சவீதா - 1
அவன்...
மிகச்சரியான
வயதில்
அந்த இணைய நிலையத்தை
நடத்தும்
நண்பருக்கு உதவ
தினசரி செல்ல ,
அங்கு வந்த அவளுக்கு
மின்னஞ்சல் பார்ப்பதற்கு
இவனும் அன்பாய்
உதவப்போக
மின்னஞ்சலுடன் சேர்த்து
அவனையும் பார்க்க
ஆரம்பித்தாள் அவள்!
ஒருநாள் பேச ஆரம்பித்தார்கள்!
தன் தந்தையின் மறுமணமும்
தாயாரின் சிரமங்களும்
தனக்குள் ஒரு வெறியை
தாமாக ஊட்டியதை
கவலையுடன் சொன்னாள் அவள்!
அவளது லட்சியமே
மாவட்ட ஆட்சித்தலைவியாய்
மதிப்பாக வலம்வருவதுதான்!
அதற்கான முயற்சிகள்தான்
இணையம் தேடும் காரணமும்.!
அவனுக்கு அவளைவிட
அவளது லட்சியத்தைப்பிடித்துவிட்டது.
வாழ்வில் அனைத்து சுகமிருந்தும்
சோம்பித்திரிபவர் மத்தியிலே
காப்பாற்ற மனிதரின்றி
கவலைகொண்ட குடும்பத்திலே
கலெக்டராகவேண்டுமென்ற
கனவுகாணும் இவளை
காதலித்தால் என்னவென்று
மனதுக்குள் நினைத்துவைத்தான்.
அவளுக்கும் இவன்மேல்
ஒருவித அபிமானம்
இயல்பாக வந்ததால்
அவனைவிட்டு தனக்கு
பாடங்கள் சொல்லித்தர
பணிவாகக்கேட்டுக்கொண்டாள்
இவளது லட்சியத்தை
இமயமாய் ரசித்தவனுக்கு
அதற்கான உதவி செய்ய
வாய்ப்பொன்று கிடைத்ததானால்
பூரித்துப் பொங்கிப்போனான்.
இவனது பாடத்தையும்
இவனையும் சேர்த்து
கவனித்த அவளுக்கு
இவன்கொண்ட காதலும் புரிந்தே போனது.
அவளுக்குள்ளும் அவ்வெண்ணம்
அகண்டு போய் நின்றதனால்
அவளாகக் கேட்டுவிட்டாள்.
'என்னைத்திருமணம் செய்துகொள்வாயா?'
'இதற்குத்தானடீ இத்தனை நாளாய்க்
காத்திருந்தேன் என்றுதான் பதில் சொன்னான்.
அன்பும் அக்கறையும்
அழகாகக் கலந்துவைத்து
ஆழமாகக்காதலித்தார்கள்.
அவள் பேசினாள்.
அவன் பேசினான்.
அவர்கள் பேசினார்கள்
காதல் பேசியது.
கொஞ்சம் அதிக நேரம் பேசினாலும்
அவனுக்குள் அலாரம் அடித்து
அவளைப்போய் படிக்கச்சொல்வான்.
அந்த ஆண்டின் முதன்மைத்தேர்வில்
அவளுக்குக்கிடைத்தது தோல்வி!
அதற்கான அடிப்படைக்காரணம்
அவனுக்குத்தெரிந்தது அப்பட்டமாய்!
இவர்களது காதலால் அவள்
செலவழித்த நேரம்..!
அவளிடம் தெளிவாகச்சொன்னான்.
உனக்கு முக்கியம் உன் லட்சியம்
என்னிடம் பேச வாழ்க்கையே உள்ளது.
தொலைபேசலை குறைத்துக்கொள்வோம்.
என்னைக்கூட விட்டுவிடு
குறிக்கோளை எட்டிவிடு!
சொன்னால் அவள் கேட்கவில்லை!
தொல்லை தர ஆரம்பித்தாள்.
எந்தப்படிப்பை நேசித்தாளோ
அதனை வெறுக்கத்தொடங்கிவிட்டாள்
அவனுக்கோ காதல்மீது
பயமே வந்து சென்றது!
அவளுடைய அழைப்புகளை
நிராகரிக்க ஆரம்பித்தான்.!
அவளுக்குக்கோபம் அதிகமாக வந்தது.
நான் என்ன அலைகிறேனா?
என் லட்சியம் பற்றி எனக்குத்தெரியும்!
உன் லட்சியம் புரிந்துவிட்டது.
என்னை விட உனக்கு
என் பதவிதான் கண்!
அதனால்தான் நீ
அதை அடையத் தூண்டுகிறாய்!
என்றெல்லாம் ஏளனமாய்
எடுத்தெரிந்து பேசிவிட்டு
இனிமே உன் சகவாசம்
எனக்குத்தேவையில்லை!
என்னால் உலகம் மெச்ச
உயர்வாக வரமுடியும்.
அந்த நாளில் உனக்கு
அவமானங்கள் தருகிறேன்.
என்று சொல்லி ஆத்திரமாய்
அவனைவிட்டுச்சென்றுவிட்டாள்.
அந்தக்காதலுக்கு
அன்று அஸ்தமன தினம்!
ஆனால் ஆச்சர்யம்
அன்றுதான் காதலர் தினம்!
அவனுக்குள் அடுக்கடுக்காய்
சங்கடங்கள் தோன்றினாலும்
ஒரு பெண்ணின்
வீழ்ச்சிக்கு நாம் காரணம் இல்லையென்று
சந்தோஷமாய் நினைத்துக்கொண்டு
வாழ்க்கை ஓட்டத்தில்
கரைந்துவிட்டான்.
என்றாவது ஒருநாள்
அவளுக்குத்தெரியவரும்!
வெற்றிபெற்ற அவளுக்கு
பின்னணியாய் இருந்துவைத்து
இடையிலே வந்தவன்
இடையிலேயே சென்றவன்
எரியும் லட்சிய வெறிக்கு
கொஞ்சம் எண்ணெய்
ஊற்றிச்சென்றானென்று !
இன்றுவரை இருவரும்
இயல்பாக வாழ்கிறார்கள்.
அவனும் ஒரு பதவியிலே
அழகு வாழ்க்கை வாழ்கிறான்.
அவன் தன்னை ஒதுக்கினானென்று
இன்றுவரை நினைத்துக்கொண்டு
அவளும் இங்கு வாழ்கிறாள்
ஆனால் அவள் சாதித்துவிட்டாள்
நீண்ட நாள் போராட்டத்தில்
அவள் இன்று
ஆட்சித்தலைவி!
அதற்காக அவள் படும்
மகிழ்ச்சி குறைவாகும் !
அவன் மகிழ்ச்சி ஒப்பிட்டால்!
அப்பாடி!
ஒருவருக்கு
உதவி தர இயலாவிடினும்
இடையூராய் இல்லாமல்
போனோமே என்று
இன்றுவரை மகிழ்ந்திருக்கிறான்.!
அடுத்த சவீதா அவனுக்காக
அங்கும் வந்து காத்திருக்கிறாள்!