உள்ளக்குழந்தை எங்கே?

எல்லா அசைவிலும்
இயல்பு காட்டி
எல்லாச் செயலையும்
இனிக்கச் செய்து
எல்லோர் உள்ளமும்
கொள்ளை கொள்ளும்
குழந்தைகள் என்னும்
குதூகலச் சிற்பிகள்!

அவை
பசை எடுத்துத் தின்னும்
இசை கேட்டால் ஆடும்
கை நீட்டி ஓடி வரும்
கைதட்டலில் உலகம் தரும்!
இருப்பதை தர மறுக்கும்!
இல்லாததை பெற நினைக்கும்!

அதிகம் அழுது பார்க்கும்!
அதிலும் தன் அழகு காட்டும்..!

புத்தகம் கிழித்துவிட்டு
புதிதாகச்சிரித்துவைக்கும்
பொக்கைவாயெடுத்து
பொருளெல்லாம் நக்கிப்பார்க்கும்!

வா வென்று சொல்பவரின்
வயதைப்பார்க்காது
அழைக்கும் மனிதரின்
அழகு பார்க்காது.
உரிமையாய் தூக்கினால்
உறவு நோக்காது..!
எல்லோரும் அதற்கு
எல்லாம்தான்!
யாரையும் பிரித்துப்பார்க்க
குழந்தைகள் அறியாது.

குற்றம் கண்டுபிடித்து
குறைசொல்லி மறுகாது!
சுற்றம் எல்லோரிடத்தும்
சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்!

அத்தகைய குழந்தையாய்
அழகாய்த்தான் இருந்திருந்தோம்...
வளர்ந்து போய்த்தான்
குழந்தை எண்ணம் தொலைத்துவிட்டோம்..!
உள்ளக்குழந்தை எங்கே என்று
உலகம் முழுதும் தேடுகின்றோம்!

எதற்கெடுத்தாலும் பெரியவராய்
எப்போதும் நினைக்கின்றோம்!
அதில் நம் தன்முனைப்பை
முன்னேற விடுகின்றோம்.
அடுத்தவர் தவறு செய்தால்
தண்டனைக்கு அலைகின்றோம்.
நம் தவறை தப்புவிக்க
உலகையே கெஞ்சுகின்றோம்.
சிரிக்காமல் இருப்பதற்கு
சிறப்புப்பயிற்சி எடுக்கின்றோம்!


இத்தனையும் இருந்தாலும்
இப்போதும் ஒரு தருணம்
நம்மையும் மறக்கச்செய்யும்..!

நண்பனின் வீட்டு விழா,
நயமான இசைமுழக்கம்,
துள்ள வைக்கும் நடனங்கள்
துணிவில் கிடைத்த வெற்றிகள்
குழந்தை பிறந்த தருணங்கள்
போட்டி வென்ற சாதனைகள்
பெரியோரின் சந்திப்புகள்
வித்தைக்குக்கிடைத்த விருதுகள்

என எத்தனையோ நிகழ்வுகள்
உங்கள் உவகை கூட்டியிருக்கும்!

அவ்வாறான நிகழ்வுகளில்
சில நிமிடம் நீங்கள்
வயது மறந்து குதூகலித்து
குழந்தையாகவே மாறியிருப்பீர்கள்!

அத்தகைய தருணங்களை
அசைபோட்டுப்பாருங்கள்
குழந்தையாய் மட்டும் எப்போதும்
அடிக்கடி மாறுங்கள்!

தெரியாதவரைப்பார்த்து
சிரிக்கும் மனோபாவம்
சீக்கிரம் வந்துவிடும்.!

தெரிந்தே தவறு செயினும்
அறிந்தே மன்னிக்கும்
அற்புதம் தானாக அமைந்துவிடும்.

அடுத்தவர் துயர்கண்டு அப்படியே
உருகும் உள்ளம் அவசியமாய்
வந்துவிடும்.

ரசனையின் உச்சத்தை
சிரமமின்றித்தொடமுடியும்.!

உங்கள் உள்ளக்குழந்தையை
உசுப்பேற்றிப்பாருங்கள்
எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்
இதய மகிழ்ச்சி வாங்குங்கள்!

Comments

  1. அருமையா இருக்கு சுரேகா,
    வாழ்த்துக்கள்.

    நமக்குள் இருக்கும் உள்ளக்குழந்தை விழித்தால்தான் நாம் சிறு சிறுவிடயத்தில் கூட ஆனந்தம் அடைய முடியும்.

    ReplyDelete
  2. உங்கள் உள்ளக்குழந்தையை
    உசுப்பேற்றிப்பாருங்கள்
    எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்
    இதய மகிழ்ச்சி வாங்குங்கள்!//

    அப்போது கிடைக்கும் ஆனந்தத்தை சொல்லவே முடியாது. நான் அனுபவித்திருக்கிறேன். அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

    ReplyDelete
  3. /*அடுத்தவர் துயர்கண்டு அப்படியே
    உருகும் உள்ளம் அவசியமாய்
    வந்துவிடும்.

    ரசனையின் உச்சத்தை
    சிரமமின்றித்தொடமுடியும்.!*/

    அருமையான வரிகள் சுரேகா....
    குழந்தையின் மன பாங்கினை தெள்ள தெளிவாக ஒரு குழந்தையைப் போன்றே கூறி விட்டீர்கள். நன்றிகள் பல.
    குறிப்பு: நானும் குழந்தை பையன் தான்...இதையும் பாருங்க.
    /*ravishna.blogspot.com*/

    ReplyDelete
  4. நல்ல கவிதை..
    அழகான வரிகள்..

    //புத்தகம் கிழித்துவிட்டு
    புதிதாகச்சிரித்துவைக்கும்//

    அருமை..
    :)

    ReplyDelete
  5. ஒரே நாளில்,
    நீங்கள் உள்ளத்தின் குழந்தையை பற்றி எழுதி இருக்கிறீர்கள்..
    நான் உள்ளே இருக்கும் மிருகத்தை பற்றி எழுதி இருக்கிறேன்..

    ReplyDelete
  6. //புதுகைத் தென்றல் said...

    அருமையா இருக்கு சுரேகா,
    வாழ்த்துக்கள்.

    நமக்குள் இருக்கும் உள்ளக்குழந்தை விழித்தால்தான் நாம் சிறு சிறுவிடயத்தில் கூட ஆனந்தம் அடைய முடியும்.//

    வாங்க வாங்க
    நன்றிங்க

    கண்டிப்பா...இன்னிக்கும் என் பையன் கூட நானும் சேந்து ஆடுறேன்னா பாத்துக்குங்களேன்.

    :)

    ReplyDelete
  7. avishna said...


    //அருமையான வரிகள் சுரேகா....
    குழந்தையின் மன பாங்கினை தெள்ள தெளிவாக ஒரு குழந்தையைப் போன்றே கூறி விட்டீர்கள். நன்றிகள் பல.//


    வாங்க ரவிஷ்னா..!

    வருகைக்கும் வாழ்த்துக்களுக்கும் நன்றிங்க !

    உங்க பதிவுக்கும் வந்து பாத்துட்டு பின்னூட்டமும் போட்டுட்டோமுல்ல! :)

    ReplyDelete
  8. //Saravana Kumar MSK said...

    நல்ல கவிதை..
    அழகான வரிகள்..


    அருமை..
    :)//

    வாங்க சரவணக்குமார் MSK..!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க!

    ReplyDelete
  9. மங்களூர் சிவா said...

    //:)//


    என்னப்பு..! ரொம்ம்ம்ம்ப வேலையோ?

    வருகைப்பதிவு போட்டாச்சு...... போதுமா?

    ReplyDelete
  10. எதற்கெடுத்தாலும் பெரியவராய்
    எப்போதும் நினைக்கின்றோம்!
    அதில் நம் தன்முனைப்பை
    முன்னேற விடுகின்றோம்.
    அடுத்தவர் தவறு செய்தால்
    தண்டனைக்கு அலைகின்றோம்.
    நம் தவறை தப்புவிக்க
    உலகையே கெஞ்சுகின்றோம்.
    சிரிக்காமல் இருப்பதற்கு
    சிறப்புப்பயிற்சி எடுக்கின்றோம்//
    உண்மையோ உண்மை. சுரேகா,அருமையா எழுதி இருக்கீங்க. திடீரென்று ஊஞ்சல் ஒன்றைப் பார்த்து அதில் உட்கார்ந்தபோது...உலகமே நல்லதாக இன்பம் நிறைந்ததாக மாறியது,. அது போல எல்லாக் கணங்களும் இருக்கக் கூடாதா என்று நினைத்தேன் மனம் தானே காரணம்!!!

    ReplyDelete
  11. அழகான கவிதை....

    //வா வென்று சொல்பவரின்
    வயதைப்பார்க்காது
    அழைக்கும் மனிதரின்
    அழகு பார்க்காது.
    உரிமையாய் தூக்கினால்
    உறவு நோக்காது..!
    எல்லோரும் அதற்கு
    எல்லாம்தான்!
    யாரையும் பிரித்துப்பார்க்க
    குழந்தைகள் அறியாது//

    எவ்வளவு உண்மை...மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!!

    ReplyDelete
  12. வல்லிசிம்ஹன் said...

    //சுரேகா,அருமையா எழுதி இருக்கீங்க. திடீரென்று ஊஞ்சல் ஒன்றைப் பார்த்து அதில் உட்கார்ந்தபோது...உலகமே நல்லதாக இன்பம் நிறைந்ததாக மாறியது,. அது போல எல்லாக் கணங்களும் இருக்கக் கூடாதா என்று நினைத்தேன் மனம் தானே காரணம்!!!//


    வாங்க வல்லிசிம்ஹன்..

    ரொம்ப நன்றிங்க!

    கண்டிப்பா மனம்தான் காரணம்!

    ReplyDelete
  13. //// சந்தனமுல்லை said...

    அழகான கவிதை....



    எவ்வளவு உண்மை...மிகவும் ரசித்தேன் இவ்வரிகளை!//

    வாங்க சந்தனமுல்லை!

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி!!

    ReplyDelete
  14. ஆஹா,மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  15. //குற்றம் கண்டுபிடித்து
    குறைசொல்லி மறுகாது!
    சுற்றம் எல்லோரிடத்தும்
    சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்//

    படித்தவுடன் வீட்டிற்கு போய் குழந்தையை கொஞ்சவேண்டும் போல் ஆகிவிட்டது!

    கலக்கல் சுரேகா!

    நர்சிம்

    ReplyDelete
  16. //பாபு said...
    ஆஹா,மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்//


    நன்றி பாபு !

    வருகைகும் வாழ்த்துக்கும்!

    ReplyDelete
  17. //thekkikattan|தெகா said...
    Enjoy, the moments!//


    வாங்க...
    அதான்...அதேதான்!

    ReplyDelete
  18. //narsim said...


    படித்தவுடன் வீட்டிற்கு போய் குழந்தையை கொஞ்சவேண்டும் போல் ஆகிவிட்டது!

    கலக்கல் சுரேகா!//

    வாங்க நர்சிம் சார்!

    உங்கள் வருகைக்கு நன்றி!

    வாழ்த்துக்கு மிக்க நன்றி!
    நீங்கள்லாம் கொடுக்குற ஊக்கத்துலதான்
    இப்படி பெனாத்திக்கிட்டு திரியிறோம் .

    :)

    ReplyDelete
  19. //அடுத்தவர் தவறு செய்தால்
    தண்டனைக்கு அலைகின்றோம்.
    நம் தவறை தப்புவிக்க
    உலகையே கெஞ்சுகின்றோம்.
    சிரிக்காமல் இருப்பதற்கு
    சிறப்புப்பயிற்சி எடுக்கின்றோம்!//

    என்ன சொல்றது. அருமையா வந்திருக்கு!

    வரிக்கு வரி உண்மையடா... எதுவுமே மனசின் ஆழத்திலிருந்து வந்தால் அது யுனிவெர்சல் உண்மையாகிப் போகுமோ!

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

நித்யானந்தாவும், நானும்..!

உன்னைக் காணாது நானிங்கு..

இறைவி - எண்ணங்கள் எனது !