சென்னையில் பள்ளிகள்
தேர்வுகளை முடித்து, விடுமுறை விட ஆரம்பித்துவிட்டன. ஆனால், பெற்றோர்களுக்கு மிகப்பெரிய
தேர்வுகள் நடந்தேறிக்கொண்டிருக்கிறது.
ஒவ்வொரு சீசனிலும்,
ஒவ்வொரு செயலில் நாம் அதிகம் ஈடுபடவேண்டியிருக்கிறது. அதுவும், பிள்ளையை பள்ளிக்கூடத்தில்
சேர்ப்பது என்பது ஒரு பேயடித்தல்தான்..!!
தங்கள் வீட்டுக்
குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முனைப்புடன், யாருடனாவது பேசிக்கொண்டோ, சிந்தித்துக்கொண்டோ,
மண்டை காய்ந்துகொண்டோ செல்லும் தந்தைகளை, தாய்களை அல்லது தம்பதிகளை சாலைப்பயணங்களில்,
அலுவலக வளாகங்களில், வணிகக் கூடங்களில் இந்தக்காலகட்டத்தில் எல்லோரும் சந்திக்கலாம்.
அது நாமாகக்கூட இருக்கலாம்.
ஏன் இவ்வளவு பீடிகை
என்று கேட்பதற்கு முன்னால்…நிற்க!
உங்கள் நினைப்பு
சரிதான். எங்கள் வீட்டின் குட்டிப்பெண்ணை பள்ளியில் சேர்க்கும் நிலை வந்துவிட்டது. அவள் பள்ளி செல்ல அழுவதற்கு முன்னால், நம்மை அழுக அடிக்கிறார்கள்.
ஒரு தனியார் பள்ளியில்,
அதுவும், அவள் அண்ணன் படிக்கும் பள்ளியிலேயே சேர்க்கும் ஆவலில்… நவம்பரிலிருந்தே நடையாய்
நடந்து, விண்ணப்பம் வாங்க ஒரு டோக்கன் கொடுத்தார்கள். அதை வைத்துக்கொண்டு அவர்கள் சொன்ன
தேதியில் ஜனவரியில் ஒரு புதன்கிழமை சாலை வரை நின்ற வரிசையில் தேவுடு காக்கவேண்டியிருந்தது.
அப்போது நம்மை நான்காவது கூட படித்திராத செக்யூரிட்டி…’இப்டிக்கா நில்லு சார்! அப்டீக்கா
நில்லு சார்..! பட்ச்சவங்கதானே நீயி..! என்று வரிசையில் நிற்பவர்களை சரமாரியாகத்திட்டி
நம் கல்விச்சான்றிதழ்களை வாயாலேயே கிழித்தெறிந்தார். சரி.. வேதாள உலகத்துக்குள் போக
இது ஒரு கட்டம் போலிருக்கிறது என்று பொறுத்துக்கொண்டு, உள்ளே சென்றால்.. அன்று விண்ணப்ப
நேரம் முடிந்தது என்று சொல்ல ‘ கேட்டால் கிடைக்கும்’ நரம்பு வேலை பார்த்தது.
கொஞ்சம் அழுத்திக் கேட்டதில். தானாக விண்ணப்பம் கை நோக்கி வந்தது. ஒரு விண்ணப்பத்துக்கு நான் கொடுத்த
தொகையை வைத்து, A4 டம்மி ஷீட்டில், இரண்டு கலர்கள் கொண்ட அப்ளிக்கேஷன்கள் 500 காப்பிகள்
அடிக்கலாம். அந்த வரிசையில் என்னைப்போன்று 600 பேர் நின்றுகொண்டிருந்தோம். ஆக, அப்ளிக்கேஷன்
காசை வைத்துத்தான் அவர்கள் அடுத்த வகுப்புக் கட்டிடம் கட்டப்போகிறார்கள் என்பது உள்ளங்கை
வெள்ளைத்தாளாகத் தெரிந்தது.
அய்யோ..அடித்தல்
திருத்தல் இல்லாம எழுதுங்க! பாத்து..பாத்து என்று விமானத்தை தரையிறக்கும் லாவகத்துடன்
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தன்னை மாங்காட்டில் அருள்பாலிக்கும் அம்மனாகவே நினைத்துக்கொண்டு
அதிகாரம் செய்துகொண்டிருந்த ஒரு அம்மாவிடம் (அந்தப்பள்ளியின் அலுவலர்) பவ்யமாக, காலில்
விழுந்தால்கூடத்தவறில்லை எனும் அளவுக்குத் தவழ்ந்து கொடுத்துவிட்டு வந்தாயிற்று.!
நம் மகன் அந்தப்பள்ளியில்
படிப்பதால், கண்டிப்பாக சீட் கிடைத்துவிடும் என்று அன்றே பாயசம் தயாராகியது.
எப்போது நேர்முகத்தேர்வுக்கு
அழைப்பார்கள் என்று தெரியாமல், தினமும் அ முதல் ஃ வரையிலும் ஆங்கில எழுத்துக்களையுமே
மூன்றுவேளையும் ஊட்டி, ஒரு கொதிநிலையிலேயே மூன்றுவாரங்களுக்கு வீடு இருந்தது.
வரும் ஞாயிறன்று
நேர்முகத்தேர்வு என்று ஒரு குறுஞ்செய்தி அந்தப் பள்ளியிலிருந்து வர, வீடே அல்லோகலப்பட்டது.
எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று ஒரு கேன் கோல்ட் வின்னர் எண்ணையை ஹாலில் கொட்டிவிட்டு
அதில் வழுக்கி விளையாடிக்கொண்டிருந்தாள் பள்ளிசெல்லவேண்டிய பைங்கிளி!
ஞாயிறும் வந்தது.
பள்ளியிலும் கூட்டம்
அலைமோதியது.
நம் குழந்தைக்கு
எங்கே நேர்முகத்தேர்வென்று நாங்கள் தேடி அலைய…அங்கிருக்கும் பள்ளி ஊழியர்கள் ஒருவருக்குமே
உண்மையில் LKGக்கான நேர்முகத்தேர்வு எங்கு நடக்கிறது என்று தெரியவில்லை.
இது என்னடா சோதனை
என்று மீண்டும் விட்ட இடத்துக்கே வந்தால்.. ஓ..நீங்க எல்.கே.ஜி அட்மிஷனுக்கு வந்தீர்களா?
அது போனவாரமே முடிஞ்சுபோச்சே என்று சொல்லி…சாவதானமாக ஒரு லிட்டில்பாயை ஹிரோஷிமா மீது
போட்டதுபோல் போட்டுவிட்டு அந்த ஆசிரியை சென்றுவிட்டார். ஜப்பானைவிட மோசமான நிலையில்
நாங்கள் காட்சியளித்தோம்.
அப்போதும் மனம்
தளராமல், நான் பள்ளி முதல்வரை பார்க்கவேண்டும் என்று அடம்பிடித்து, சந்தித்தால், அந்த
அம்மா வீராவேசமாக..
சார். 3000 பிள்ளைங்க படிக்கிறாங்க.. ஆனா..மொத்தமே 40 பிள்ளைங்கதான் டி.ஸிக்கு எழுதிக் கொடுத்திருக்காங்க.. வேக்கன்ஸியே இல்லை.. ! உங்க
பையன் இங்க படிக்கிறாங்கிறதுக்காக எல்லாம் நான் க்ளாஸ்ரூம் கட்டமுடியாது என்று ‘ உங்களுக்கு
சீட் இல்லை’ என்பதை வெவ்வேறு காரணச்செங்கல்களால் அடுக்கினார்.
என் புத்திக்கு
அந்தச்சூழலில்.. வடிவேலு சொல்லும் ‘ எலவு காத்த கிளி கதையில்..அந்தக் கருப்பு வேற..இந்தக்கருப்பு
வேற..எனும் டயலாக் ஞாபகம் வந்தது.. இடுக்கண்ணில் நகைத்தும் தொலைத்தேன்.
அப்புறம் ஆரம்பித்தது பிரச்னை …..
ரெண்டு நாள் கழிச்சு
சொல்றேனே….!