ஒரு கொப்பனாம்பட்டித் தமிழன் சென்னையில்
மூன்றாண்டுகள் குப்பை வீசியபின் தன்னை சென்னையனாகக் காட்டிக்கொள்ள வார இறுதிகளில் படையெடுப்பது
பல்வேறு வெளிநாட்டு துணிகள், மணிகள், கனிகள், கணிணிகள் என்று வகைப்படுத்தி விற்றுத்தரும்
கடைகளால் கட்டப்பட்ட மால்கள் என்ற மாபெரும் கொள்ளைக் கூடாரத்திற்குத்தான்.!
அங்கு சென்றால்தான் தானும் ஒரு ஆடம்பரன்
என்று காட்டமுடியும் என்று அவனாகவே எண்ணிக்கொள்வான் அல்லது இப்படிப்பட்ட கடைகளிலெல்லாம்
வாங்கித்தான் நான் உண்கிறேன், உடுத்துகிறேன் என்று உலகுக்கு அறிவிப்பதற்காக இருக்கும்.
இவற்றையெல்லாம் மீறி உண்மையிலேயே அங்கு என்னதான்
நடக்கிறது என்ற ஆவலில் வேடிக்கையாளனாகப் போனால், அந்த நுகர்வுக் கலாச்சாரத்தின் வேகம்
அவன் பணம்கொள் சட்டைப்பையை, பிய்த்து அவனை பிச்சைக்காரனாக்காமல் விடாது.
இவையெல்லாம் ஒரு பொதுவான கருத்தாக இருந்தாலும்,
அங்கு செல்லும் வேட்கையை குறைக்கவிடாது அந்தக்கட்டிடங்களின் மின்வாரியச் சலுகைகளின்
சாட்சிகளான பல்புகள்! உள்ளே அவன் சென்று வந்தபின் வாங்கிய ’பல்பு’கள்தான் அதில் தொங்குகின்றன
என்ற உண்மையே தெரியாமல் வாயையும், பையையும் பிளந்து காட்டிவிட்டு வந்துசேருவான்.
இது என்ன புலம்பல் என்று நீங்கள் யோசித்தால்…
மிகச்சரி.!. மறுபடியும் கேட்டால் கிடைக்க வைத்து விட்டார்கள் இந்த எக்ஸ்பிரஸ் அவென்யூவின்
ஆட்கள்.!
ஜனவரி முதல் தேதி எங்காவது சென்றே ஆகவேண்டும்
என்ற தங்கமணியின் தவத்திற்கு, வரமாய்ச் செல்ல முடிவெடுத்ததுதான் செம்மொழிப் பூங்காவும்
( அம்மா புதுப்பேரு வைக்காததுனால பழைய பேரையே சொல்லிட்டேன்..) எக்ஸ்பிரஸ் அவென்யூவும்!
முதலில் சென்றதில், பிரச்னைகள் எதுவுமில்லை. அழகான
வாத்துகளைப்பார்த்து அளவளாவிவிட்டு வந்தோம். அடுத்து சென்ற இடத்தில்தான் ஆரம்பித்தது
பிரச்னை..!
பார்க்கிங் கட்டணம் பார்த்தே பல்ஸ் எகிறினாலும்,
அது தொடர்பான அரசு ஆணையைப் பெற முயற்சித்துக் கொண்டிருப்பதால்,( நிற்க.. அது பற்றி
தனிப் பதிவிடுகிறேன்) அதுவரை ஒன்றும் செய்யவேண்டாமென்று, வண்டியை வைத்துவிட்டு மாடி
மாடியாய்ச் சுற்றிவந்தோம்.
ஏதாவது சாப்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்று நாங்கள்
முடிவெடுக்க, நீண்ட நாட்களுக்குமுன் உண்ட ஒரு வெஜிடபிள் சாண்ட்விச்சின் சுவை இன்னும்
நாக்கிலேயே இருப்பதாக தங்கமணி அறிவிக்க, SUBWAY யில் கைநீட்டுவது என்று முடிவாயிற்று..!!
அந்த
உணவு வளாகம் முழுவதும் கடுமையான கூட்டம். நானும் சப்வேவுக்குச் சென்று, ஒரு சிறு வரிசையில்
நின்று என் முறை வரும்வரை காத்திருந்து அருகில் சென்று, பர்ஸிலிருந்து பணத்தை எடுத்து
கெத்தாக,
’ஒரு
வெஜிடபிள் சாண்ட்விச் வித் சீஸ்’ என்று சொன்னேன்.
அவர்
என்னை ஏற இறங்கப் பார்த்துவிட்டு,
’சார்.!இங்க கேஷ் கொடுத்து வாங்க முடியாது..கார்டுதான்’ என்றார்.
அந்தக் கொடுமை வேறயா?’என்று நினைத்துக்கொண்டே என்னிடமிருக்கும் கடன் அட்டை ஒன்றை எடுத்து
அப்பாவியாய் நீட்ட,
ஒரு
நக்கல் சிரிப்புச் சிரித்துக்கொண்டே……
சார்! அந்தக் கார்டு இல்லை…! இங்க ஃபுட் கோர்ட்டுக்குன்னு ஒரு கார்டு இருக்கு அதைத்தான் வாங்கணும்.!என்றார்.
ஆஹா..!வருடத்தின் முதல்நாளே இப்படி வெறியேத்துறியே வெங்கடேசா என்று நினைத்துக்கொண்டே..
ஏங்க!நான் உணவுப்பொருள் வாங்கப்போறது இங்க! அப்புறம் ஏன் எங்கயோ போய் கார்டு வாங்கிட்டு
வரணும்? என்றேன்.
இல்லை
சார்! அதான் இந்த மாலில் உள்ள FOOD COURT ரூல்ஸ் !
இது
என்ன வித்தியாசமான ரூல்.? .சரி! எங்க போய் வாங்கணும்?
பக்கத்துல
கேஷ் கவுண்டர்ன்னு ஒண்ணு இருக்கும்..அங்க போய் வாங்குங்க என்றார்.
அங்கு
போனபின் தான் அடுத்த கட்ட அதிர்ச்சி என்னை வரவேற்றது. அந்த கவுண்ட்டரில் இரு இளைஞர்கள்
அமர்ந்திருந்தார்கள்.
அவர்களிடம் ’ஏதோ புட் கார்டாமே’ அதைக் கொடுங்க என்றேன்.
’சார்
உங்களுக்கு எவ்வளவுக்கு கார்டு வேணுமோ அவ்வளவு ரூபாய் இந்த கார்டில் ஏத்திருவோம். நீங்க
அதைக்கொண்டுபோய் இந்தத் தொகைக்குள்ள சாப்பிட்டுக்கலாம். மிச்சமிருந்தால் அடுத்த தடவை
வரும்போது கழிச்சுக்கலாம். அதிகமாயிட்டா மறுபடியும் இங்க வந்து டாப் அப் பண்ணிக்கலாம். ஆனா, கார்டுக்கான Non Refundable Charge Rs. 20 இப்போதே கழிச்சுக்குவோம்
என்றார்.
இப்போது என் கேள்வி நரம்புகள் வேலை செய்ய ஆரம்பித்துவிட்டன.
’நான்
உங்ககிட்ட ’ஆசைப்பட்டு’ கார்டு வாங்க வரலைங்க! நான் சாப்பிட விரும்பின கடைல இங்க வந்து
வாங்கிட்டு வந்தாத்தான் தருவேன்னாங்க ! அதனால் வந்தேன். நான் ஏன் அந்தக் கார்டுக்கு
இருபது ரூபாய் அதிகம் தரணும்? இது என்ன புதுக்கொள்ளையா இருக்கு?’ என்றேன்.
ஆனால்,
பாவம்..அந்த இளைஞன் மிகப்பொறுமையாக பதில் சொன்னார்.
’இப்படித்தான்
சார் எங்களுக்கு செய்யச்சொல்லியிருக்காங்க! உங்களுக்கு வேறு ஏதாவது ஆட்சேபணைகள் இருந்தால்
எங்க மேலதிகாரிக்கிட்டதான் பேசணும்!’
அப்ப
உங்க மேலதிகாரி நம்பர் கொடுங்க!
உடனே
கொடுத்தார். அவர் எண்ணுக்கு அடித்தேன் எடுக்கவேயில்லை. காரமாய் ஒரு குறுஞ்செய்தி :
நான் ஒரு நுகர்வோர் அமைப்பின் பிரதிநிதி இங்கு ஒரு பிரச்னை உடனே வரவும் என்று இடத்தைக்
குறிப்பிட்டு என்று அனுப்பினேன்.
மீண்டும்
சப்வே வந்தேன். அவரிடம்
’நான்
கார்டெல்லாம் வாங்கத் தயாராக இல்லை! நான் காசுதான் தருவேன். எனக்கு பொருள் தரமுடியுமா
?’ என்றேன்.
’இல்லை
சார்! அது எங்களுக்கு அதிகாரமில்லை! ஆனால் நீங்க FOODCOURT மேனேஜரிடம் பேசிப்பாருங்க!’என்று கூறிவிட்டு எண்ணும் கொடுத்தார்.
மேனேஜருக்கு
அடித்தேன். உடனே எடுத்தார். விபரம் சொன்னேன்.
’நீங்க
எங்க இருக்கீங்க சார்? உடனே வரேன்’ என்றார்!
நான்
நடந்துகொண்டே கேஷ் கவுண்டர் சென்றுவிட்டேன். அங்கு வருவதாகச் சொன்னார்.
இரண்டு
நிமிடங்களில் வந்தும் விட்டார். மிகவும் அன்பாகவும், பொறுப்பாகவும் பேசினார்.
‘சார்.! இங்க இந்த முறைலதான் நாங்க கடைகளில் உணவு வாங்க வைக்கிறோம். உங்க எண்ணம் புரியுது.! ஆனாலும் இது மேனேஜ்மெண்ட் எடுக்குற முடிவுதான் சார்! இருந்தாலும்..உங்களுக்காக… அந்த இருபது
ரூபாயை ரீஃபண்ட் செய்ய வைக்கிறேன்’ என்றார்.
’நான்
எனக்கு மட்டும் சொல்லலை. எல்லார்க் கிட்டயும் இந்த முறையில் நீங்க கார்டுக்காக கட்டாயப்படுத்தி,
பணம் வாங்குறது இந்திய உணவக சட்டத்துக்குப் புறம்பானது தெரியுமா? சாப்பிடணும்னு
நினைக்கிறவன் காசைக்குடுத்து சாப்பிட்டுட்டுப் போறான்!’ என்றேன்.
’இதையும், நீங்களே எங்க மேனேஜ்மெண்ட்டுக்கு
சொல்லிடுங்க சார்! ஒரு சில நிர்வாகக் காரணங்களுக்காக (அந்த அரசியலை தனிப்பதிவாக எழுதுகிறேன்.) இப்படி பண்ணியிருக்காங்க! நாங்க எதுவும் கமெண்ட் செய்யமுடியாது’. என்று சொல்லிவிட்டு
தனது கார்டையும் கொடுத்துவிட்டு, வேறு ஏதாவது சேவை தேவையெனில் தன்னை அழைக்குமாறும்,
எக்ஸ்பிரஸ் அவென்யூவில் எப்போதும்(!) என்னை அன்புடன் எதிர்பார்ப்பதாகவும் சொல்லி , கூடவே ஒரு ஊழியரையும் எனக்கு உதவிசெய்ய அனுப்பி , விடைபெற்றார்.
நானும், இருநூறு ரூபாய்க்கு கார்ட் வாங்கி SUBWAY வந்து மீண்டும் அதே ஆளிடம் சாண்ட்விச் கேட்டேன்.
அவர்
சிரித்துக்கொண்டே , கார்டை வாங்கி மெஷினில் இழுத்தார்.
கூடவே
ஒரு டம்ளர் தண்ணியும் கொடுத்துருங்க என்றேன்.
ம்
என்று சொல்லிவிட்டு, ஒரு தண்ணீர் பாட்டிலுக்கான
தொகையையும் என் கார்டிலிருந்து கழித்திருந்தார்.
நான்
பில் பார்த்தவுடன் அதிர்ந்தேன்.
‘நான்
வாட்டர் பாட்டில் கேட்கவே இல்லையே?’
’தண்ணி
இப்படித்தான் சார் கொடுப்போம்..’
ஹெ
…ஹெ..நாங்கள்லாம் அப்பவே இப்படி! என்று ஆரம்பித்தேன்.
இரண்டு
நிமிடங்களில், இரண்டு டம்ளர்களில் தண்ணீர் வந்தது.
அடுத்த
ஆச்சர்யம். எனக்கு தண்ணீர் பாட்டிலுக்காக போட்ட பில்லும் திரும்ப என் கணக்கில் வரவு
வைக்கப்பட்டது.
சாப்பிட்டுவிட்டு,
மேனேஜரை அழைத்தேன். அவரது ஊழியர் ஒருவரை என்னுடன் அனுப்பி..என் கணக்கில் மீதமிருந்த ஐம்பது ரூபாயை, *(புத்தம்புது நோட்டு) வாங்கிக்கொடுத்து புன்னகையுடன் வழியனுப்பினார்.
அப்போது
வாங்கிய கார்டை , அப்போதே தலைமுழுகிவிட்டு மகிழ்ச்சியாய்க் கிளம்பினேன்.
கார்டு வாங்கிய பில்..!
சாண்ட்விச்சும் , தண்ணீர் பாட்டிலும் சேர்த்து போடப்பட்ட பில்
தண்ணீர் பாட்டில் பணம் திரும்பக் கொடுத்த பில்
நன்றாக
யோசித்துப்பார்த்தால், இந்த முழுப்பிரச்னையிலும் அந்த நிறுவன ஊழியர்களில் யாரும் தவறாக நடந்துகொள்ளவில்லை. முடிந்தவரை
எனக்கு உதவத்தான் முயற்சித்தார்கள். ஒரே ஒருவர் மட்டும் கொஞ்சம் இடக்காக ஆரம்பித்தார். நான் மடக்காக ஆரம்பித்ததும் அடங்கிவிட்டார்.
ஆனால்...பொதுமக்களிடம் எப்படிவேண்டுமானாலும் காசு கறக்கலாம் என்று திட்டம் போட்ட முதலாளிகளைவிட… இதில் மிகப்பெரிய குற்றவாளிகள் யார் தெரியுமா?
இவ்வளவு பிரச்னை நடந்துகொண்டிருந்த போதும்
வேடிக்கையைக்கூட ஓரக்கண்ணால் பார்த்துவிட்டு, அணிந்திருந்த ஜீன்ஸின் பின்பக்கம் பேண்ட்டியின் நிறுவனப்பெயரை
எல்லோருக்கும் காட்டியபடி ’No Refund? Is It? என்று கேட்டுவிட்டு தலையாட்டிக்கொண்டே
காசைக் கொடுத்துச் சென்ற மானமங்கைகளும், சுப்பையா என்ற பெயரில் ஐ.டி கார்ட் இருந்தாலும்,
சுவிஸ் நாட்டுக் குடிமகன் என்ற நினைப்பில் ‘Seven Chicken Sanwitch !’ என்று வாங்கி
அவன் அடாவடியாகக் கொடுத்த 2 வாட்டர் பாட்டில்களையும் வாய் திறக்காமல் வாங்கிச்சென்ற தட்டிக்கேட்க வக்கில்லாத சேர,சோழ, பாண்டியப்பேரன்களும்தான்.!!
இவர்கள்தான் தங்களை பெரிய எச்சிக்கலை ஃபேமிலி
போல் எண்ணிக்கொண்டு பக்கி முண்டங்களாக வரிசையில் நின்று சமூகத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்கும்
ஹீரோவின் படத்தைப் பார்த்துவிட்டு, மீண்டும் வரிசைகட்டி, 20ரூபாய் கொள்ளைக் கார்டை
,300 ரூபாய் மதிப்பேற்றி வாங்கி 240க்கு மூன்று காபிகள் குடித்துவிட்டு மிச்சமிருக்கும்
40 ரூபாயை எப்போது செலவழிப்பது என்று தெரியாமல், அதற்காகவே மீண்டும் வந்து கீழே நிறுத்திய
வண்டிக்கு பார்க்கிங் கட்டணமாக அதே 40 ரூபாயை தண்டம் அழுதுவிட்டு, I Support India Against Corruption என்ற
பனியனை வாங்கி அணிந்துகொண்டு, அன்னா ஹஜாரேவை இணையத்தில் லைக்கும் ,இந்தியாவில், முதலில்
நசுக்கப்பட வேண்டிய முதுகெலும்பில்லாத கரப்பான்பூச்சிகள் !
நேர்மையான
தைரியத்துடன், உங்கள் உழைப்பு உண்மையென்றால், உங்கள் பணம் நியாயமானதென்றால், உங்களுக்குள் இருக்கும் ஹீரோவுக்கு வேலைகொடு்த்து, உங்கள் அடிப்படை உரிமையைக் கேட்டுப்
பாருங்கள்!
கேட்டால்....கிடைக்கும்!



