சீனான்னா சும்மா இல்லை!

24 Jun 2010 · சுரேகா சுந்தர்




சிறுவயதிலிருந்தே சீனாவைப்பற்றி தெரிந்துகொள்ளும் ஆர்வம் உண்டு. ஆனால் சொல்ல ஆளோ, படிக்க தாளோ இல்லை! அதனாலேயே சென்னை புத்தகக்காட்சியில், செக்கச்செவேல் என்று இருந்த அந்த புத்தகம் என்னை ஈர்த்தது. கிட்டச் சென்று பார்த்தேன். சீனா- விலகும் திரை என்று போட்டிருந்தது. (உபயம் - கிழக்கு பதிப்பகம்) ஆங்கிலத்தில் பல்லவி அய்யரால் எழுதப்பட்டு வெளிவந்த glasses and smokes என்ற புத்தகத்தின் தமிழ்ப்பதிப்பு!



நிறைய விபரங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. ஒரு பத்திரிகையாளராக சீனாவில் அவர் இருந்தபோது ஏற்பட்ட அனுபவங்களை சமூக, பொருளாதார, அரசியல் ரீதியாக ஒவ்வொரு விஷயத்திலும்,இந்தியாவுடன் ஒப்பிட்டு எழுதியிருக்கிறார். இது ஒரு கூடுதல் சுவாரஸ்யமாக இருக்கிறது.

சீனர்களின் நிதானமான வாழ்க்கைமுறை,
சரியோ தவறோ அரசாங்கம் சொல்வதை ஏற்றுக்கொள்ளும் மனோபாவம்,
பழமைக்கும், புதுமைக்கும் இடையில் தடுமாறும் நிலை
அரசாங்கத்தின் அதிரடித் திட்டங்கள்
மொழியின் மீது சீன அரசின் ஆளுமை
அதனால் ஏற்படும் விளைவுகள் ஆகியவை பல்வேறு சூழல்களில் தரப்பட்டிருக்கிறது.

சீனா எப்படியெல்லாம் தன்னை உலக நாடுகளிடத்தில் நிலை நிறுத்திக்கொள்ள அடி போடுகிறது. அதற்கு உள்ளூரில் என்னன்ன தகிடுதித்தங்கள் செய்கிறது என்று விளக்கப்பட்டிருக்கிறது.
// மொத்த சீன சமுதாயத்துக்கும் தன் மனதில் இருப்பதை எடுத்துச்சொல்ல வழி இல்லாமல், நாடே ஒரு பிரஷர் குக்கர் மாதிரி இருக்கிறது. மேலே அமைதி, உள்ளே எரிமலை! //

புத்தகத்தின் இந்த வரிகளின் வீரியம் இன்னும் சில ஆண்டுகளில் வெளிவர வாய்ப்பிருப்பதை அரசாங்கமும் அறிந்துகொண்டு, மக்களுக்கான தேவைகளை அடித்துப்பிடித்துச் செய்து வருகிறது என்று விளங்கிக்கொள்ளமுடிகிறது.

ஹூடாங் என்ற ஒரு வீட்டமைப்பே இப்போது அழிந்துவரும் நிலை இருப்பதை அங்கேயே வாழ்ந்திருந்து சொல்லியிருக்கிறார் பல்லவி! சீனர்களின் விருந்தோம்பலையும் விளக்கியிருக்கிறார்.

படித்துக்கொண்டே வரும்போது சீனாவின் யீவு என்ற நகரைப்பற்றி கூறியவற்றை நினைத்து பிரமித்துப்போனேன்.உலகநாடுகளின் வியாபாரிகள் அனைவரும் வந்து பொருட்கள் வாங்கும் ஊர் யீவு ! இதைப்பற்றி அடிக்கடி சீனா சென்றுவரும் நண்பரிடம் பேசலாம் என்று போனால், அவரே இந்தமுறை யீவு சென்று வந்ததைப்பற்றி சொல்கிறேன் என்று ஆரம்பித்தார்.
இருபத்தைந்து லட்ச ரூபாய்க்கு பொருட்கள் வாங்கியிருக்கிறார். அவை குறைந்தபட்சமாக முப்பத்தைந்து லட்சரூபாய்க்கு விலை போகுமாம்.

சீனாவின் மத தத்துவங்கள், திபெத் பிரச்னை, கம்யூனிஸத்தின் கடவுள் மறுப்பிலிருந்து மெல்ல வழுவி மடாலயங்களும், மத வழிபாடுகளும் ஆரம்பிக்கும் அரசாங்கம் ஆகியவற்றை சொல்லியிருக்கிறார்.

என்னதான் உள்பகைமை உள்ள நாடு, நம் எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடு, இலங்கையில் காலூன்றி நம்மை அச்சுறுத்த நினைக்கும் நாடு, இந்தியாவிடம் ஒருபோதும் தோழமை பாராட்டாத நாடு என்ற எண்ணம் இருந்தாலும், அவர்களைப்பற்றி ஒன்றுமே தெரியாமல் இருந்ததற்கு , எதிரியைப்பற்றி இவ்வளவு விஷயங்கள் தெரியவைத்திருப்பதை நினைத்து திருப்திப்பட்டுக்கொள்ளலாம்.

டிஸ்கி: புத்தகத்தை வாங்கி, தாமதமாகத்தான் படித்தேன். " காந்தியை சுட்டுட்டாங்களா? " , " இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைச்சுருச்சா?" என்று லந்து கொடுத்தாலும் பரவாயில்லை! :)
← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →