ஈரோட்டுப் பெண்கள்

12 Jan 2008 · சுரேகா சுந்தர்



கொஞ்ச நாளாக ஈரோடு வாசம்..

அற்புதமான ஊர் !

வியாபாரத்தை வியாபார நோக்கோடு மட்டும் அணுகாத வியாபாரிகள்!

வாடகை மட்டுமல்ல, மரியாதை கொடுத்தும் மனதுக்குள் குடியிருக்கலாம் எனும் மனிதர்கள்!

வழிசொல்வதே வாழ்வுக்கடன் என்று அழகாக வழி சொல்லும் வழிப்போக்கர்கள்

அருகில்தான் இருக்கிறது ! நடந்தே போய்விடுங்கள் எனும் ஆட்டோக்காரர்கள்!!

வரி சேமிப்பு பற்றி போட்ட நாணயம் விகடனா? என்று கேட்டு விற்கும் புத்தகப்பிரியர்கள்!

யோகாவில் வென்றுவிடலாம் என்று வாழ்வியல் சொல்லும் அற்புத மாணவிகள்!

இவர்தான் முதலாளியா? என்று வியந்தபின் வணங்கி நிற்கும், தோற்றத்தில் எளிமை பூண்ட இயல்பான ரசனைக்காரர்கள்!

ஒரு மாபெரும் துணிக்கடையின் தொழிலாளர்களை வேலை நிமித்தம் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது! அதிகம் படிக்காத பெண்கள்!
ஆனால் எத்தனை தெரசாக்கள் ? எடுத்தவுடன் உண்மைசொல்லும் நம்பிக்கை!
நான் சந்தித்த நங்கைகளில் சிலரது வாழ்வுத்துளிகள், படித்தபின் தான் புரியும், இந்த கணிணிக்கு முன்னால் அமர்ந்து கலாய்த்துக்கொண்டிருக்கும் நாமெல்லாம் ஆசீர்வதிக்கப்பட்டவர்களென்று!

அம்மாவுக்கும் அப்பாவுக்கும் அடிக்கடி சண்டை வரும். ஒருநாள் அம்மாவின் கையை அப்பா கோபத்தில் வெட்டிவிட்டு தற்கொலையும் செய்துகொண்டபோது அவளுக்கு வயது 5 ! ஒற்றைக்கையை இழந்துவிட்டு அம்மா பட்ட துன்பத்தை இன்றுவரை மறக்காமல் , தற்போது உடல்நலமின்றி இருக்கும் அம்மாவுக்காக திருமணமே வேண்டாமென்று புலனடக்கி வாழும் நங்கை ஒருத்தி!

கட்டிய காதல் கணவன் இதோ வெளியே சென்றுவருகிறேன் என்றுசென்றுவிட்டு உயிரற்று திரும்பி வர, இவளோ நிறைமாத கர்ப்பம்!கணவன் இறந்த மூன்றாம் நாள் ஒரு ஆண்பிள்ளையைப் பெற்றுவிட்டு,அம்மா வீட்டோடு வந்துவிட, அந்தப்பிள்ளையை வளர்ப்பதற்காக யாருக்கும் பாரமாக இருக்கவேண்டாமென்று அண்ணன் பார்த்துவைத்த வயதான ஆளை சீர்திருத்தத்திருமணம் செய்ய , அவளது இளமை அவனை சந்தேகப்பட வைக்க, தைரியமாக பிள்ளக்காக அவனைவிட்டு வெளியே வந்து, வேலைக்கு வந்து சமூக அவமானம் வாங்கும் நங்கை
இன்னொருத்தி !

சிறுவயதிலேயே கணவனை இழந்ததால் மறுமணம் செய்து கொண்ட அம்மா, இன்னொரு மகனைப்பெற்று , அவனை மட்டும் நன்கு வளர்த்து, முதல் கணவனுக்குப் பிறந்த இவளை வேலைக்காரியாகவே மாற்றி (பெற்ற அம்மா!) இவள் பருவமடைந்தபின் தன் கணவனுக்கே தீனியாகக்கொடுக்க முயற்சிக்க, இனிமேலும் இங்கிருந்தால் ஆபத்து என்று உறவுகளிடம் தஞ்சமடைந்த அவளுக்கு இன்னும் 10 நாளில் ஒரு நல்ல மனிதனுடன் பெரியோர் பார்த்துவைத்த திருமணம்.! அதைக்கெடுக்கும் முதல் வரிசையில் இவளது ...அம்மா! அதையும் மீறி சமூகத்தில் நல்லவளாக வாழமுடியும் என்று தைரியம் கொண்ட நங்கை வேறொருத்தி!

அம்மாவின் சகோதரனே கணவனாக வாய்க்க, அற்புதமான இல்லறம் ! அதில் பிறந்த இரண்டு ஆண்பிள்ளைகள்! சந்தோஷமான வாழ்க்கையில் ஒருநாள், பல்வலியென்று மருத்துவமனை போன அவன் இறந்ததாக செய்திவர, இடிந்துபோனாள் இவள் ! வெளியுலகமே தெரியாத இவளுக்கு முதலில் வேலை எப்படி கேட்பதென்றே தெரியாது! அந்தப்பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காக தன்னைத்தேய்த்துக்கொள்ளும் நங்கை மற்றொருத்தி!

தந்தையை பெரியப்பா குடும்பம் கொன்றுவிட, அவர்களை பழிவாங்குவதுதான் லட்சியம் என்று மூத்த மகனை வளர்க்கும் அம்மாவின் ஆசைக்கு, அண்ணன் வாழ்வு பாழாகிவிடக்கூடாது என்று
தங்கையாக இருந்து வருந்தி, அவனுக்கு புத்தி சொல்லி, மெதுவாக அவனை திருத்தி, வடமாநில நகரத்துக்கு அம்மாவுக்கு தெரியாமல் அனுப்பி, அவனுக்கு பதிலாக, குடும்பப்பொறுப்பை எடுத்து நடத்தும் நங்கை இன்னொருத்தி!


ஒரு முக்கியத்தகவல்...
இவர்கள் அனைவரும்....அந்த நிறுவனத்தின் முதல் தர ஊழியர்களாக பட்டியலிடப்பட்டு , பதவி உயர்வு பெற்றவர்கள் ! மேலும் இவர்கள் அனைவருக்கும் தந்தை பெரியார்தான் 'கடவுள்' !!

பெண்கள் மேலிருந்த மதிப்பு மிகமிக அதிகமாக கூடிப்போயிருக்கிறது!
இவர்கள் , என்னுடன் பேசிய பிறகு பாரம் குறைந்ததாகச்சொன்னார்கள்.ஆனால் எனக்கு ஏறியது பாரமும், மதிப்பும்தான்!

-மற்றவருக்காக வாழும் ஈரோட்டு  நங்கைகளே! ..உங்களுக்கு  , இந்தப்பதிவு சமர்ப்பணம்.




← அடுத்த படைப்பு அனைத்து படைப்புகள் முந்தைய படைப்பு →