Thursday, August 21, 2014

மருத்துவ சோதனை !!

நீயா ? நானா? வில் ஒரு நடந்த மருத்துவர்களின் பரிசோதனை பற்றிய விவாதத்தில்.. ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொள்ளவே முடியவில்லை...

மருத்துவர்களைப்பார்த்து கோபி கேட்டார்....

நீங்கள் ஏன் மருத்துவ சீட்டுகளை அதிகரிக்க விரும்பவில்லை ? ஏன் அதிகரிக்கவில்லை? ஏன் டிமாண்டை ஏற்படுத்துகிறீர்கள்? என்று !!

என் நினைவு சரி என்றால்... மருத்துவக்கல்லூரி இடங்களை அதிகப்படுத்தச்சொல்லி, 7 ஆண்டுகளுக்கு முன்னால், மருத்துவ மாணவர்கள் போராடினார்கள்..

அதுவே போகட்டும்.. எனக்கு ஒரு சந்தேகம்..!!

எஞ்சினியர்கள்தான்..எஞ்சினியரிங் காலேஜ் சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு?

வக்கீல்கள்தான்.. 
சட்டக்கல்லூரி சீட்டை அதிகப்படுத்துறாங்களா பாஸு ?

எத்தனைபேர் கல்லூரியில் படிக்கணும்கிறதை... மாணவனே நிர்ணயிக்கிறானா என்ன?

இதைத்தான் நம்ம ஊரில் ..

போறபோக்கில் போட்டுவிட்டுப் போறதுன்னு சொல்லுவாங்க !!

கொஞ்சம் கவனமாக இருந்திருக்கலாம்..!!

சரி.. மருத்துவர்களுக்கு வருவோம்…


எனக்குத் தெரிந்து மிக நல்ல மருத்துவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

சென்னை அரசு மருத்துவமனையிலேயே பொதுமக்களிடம் கனிவாகப் பேசும் மருத்துவர்களைப் பார்த்திருக்கிறேன். ஏன்..? நண்பர் மருத்துவர் புருனோ பற்றியும் அவரது துறை சார்ந்த நிபுணத்துவம் பற்றியும் அவர் துறையின் மேலதிகாரிகள் அவர் அளவுக்கு திறமையான நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வெளியில் இல்லை என்று சொல்லக்கேட்டிருக்கிறேன்.

தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இன்னும் 20 முதல் 50 ரூபாய் வரை ஆலோசனைக் கட்டணம் பெற்றுக்கொண்டு சிறப்பாக மருத்துவம் பார்க்கும் டாக்டர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நோய்ப் பரிசோதனைக் கூடங்களில்... இரண்டு வகை!
ஒன்று.. பரிசோதனைக்கு டெக்னீஷியன்கள் மட்டும் கொண்டு இயங்கும்

இன்னொன்றில்.. பரிசோதனை மருத்துவர் (Pathologist) கொண்டு இயங்கும்.

முதலாவதில்தான், பெரிய தவறுகளுக்கான சாத்தியங்கள் அதிகம்.

இரண்டாவதில் ... தவறுகளுக்கான சாத்தியம் குறைவு.

குறிப்பாக..
சென்னையின் பிரதான பகுதியில் ஒரு பரிசோதனை நிலையம் நடத்திவரும் ஒரு பேத்தாலஜி மருத்துவர் தனது மேலாண்மைத் திறனை வளர்த்துக்கொள்ள என்னை அணுகினார்.

அவர் முதலில் தன் கொள்கையாகச் சொன்ன ஒரே விஷயம்...

நான் மற்ற மருத்துவர்களின் பரிந்துரையால்தான் அதிக சோதனை நடத்தமுடியும். ஆனால், அவர்களுக்கு நான் கட்டிங் கொடுக்கவேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துகிறார்கள். 

ஆனால், நான் எந்த டாக்டருக்கும், நோயாளியின் பரிசோதனைக்காக கட்டிங் கொடுப்பதில்லை என்று உறுதியாக இருக்கிறேன். எந்த டாக்டர் கட்டிங் வாங்காமல் எங்களைப் பரிந்துரை செய்கிறார்களோ அந்த ஆர்டர் போதும். ”

டாக்டர்களுக்குக் கட்டிங் கொடுப்பதை விட, நேரடியாக பொதுமக்களிடம் , பரிசோதனைக்குச் சரியான தொகையை வசூலிப்பதுதான் தனக்கு தர்மம் என்று உறுதியாகச் செயல்படுகிறார். 

அவருக்கு ஆலோசகனாக இருப்பதில் எனக்குப் பெருமையாக இருக்கிறது.
ஆனால், இப்படிப்பட்டவர்களை இனம் கண்டு அவர்களை ஊக்குவித்தாலே போதும்...!!

தவறானவர்களைக் குறைகண்டு பூதாகரப்படுத்துவது ஒருவிதம் என்றாலும்... சரியானவர்களை நிறைய அடையாளம் காட்டுவதுதான் நேர்மறைச் சிந்தனையாக உணர்கிறேன்.

Monday, July 7, 2014

தொலையாமல் பேசுவோம்!
இன்றைய காலகட்டத்தில் நம் வாழ்நாளின் ஒரு கணிசமான பகுதி தொலைபேசியில் போயிடுது! நமக்கு வரும் அழைப்புகளானாலும் சரி, நாம் அழைக்கும் ஆட்களானாலும் சரி! பேச ஆரம்பிச்சா பேசிக்கிட்டே இருக்கோம். இது எந்த அளவுக்கு நம்முடைய நேரத்தை சாப்பிடுதுன்னு யாருக்கும் தெரிவதில்லை. தெரிஞ்சாலும் நாம் அலட்டிக்கிறதில்லை

நாம் இன்னிக்கு சக மனிதர்களிடம் நேரா நாலு வார்த்தை பேசுவதைவிட, செல்பேசியில், எதிர்முனையில் இருப்பவர்களிடம் கொஞ்சம் அதிகமாகவே பேசுறோம். அது நம்முடன் இருக்கும் குடும்ப நபர்கள், நண்பர்களை எரிச்சல் படுத்தும்கிறதுதான் உண்மை! ஆனா அதையும் மீறி தொலைபேசுவதையே தொழிலாக வச்சிக்கிட்டிருந்தா ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வீட்டில் இருப்பவர்கள் கிச்சனிலிருந்து, ஹாலில் இருக்கும் நமக்கு போன் செய்யவேண்டிய கட்டாயம் ஏற்படும்.

மொக்கச்சாமி ஒரு டாக்டரைப்பாக்க அவர் கிளினிக்குக்கு போனாரு!
டாக்டர்எனக்கு….  னு ஆரம்பிக்கும்போது , 
டாக்டருக்கு ஒரு போன் வந்து பேச ஆரம்பிக்கிறாரு! மொக்கச்சாமியும் காத்திருந்தாரு! டாக்டர் போனை வைக்கவும்…
      டாக்டர்எனக்கு தினமும்  கிறார்..!
மறுபடியும் டாக்டருக்குப் போன்… அவர் பேசுறாரு! முடிக்கிறாரு! இப்பவும் மொக்கச்சாமி,
      டாக்டர்எனக்கு தினமும் சாயந்திரமானா
மீண்டும் டாக்டருக்கு போன்…அவரும் மொக்கச்சாமியைப்பாத்துக்கிட்டே போன் பேசி முடிக்க… மொக்கச்சாமி எழுந்திருக்கிறாரு!
      உடனே டாக்டர்..!
      என்ன மிஸ்டர் மொக்கச்சாமிவந்தீங்க ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னாரு!
      மொக்கச்சாமி சொன்னாரு!
      இல்ல டாக்டர்வெளில போய் உங்களுக்கு போன் பண்றேன்அப்பதான் நான் சொல்லவந்ததை முழுசா சொல்லமுடியும்போலன்னாரு!

நம்மிடையேயும், டாக்டர் மாதிரி ஆட்கள் நிறையபேர் இருக்கோம் ! எல்லாரும் நமக்கு முன்னால் இருக்கும் ஆட்களை விட, போனில் பேசுபவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்குறோம்.

      நாலு நண்பர்கள் ஒரு இடத்தில் சந்திச்சுக்கிட்டா, அவர்களுக்குள் பேசிக்கிறதை விட, அவர்களுக்கு வரும் செல் அழைப்புகளில் பேசுறதுதான் அதிகம்! அதுக்கு எதுக்கு சந்திக்கணும்?

      செல்போன் நாம கண்டுபிடிச்ச கருவி! அது நம் வசதிக்குத்தானே தவிர, வருத்தத்துக்காக இல்லை! அதை மனசில் வச்சுக்கிட்டு அந்தப் பொருளை நாம் பயன்படுத்தத்தொடங்கணும்!

எல்லா இடங்களிலும் அலறுகிற மாதிரி ஒரு பாட்டை அழைப்புமணியா வச்சுக்கக்கூடாது. குறிப்பா மருத்துவமனைக்குள்ள அமைதியா இருக்கும்போது திடீர்னு ‘அடிடா அவளை..ஒதைடா அவளை’  னா கடுப்பாகும். சத்தம் வராத சைலண்ட் மோடில், வைப்ரேஷன் எனப்படும் உதறும் நிலையில் வச்சிருந்தா , அழைப்பு வருவது உங்களுக்கு மட்டும்தான் தெரியும். யாரையும் தொந்தரவு பண்ணாது.

யாராவது உங்களிடம் நேராகப் பேசிக்கிட்டிருக்கும்போது, உங்கள் போனை நோண்டிக்கொண்டிருக்கக்கூடாது. அது அவர்களுக்கு உங்களைப்பற்றிய அவநம்பிக்கையை ஏற்படுத்தும். இவர் நம்ப பேச்சை கவனிக்கலை என்று எண்ணவைக்கும். நேராக ஒருவரிடம் பேசும்போது, போனை பையில் வைத்துக்கொள்வதுதான் நலம்.

காலர் ட்யூன் எனப்படும், உங்களை அழைத்தால் , அழைப்பவருக்குக் கேட்கும் பாடல் வைப்பது ஒரு சிறந்த பண்பாகப் பார்க்கப்படுறதில்லை! நீங்க உங்களுக்குப்பிடித்த பாடலை வைக்கிறீங்க!  ஆனால் கேட்பது எதிராளி! இது , தனக்குப்பிடித்த உணவை, அடுத்தவர் வாயில் திணிப்பதற்குச்சமம்தான். அப்படியே அது நல்ல பாட்டா இருந்தாலும், அதை யாராலும் முழுசா கேட்கமுடியாது! டயலர் ட்யூன்ங்கிறது செல்பேசி நிறுவனங்கள் நம்மகிட்ட  காசு பிடுங்க ஏற்படுத்திய யுக்தி!

ஒருவரை நீங்க அழைக்கிறீங்க! அவர்கள் உங்கள் அழைப்பை எடுக்காம கட் செய்யுறாங்க! அவுங்களுக்கு நம்ப மேல் ஏதாவது கோபமா இருக்குமோ? வேற எதாவது பிரச்னையோ? என்று மனசைப்போட்டு உழட்டிக்கிட்டு மீண்டும் மீண்டும் அவர்களுக்கு போன் செஞ்சுக்கிட்டே இருந்தா, அதுதான் மிகப்பெரிய எரிச்சலூட்டும் விஷயம். ஒருவர் உங்கள் அழைப்பை நிராகரிச்சா, ஒரு குறிப்பிட்ட காலகட்டத்துக்கு அவருக்கு அழைக்காமல் இருக்கலாம். அல்லது நீங்கள் ப்ரீயா இருக்கும்போது அழைக்கவும் என்று குறுஞ்செய்தி அனுப்பலாம். அதுதான் நல்ல பழக்கம்!

மிகப்பெரிய, பிரபலமான மனிதர்களின் தொடர்பு கிடைச்சா, அவர்களின் எண்களை வைத்துக்கொண்டிருக்கும்போது கவனம் அதிகம் வேணும். நாம் சும்மா இருக்கும்போது அவரை அழைச்சு எரிச்சலூட்டக்கூடாது. அப்புறம்..எப்படி இருக்கீங்க? சும்மாதான் கூப்பிட்டேன் என்று சொதப்பக்கூடாது. ஏதாவது தகவல் இருந்தால் மட்டுமே கூப்பிடணும். அவர் வேலையில் இருக்கார் என்று தெரிஞ்சால் அதற்கேற்றார்போல் பேச்சை கட் செய்யனும். அதுதான் உண்மையிலேயே அவர்களது நட்பை பலப்படுத்தும்.

முக்கியமானவர்களுக்கு அழைப்பதற்குமுன்னால், அவர்களை அழைக்கலாமா னு ஒரு குறுஞ்செய்து அனுப்பிட்டு காத்திருந்தால், உங்கள் இந்த நல்ல செயலுக்காகவே அவரே உடனடியா உஙகளைக்கூப்பிட்டு பேசிடுவார்!

நாம் முக்கிய வேலையில் இருக்கும்போதும், வாகனம் ஓட்டிக்கிட்டிருக்கும்போதும் யார் அழைத்தாலும் எடுக்காதீங்க! பிறகு அழைத்த நபர்களுக்கு கூப்பிட்டு பேசுங்க! அதேபோல், மிஸ்டு கால் விடுவது ஒரு மிகப்பெரிய தவறு!

ஒரு செல்போன் பேச்சு வாக்குவாதமா மாறும்போது, நீங்க இருக்கும் இடத்தை கவனிச்சுப்பாத்துக்குங்க! ரயில்வே ஸ்டேஷனில் இருந்து பேசிக்கிட்டு குடும்ப விவகாரங்களை சத்தமா பேசுறது, கேக்குறவங்களுக்கு சுவாரஸ்யமான கிசுகிசு அல்லது உங்களைப்பற்றின அபிப்பிராயத்தை ஏற்படுத்தும் முயற்சியா மாறிடும்.

அதேமாதிரி, ‘அந்த பச்சை பீரோவில் மேல்தட்டுல நகையெல்லாம் வச்சிருக்கல்ல,! அங்கதான் இந்த ப்ரீமியம் ஸ்லிப்பும் வச்சிருக்கேன்.!

நாளைக்கு மத்தியானம் குடும்பத்தோட ஊருக்குப்போறேன் மாப்ள! வரதுக்கு நாலு நாளாகும்! வந்தவுடனே பேசலாம்’னு பொது இடங்கள்ல பேசறது, திருடுறவங்களுக்கு செலவில்லாம நீங்க கொடுக்குற க்ளூ!

இத்தனைக்கும் மேல, செல்பேசியில் பதிஞ்சு வச்சிருக்கும் எல்லா எண்களையும் ஒரு நோட்டில் எழுதிவைக்கலாம். கம்ப்யூட்டரில் போனை இணைச்சு எண்களை ஏத்தி வச்சுக்கலாம். இது இரண்டில் எது செய்யாமல் விட்டாலும், செல்பேசி தொலைஞ்சு போனாலோ, பழுதா போனாலோ மொத்தமா எல்லா எண்களையும் இழந்துட்டு அம்போன்னு நிக்கவேண்டியதுதான்.

பொது இடங்களில் கேமரா செல்லில் படங்கள் எடுப்பதை தவிர்க்கணும். இதனால் ஏகப்பட்ட பிரச்னைகள் வர வாய்ப்புண்டு. அதேபோல், நம் வீட்டுப்பெண்களின் படங்களை செல்பேசியில் வைத்திருப்பது அவ்வளவு நல்லதில்லை. நம்ம செல்தானே என்று நினைப்போம். ப்ளூடூத் மூலமாகவும், பழுது பார்க்கும் இடத்திலும் அந்தப்படங்கள் பரவுவதற்கான சாத்தியங்கள் ஏராளம்.

ஒரு நாளில், அதிக நேரத்தை செல்பேசுவதில் செலவழிப்பதை தவிர்க்கணும். மாசத்துக்கு ஒருமுறை ஒருநாள் முழுக்க, செல்பேசி பயன்படுத்தாம இருக்கலாம்.

ஒருவரிடம் பேசுறதுக்கு முன்னால், என்னென்ன பேசப்ப்போறோம்னு குறிப்பெடுத்துவச்சுக்கலாம். அதுமட்டும் பேசிட்டு முடிச்சுக்கலாம். இது உங்கள் நேரத்தையும், அடுத்தவுங்க நேரத்தையும் சேமிக்கும். குறிப்பிட்ட இடங்களில் போன் வந்தாலும் எடுக்காமல் இருப்பதுதான் நல்லது. கோவில்கள், மேடைகள், மருத்துவமனைகள், பள்ளிகள் ,கல்லூரிகள் இங்கெல்லாம் செல்போனை தேவையில்லாமல் பயன்படுத்தவே கூடாது.
நண்பர்களிடம் வெட்டிப்பேச்சு பேச , உங்கள் இருவருக்கும் உகந்த நேரத்தை தேர்ந்தெடுத்து பேசுறதுதான் அந்த வெட்டிப்பேச்சைக்கூட சுவையா வச்சிருக்கும். 

செல்பேசிங்கிற ஒரு அற்புதமான கருவியை நல்லபடியா பயன்படுத்தினா, வாழ்நாள் முழுக்க நட்பு , உறவுகளை தொலைக்காமல் பேசலாம்! அதுக்குள்ளயே தொலையாமலும் பேசலாம்.!


LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...