்கு வருவாங்களாம்
பிரச்னையைப்பத்தி சென்னைல வந்து பேசமாட்டாங்களாம். (ஓ..இப்ப தொகுதி பங்கீடு இல்லையோ?) சிதம்பரம்ன்னு ஒரு அண்ணன் என்னா ஆனாருன்னே தெரியல! உங்க கம்பேனி பெரிய லந்துல்ல பண்ணிக்கிட்டிருக்கு!
நமக்கு மேல இருக்கிறது
மத்திய அரசா?
இல்ல
'தத்தி'ய அரசான்னு வெளங்கல!
அதுக்கும்மேல.....
ஒத்தி வக்கிறேன் எனும் பிரச்னை
இப்ப வெண்டைக்காய் சமைக்கிறதை அவன் வீட்டு கல்யாணம் முடியறவரைக்கும் ஒத்தி வைக்க நீங்க முடிவெடுத்துட்டீங்க! அய்யா! இதை இப்ப ஒத்தி வச்சா அப்புறம் ஒகேனக்கல்ல அவனுக்கு ஒத்தி*க்கு வச்ச மாதிரிதான்.!
அவன் என்னடான்னா ஒகே நக்கல் பண்ணிக்கிட்டிருக்கான்.
நமக்கு பிரச்னை வேணும்! நியாயம் வேண்டாம்.! இன்னிக்கு பொழப்பு ஓடுச்சான்னு திரியிற அரசியல் வியாதிகளுக்கு மத்தியில் தீர்வு காணவேண்டிய கட்டாயத்தில் இருக்கோம்.
நாம என்ன செய்ய முடியும்ன்னு நினைக்கிறீங்களா? ஒரு ஐம்பது பைசா போஸ்ட் கார்டு வாங்குங்க!
(முடிஞ்சா ரெண்டா வாங்குங்க)
" தயவு செய்து - எப்போதும் போல கண்டுகொள்ளாமல் இருங்கள்-
தமிழனுக்காக பரிந்துகொண்டு வந்து சிரமப்படவேண்டாம்! ஆனால்
இந்த பாராளுமன்ற தேர்தலில் என் ஓட்டை எதிர்பார்க்காதீர்கள் " - ன்னு எழுதி
பிரதமருக்கு அனுப்புங்க!
'ஒகேனக்கல் பிரச்னையை இந்தியப்பிரச்னையாக பாவித்து உடனடி நடவடிக்கை
எடுக்குமாறு ஒரு இந்தியனாக கேட்கிறேன்' ன்னு எழுதி ஜனாதிபதிக்கு அனுப்புங்க!
இல்லைன்னா... ரெண்டு கன்னடக்காரங்க சந்திச்சுக்கிட்டா இப்படித்தான் பேசிக்குவாங்க! தமிழ்நாட்டுக்காரன் எதைப்புடுங்கிட்டு வுட்டாலும் பேசாம இருக்கான் எப்புடி அடிச்சாலும் தாங்கிக்கிறான் இவன் ரொம்ப நல்ல்லவன்ன்ன்ன்....! அவ்வ் :)
ஒன்று மட்டும் உண்மை நண்பர்களே!
எல்லாப்புரட்சிகளும் இப்படி ஒரு புள்ளியில்தான் ஆரம்பித்தன.
* ஒத்தி - அடமானம் மாதிரி...
ஒரு வீட்டை ஒருலட்சம் கொடுத்து
ஒத்திக்கு வாங்கினா...வாடகை கிடையாது.
வெளில வரும்போது ஒரு லட்சம்
திரும்ப கிடைக்கும்.
மும்பைல எல்லாம்
ஒத்திக்கு வந்தவன்...
காலி பண்ண, சொத்து மதிப்புக்கு மேலயே
பணம் கேப்பான்...-(அடேயப்பா
எம்மாம்பெரிய விளக்கம்?)
(அய்யய்யோ..நான் கண்டது கனவு இல்லையா? நெஜமாவே பதிவா எழுதி போஸ்ட் பண்ணிட்டேனா...? எனவே..இதை இப்போதைக்கு - அடுத்த பதிவு போடும்வரை ஒத்தி வைக்கிறேன்.! :)