எல்லா அசைவிலும்
இயல்பு காட்டி
எல்லாச் செயலையும்
இனிக்கச் செய்து
எல்லோர் உள்ளமும்
கொள்ளை கொள்ளும்
குழந்தைகள் என்னும்
குதூகலச் சிற்பிகள்!
அவை
பசை எடுத்துத் தின்னும்
இசை கேட்டால் ஆடும்
கை நீட்டி ஓடி வரும்
கைதட்டலில் உலகம் தரும்!
இருப்பதை தர மறுக்கும்!
இல்லாததை பெற நினைக்கும்!
அதிகம் அழுது பார்க்கும்!
அதிலும் தன் அழகு காட்டும்..!
புத்தகம் கிழித்துவிட்டு
புதிதாகச்சிரித்துவைக்கும்
பொக்கைவாயெடுத்து
பொருளெல்லாம் நக்கிப்பார்க்கும்!
வா வென்று சொல்பவரின்
வயதைப்பார்க்காது
அழைக்கும் மனிதரின்
அழகு பார்க்காது.
உரிமையாய் தூக்கினால்
உறவு நோக்காது..!
எல்லோரும் அதற்கு
எல்லாம்தான்!
யாரையும் பிரித்துப்பார்க்க
குழந்தைகள் அறியாது.
குற்றம் கண்டுபிடித்து
குறைசொல்லி மறுகாது!
சுற்றம் எல்லோரிடத்தும்
சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்!
அத்தகைய குழந்தையாய்
அழகாய்த்தான் இருந்திருந்தோம்...
வளர்ந்து போய்த்தான்
குழந்தை எண்ணம் தொலைத்துவிட்டோம்..!
உள்ளக்குழந்தை எங்கே என்று
உலகம் முழுதும் தேடுகின்றோம்!
எதற்கெடுத்தாலும் பெரியவராய்
எப்போதும் நினைக்கின்றோம்!
அதில் நம் தன்முனைப்பை
முன்னேற விடுகின்றோம்.
அடுத்தவர் தவறு செய்தால்
தண்டனைக்கு அலைகின்றோம்.
நம் தவறை தப்புவிக்க
உலகையே கெஞ்சுகின்றோம்.
சிரிக்காமல் இருப்பதற்கு
சிறப்புப்பயிற்சி எடுக்கின்றோம்!
இத்தனையும் இருந்தாலும்
இப்போதும் ஒரு தருணம்
நம்மையும் மறக்கச்செய்யும்..!
நண்பனின் வீட்டு விழா,
நயமான இசைமுழக்கம்,
துள்ள வைக்கும் நடனங்கள்
துணிவில் கிடைத்த வெற்றிகள்
குழந்தை பிறந்த தருணங்கள்
போட்டி வென்ற சாதனைகள்
பெரியோரின் சந்திப்புகள்
வித்தைக்குக்கிடைத்த விருதுகள்
என எத்தனையோ நிகழ்வுகள்
உங்கள் உவகை கூட்டியிருக்கும்!
அவ்வாறான நிகழ்வுகளில்
சில நிமிடம் நீங்கள்
வயது மறந்து குதூகலித்து
குழந்தையாகவே மாறியிருப்பீர்கள்!
அத்தகைய தருணங்களை
அசைபோட்டுப்பாருங்கள்
குழந்தையாய் மட்டும் எப்போதும்
அடிக்கடி மாறுங்கள்!
தெரியாதவரைப்பார்த்து
சிரிக்கும் மனோபாவம்
சீக்கிரம் வந்துவிடும்.!
தெரிந்தே தவறு செயினும்
அறிந்தே மன்னிக்கும்
அற்புதம் தானாக அமைந்துவிடும்.
அடுத்தவர் துயர்கண்டு அப்படியே
உருகும் உள்ளம் அவசியமாய்
வந்துவிடும்.
ரசனையின் உச்சத்தை
சிரமமின்றித்தொடமுடியும்.!
உங்கள் உள்ளக்குழந்தையை
உசுப்பேற்றிப்பாருங்கள்
எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்
இதய மகிழ்ச்சி வாங்குங்கள்!