இந்த
மாதத் தொடக்கத்தில், விருதுநகர் செல்லவேண்டிய வேலை இருந்தது. உடனடிப்பயணம் என்பதால்,
எந்த முன்பதிவும் செய்யவில்லை. அப்படியே கிளம்பி கோயம்பேடு சென்று மதுரை செல்லும் பேருந்தில்
சென்றுவிடலாம் என்று திட்டமிட்டேன். அதன்படி கோயம்பேடு சென்றால், அங்கு போக்குவரத்தை திருப்பி விட்டிருந்தார்கள்.
பேருந்து நிலையத்தின் உள்ளிருந்து , பிரதான வாசலை நோக்கி, எல்லா ஊர்களுக்குமான பேருந்துகளும்
வந்துகொண்டிருந்தன. வரிசையாக, திருச்சி, சிதம்பரம் என்று படித்துக்கொண்டே வந்தபோது,
மதுரை என்று போட்டு ஒரு ULTRA DELUXE பேருந்து நகர்ந்து வந்துகொண்டிருந்தது.
உடனடியாகக் கை காட்டி, மதுரைக்கு இருக்கை இருக்குமா?
என்று கேட்டேன். முன்னால் அமர்ந்திருந்த நடத்துனர்,
ஒரு சீட்தான் இருக்கு! ஏறுங்க என்றார்…
உடனே
ஏறினேன். வண்டி நகர ஆரம்பித்தது. நான் உள்ளே செல்வதற்குள் , நடத்துனர் என்னை அழைத்து,
’மதுரைக்கு 400 ரூபாய் ஆகும்’ என்றார்.
பேருந்து
கட்டண உயர்வுக்குப்பிறகு இவ்வளவு ஆகிவிட்டதா? என்ற அதிர்ச்சியில்…
’அவ்வளவா?
அடேயப்பா!’ என்றேன்.
’இல்லை..டிக்கட் + முன்பதிவுக்கட்டணம் 350 ரூபாய் வரும். அப்புறம் 50 ரூபாய் எங்களுக்கு?’ என்றார்.
எனக்குச்
சுரீரென்றது.
’என்னது?
எதுக்கு நான் உங்களுக்கு 50 ரூபாய் அதிகமா குடுக்கணும்?’
’400 ரூபாய் கொடுக்கிறதா இருந்தா உள்ள போங்க! இல்லைன்னா எறங்குங்க! அண்ணே! வண்டியை நிறுத்து…!’ என்றார்.
நானும்
சிரித்துக்கொண்டே..
’ஆமாம்.அண்ணே!வண்டியை நிறுத்துங்க! அவர் மேலதிகாரிக்கு போனைப்போட்டு விபரத்தைப் பேசிட்டு கிளம்புவோம்.’என்றேன்.
கொஞ்சம்
அதிர்ந்தார். ஆனாலும்.. அவர் ’இதெல்லாம் பேசாதீங்க! குடுக்க முடியலைன்னா கீழ எறங்குங்க!’ என்றார்.
’ஹாஹா..நான் இப்போ காலியா இருக்குற சீட்டில் போய் உட்காருவேன். டிக்கெட் காசு மட்டும்தான்
தருவேன்’ என்றேன்.
’அதெல்லாம்
ஒத்துவராது. நான் சொல்லாம எப்படி நீங்க எப்படி உட்கார முடியும்? அடாவடி பண்றீங்களா? உங்களையெல்லாம் போலிஸில்
சொன்னால்தான்…’.என்று எழுந்தார்.
நான்
அவரை மதிக்காமல், உள்ளே சென்று காலியாய் இருந்த 7ம் எண் இருக்கையில் அமர்ந்தேன். பின்னாலேயே
ஆவேசமாக வந்த அவர்!
’ஹலோ..வண்டில
சீட் இல்லை! இது வி.ஐ.பி .சீட் ..நீங்க எறங்குங்க !’ என்றார்.
’அதெப்படி?
உள்ளே ஆளை ஏத்தும்போது மட்டும் இது வி.ஐ.பி சீட்டுன்னு தெரியலையா? அப்படியே இருந்தாலும்…நான்
வி.ஐ.பிதான் அதுவாவது தெரியுமா? இல்லைன்னா…மினிஸ்டரை விட்டு உங்களுக்குப் பேசச்சொல்லவா?
அப்புறம்..ஏதோ போலீஸ்…ன்னீங்களே…நீங்க கூட்டிக்கிட்டுப் போகவேண்டாம்.. நான் உங்களை
கூட்டிக்கிட்டுப் போறேன். இப்ப்வே சொல்றேன். டிக்கட்டுக்கு மேல காசு கேட்டு என்னை பஸ்ல
இருந்து இறக்கிவிடறேன்னு மிரட்டுறாருன்னு சொல்றேன்’ என்றேன்.
’அதெல்லாம்
தெரியாது நீங்க எறங்குங்க’ என்றார்..
இப்போது
நான் சிரிக்க ஆரம்பித்தேன்.
’சார்..! நீங்க இப்ப என்கிட்ட வலுவா மாட்டிக்கிட்டீங்க! டிக்கெட் காசை விட அதிகமா கேட்டது லஞ்சம்.! நான் இப்பவே உங்க SETC விஜிலென்ஸ் கமிஷ்னருக்கு போனைப் போடப்போறேன். நீங்க முடிஞ்சதைச்
செஞ்சுக்குங்க! அனேகமா இதுதான் உங்களுக்கு கடைசி வேலை நாளாக இருக்கும்’ என்று சொல்லிவிட்டு
என் போனில் எண்ணைத் தேட ஆரம்பித்தேன்.
அதற்குள்
அவர்..
’சார்..அது
ரிஸர்வேஷன் சீட்டு சார்.. ஆள் ஏறலைன்னா நீங்க உக்காந்துக்குங்க’ என்று கொஞ்சம் இறங்குவதுபோல்
பேசினார்.
’அதெப்படி..ரிஸர்வேஷன்
சீட்டுன்னு ஏறும்போது தெரியாதா? ஓஹோ..400 ரூபாய் எவன் குடுக்குறானோ அவன்தான் ரிஸர்வ்
செஞ்சவன்…அவன் தான் வி.ஐ.பியும் கூட…!’ என்று கத்த ஆரம்பித்தேன்.
‘சரி.உக்காருங்க!’என்று கோபமாக என்னை முறைத்துவிட்டு, தன் இருக்கையில் போய் அமர்ந்துகொண்டார்.
உடனே
நண்பர் கேபிள் சங்கருக்கு அழைத்துப் பேசினேன். நடந்த சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டேன்.
பேருந்து
போய்க்கொண்டே இருந்தது. செங்கல்பட்டு தாண்டும்போது, என் அருகில் வந்தார். ஒரு டிக்கெட்டை
எடுத்துக்கொடுத்தார்.
அதை
வாங்கிப் பார்த்தேன். ரூபாய். 325 என்று போட்டிருந்தது.
இது
இன்ப அதிர்ச்சி.! .நடத்துநர் என்னிடம் 50ரூபாய் அதிகம் என்று சொன்னதும் பொய்..! நிமிர்ந்து
அவரைப்பார்த்தேன் அவசரத்துக்கு ஏறும் பயணியிடமிருந்து 75 ரூபாய் கறக்க முயற்சிக்கும்..ரத்தக்காட்டேரியாக
எனக்குத் தெரிந்தார். இதில் கொடுமை என்னவென்றால்..சபரிமலைக்கு மாலை வேறு போட்டிருந்தார்.
சிரித்துக்கொண்டே,
பணத்தை எடுத்துக்கொடுத்தேன். அப்போது சொன்னேன்.
’எப்புடி?
வருஷம் முழுக்க இப்படி கொள்ளையடிக்கிற பாவத்தைக் கழுவத்தான் சபரிமலைக்குப் போறதா?’
பதிலே
இல்லை!
இடையில்
வண்டி ஓரிடத்தில் நின்றபோது… என்னருகில் வந்து நடத்துநர் கேட்டார்..
‘சார்…எந்த டிப்பார்ட்மெண்ட்டு?’
‘ம்…பப்ளிக்
டிப்பார்ட்மெண்ட்!’
’இல்லை
சார்..! இந்த சம்பவத்தை பெரிசு பண்ணிடாதீங்க ! இனிமே இப்படி நடக்காது!’
’இன்னிக்குத்தானேங்க
உங்களுக்கெல்லாம் சம்பளம் அதிகமாக்கி முதல்வர் அறிவிச்சிருக்காங்க! (அன்றுதான் போக்குவரத்து
ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு பற்றிய செய்தி படித்திருந்தேன்.)அதுவே எங்க காசை அடிச்சுப்பிடுங்கித்தானே
கொடுக்குறாங்க..அப்புறம் என்ன மறுபடியும் ஸ்பெஷலா நீங்க வேற அடிச்சுப்பிடுங்குறீங்க?’ என்று சொல்லிவிட்டு…அவ்விடத்தை விட்டு நகர்ந்தேன்.
இதில்
மிகப்பெரிய அவலம்.. அந்தப் பேருந்தில் என்னுடன் பயணம் செய்த மற்ற 35 பேரும் நடந்த
அனைத்தையும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, வாயை மூடிக்கொண்டு இருந்ததுதான்!
ஒன்றுமட்டும்
நிச்சயம்!
தட்டிக்கேட்க
வக்கில்லாத சமூகம் நாசமாய்த்தான் போகும்!
ஆனால்..தட்டிக்கேட்டால்….எல்லாமே
கிடைக்கும்!
ஆம்..கேட்டால்.. கிடைக்கும்!