தெய்வத் தொழிலாளி !
அது ஒரு 55 கிலோமீட்டர் மோட்டார் சைக்கிள் பயணம். இரவு மணி 12:40 க்கு கிளம்பினேன். அதுவரை இரவு உணவு சாப்பிடவில்லை. சரி வழியில் ஏதாவது ஒரு ரோட்டோர ஹோட்டலில் சாப்பிட்டுக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டே பயணிக்க ஆரம்பித்தேன். காதில் 'முகுந்தா முகுந்தா....' வுடன் சென்று கொண்டிருக்கும்போது, மூன்று உணவு விடுதிகள் 3 கிலோமீட்டர் இடைவெளியில் கண்ணில் பட்டன. ஏனோ மனம் அதை நிராகரித்தது. பயணம் தொடர்ந்தது. முகத்தில் மோதிய வழிதவறிய வண்டொன்று கன்னத்தில் பளார் என்று அறைந்த அனுபவத்தைக்கொடுக்க, அதிர்ந்துபோய் நின்றபோது வலது பக்கம் அந்த உணவு விடுதி தெரிந்தது. வாசலில், அடுப்பு தட்டுமுட்டுச்சாமான்களுடன் களேபரமாக இருந்தது. இடது பக்கம் டீ போடும் முஸ்தீபுகளுடன் ஒரு இடம். உள்ளே நுழைந்தேன். வண்டு அடித்த வலியை ஜீரணிப்பதற்காகவும், வயிற்றில் ஏற்பட்ட பசியை ஜீரணிப்பதற்காகவும்.! 'என்ன சார் சாப்பிடுறீங்க?' கேட்டவருக்கு 45 வயதிருக்கும். வளமாக இருந்தார். 'என்ன இருக்கு?' 'புரோட்டா, தோசை அய்ட்டங்கள் இருக்கு சார்!' '2 புரோட்டா போடுங்க! ஒரு ஊத்தப்பம்!' சரி சார்.! 'முதலாளி ! தோசைமாவு ...