இரண்டு பஸ்களும் ஒரே தீர்வும் !

24 Aug 2012 · சுரேகா சுந்தர்



சென்ற ஜூலை முதல் வாரத்தில், கேட்டால் கிடைக்கும் குழும உறுப்பினர் சண்முகம் அவர்கள் ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். அதன் சாராம்சம் இதுதான்:



   கடந்த ஜூலை 1ம் தேதி இரவு அவர் சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும். ஆகவே அன்று காலையில் புறப்பட்டு சேலத்திலிருந்து சென்னை வருவதற்காக Redbus.com ல் பஸ்ஸில் வர டிக்கெட் முன்பதிவு செய்கிறார். அதன்படி பஸ் காலை 11 மணிக்கு கிளம்பும் என்று தெளிவாகப் போட்டிருக்கிறது. அவரும் பத்து மணிக்கெல்லாம் கிளம்பி ஏறவேண்டிய இடத்துக்கு வந்து நின்றுகொண்டு, பஸ் கம்பெனிக்கு போன் செய்கிறார். அவர்களும் 11 மணிக்கு வந்துவிடும் காத்திருங்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் 11 மணி தாண்டியும் வண்டி வந்த பாடில்லை. மீண்டும் கம்பெனிக்கு போன் அடித்து , நான் காத்திருக்கிறேன் பஸ் வரவில்லையே என்கிறார். அப்போதுதான் அவர்கள் அந்த குண்டைப் போடுகிறார்கள். நீங்கள் செல்லவேண்டிய பஸ் இரவு 11 மணிக்குத்தான் கிளம்புகிறது. இப்போது ஏன் காத்திருக்கிறீர்கள்?. அதிர்ச்சியடைகிறார். மீண்டும் ரெட்பஸ்ஸின் டிக்கெட்டைப் பார்க்கிறார். தெளிவாக 11AM என்று போட்டிருக்கிறது. ரெட்பஸ்ஸுக்கு போன் செய்து விசாரிக்கிறார். அவர்களிடம் சரியான பதிலில்லை. தனக்கு நேரமாகிவிட்டது என்று உடனே ஒரு டாக்ஸி பிடித்து 6000 ரூபாய் கொடுத்து சென்னை வந்து சேர்கிறார்.

அவர் அமெரிக்கா சென்றபின் , இதை எனக்கு ஜூலை 4 அன்று மின்னஞ்சல் அனுப்புகிறார்.

நானும், அவரிடம் தேவையான ஆவணங்களை வாங்கிக்கொண்டு, ரெட்பஸ்ஸின்  support@redbus.in  க்கு ஒரு மின்னஞ்சல் ஜூலை  5ல்  அனுப்பினேன்.

முழு விபரத்தையும், சுருக்கமாகச் சொல்லி, தவறான தகவலுடன் டிக்கெட் புக் செய்தது உங்கள் தவறு.! அவரது பயணச்செலவுக்கு நீங்கள்தான் பொறுப்பு.! இந்த விஷயத்தை உடனடியாக தீர்க்கவில்லையெனில்… ரெட்பஸ்ஸுக்கு எதிராக சுமார் 1500 மின்னஞ்சல்கள் ஒரே நாளில் வரும் என்றும்.. இது சம்பந்தமாக சட்டப்படி அணுகுவதற்குமுன் ஒரு நல்ல முடிவை எடுங்கள் என்று ஒரு நுகர்வோரின் சார்பாகவும், ஒரு குழுமத்தின் நிர்வாகியாகவும் எழுதியிருந்தேன்.

ஜூலை  10 ம்தேதி அன்று ரெட்பஸ்ஸின் Alok Goel - Chief Product Officer, சண்முகம் அவர்கள் செலவழித்த தொகை அனைத்தையும் திரும்பத்தருவதாகச் சொல்லி ஒரு மின்னஞ்சல் அனுப்பிவிட்டார். அதாவது ரூபாய் 6000 +700 = 6700.

கேட்டால் கிடைக்கும் என்று போராடியதால்தான் சாதிக்க முடிந்தது என்று சண்முகம் மிகவும் மகிழ்ச்சிப்பெருக்குடன் நன்றி சொல்லி மின்னஞ்சலிட்டார்.

முடிந்தது.

அடுத்து..


மயில்சாமி அவர்கள் கடந்த ஆகஸ்டு 12ம் தேதி திருச்சியிலிருந்து சென்னை வர அபி&அபி ட்ராவல்ஸ் பஸ்ஸுக்காக, MAKEMYTRIP.COMல் நான்கு டிக்கெட்கள் புக் செய்திருக்கிறார். அவர்களுக்கான பஸ்ஸில் ஏறும்போதுதான் தெரியவருகிறது. அவர்களது சீட்டில் வேறு சிலர் அமர்ந்திருப்பது…! அதை அபி & அபியிடம்  கேட்டபோது, ‘இந்தப்பயணிகள்தான் எங்களிடம் புக் செய்தவர்கள்’ நீங்கள் வைத்திருக்கும் டிக்கெட் எங்கள் டேட்டாபேஸில் ஆகஸ்ட் 22ம் தேதிக்கானது. நீங்கள் சொல்லும் MAKEMYTRIP.COMக்கும் எங்களுக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை. என்னவேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டார்கள். இந்தப் பிரச்னை இவர்கள் 4 பேருக்கு மட்டுமல்ல. இதேபோல் 15 பேர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதனால், இரக்கப்பட்டு, அபி&அபி மீண்டும் பணம் வாங்கிக்கொண்டு ஒரு சிறப்பு(!) பேருந்தை சென்னைக்கு இயக்கியிருக்கிறார்கள். மிச்ச டிக்கெட்டை பஸ் ஸ்டாண்டில் சென்று நிரப்பிய கதை தனி! ஆக.. மிகவும் போராடி சென்னை வந்து சேர்ந்திருக்கிறார். மேலும், மேக் மை ட்ரிப்பை அணுகி பேசியபோது சரியான பதில் சொல்ல ஆள் இல்லை. அல்லது இதோ அதோ என்று இழுத்திருக்கிறார்கள். பின்னர் ஆகஸ்டு 18 அன்று என்னிடம் பேசினார்.
இது முழுக்க முழுக்க MAKE MY TRIP ன் தவறுதான். அவர்கள்தான் நஷ்டத்தை ஏற்கவேண்டும் என்றேன். மேக் மை ட்ரிப்புக்கும் தனக்கும் எந்த ஒரு நேரடித் தொடர்பும் இல்லை என்று அபி& அபியிடம் ஒரு மின்னஞ்சலும் வாங்கியாயிற்று.!
அதன்படி அந்த அனைத்து ஆதாரங்களையும் இணைத்து,  அவரும் ஒரு மின்னஞ்சல் அனுப்ப, நானும் ஆகஸ்டு 21ம் தேதி காலையில் busservice@makemytrip.comக்கு எப்பவும்போல, விளக்கம்சொல்லி, நுகர்வோரின் பலம் சொல்லி, மேக் மை ட்ரிப்புக்கு எதிராக ஆன்லைனில் போராட்டம் நடத்தப்படும் என்று லைட்ட்ட்டாக மிரட்டி, .ஒரு மின்னஞ்சல் அனுப்ப..

அடுத்த நாளே மயில்சாமி போன் செய்தார்.

”தேங்க்யூ சுரேகா! மேக் மை ட்ரிப்பிலிருந்து எங்கள் டிக்கட் பணத்தை திரும்பத் தருவதாக மெயில் வந்திருக்கிறது.” என்றார்.

இதுவும் முடிந்தது.


     
       நானும், கேபிளும் எதேச்சையாக செய்யும் விஷயத்தை எல்லோரும் செய்யவேண்டும் என்று ஆசைப்பட்டதன் விளைவு இன்று பிரம்மாண்டமாய் வளர்ந்து நிற்பதை நினைக்கும்போது பெருமையாய் இருக்கிறது.

   நமது தனிமனித தட்டிக்கேட்கும் குணம் குறைந்து போயிருப்பதால்தான் இதுபோன்ற அமைப்புக்கள் தேவைப்படுகின்றன என்று நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது.

  எங்கள் ஊரில் மிகப்பெரிய அன்னதானக்கூடம் இருக்கிறது 1 லட்சம் பேர் தினமும் சாப்பிடுகிறார்கள் என்று சொன்னால் அது பெருமை இல்லை. 1 லட்சம் பேர் பட்டினியாக இருந்திருக்கிறார்கள் என்றும் அர்த்தப்படும். எனினும்..

  தொடர்ந்து போராடுவோம். நம் ஊரின் சாக்கடை நாற்றத்துக்கு செண்ட் அடிக்கமுடியாது. இறங்கித்தான் அள்ளவேண்டும்.

கை கோர்ப்பவர்களுக்கு மீண்டும் நன்றி!


← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →