என் மகளுக்கு தன் பள்ளியில் இடம் இல்லையென்று
அந்த முதல்வர் சொன்ன பின், தங்கமணி அழ ஆரம்பித்துவிட்டார். ஆனால், அதையெல்லாம் கண்டுகொள்ளாத
முதல்வி அவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து, ‘பட்டாக்’ என்று இருகரம் கூப்பி வணங்கி….தயவுசெஞ்சு
போய்ட்டு வாங்க என்றார். ‘Get out’ என்று நாகரீகமாகச் சொன்னதை மனம் ஏற்க மறுத்தது.
மேலும் நான் பேச ஆரம்பிக்க..
ஒரு பிரின்ஸிபால்…நானே இறங்கி வந்து உங்ககிட்ட
கைகூப்புறேன். அதுக்கப்புறமும் என்ன இது ….திரும்பத்திரும்ப கேக்குறீங்க? என்று குரலை
உயர்த்த… அந்த ‘நானே’ வில் இருந்த அகந்தை, என்னை அசைத்துப்போட்டது. குரலை உயர்த்தலாம்
என்று நினைக்கும்போது, காலைக்கட்டிக்கொண்டு தான் படித்த அத்தனையையும் உளறிக்கொண்டிருந்தாள்
என் வீட்டு தேவதை..!!
எப்போதும் கொண்ட கொள்கையில் மனம் தளராமல்
ருத்ர தாண்டவமாடும் சுரேகா என்ற மானஸ்தன், ’பவ்’ என்றுகூடக் கத்தமுடியாமல் நொந்துகொண்டே
வெளியில் வந்தான் .
நடந்தவை
எவற்றையும் விளங்கிக்கொள்ளமுடியாமல்,
நாளைலேருந்து
’அண்ணன் ஷூல்லதான் நானும் பதிக்கப் போதேனா?’ என்று மகிழ்ச்சியை வெளிப்படுத்தினாள் மாணவியாக
வேண்டிய மகள்!
தங்கமணியின்
கண்ணீரை வைத்து ஆறு டம்ளர் உப்புக்கரைசல் தயார் செய்யலாம்போல் இருந்தது. அதைப்பார்த்து
எனக்கே உலகம் அவுட் ஆஃப் போகஸில் தெரிய ஆரம்பிக்க.. கர்ச்சீப்பை எடுத்து லென்ஸைத் துடைத்து
ஃபோகஸை சரி செய்துகொண்டேன். # ஆம்பளை அழக்கூடாது சுரேகா! மனசாட்சி வேறு மல்லுக்கட்டியது…
‘என்ன
இப்படி பண்ணிட்டாங்க… என்று இருவரும் கறுவிக்கொண்டே வர..
இன்னா
சார்! பாப்பாக்கு சீட் வோணுமா என்று ‘ஆட்டோ வோணுமா! என்பது போல் ஒரு குரல் இரகசியமாய்க்
கேட்டது.
திரும்பிப்
பார்த்தால்..அந்தப் பள்ளியின் கடை..கடை..கடை…நிலை ஊழியர்..!!
உன்
நம்பர் குடு சார்… வெளில வந்து மிஸ்டு கால் தரேன்.. வெவரம் பேசுவோம்..!!
என்ன
வெவரம் பேசணும்?
ம்மா..சொல்லும்மா
சாராண்ட ! சீட் வேணுமா..வேணாவா?
நான்
நம்பர் சொல்றேன் என்று என் எண்ணை ஒளிவேகத்தில் சொல்லிமுடித்தார் தங்கமணி..!! பதிலுக்கு
அவர் எண்ணையும் வாங்கிக்கொண்டு அந்த தொடர்பை பூர்த்தி செய்தார். Completion of
Communication Theory நினைவில் வந்து தொலைத்தது… # இவர் பெரிய மேனேஜ்மெண்ட் குருவாம்..!!
அவரை
வெளியில் வந்ததும் தொடர்புகொண்டோம். ட்விட்டரை மிஞ்சும் வகையில் 100 எழுத்துக்களுக்குள்
பேசினார்…
குழந்தைக்குக்
கட்டவேண்டிய முழுக் கட்டணத்தொகையை… அப்படியே தனது கட்டிங்காகக் கேட்டார். அதற்குப்
பிறகு நாம் பள்ளிக்கட்டணம் தனியாகக் கட்டவேண்டும். இது சேவைக்கட்டணம் மட்டுமே! (இங்கு
லஞ்சம் என்பது கடமையை மீற எனக் கொள்க!) அந்த சமூக சேவகர். ! (அந்தப்பள்ளியில்தான் சீட்
வேண்டும் என்று கல்விக்குத் தத்தளிக்கும் சமூகத்துக்கு சீட் வாங்கிக்கொடுக்கும் சேவகர்
சமூக சேவகர்தானே…? )
‘சீட்
கெட்சப்புறம் பணம் குடு சார்.. எல்லாம் மேல உள்ளவங்க பண்றது..நம்ப கைய்ல எதுவ்மே கெடியாது.! .என்று நியாயம் வேறு சொன்னார்.
நான்
முதலில் கட்டாயமாக மறுத்தேன்..!! அரிச்சந்திரன் ஆக யத்தனித்தேன். ஆனால்..
அதற்குப்பிறகு
காட்சிகள் மாறின..
பல்வேறு
மறுத்தல்கள், ஒப்புதல்கள், சண்டைகள்,
படிப்பைத்தவிர
வேற என்ன செய்யப்போறோம்..
நமக்குத்தான்
நேர்வழில சீட் வாங்க துப்பு இல்ல!
அவனவன்
லட்சக்கணக்குல பணம் கட்டி பிள்ளைங்களைப்படிக்க வைக்கிறான்..!
வேற
எந்த ஸ்கூல்லயும் இனிமே சேக்க முடியாது.. ரெண்டு ஸ்கூல்..ரெண்டு வேன்னு நான் திண்டாட
முடியாது..!
‘ஒங்களுக்கு
பிள்ளைங்க எதிர்காலத்துல அக்கறையே இல்லையா?
என்ற பிரம்மாஸ்திரம் உட்பட அத்தனை அம்புகளையும்
வாங்கிக்கொண்டு…கர்ணன் தேருக்கடியில் அமர்ந்திருந்த கோலம் நினைவில் வந்தது. தான தர்மத்தைக்
கொடுப்பதுபோல்….சீட் வாங்கிக்கொடுக்கும் கண்ணனுக்கு… பணம் தருகிறேன் என்று சொன்னதுதான்
தாமதம்..!! படாரென்று
குழந்தையின் அப்ளிகேஷன் எண் மற்றும் பெயர் வாங்கிக்கொண்டார்..அன்று
இரவு தூக்கமே வரவில்லை..! #உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காது பாட்டு வேறு…!! இவர் கர்ணனாமாமாம்..!!
அடுத்த
நிகழ்வுகள் சட சட வென சடுதியில் நடந்தேறியது.
அதேபோல்
இரண்டே நாட்களில் நேர்முகத்தேர்வு அழைப்பு… அது கண் துடைப்பு என்று தெரிந்தே சென்றதால்..எங்கள்
அலைப்பறைக்கு அளவே இல்லை..
குட்டிக்கு
இது டகால்ட்டி இண்டர்வ்யூ என்று எப்படி தெரிந்தது என்று தெரியவில்லை. அவளும்.. ஆ வைக்காட்டி
எ என்றாள். P ஐக் காட்டி D என்றாள். கருப்பை , வெள்ளை என்றாள். அனைத்துக்கும்.. அந்த
டீச்சர் ஓ.. அப்படியா என்று மிகச்சரியாக பதில் சொன்னதுபோல், அன்பாக ஆமோதித்து,..அப்படியே
ரைட் சைட் போனீங்கன்னா பிரின்ஸிபால் ரூம்…அங்கபோய் அவங்களைப் பாத்துருங்க! என்றார்.
பிரின்ஸிபால் ரூமுக்குச் செல்லும் தூரம்
அதிகமாவதுபோல் இருந்தது. லேசாக தடுமாற்றம் வேறு..ஆனால்..பணம் கொடுத்து சேர்த்திருக்கோம்.
ஏன் பயப்படணும் என்று மனதைத் தேற்றிக்கொண்டு, லந்தாக உள்ளே நுழைந்தோம்.
எங்களைக்
கண்டதும், அவர் கண்ணில் மிக மிக மைக்ரோவாக ஒரு ஜெர்க்..
பின்னர்
சுதாரித்துக்கொண்டு..
சந்தோஷம்..பாப்பாவை
சேத்தாச்சா!
இதான்
இந்தப்பள்ளிக்கூடத்தோட சட்டதிட்டங்கள். இத்தனாந்தேதி ஓப்பன் பண்றோம். இங்க போய் யூனிபார்ம்
வாங்கிக்குங்க என்று இதுவரை பார்த்தேயிராத இருவரிடம் பேசுவதுபோல் சிறப்பாக நடித்தார்..#ஊரில்
நடிக்க ஆள் கிடைக்காம தடுமாறுது எங்க சினிமா இண்டஸ்ட்ரி..!!
நான்
செய்த அளும்பு அதற்கு மேல்.!.அவர் முன் கால் மேல் கால் போட்டுக்கொண்டு,.. அவர் ரூமையே
சுற்றிப்பார்த்துக்கொண்டு.. அவரை உற்றுப் பார்த்துக்கொண்டு… என வஞ்சம் அனைத்தையும்
தீர்த்துக்கொண்டேன்.
அறையைவிட்டுக்கிளம்பும்போது…இரு
கைகளையும் பட்டார் என்று கூப்பி வணக்கம் வைத்து.. ’ போய்ட்டு வரோம் மேடம்’ என்றேன்.
என்னால் செய்யமுடிந்த ஒரே பழிவாங்கல்! ஆனால்..விலைதான் மிக அதிகம்..!! ஆனால், தங்கமணியின்
சிரிப்பின் வெளுப்பில்… ஒரு டே நைட் ஐபிஎல் மேட்சுக்கு ஒளி கொடுக்கலாம் போலிருந்தது.
வாசலில்,
நம்ப புண்ணியவான் சொன்ன இடத்தில் சொன்ன தொகையை சொன்ன மாதிரி கொடுத்துவிட்டு பிரின்ஸிபாலுக்கு
வைத்திருந்த வணக்கத்தை அவருக்கு வழங்கினேன். ஏனெனில் சீட் வாங்கிக் கொடுத்தவர்தான்
என்னைப் பொறுத்தவரை அந்தப் பள்ளியின் முதல்வர்!
மொத்தத்தில்..குட்டிப்பாப்பா
LKGயில் சேர்ந்துவிட்டாள்.
இப்படியாக
முதல் வாரம் சீட் இல்லையென்று துரத்திவிடப்பட்டு அழுதுகொண்டே வெளியேறிய நாங்கள்…அடுத்த
வாரத்துக்குள் ஒரு ஆண்டுக்கான கட்டணத்தை அதிகப்படியாக அழுதுவிட்டு சீட் கிடைத்த பெருமிதத்துடன்
அதே பள்ளியிலிருந்து சிரித்துக்கொண்டே வெளியில் வந்தோம்..
சொந்தங்களுக்கு
ஃபோன் பறந்தது.
‘
பாப்பாவை ஸ்கூல்ல சேத்தாச்சு! ஒரு பிரச்னையுமில்லை…ஸ்வீட் எடு கொண்டாடு! …!!
ஆனால்…இதன்
பின்னணிப் பிரச்னைகள் அனைத்தும் எனக்கு பூதாகரமாகத்தெரியவந்துள்ளது. எவ்வளவு பெரிய குதிரை வியாபாரம்.. அதன் கொம்பாக மாற்றப்பட்டு, வியாபாரத்தின் விலை இன்னும் அதிகமாக்கப்படுகிறது என்பதும் புரிந்திருக்கிறது.
சிரித்துக்கொண்டே இதைக் கடந்து போகிறவனில்லை
நான்..!! என்ன செய்யப்போகிறேன் என்பதைப் பொறுத்திருந்து பாருங்கள்..! இந்தப் பிரச்னையை
மிகவும் லாவகமாகக் கையாள வேண்டியிருப்பதால்.. இது ஒரு இடைவேளைதான்..!! பல மாதங்கள்
கழித்து, வெடிக்கும்போது அனேகமாக ஒரு செய்தித்தாளில் என் சிரிக்கும் புகைப்படத்தை நீங்கள்
கண்டாலும் ஆச்சரியமில்லை.
