குதிரை(க்கொம்பு) யாவாரம்
சென்னையில் பள்ளிகள்
தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய
தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும்,
ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில்
சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!!
தங்கள் வீட்டுக்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ,
மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில்,
அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம்.
அது நாமாகக்கூட இருக்கலாம்.
ஏன் இவ்வளவு பீடிகை
என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க!
உங்கள் நினைப்பு
சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.
ஒரு தனியார் பள்ளியில்,
அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய்
நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன
தேதியில் ஜனவரியில் ஒரு புதன்கிழமை சாலை வரை நின்ற வரிசையில் தேவுடு காக்கவேண்டியிருந்தது.
அப்போது நம்மை நான்காவது கூட படித்திராத செக்யூரிட்டி…’இப்டிக்கா நில்லு சார்! அப்டீக்கா
நில்லு சார்..! பட்ச்சவங்கதானே நீயி..! என்று வரிசையில் நிற்பவர்களை சரமாரியாகத்திட்டி
நம் கல்விச்சான்றிதழ்களை வாயாலேயே கிழித்தெறிந்தார். சரி.. வேதாள உலகத்துக்குள் போக
இது ஒரு கட்டம் போலிருக்கிறது என்று பொறுத்துக்கொண்டு, உள்ளே சென்றால்.. அன்று விண்ணப்ப
நேரம் முடிந்தது என்று சொல்ல ‘ கேட்டால் கிடைக்கும்’ நரம்பு வேலை பார்த்தது.
கொஞ்சம் அழுத்திக் கேட்டதில். தானாக விண்ணப்பம் கை நோக்கி வந்தது. ஒரு விண்ணப்பத்துக்கு நான் கொடுத்த
தொகையை வைத்து, A4 டம்மி ஷீட்டில், இரண்டு கலர்கள் கொண்ட அப்ளிக்கேஷன்கள் 500 காப்பிகள்
அடிக்கலாம். அந்த வரிசையில் என்னைப்போன்று 600 பேர் நின்றுகொண்டிருந்தோம். ஆக, அப்ளிக்கேஷன்
காசை வைத்துத்தான் அவர்கள் அடுத்த வகுப்புக் கட்டிடம் கட்டப்போகிறார்கள் என்பது உள்ளங்கை
வெள்ளைத்தாளாகத் தெரிந்தது.
அய்யோ..அடித்தல்
திருத்தல் இல்லாம எழுதுங்க! பாத்து..பாத்து என்று விமானத்தை தரையிறக்கும் லாவகத்துடன்
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன்னை மாங்காட்டில் அருள்பாலிக்கும் அம்மனாகவே நினைத்துக்கொண்டு
அதிகாரம் செய்துகொண்டிருந்த ஒரு அம்மாவிடம் (அந்தப்பள்ளியின் அலுவலர்) பவ்யமாக, காலில்
விழுந்தால்கூடத்தவறில்லை எனும் அளவுக்குத் தவழ்ந்து கொடுத்துவிட்டு வந்தாயிற்று.!
நம் மகன் அந்தப்பள்ளியில்
படிப்பதால், கண்டிப்பாக சீட் கிடைத்துவிடும் என்று அன்றே பாயசம் தயாராகியது.
எப்போது நேர்முகத்தேர்வுக்கு
அழைப்பார்கள் என்று தெரியாமல், தினமும் அ முதல் ஃ வரையிலும் ஆங்கில எழுத்துக்களையுமே
மூன்றுவேளையும் ஊட்டி, ஒரு கொதிநிலையிலேயே மூன்றுவாரங்களுக்கு வீடு இருந்தது.
வரும் ஞாயிறன்று
நேர்முகத்தேர்வு என்று ஒரு குறுஞ்செய்தி அந்தப் பள்ளியிலிருந்து வர, வீடே அல்லோகலப்பட்டது.
எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று ஒரு கேன் கோல்ட் வின்னர் எண்ணையை ஹாலில் கொட்டிவிட்டு
அதில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் பள்ளிசெல்லவேண்டிய பைங்கிளி!
ஞாயிறும் வந்தது.
பள்ளியிலும் கூட்டம்
அலைமோதியது.
நம் குழந்தைக்கு
எங்கே நேர்முகத்தேர்வென்று நாங்கள் தேடி அலைய…அங்கிருக்கும் பள்ளி ஊழியர்கள் ஒருவருக்குமே
உண்மையில் LKGக்கான நேர்முகத்தேர்வு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை.
இது என்னடா சோதனை
என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தால்.. ஓ..நீங்க எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வந்தீர்களா?
அது போனவாரமே முடிஞ்சுபோச்சே என்று சொல்லி…சாவதானமாக ஒரு லிட்டில்பாயை ஹிரோஷிமா மீது
போட்டதுபோல் போட்டுவிட்டு அந்த ஆசிரியை சென்றுவிட்டார். ஜப்பானைவிட மோசமான நிலையில்
நாங்கள் காட்சியளித்தோம்.
அப்போதும் மனம்
தளராமல், நான் பள்ளி முதல்வரை பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, சந்தித்தால், அந்த
அம்மா வீராவேசமாக..
சார். 3000 பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஆனா..மொத்தமே 40 பிள்ளைங்கதான் டி.ஸிக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க.. வேக்கன்ஸியே இல்லை.. ! உங்க
பையன் இங்க படிக்கிறாங்கிறதுக்காக எல்லாம் நான் க்ளாஸ்ரூம் கட்டமுடியாது என்று ‘ உங்களுக்கு
சீட் இல்லை’ என்பதை வெவ்வேறு காரணச்செங்கல்களால் அடுக்கினார்.
என் புத்திக்கு
அந்தச்சூழலில்.. வடிவேலு சொல்லும் ‘ எலவு காத்த கிளி கதையில்..அந்தக் கருப்பு வேற..இந்தக்கருப்பு
வேற..எனும் டயலாக் ஞாபகம் வந்தது.. இடுக்கண்ணில் நகைத்தும் தொலைத்தேன்.
அப்புறம் ஆரம்பித்தது பிரச்னை …..
ரெண்டு நாள் கழிச்சு
சொல்றேனே….!
அண்ணே சஸ்பென்ஸ் ரொம்ப நாள் வைக்காதீங்க சீக்கிரமா என்ன ஆச்சுன்னு சொல்லிடுங்க.
ReplyDeleteநாளைக்கே சொல்லிர்றேன் ரோமியோ..!
Deleteநிஜம்மாவே இப்ப எல்கேஜில பசங்களை சேர்க்கறவங்க படும் கஷ்டத்தை பார்க்கும் பொழுது ஆஹா நாம புண்ணிய்ம்ல செஞ்சிருக்கோம். இம்புட்டு அவஸ்தையெல்லாம் படலியேன்னு தோணுது தலைவரே!!!
ReplyDelete(எட்டாம் வகுப்பு படிக்கும் என் மகளுக்கு 25,000, மற்றபள்ளிகளில் (அதான் ப்ளே ஸ்கூல்) 30,000!!!)
ஆஷிஷுக்கு +1 அட்மிஷன் வேட்டை ஆரம்ப்க்கணும். மலைப்பா இருக்கு.
ஆமாங்க..!! நானெல்லாம் அரசுப்பள்ளியில்தான் படிச்சேன்.
Deleteஎன்னை காலைல யூனிஃபார்மெல்லாம் போட்டே கூட்டிக்கொண்டுபோய் ஜூன் மாசம் 3ம்தேதி எங்க அப்பா ஏழாம் வகுப்பில் சேத்துவிட்டுட்டு, ஆபீஸ் போய்ட்டாரு..!!
நவம்பர்லேருந்தே தேவுடு காக்கலை!!
ஹும்..அது ஒரு பொற்காலம்!
சீக்கிரம் சொல்லுங்க...
ReplyDeleteகண்டிப்பா...! :)
DeleteDear Surekaa
ReplyDeleteYou are worrying for your LKG Daughter and if you struggle then you need not worry for years together for next 12 years. But think about people like me. Every year, while we get transfer, alongwith other challenges, this school admission and further socalled penalty in the name of donation also create tension and enhances our Blood Pressure.
But it is interesting to read in your wordings. Please do post the rest also in time.
Yeah Its true anna..!!
DeleteThanks for your compliment..! :)
எல்லோரும் தனியார் பள்ளியில் தான் நல்ல கல்வி கிடைக்கும் என்று அலறி அடித்துக் கொண்டு ஓடுவதால் வந்த விளைவு இது. நீங்கள் சொல்லும் இந்த சம்பவம் சென்னையிலும் மற்ற நகர் புறங்களிலும் நடப்பதாக நினைக்கிறேன். ஆனால், ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு குக்கிராமத்தில் உள்ள மாணவனோ மாணவியோதான் மாநிலத்தில் முதல் மதிப்பெண் வாங்குகிறார்கள். இந்த மாதிரி பெற்றோர்களை டார்ச்சர் செய்து பிள்ளைகளை சேர்க்கும் பள்ளிகள் முதல் இடத்தைப் பெறுவதில்லையே என்ன காரணம்... மக்களின் மனோபாவம் மாற வேண்டும். அரசு பள்ளிகளின் ‘வௌங்காத’ பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். மக்கள் அனைவரும் அரசு பள்ளிகளை தேடி போகும் நாள் வர வேண்டும்.
ReplyDeleteமிகச்சரி நண்பரே..!! என் பிள்ளைகளை அரசுப்பள்ளியில் சேர்க்கும் அந்த நாளுக்காக நான் உண்மையில் விரும்பிக் காத்திருக்கிறேன்.
Deleteசத்தியமாக, அரசுப்பள்ளிகளின் அவல நிலையால்தான் இப்படி நடக்கிறது. மேலும் மேட்டிமைத்தன பீற்றல்களின் விளைவும் காரணம்..!!
இதில் நானும் அடக்கம்..!!
Deleteஅவ்வ்..இப்போவே இப்பிடின்னா,எம்புள்ளைக்கெல்லாம் எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வயித்துக்குள்ள இருக்கும் போதே, ரிசர்வ் பண்ணனும் போலயே! :-(
ReplyDeleteகல்யாணம் இன்னும் ஆகலையா? அப்ப...ஒரு பெரிய ஸ்கூலில் டீச்சர் வேலை பாக்குற பொண்ணா பாருங்க...சீட்டுக்கு டென்ஷனே இருக்காது...!!
Deleteநம்ம குடும்பத்துல தமிழ் வழிதான்.
ReplyDeleteஅதனால இந்தக் கஷ்டம் நமக்கு இல்லை.
பல ஊர்களில் அரசு பள்ளிகளில் நன்றாகவே சொல்லிக்கொடுக்கின்றனர். சைதை, தாம்பரம் போன்ற இடங்களிலுள்ள சில அரசு பள்ளிகள் மிகவும் சிறந்தவை என பத்திரிகைகளில் பார்த்த ஞாபகம். முயன்று பார்க்கவும்.
ReplyDelete