பார்த்ததிலிருந்து பிரமித்துப்போய் உட்கார்ந்திருக்கிறேன். என்னடாது இங்க நாம எவ்வளவு ரூம் போட்டு யோசிச்சாலும் இந்தமாதிரி ஒரு திரைக்கதையை உருவாக்கமுடியலியேன்னு!
அடடா!
ஒரு குண்டுவெடிப்பும், கடத்தலும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளைக்கண்டுபிடிப்பதும்தான் கதை!
அமெரிக்க அதிபர், உலக தீவிரவாத எதிர்ப்பு உரை நிகழ்த்த ஸ்பெயினுக்கு வரார்.
அங்க அவரை கொல்ல முயற்சி நடக்குது..! பின்னர் ஒரு பெரிய குண்டுவெடிப்பும் நடந்து பல பேர் இறந்து போயிடறாங்க! அதை துப்பறிஞ்சு இதுக்குப்பின்னணி என்னங்கிறதை ஒரு அமெரிக்க உளவாளி கண்டுபிடிக்கிறதுதான் முழுக்கதையும்!
அதை சொல்லும் விதத்தை சினிமால ட்ரீட்மெண்ட்டுன்னு சொல்லுவாங்க..! அதில்தான் இவர்கள் பூந்து விளையாடி இருக்காங்க!
ஒரு பொதுப்பார்வையிலும் சொல்லாம, ஒரு தனிமனிதப்பார்வையிலும் சொல்லாம, அகிரா குரோசோவாவோட ரோஷமான் மாதிரியும்
சொல்லாம, நம்ம விருமாண்டி மாதிரியும் சொல்லாம, 8 வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வித்யாசமாகச் சொல்லியிருக்காங்க!
ஒரே விஷயத்தை 8 பேரும் சொல்லியிருந்தா போரடிச்சிடும். ஒருத்தர் பார்வையிலேருந்து சொல்லி, அவர் விட்ட எடத்துலேருந்து ஆரம்பிச்சு
இன்னொருத்தர் அவர் பார்வையில சொல்ல ஆரம்பிக்கிறார்.
முதலில், ஒரு டெலிவிஷன் நிறுவனம் ஸ்பெயினுக்கு அமெரிக்க அதிபர் வரும் அந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய வருது!
அதில் வேலைபாக்கும் ஒரு நிருபரா Zoe Saldana வராங்க! அவுங்க நிகழ்ச்சியை வர்ணிச்சுக்கிட்டு இருக்கும்போதே அதிபரை சுடும் முயற்சியில் மேடை சரிஞ்சு விழுந்து அவரை காப்பாற்றப்படுறாரு! அதைப்பத்தி இவுங்க வர்ணிச்சுக்கிட்டிருக்கும்போதே, பெரிய குண்டு வெடிச்சு அவுங்க இறந்துடுறாங்க!
அந்த டெலிவிஷன் ஒளிபரப்பு வேனுக்குள்ள , நுழையுறாரு சிறப்பு ரகசிய அதிகாரி Dennis Quaid !
அவர் அந்த நிகழ்ச்சியை திரும்பத்திரும்ப போட்டுப்பாத்து ஒரு ஆளை சந்தேக வட்டத்துக்குள் கொண்டுவரும்போது, கதை அவர் பார்வையில் விரிய ஆரம்பிக்குது! காலைல அவர் எழுந்திருந்ததிலிருந்து என்னன்ன நடந்ததுன்னு காட்டி அந்த குண்டு வெடிக்கும்போது அவர் நிலை என்னன்னு புரியவச்சு, அடுத்த ஆளை நோக்கி கதை பயணிக்குது!
தப்பிச்சு ஓடும் ஒரு ஆளை இவரும் துரத்தி ஓட, அவன் பார்வையில் கதை தொடருது! அவன் எப்படி அந்தக்கூட்டத்துக்குள் வந்தான் என்னன்ன செஞ்சான், அவன் காதலிக்கும் அவனுக்கும் நடந்த சம்பாஷணைகள்னு தொடர்ந்து, அவன் காதலி ஒரு பையை அந்தக்கூட்டத்தின் ஓரத்தில் ஒரு இடத்தி வீசிட்டுப்போறவரைக்கும் அவன் பார்வையில் ஓடும் கதை,
காதலி பார்வையில் தொடர்ந்து அவளது நிலையை எடுத்துக்காட்டி அந்த நேரத்தில் , விழாவுக்கு வந்ததையும், அதிபர் பேசுவதையும் வீடியோ எடுத்து தன் குடும்பத்தாரிடம் போட்டுக்காட்டுறதுக்காக வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கும் Forest Whitaker பார்வைக்கு மாத்திவுட்டுறாங்க!
இப்ப கதையை இவர் எடுத்துக்கிட்டு போறாரு! இவர் போலீஸிடம் அந்த வீடியோவை போட்டுக்காட்ட அதில் இருக்கும் க்ளூக்களை வச்சு நம்ம ஹீரோ ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்க, இவரும் இவர் பங்குக்கு சில விஷயங்களைச்செய்ய, ரோட்டைக்கடக்கும் ஒரு குழந்தையைக்காப்பாற்ற இவர் தாவ,
தப்பிச்சு ஓடும் தீவிரவாதிகளின் பார்வையில் என்னன்ன நடந்ததுன்னு காட்டி ,ரோட்டைக்கிராஸ் பண்ணும் குழந்தை எதிரில் வர, அதை மோதும் நிலையில் வரும் காரில் இவர்கள் இருக்கன்னு கதை அடுத்த ஆள் கையில் போய், ஒவ்வொருவரின் பார்வையிலேயும் வந்து கடைசியில் ஒரு கார் துரத்தலுக்குப்பிறகு, சாகவேண்டியவர்கள் செத்து, வாழ வேண்டியவர்கள் வாழ்ந்து சுபம்!
எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க! ஒரு நிகழ்ச்சியை வேடிக்கை பாக்கவந்த ஒரு சாமான்ய மனிதன் மனசிலும், முகத்திலும் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே சொல்லியிருக்காரு Forest Whitaker ! ஒரு உளவாளியின் வேகத்தையும், துப்பறியும் புத்தியையும் அப்படியே பிரதிபலிச்சிருக்காரு Dennis Quaid
அட.. ! இப்படியும் யோசிக்கலாம்னு கிழிச்சு எடுத்திருக்கார் இயக்குநர் Pete Travis !
ஒரே கதையை பலர் சொல்லும் விதத்திலும், ஒரு இடத்தில் நிறுத்திட்டு, அடுத்தவர் பார்வையில் அந்தக்கதையை நகர்த்துவதிலும், எந்த இடத்தில் யார் கதையை எடுத்துக்கிட்டு போனா சுவாரஸ்யமா இருக்கும்கிறதிலும் கடுமையா ஆராய்ச்சி பண்ணியிருப்பார் போல !
நேரமிருந்தா , VANTAGE POINT - DVD கிடைச்சா கண்டிப்பா பாருங்க! சினிமாவில் என்னவெல்லாம் செய்யலாம்னு சிந்தனை விரியும்! ஒரு சாதாராண கருவோ, ஏற்கனவே தெரிஞ்ச கதையோ- எதுவா இருந்தாலும் சொல்லும் விதத்தில் பார்வையாளனை உக்கார வைக்கலாம்னு நிரூபிச்சிருக்காரு இயக்குநர் !
இது மாதிரி நம்ம ஊர் பாணில ஒரு கதை எழுதலாமுன்னு இருக்கேன்.
நம்ம பதிவுலகத்துக்காக மட்டும்!
எப்ப வெளிவரும்னு தெரியாது...! ஆனா .....வரும்!