இடையில் எதுவுமே
பதிவிடாமல், ஊர் சுற்றிக்கொண்டு இருந்தாயிற்று. நிறைய வாசிக்க நேரம் கிடைத்தது. எஸ்.ரா, புதுமைப்பித்தன், மௌனி, முகில், பா.ரா, காண்டேகர், கல்கி என்று கலந்து கட்டிப் படித்தாயிற்று... அதைவிட
சுவாசிக்க நேசம் கிடைத்தது. அந்த மகிழ்ச்சியில் உள்ளத்தில் தோன்றிய எண்ணங்களை ஓரிரு
வார்த்தைகளில் ஆரம்பித்துவிட்டு, கருவாக வளர விட்டாயிற்று.. என்று பிரசவிக்கும் என்பது
தெரியவில்லை.
சென்ற மாதம் ‘கேட்டால் கிடைக்கும்’ வகையில் சில சம்பவங்கள் நடந்தன.
நமது வெள்ளிநிலா ‘ஷர்புதீனின்’ குடும்ப நண்பர் ஒருவர் கோவையில் ஆவ்லா மார்க்கெட்டிங்
என்ற நிறுவனத்தில்.. ஒரு இண்டக்ஷன் ஸ்டவ் வாங்கியிருக்கிறார். வாங்கி ஒருவாரத்திலேயே
அது ரிப்பேர் ஆகிவிட்டது. எடுத்துச் சென்றிருக்கிறார். சரி செய்து தந்திருக்கிறார்கள்.
மீண்டும் ஒரு மாதத்துக்குள் கெட்டுவிட்டது. மீண்டும் சரி செய்திருக்கிறார்கள். ஆனால்
அதுவும் ஒரு வாரம் கூட நீடிக்கவில்லை. கடைசியாக அங்கு ஸ்டவ்வை எடுத்துச்சென்று , வேறு
ஸ்டவ் மாற்றித்தருமாறு கேட்டிருக்கிறார்கள். அதெல்லாம் தரமுடியாது. என்று கொஞ்சம் அடாவடியாகப்
பேசியிருக்கிறார்கள். இவர்களும் போராடிப்பார்த்துவிட்டு, மீண்டும் வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அப்போதுதான்… நமது
பேரீச்சை கதையைப் படித்துவிட்டு..ஷர்புதீன் இந்த நிறுவனத்தை என்ன செய்வது என்று கேட்டார்.
என்னிடம் முழு விபரங்களும் கொடுத்தார்.
உடனே, கோவையில்
உள்ள அந்த நிறுவனத்துக்கு தொலைபேசினேன். அதன் மேலாளர் ராஜேந்திரனிடம்.. வாடிக்கையாளரை
முட்டாளாக்கினால் என்னன்ன விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று சொன்னேன்’. மேலும் நமது
கேட்டால் கிடைக்கும் அமைப்பு பற்றியும்.. நான் தமிழ்நாடு நுகர்வோர் விழிப்புணர்வு மற்றும்
மனித உரிமைகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் என்பதையும் சொல்லி, அவர்களுக்கு ஸ்டவ்வை
மாற்றிக்கொடுக்கும்படியும் சொல்லி வைத்தேன்.
அதற்குப் பிறகு
8 நிமிடங்களில், ஷர்புதீனின் நண்பரிடமிருந்து எனக்கு தொலைபேசி வந்தது.
‘சார்..அந்த ஸ்டவ்
கம்பெனிலேருந்து ஃபோன் வந்துருச்சு சார்! உடனே
ஸ்டவ்வை எடுத்துக்கிட்டு வந்து மாத்திக்கச் சொல்லிட்டாங்க சார்! நான் எத்தனை தடவை போய்
சத்தம் போட்டும், சரியா பதில் சொல்லாம அலட்சியப்படுத்திக்கிட்டிருந்தாங்க! நீங்க பேசினதுக்கப்புறம்
இப்படி பவ்யமா பேசுறாங்க! ரொம்ப நன்றி சார்! ஆமா..அப்படி என்ன சார் சொன்னீங்க?” என்றார்.
’உண்மையைச் சொன்னேன்’
என்றேன். :)
ஆம்.
ஒரு வாடிக்கையாளரின் உரிமையை தெளிவாக , ஆத்திரப்படாமல், அழுத்தமாகக் கேட்கும்போது…கண்டிப்பாக
கிடைக்கத்தான் செய்கிறது. அதுவும் ஒருவரது பிரச்னையை இன்னொருவர் தட்டிக்கேட்கும்போது….தவறு
செய்யும் வியாபாரிக்கு…’’ஆஹா..ஒண்ணு கூடிட்டாய்ங்கப்பா’ என்ற எண்ணம் வருவதால்தான் காரியம்
நடக்கிறது.
நிச்சயம்
ஒன்று கூடுவோம்.
டாட்டா நானோ,- கார் வாங்குவதற்காக, டாட்டா ஃபைனான்ஸ் என்று அவர்களே கடன்
தரும் நிறுவனமும் வைத்திருக்கிறார்கள்.
நானே கடன் தரேன்.
நானோ வாங்கிக்க!’ என்று ஸ்லோகன் வைக்கலாம்!
அதில் நான் கார்
வாங்கும்போது , முன் பணமாக 30000 கட்டவேண்டும். மிச்சத்தை மாதத்தவணையாக பிரித்துக்கொள்ளலாம்
என்று சொன்னார்கள். நானும் ஒத்துக்கொண்டேன். அடுத்த ஒரு மணி நேரத்தில் அதற்காக 9 செக்குகள்
தரவேண்டும் என்றார்கள். சரி என்றேன். மூன்றில் தொகையை பூர்த்தி செய்துகொள்ளலாம். மற்ற
6 செக்குகளை எதுவுமே பூர்த்தி செய்யாமல், கையெழுத்தை மட்டும் போட்டுக்கொடுக்கவேண்டும்
என்றார்கள்.
ஆரம்பித்தது பிரச்னை!
இந்திய அரசியல்
சட்டத்திலயோ, இந்திய நிதிச் சட்டத்திலயோ, யாராவது யாரிடமாவது பூர்த்தி செய்யப்படாத
செக் கொடுக்கலாம்னு இருக்கான்னு காட்டுங்க ! என்றேன்.
பதில் சொல்லத்தெரியவில்லை..
நான் கண்டிப்பாக
ப்ளாங்க் செக் தரமாட்டேன். என் தவணைத்தொகையை பூர்த்தி செய்துதான் கொடுப்பேன் .. இல்லைன்னா..
நீங்க 6 ப்ளாங்க் செக் குடுக்கணும்னு டாட்டா ஃபைனான்ஸ் லேருந்து எனக்கு ஒரு லெட்டர்
வாங்கிக்கொடுங்க என்றேன்.
அப்போது லேசாக
ஜகா வாங்கினார்கள்.
உடனே நானே, 9 செக்குகளையும்
தவணையைப் பூர்த்தி செய்தே கொடுத்துவிட்டேன். அதை வாங்கிக்கொண்டு, சென்னையில் உள்ள ஒரு
டாட்டா நிதி அலுவலர் என்னிடம் தொலைபேசினார்.
சார்! என்ன நீங்க
எம்ப்டி செக்கே குடுக்காம விட்டுட்டீங்க? அப்படின்னா உங்களுக்கு கார் கிடைக்காது சார்!
சுர்ரென்று ஏறியது.
எம்ப்டி செக்குதானே
வேணும் ? பத்து செக்குகூட தரேன். ஆனால் கையெழுத்தும் இருக்காது பரவாயில்லையா?
அப்புறம்..கார்
கிடைக்காதுன்னு சொல்ல நீங்க யாரு? கார் வாங்க லோன் கிடைக்காதுன்னு சொல்ற வரைக்கும்தான்
உங்களுக்கு அதிகாரம் இருக்கு! அப்ப நீங்கதான் நானோவும் விக்கிறீங்களா? வி.எஸ்.டி மோட்டார்ஸ்
கிடையாதா?
என்று சொல்லவும்..
அந்த ஆள் தடுமாற
ஆரம்பித்தார்.
இப்ப சொல்லுங்க..!!
உங்க பேச்சை ரெக்கார்ட் பண்ணிக்கிறேன். டாட்டா ஃபைனான்ஸில் நானோ கார் வாங்க கடன் வாங்கணும்னா,
ப்ளாங்க் செக் குடுக்கணுமா? அப்படி கொடுத்தால், ப்ளாங்க் செக் வாங்கியிருக்கேன்னு நீங்க
லெட்டர் குடுப்பீங்களா என்றேன்.
பப்பப்பா…பப்பராப்பா..!!
என்று ஆர்யா, அமலாபால் பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டார்.
பின்னர் ஒரு நீண்ட
மின்னஞ்சல் ஒன்றை , டாட்டா ஃபைனான்ஸின் தலைமைக்கு அனுப்பினேன்.
அலறிக்கொண்டு அடுத்தநாள்
மதியம் , அதே அதிகாரி போன் செய்தார். என்ன சார் நீங்க பாட்டுக்கும் மேல எல்லாம் எழுதிட்டீங்க?
உங்க லோன் பேப்பரை நேத்திக்கே ‘நான்’ அப்ரூவ் செஞ்சுட்டேன் சார்..!! சும்மா ஒரு செக்யூரிட்டி
பர்ப்போஸுக்காக செக் வாங்குவோம் சார்! நீங்க பணம் கட்டாம விட்டுட்டீங்கன்னா அதை பவுன்ஸ்
பண்ணி உங்களை கோர்ட்டுக்கு இழுக்கத்தான் என்றார்.
அதெப்புடி? செக்யூரிட்டி
பர்ப்போஸுக்காக, என் சொந்தவீட்டுப் பத்திரத்தைக் கொடுத்துத்தான் கார் வாங்கணுமா? என்று
கேட்டுவிட்டு,, எவ்வளவு ரூபாய் போட்டு செக் கொடுத்தாலும்..அதை வச்சு என்னை கோர்ட்டுக்கு
இழுக்கலாம். அதைவிட ஒரு மேட்டர் புரிஞ்சுக்குங்க..!! ஏமாத்துறவந்தான் நீங்க சொல்ற இடத்துல
எல்லாம் கையெழுத்து போட்டு, கேக்குற செக்கெல்லாம் குடுப்பான். ஏமாத்தாதவன் இப்படித்தான்
கேள்விகளா கேட்டு ஒழுங்கா பணத்தை கட்டுவான் என்றேன்.
இப்படியாக, இந்த
நீதியே தெரியாமல் நிதி உதவி செய்யும் நிறுவனங்களின் ஆட்டத்துக்கு நடுவே, ஒரு ப்ளாங்க்
செக் கூட கொடுக்காமல், நான் நானோ வாங்கிவிட்டேன்.
அடுத்து இன்னொரு
கூத்து நடந்தது..!!
வாரக்கடைசில
சொல்றேன்.
சென்ற மாதம் வட
இந்தியப்பயணம் இனிதே நிறைவுற்றது.
இந்தியாவே சூடாக
இருப்பது நன்றாகத் தெரிந்தது. அதுவும் சத்தீஸ்கர் மாநிலத்தின் கோர்பா என்ற நரகம் –
தெளிவாகத்தான் தட்டச்சினேன். நகரம் அல்ல..! நரகம்தான்..!! காலை4:40க்கெல்லாம் விடிந்து…இரவு
8 மணிவரை கதிரவன் வேலை பார்க்கிறான். அதுவும்
பகல் 12 மணிக்கு…வெளியில் 40 அடி நடந்திருப்பேன். நிழலைப்பார்த்து ஓடிவிட்டேன். இன்னும்
40 அடி நடந்திருந்தால், சுருண்டிருப்பேன். உண்மையான வெய்யிலை அங்குதான் அனுபவித்தேன்.
சவுதி அரேபியாவின் பாலைவன வெப்பத்தை விட அதிகமாக இருந்தது.
மரங்களை
வெட்டுவதையே பிழைப்பாக வைத்திருந்தால், சென்னைக்கும் அந்த கதி வரும் நாள் தூரத்தில்
இல்லை என்றே படுகிறது.
இந்தியாவில் அனல்
மின் நிலையங்கள்தான் அதிகமாக உள்ளன. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்கள் மிகவும் தெளிவாகவும்,
நிதானமாகவும் இருக்கவேண்டியதன் கட்டாயம் இருக்கிறது. மின் உற்பத்தி என்று நாம் சாதாரணமாகச்
சொல்லிவிடுகிறோம். அதன் பின்னணியில் எத்துனை இளைஞர்களின் உழைப்பு இருக்கிறது என்று
நேரில் பார்க்கும்போதுதான் தெரிகிறது. சம்பளத்துக்காத்தான் வேலைபார்க்கிறார்கள் என்று
சாதாரணமாக புறம் தள்ளிவிடமுடியாது. அனல் மின் நிலையம் ஒரு வினாடி நின்றால் கூட, மீண்டும்
அதனை உடனே இயங்க வைக்க இவர்கள் பல நாட்கள் தூக்கத்தைத் தொலைக்க வேண்டியுள்ளது. உற்பத்தி,
தேவை என்ற இரு பல்சக்கரங்களுக்கிடையில் இவர்களும் அரைக்கப்படுகிறார்கள் என்பது மிகவும்
என்றோ
வரப்போகும் போருக்காக, நம் எல்லையில் பாதுகாப்புக்கு நின்றிருக்கும் வீரர்களை விட…
தினமும் நம் வீட்டில் விளக்கெரிய, அந்த அனல் காற்றில் போரிடும் இந்த இளைஞர்கள்தான்
வணங்கப்பட வேண்டியவர்கள்! ஒவ்வொருமுறை மின்சாரத்தை வீணடிக்கும்போதும் இதை நினைவில்
கொள்ளலாம்.! யாரோ ஒரு இளைஞனின் தூக்கத்தை நாம் களவாடிக்கொண்டிருக்கிறோம்
___________________________________
ஷங்காய் என்ற ஹிந்திப்படம் பார்த்தேன்..நிதர்சனத்தை அப்படியே சொன்ன விதமும்.. உண்மையின் குரூரமும் தூங்கவிடாமல் செய்தது. ஷங்காய் என்றால், ‘தவறு செய்யத் தூண்டுவது’ என்று பொருள் வரும்.
உண்மைதான்.. ஒருவனை தவறுசெய்ய என்னவெல்லாம் தூண்டுகிறது. அரசு என்பது எவ்வளவு பெரிய அராஜக வாதிகளால் நிரம்பியிருக்கிறது என்று அற்புதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
‘நக்ஸல்பாரிகள் படமெடுத்தால் இப்படித்தான் இருக்கும்’ என்று லக்கிலுக் எழுதியிருக்கிறார். உண்மைதான்.!!
கேபிளின் விமர்சனம் படித்துத்தான் படத்துக்குப் போனேன். !!
முக்கியமான விஷயம்..சென்னையில் இந்த மல்டிப்ளெக்ஸ்கள் நம்மை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் என்பது. !! ஆம்..!
பானிப்பட் சினிமேக்ஸில் ஒரு டிக்கட் 50 ரூபாய்தான்..!!
டிக்கட் விலையை கண்டுக்காம இருந்துட்டு அப்புறம் தமிழ் சினிமா வாழலைன்னு அடிச்சுக்கிட்டா என்ன அர்த்தம்.?
அங்கயும் ஒரு பாயாசத்தைப் போட்டுறவேண்டியதுதான்..!!