புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது !
புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம்.
இப்படியே படிப்படியாய் நம் சகிப்புத்தன்மையை ஆழம் பார்த்தவர்கள் இப்போது தொகுதியிலும் கைவைத்திருக்கிறார்கள். ஒரு தேசமாக, தனியாக ஆட்சிபுரிந்த ஒரு நகரம் சார்ந்த மாவட்டத்தை துண்டு துண்டாக்கி மற்ற தொகுதிகளோடு இணைத்திருக்கிறார்கள். இதையும் புதுகை மாவட்ட மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில்! இனியும் பொறுமையாக இருக்க புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி மக்கள் தயாராக இல்லை! ஏனெனில் அடுத்ததாக நாடாளுமன்றத்தொகுதிகளை அப்படியே மாவட்டமாக அறிவித்தால்...புதுக்கோட்டை தன் கடைசி அடையாளமான மாவட்டம் என்ற பெயரையும் இழந்து நிற்கும்.....
பின்னர் மன்னர் ஆண்ட ஊர் மாவட்டத்தையும் இழந்த கதையாகிவிடும்.
நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் தொகுதியை எங்களிடமிருந்து பறிக்காதீர்கள்!
புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி மக்கள் இனியும் பொறுக்கப்போவதில்லை. இதை தேர்தல் ஆணையத்துக்கு மீண்டும் மீண்டும் வெவ்வேறு போராட்டங்கள் மூலம் வலியுறுத்தப்ப்ட்டு வருகிறது. எது நடந்தாலும் ஒரு பாரம்பரியம் மிக்க பகுதி தன் அனைத்து அடையாளங்களையும் இழந்து நிற்பதை இங்கிருக்கும் மனிதர்களால் பொறுத்துக்கொள்ள முடியாது என்பது மட்டும் உண்மை!