நானோ கார் வாங்கும்போதே, சர்வீஸுக்கான புத்தகமும்
கொடுத்தார்கள். அதில் முதல் இலவச சர்வீஸுக்கு – 1500 கிலோமீட்டர் அல்லது மூன்று மாதங்கள்
– இதில் எது முதலில் வருகிறதோ, அதில் பயன்படுத்திக்கொள்ளவும் என்று போட்டிருந்தார்கள்.
நானும் முதல் மூன்றுமாதம் கழித்து பார்த்தால், 750 கிலோமீட்டர்தான் ஓடியிருந்தது. (அந்தக்காலகட்டத்தில்
நான் நிறைய வெளி மாநிலங்களில் சுற்றிக்கொண்டிருந்ததால், காரைப் பயன்படுத்த வாய்ப்பே கிடைக்கவில்லை) இன்னும் கொஞ்சம் ஓட்டிவிட்டுக்கொடுத்தால்தானே
வண்டி சர்வீஸ் விட்டதற்கு அர்த்தம் இருக்கும் என்று நானும் பொறுமையாக இருந்தேன்.
அப்புறம்
கொஞ்ச நாட்கள் சென்னைக்குள் ஓட்டிக்கொண்டிருந்துவிட்டு, ஒரு திருப்பதி பயணம், சென்று
வந்தால், 1400 என்று காட்டியது. ஓக்கே இந்தவாரம் சென்றுவிடலாம் என்று நினைக்கும்ப்போது
ஒரு திடீர் திருச்சி பயணம்… போய்விட்டு வந்து பார்த்தால் 2200 கிலோமீட்டர் ஓடிவிட்டது
என்று போட்டிருந்தது. ஆஹா…சர்வீஸ் செய்யவேண்டிய கட்டத்தை கடந்திருக்கிறதே என்று உடனே
நானோவின் அதிகாரப்பூர்வ சர்வீஸ் சென்ட்டருக்கு ஓட்டிச்சென்றேன்..
அங்குதான் ஆரம்பமானது
கச்சேரி !
நல்ல இன்முகத்துடன் வரவேற்று , சர்வீஸ் ஷீட் எல்லாம்
போட்டவர்கள். கிலோமீட்டர் ரீடிங்கைப் பார்த்தவுடன்,
ஸாரி ஸார்..! இந்த
வண்டிக்கு இலவச சர்வீஸ் செய்யமுடியாது..! எங்க சர்வீஸ் லிமிட்டை விட 700 கிலோமீட்டர்
அதிகமா ஓடியிருக்கு.. நீங்க 650 ரூபாய் கட்டவேண்டியிருக்கும் என்றார்கள்.
நானும்,
அதே இன்முகத்துடன்..
1400 கிலோமீட்டர் ரீடிங் காட்டும்போது அர்ஜெண்ட்டா
திருச்சி போறேன்.. திண்டிவனத்துக்கிட்ட 1500 காட்டுது… அங்கயே அப்படியே நிறுத்திட்டு,
சர்வீஸ் செஞ்சுதான் நான் வண்டியை எடுத்திருக்கணுமா என்றேன்.
அது தெரியாது சார்…
வேணும்னா டாட்டா மோட்டார்ஸ் காரங்ககிட்ட நேரா பேசிக்குங்க என்றார்.
முதலில் டோல் ஃப்ரீ
எண்ணுக்கு அழைத்து விபரம் சொன்னேன். அந்த இளைஞர் ,
அது
ஒண்ணும் பிரச்னையே இல்லை சார்.. முதல் சர்வீஸ் 1500 கிலோமீட்டர்க்குள்ள நீங்க செஞ்சிருக்கணும்..
விட்டுட்டீங்க.. இப்போ, இரண்டாவது இலவச சர்வீஸுக்கான ஸ்லிப்பைக் கொடுத்து, இந்த சர்வீஸை
இலவசமா செஞ்சுக்குங்க என்று ஆலோசனை சொன்னார்.
இது
பரவாயில்லையே என்று எண்ணிக்கொண்டே, இரண்டாவது இலவச சர்வீஸ் ஸ்லிப்பைப் பார்த்தேன்.
10000 கிலோமீட்டர் அல்லது ஒரு ஆண்டு என்று போட்டிருந்தது. அதாவது 2200 கிலோமீட்டர்
ஓட்டியிருந்த நான் 10000 கிலோமீட்டர் ஓட்டினால் செய்துகொள்ளவேண்டிய சர்வீஸை பயன்படுத்திக்கொள்ளலாமாம்.
சுர்ரென்று ஏறியது..
சர்வீஸ் ஸ்டேஷனில்..
நீங்க சர்வீஸ்
செஞ்சு வச்சாலும், இல்லைன்னாலும் இந்தப் பிரச்னை தீராமல் நான் காரை திரும்ப எடுக்கப்போவதில்லை
என்று சொன்னேன்.
அவர்களும்..
நாங்க சர்வீஸ்
செஞ்சு வச்சுடுறோம் சார். டாட்டாவிலிருந்து உங்களுக்கு இலவச சர்வீஸ் செய்யச்சொல்லி
ஒரு மெசேஜ் வந்தா போதும் என்றதுடன், டாட்டாவின் தமிழக டிவிஷன் மேனேஜரின் மெயில் ஐடியும்
தந்தார்கள்.
வீட்டுக்கு வந்தேன்.
அவருக்கு ஒரு மெயில்
அடித்தேன். அதன் சாராம்சம் இதுதான்..!!
1500 கிலோமீட்டர் அல்லது 3 மாதம் என்று போட்டிருக்கிறீர்கள்.
அவசர வேலையாகச் செல்லும்போது மீட்டர் ரீடிங் எல்லாம் பார்த்துக்கொண்டிருக்கமுடியாது.
700 கிலோமீட்டர் வித்தியாசத்தில் சர்வீஸ் செய்ய முடியாது என்று சொல்லும் உங்கள் சட்டம், 7800 கிலோமீட்டர் வித்தியாசத்தில் 10000 கிலோமீட்டருக்கான இரண்டாவது சர்வீஸை இப்போதே
செய்துகொள்ள எப்படி ஒத்துக்கொள்கிறது.?
சர்வீஸ் செய்யாமல்
ஓட்டி, அதனால், வண்டி ஏதேனும் பழுதாகியிருக்கும் பட்சத்தில், நான் முன்னரே சர்வீஸ்
செய்யாததால்தான் இது நேரிட்டது என்று ஒத்துக்கொள்வேன். அப்போது நான் இலவச சர்வீஸ் கேட்பதற்கான
எந்த முகாந்திரமும் இல்லை. ஆனால், வண்டி நன்றாக இருக்கிறது. நீங்கள் செய்யவேண்டிய சர்வீஸைத்தான்
கேட்கிறேன். அதற்கு சட்டதிட்டங்களைக் காரணம் காட்டுவது மிகவும் வருத்தமாக உள்ளது.
நிறுவனம், இதயமுள்ள மனிதர்களால் அமையவேண்டுமே அன்றி இற்றுப்போன
சட்டங்களால் அல்ல!
நான் டாட்டா மீது நம்பிக்கையும், பற்றும் வைத்திருப்பதால்தான் நானோ வாகனத்தை வாங்கினேன்.
இதுபோன்ற சம்பவங்கள் ஒரு வாடிக்கையாளரை உங்களை விட்டு விலகவைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இவ்வாறு அனுப்பிய
மெயிலுக்கு பதிலாக, அடுத்த நாளே அந்த மேலாளர் நேரடியாக தொலைபேசினார். முதலில், எதுவும்
செய்யமுடியாது என்பதுபோல் ஆரம்பித்தார். மீண்டும் , அவரிடம் சூழலைச் சொன்னேன். அவரும்..
எங்கள் நிறுவன விதிப்படி.. மூன்று மாதத்துக்குள் இந்த சர்வீஸை முடித்திருக்க வேண்டும்.
இருந்தாலும், உங்கள் மெயிலில் இருந்த நியாயத்தைக் கருத்தில் கொண்டு, உங்களுக்கு இலவச
சர்வீஸ் செய்ய அனுமதி அளித்திருக்கிறோம். என்று
சொன்னார்.
சிறிது நேரத்தில், சர்வீஸ்
ஸ்டேஷன் மேலாளர் அழைத்து
” நீங்க நேரடியா
கம்பெனியை தொடர்புகொண்டு பிரச்னையை முடிச்சுக்கிட்டீங்க சார்..! ஆனா நிறைய கஸ்டமர்
நேரா எங்களைத் திட்டிட்டு , பணத்தையும் கட்டிட்டு போறாங்க சார்.. மற்றபடி, உங்கள் கார்
ரெடி சார்! எடுத்துச் செல்லுங்கள்!!! என்றார்.
சென்றேன் . எடுத்தேன்.
வந்தேன்..!!
அதனால்தான் அழுத்திச்
சொல்கிறோம். கேட்டால் கிடைக்கும்!
