வீட்டுக்குள் நுழைந்தபோது, தொலைக்காட்சியில் கலைஞர் அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது. அது விளம்பர இடைவேளை...
ஒரு அறிவிப்பு பரபரப்பாக.....நமது கலைஞர் தொலைக்காட்சியில்..
செப்டம்பர் 3 விடுமுறையை முன்னிட்டு....
ப்ளா ப்ளா என்று பல்வேறு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பட்டியலிட்டார்கள்.
அது என்ன..செப்டம்பர் 3 விடுமுறைக்கு என்று ஒரு சிறப்புக்கொண்டாட்டம் என்று பார்த்தால்
அன்று விநாயகர் சதுர்த்தியாம்..! அடேயப்பா என்ன ஒரு கலை(ஞர்) சாமர்த்தியம்!
கடவுள் இல்லை எனும் இவர்களது கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்களாம்.ஆனால் அதே சமயம், சன் ட்டிவி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று பகிரங்கமாக அறிவித்து நிகழ்ச்சி நடத்தி சம்பாதிப்பதை தாங்கவும் முடியாது. அதனால் அன்று வரும் வருமானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாதாம்.
உண்மையில் கொள்கைவாதியாக இருந்தால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு நாள் நடப்பதைப்பற்றியே அலட்டிக்கொள்ளாமல் எப்பவும்போல கேவலமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுபோகவேண்டியதுதானே?
இல்லை..! எங்க கட்சிக்கு மட்டும்தான் கடவுள் இல்லை ! ஹி.ஹி.அது எங்க அரசியல் ஓட்டுப்பிச்சைக்காரத்தனம்...எங்க ட்டிவிக்கு எல்லா சாமியும்தான் முக்கியம்ன்னு தெளிவாக நம்மை குழப்பி வெளிப்படையாக விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று சொல்லி நிகழ்ச்சிகளைப்போடவேண்டிய்துதானே !
எவ்வளவு அசிங்கத்தனமான வியாபார நோக்கம் !
இப்படித்தான் எல்லாவற்றிலும் சமரசம் செய்துகொண்டு -கொள்கைவாதிபோலும் பீற்றிக்கொண்டு - மனசாட்சியே இல்லாமல் பிழைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இவர்களது பொய், புரட்டுகளுக்கு சர்வசாதாரணமாக நாமும் பலியாவதுதான் கொடுமை!
"சமுதாயத்திற்கு முன் கொள்கைமுழக்கம்போல் கூவிவிட்டு, தன் சுயலாபத்துக்காக ,கொள்கைக்கு முரணாக நடப்பவர்களை செருப்பால் அடிக்கவேண்டும்" என்று பெரியார் தெளிவாகக்கூறி இருக்கிறார். ( தன் பெயர் சொல்லி டகால்ட்டி காட்டும் அடுத்த தலைவர்கள் இப்படியெல்லாம் செய்யமாட்டார்கள் என்று நம்ம்ம்ம்ம்பி ! )
இப்படிப்பட்ட கயவர்களை என்ன செய்வது?
அரசியலில் என்னவேண்டுமானாலும் செய்துவிட்டுப்போகட்டும்...
ஆனால் கொள்கை என்ற வகையில்... மருத்துவர் மாலடிமை மிகவும் உயர்ந்தவர்!
தன் கொள்கையின் அடிப்படையிலேயே ஒரு தொலைக்காட்சியை உருவாக்கி, அதற்கு டாக்டர் டிவி என்றோ, ராம் ட்டிவி என்றோ பெயர் வைக்காமல் மக்கள் ட்டிவி என்று ஒரு பொதுப்பெயரை வைத்து...தமிழர் கலாச்சாரத்துக்கான அத்தனை அடையாளங்களுடனும் , மனிதன்- அதுவும் தமிழன் பார்ப்பதுபோல் நிகழ்ச்சிகள் தருகிறார்கள்! கொண்ட கொள்கையில் மாறாமல், தாக்குப்பிடிக்கிறார்கள்
அவர்களைப்பார்த்தாவது கற்றுக்கொள்ளுங்கள் எங்கள் திராவிடர் முன்னேற்றத்துக்காகவே மானாட மயிலாட நடத்தும் மகான்களே!
டிஸ்கி: படிச்சு முடிச்சவுடனே தயாரா வச்சுருக்கிற பெயிண்ட் டப்பாவ எடுத்து சுரேகாவுக்கு இதாம்ப்பா நிறம்ன்னு எனக்கு ஒரு கலர் பூசிடாதீங்கப்பு ! மனசுல தோணினதை எழுதிப்புட்டேன். நியாயம் பேச கலரே தேவையில்லை! நல்லது நினைக்கும் மனசும்....எல்லாம் நல்லா இருக்கணும்னு பாக்குற கண்ணும் போதும்!