அகில இந்திய வானொலி
திருச்சிராப்பள்ளி
ரெயின்போ பண்பலை 102.1 ல்
தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை 'வசந்த அழைப்பு' ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றோம்.
ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து நேயர்களை அது சம்பந்தமா பேசச் சொல்றது.
அழைக்கும் நேயர், அந்தத்தலைப்புக்கு ஏற்றார்ப்போல் பேசவேண்டும்.
இரண்டு மணிநேரம் போவதே தெரியாது. சரியா கலாய்க்கலாம்.
அப்படி நான் கொடுத்த தலைப்புகளில் சிலவற்றின்...
என் துவக்க அறிமுகத்தை மட்டும் கொஞ்சம் பதிவா போடலாமேன்னு.. (வேற மேட்டரே இல்லையோ?)
கால ஓட்டத்தில் காணாமல் போனவை !
அதெல்லாம் அந்தக்காலம்’
என்று அங்கலாய்க்கும் மனோபாவம்
அனேகமாய் எல்லோருக்கும்
ஆங்காங்கே வருவதுண்டு!
அடிப்படைக்காரணமாய்
சிறுவயதில் சிறப்பாக
நீங்கள் பார்த்த ஒரு விஷயம்
மாறிப்போய் வந்திருக்கும்!
கால ஓட்டம் அதன் காரணமாய்
கட்டாயம் இருந்திருக்கும்!
எத்தனையோ ஆண்டுகள்
உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு
இப்போது திடீரெனறு
இல்லாமல் போய்விட்ட
அவ்விஷயம் உங்களுக்குள்
தாக்கங்கள் தந்திருக்கும்!
மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும்
மாறியவை என்னவென்று
மறக்காமல் இருப்போம் !
வேப்பங்குச்சிகள் செய்துவந்த
பல்விளக்கும் வேலைதன்னை
பிரஷ்கள் தட்டிப்பறித்ததுபோல்
நெற்றிப்பொட்டாய்
ஜொலித்திட்ட சாந்தை,
ஸ்டிக்கர் பொட்டு
சாய்த்ததுபோல்
கெந்தி விளையாடும்
கில்லிதாண்டை
கிரிக்கெட் ஆட்டம்
கெடுத்ததுபோல்
கடிதம் எழுதும்
அழகுதன்னை
கையில் செல்போன்
பறித்ததுபோல்....
எத்தனை எத்தனை
மாற்றங்கள்!
கல்கோனா,
கட்டை வண்டி
பெல்பாட்டம் பேண்ட்
பெட்ரோமாக்ஸ் விளக்கு
ஆடுபுலி ஆட்டம்
அம்புலிமாமா புத்தகம்
ஐந்து பைசா நாணயம்
ஆரஞ்சு மிட்டாய்
சாவி கொடுக்கும் கைக்கடிகாரம் என
காலஓட்டத்தில் நாம் கடந்து வந்த
விஷயங்கள் !
அது ஒரு பொருளாக இருக்கலாம்
செயலாக இருக்கலாம்!
விழாவாக இருக்கலாம்!
விளையாட்டாக இருக்கலாம்!
விலங்ககாக இருக்கலாம்!
உணவாக இருக்கலாம்!
உடையாக இருக்கலாம்!
வாகனமாய் இருக்கலாம்..!
எதுவாக இருந்தாலும்
இதயத்தில் தோன்றுவதை
இதழ்களுக்குக் கொண்டுவாருங்கள்!
இந்தத்தலைப்பில் நேயர்கள் ரொம்ப நல்லா பேசினாங்க!
இப்ப ஒரு வேண்டுகோள்
உங்கள் வாழ்க்கையின்
கால ஓட்டத்தில் காணாமல் போனவற்றில் ஏதாவது ஒன்றைப்பற்றி
பதிவிடுங்களேன்.
அதுக்கு நானே ஐந்து பேரை அழைக்கிறேன்
1. தெக்கிக்காட்டான்
2. புதுகைத்தென்றல்
3. மங்களூர் சிவா
4. புதுகை எம்.எம்.அப்துல்லா
5. துளசிகோபால் அம்மா