சென்ற ஜுலையில் ஒரு நாள்!
அன்று
தொலைக்காட்சியில் நேரலை. 2 மணிநேரம் தொடர் நிகழ்ச்சி..! முடித்துவிட்டு வெளியில் வந்தால்,
மதியம் மணி 2 என்றது.
வீட்டிலிருந்து
அழைப்பு!
சாப்பிட
வரீங்களா?
ஆமாம்..
இதோ சேனல்லேருந்து கிளம்பிட்டேன். இன்னும் 15 நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்.
என்று
சொல்லிவிட்டு, பைக்கைக் கிளப்பினேன்.
காசி தியேட்டர் சிக்னல் தாண்டி, .அடுத்த
நூறு மீட்டரில், BSNL அருகில் சிக்னல் இல்லாமல் ஒரு சந்திப்பு. அதில் திடீரென்று நான்கைந்து
வாகனங்கள் இடது புறத்திலிருந்து குறுக்கிட, நானும் என் அருகில் வந்துகொண்டிருந்த காரும்
கொஞ்சம் நிதானித்து நிறுத்தினோம்.
நான்
வண்டியை நிறுத்திய கணம் ‘டொம்’ என்ற ஒரு சத்தம் கேட்டது.
மறுவிநாடி
நான் வானத்தில் பறந்துகொண்டிருந்தேன்.
என்
பைக் எனக்கு முன்னால், தரையில் பயணித்துக்கொண்டிருந்தது. சாலையில் நேராகப் போய் மோதப்போகிறோம்
என்று தெரியும். ஆனால் என்ன செய்வது என்று முடிவெடுக்கத் தோன்றவில்லை. நேரமும் இல்லை.
கை கால்கள் இலக்கின்றி அலைகின்றன.
“ச்சொட்”
என்ற சத்தத்துடன் என் தலை நேரடியாகச் சாலையில் மோதியது. உடல் எடை முழுவதும் தலையில்
இறங்கி அது, தரையிலும் இறங்குவதை அந்த நொடி உணர முடிந்தது.
ஆனால்,
அதிசயமாக, ஒரு கீறல் கூட இல்லாமல் எழுந்தேன். வலது கணுக்காலில் மட்டும் சரியான வலி!
நிச்சயம் எலும்பு உடைந்திருக்க வேண்டும்.
சுற்றி
இருந்தவர்கள் ஓடிவந்தார்கள். என் பைக்கிலிருந்து பெட்ரோல் சாலையில் வழிந்துகொண்டிருந்தது.
ஆளாளுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள்.
என்
பேனாவை ஒருவர் எடுத்துக்கொடுத்தார்.
பைக்கை
நிமிர்த்தி, சாலையோரம் ஒருவர் நிறுத்தினார்.
ஒரு
ஸ்கூட்டி பெண்மணி
“இப்பத்தான்
உங்கள டிவில பாத்தேன்.. என்னாச்சு சார்? ” என்று அக்கறையுடன் விசாரித்தார்.
அப்படி
இன்னா வேகமா வந்து இப்டி இட்ச்சிட்டு நிக்கிற? என்று அவர்கள் கைநீட்டித் திட்டிக்கொண்டிருந்தபோதுதான்
கவனித்தேன். என்னை மோதிய அந்தக் காரின் ஓட்டுநரை!
என்
பைக்கில் மோதியது ஒரு நட்சத்திர ஹோட்டலின் டிராவல் டெஸ்கின் கார்! அது மோதிய வேகத்தில்தான்
நானும் பைக்கும் நிலை குலைந்திருக்கிறோம். காரின் நம்பர் ப்ளேட் கீழே கிடந்தது. அதனை
எடுத்து வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுநரை எல்லோரும் திட்ட, அந்த இளைஞனும் பயந்துவிட்டான்.
என்னைச்
சுற்றி சிலர்.. அவனை விசாரிக்க சிலர் என்று இருக்க..
நான்
அருகில் சென்றேன்.
அவனும்
என்னிடம் ஓடிவந்தான்.
“ரொம்ப
அடிபட்டிருச்சா சார்?. ஸாரி சார்! பேஸஞ்சர் வேகமா போங்க!ன்னாங்க ! புத்தி கெட்டுப்போச்சு!
உங்க வண்டியை ஓரமா நிறுத்திட்டு வாங்க! காரில் ஆஸ்பத்திரி கூட்டிட்டுப்போறேன். என்று
தீர்வை நோக்கிப் பேசினான்.
நானும்
சண்டை போடும் மனநிலையில் இல்லாமலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலும் இருந்ததால்,
“சரி
வாங்க போலாம்” என்று சொன்னேன்.
ஆனால்,
அந்தக் காரில் பயணியாக வந்தது ஒரு தனியார் விமானப் பணிப்பெண். அவள் மனிதாபிமானத்துக்குக்
கூட காரை விட்டு இறங்கவில்லை.
தனக்கான மாற்றுக்காரை ஏற்பாடுசெய்துவிட்டு
, எங்குவேண்டுமானாலும் போ! என்று சொல்லியிருக்கிறாள்.
நான் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தேன்.
வெள்ளைத் தோலுடன்,முகம் முழுக்க சரியான அலங்காரத்துடன், அழகாகத் தெரியவேண்டியவள், அப்போது
மிகவும் அசிங்கமாகத் தெரிந்தாள். சுற்றியிருந்தவர்கள் போட்ட சத்தத்தில் , காரை விட்டு
இறங்கி, செல்ஃபோனை நோண்டிக்கொண்டே, சடுதியில் காணாமல் போனாள்.
அதற்குப் பிறகு , அருகிலேயே “மாயா” மருத்துவமனைக்குச்
சென்றோம். மருத்துவர் மிகவும் நட்பாக உரையாடி, காலுக்கு மட்டும் எக்ஸ்ரே எடுத்து, கணுக்காலில்
ஒரு எலும்பு மிக மிக லேசாக விரிசல் விட்டிருப்பதாகவும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தால்
போதும் என்றும் சொன்னார். அதற்குள் அந்த நட்சத்திர ஹோட்டலின் மேலாளர் உள்ளிட்ட இரண்டுபேர்
வந்து என்னைப் பார்த்து, விசாரித்து, மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார்கள்.
பைக் சரி செய்யும் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி, எண்கள் கொடுத்து, தனியாகச்
சென்றுவிடுவீர்களா? வீட்டில் கொண்டு வந்து விடட்டுமா என்று கேட்டு, நான் வேண்டாம் போய்விடுவேன்
என்று சொன்னதும்தான் சென்றார்கள்.
ஆனால் இவையெல்லாம் நடந்தேறும்போது நேரம்
4 மணி ஆகியிருந்தது.
வீட்டிலிருந்து 11 மிஸ்டு கால்கள்!
அழைத்தேன்.
கிளம்பிட்டேன் இன்னும் 15 நிமிஷத்தில் வரேன்னீங்க
!! ரெண்டு மணி நேரமாச்சு! எங்க இருக்கீங்க? என்று அந்தப்பக்கம் கேட்க,
“ஒரு சின்ன வேலையாயிடுச்சும்மா! கொஞ்ச நேரத்தில்
வந்துருவேன். நீ சாப்பிட்டுரு” என்றேன்.
பரவால்ல…சீக்கிரம் வாங்க ! சேந்து சாப்பிடுவோம்.!
என்றது எதிர்முனை!
கண்ணீர் துளிர்க்க, ஒரு
கலவையான மனநிலையுடன் பைக்கை எடுத்தேன்.
மகிழ்ச்சியாக
சேனலிலிருந்து கிளம்பிய நான், வீட்டிற்கு போய் சேராமலேயே இருந்திருப்பேன். அந்த விபத்தில்,
என் தலை சாலையில் நேரடியாக மோதி, நான் கனவுகளுடன் சிதறிப்போவதை தடுத்து நிறுத்திய ஒரே
பொருள்… ஹெல்மெட்!
விபத்து நடந்து சில நிமிடங்கள் வரை நான்
ஹெல்மெட்டைக் கழட்டாமலேதான் நின்றுகொண்டிருந்தேன். யாரோதான் கழட்டி விட்டார்கள். அதற்குப்பிறகுதான்
ஒரு சிலர் “எங்கேயோ பார்த்திருக்கிறேன்” என்ற ரீதியில் பேசினார்கள். எனக்கு “ஹெல்மெட்
மட்டும் இல்லைன்னா?” என்ற சிந்தனைதான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.
வானில் பறந்துகொண்டிருந்த அந்த வினாடியும்,
தரையில் தலை மோதியபோது ஏற்பட்ட சத்தத்தையும் இன்னும் நான் அனுபவித்து, நினைத்துக்கொண்டிருக்கிறேன்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு
முன்னர்தான், எனது உறவினர் ஒருவர், சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழந்தார்.
அவர் செய்த ஒரே தவறு ஹெல்மெட் அணியாததுதான்.!!
எப்போதுமே ஹெல்மெட் போடுவதை நான் விரும்பிச்
செய்வேன். ஏனெனில் , முகம் நேரடியாக வெயிலில் படாது. கண்களில் தூசி விழாது. குறிப்பாக,
தேவையில்லாமல், போக்குவரத்துக் காவலர்களிடம் பதில் சொல்ல வேண்டியிருக்காது. அவர்கள் முதலில் சொல்வதே “உங்க நல்லதுக்குத்தானே சார் சொல்லுறோம்?”
ஆனால், அதையெல்லாம் மீறி அதன் உண்மையான வேலையான,
உயிர்காக்கும் செயலை மிக அற்புதமாகச் செய்து தெய்வமாகவே மாறிப்போனது எனது ஹெல்மெட்!
பொதுவாக நாம் ஹெல்மெட் போடாததற்கு சொல்லும்
சப்பைக் காரணங்கள்.. முடி கொட்டுது! வேர்த்துக்கொட்டுது, uneasyஆக இருக்கு! ஆகியவைதான். இதையெல்லாம் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க பாஸ்! நமக்காக வீட்டில் சாப்பிடாம காத்திருப்பாங்க! அவங்க கண்ணீருக்கு நம்ம காரணமாகிடக்கூடாது.
இது என் அறிவுரையெல்லாம் இல்லை. ஆனால், அந்த
மரண வினாடியை அனுபவித்தவன் சொல்கிறேன்.
தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள்.!
தலை முடியை விட, உயிர் முக்கியம்!