Thursday, October 30, 2008

VANTAGE POINT - பாத்ததும் பத்திக்கிச்சு!

பார்த்ததிலிருந்து பிரமித்துப்போய் உட்கார்ந்திருக்கிறேன். என்னடாது இங்க நாம எவ்வளவு ரூம் போட்டு யோசிச்சாலும் இந்தமாதிரி ஒரு திரைக்கதையை உருவாக்கமுடியலியேன்னு!

அடடா!

ஒரு குண்டுவெடிப்பும், கடத்தலும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளைக்கண்டுபிடிப்பதும்தான் கதை! 

அமெரிக்க அதிபர், உலக தீவிரவாத எதிர்ப்பு உரை நிகழ்த்த ஸ்பெயினுக்கு வரார்.
அங்க அவரை கொல்ல முயற்சி நடக்குது..! பின்னர் ஒரு பெரிய குண்டுவெடிப்பும் நடந்து பல பேர் இறந்து போயிடறாங்க! அதை துப்பறிஞ்சு இதுக்குப்பின்னணி என்னங்கிறதை ஒரு அமெரிக்க உளவாளி கண்டுபிடிக்கிறதுதான் முழுக்கதையும்! 
அதை சொல்லும் விதத்தை சினிமால ட்ரீட்மெண்ட்டுன்னு சொல்லுவாங்க..! அதில்தான் இவர்கள் பூந்து விளையாடி இருக்காங்க!

 ஒரு பொதுப்பார்வையிலும் சொல்லாம, ஒரு தனிமனிதப்பார்வையிலும் சொல்லாம, அகிரா குரோசோவாவோட ரோஷமான் மாதிரியும் 
சொல்லாம, நம்ம விருமாண்டி மாதிரியும் சொல்லாம, 8 வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வித்யாசமாகச் சொல்லியிருக்காங்க!

ஒரே விஷயத்தை 8 பேரும் சொல்லியிருந்தா போரடிச்சிடும். ஒருத்தர் பார்வையிலேருந்து சொல்லி, அவர் விட்ட எடத்துலேருந்து ஆரம்பிச்சு 
இன்னொருத்தர் அவர் பார்வையில சொல்ல ஆரம்பிக்கிறார். 

முதலில், ஒரு டெலிவிஷன் நிறுவனம் ஸ்பெயினுக்கு அமெரிக்க அதிபர் வரும் அந்த பிரம்மாண்டமான நிகழ்ச்சியை நேரடி ஒளிபரப்பு செய்ய வருது! 
அதில் வேலைபாக்கும் ஒரு நிருபரா Zoe Saldana வராங்க! அவுங்க நிகழ்ச்சியை வர்ணிச்சுக்கிட்டு இருக்கும்போதே அதிபரை சுடும் முயற்சியில் மேடை சரிஞ்சு விழுந்து அவரை காப்பாற்றப்படுறாரு! அதைப்பத்தி இவுங்க வர்ணிச்சுக்கிட்டிருக்கும்போதே, பெரிய குண்டு வெடிச்சு அவுங்க இறந்துடுறாங்க! 
அந்த டெலிவிஷன் ஒளிபரப்பு வேனுக்குள்ள , நுழையுறாரு சிறப்பு ரகசிய அதிகாரி Dennis Quaid !

அவர் அந்த நிகழ்ச்சியை திரும்பத்திரும்ப போட்டுப்பாத்து ஒரு ஆளை சந்தேக வட்டத்துக்குள் கொண்டுவரும்போது, கதை அவர் பார்வையில் விரிய ஆரம்பிக்குது! காலைல அவர் எழுந்திருந்ததிலிருந்து என்னன்ன நடந்ததுன்னு காட்டி அந்த குண்டு வெடிக்கும்போது அவர் நிலை என்னன்னு புரியவச்சு, அடுத்த ஆளை நோக்கி கதை பயணிக்குது!
 
தப்பிச்சு ஓடும் ஒரு ஆளை இவரும் துரத்தி ஓட, அவன் பார்வையில் கதை தொடருது! அவன் எப்படி அந்தக்கூட்டத்துக்குள் வந்தான் என்னன்ன செஞ்சான், அவன் காதலிக்கும் அவனுக்கும் நடந்த சம்பாஷணைகள்னு தொடர்ந்து, அவன் காதலி ஒரு பையை அந்தக்கூட்டத்தின் ஓரத்தில் ஒரு இடத்தி வீசிட்டுப்போறவரைக்கும் அவன் பார்வையில் ஓடும் கதை,
 
காதலி பார்வையில் தொடர்ந்து அவளது நிலையை எடுத்துக்காட்டி அந்த நேரத்தில் , விழாவுக்கு வந்ததையும், அதிபர் பேசுவதையும் வீடியோ எடுத்து தன் குடும்பத்தாரிடம் போட்டுக்காட்டுறதுக்காக வளைச்சு வளைச்சு வீடியோ எடுக்கும் Forest Whitaker பார்வைக்கு மாத்திவுட்டுறாங்க!

இப்ப கதையை இவர் எடுத்துக்கிட்டு போறாரு! இவர் போலீஸிடம் அந்த வீடியோவை போட்டுக்காட்ட அதில் இருக்கும் க்ளூக்களை வச்சு நம்ம ஹீரோ ஒரு பாதையில் பயணிக்க ஆரம்பிக்க, இவரும் இவர் பங்குக்கு சில விஷயங்களைச்செய்ய, ரோட்டைக்கடக்கும் ஒரு குழந்தையைக்காப்பாற்ற இவர் தாவ, 

தப்பிச்சு ஓடும் தீவிரவாதிகளின் பார்வையில் என்னன்ன நடந்ததுன்னு காட்டி ,ரோட்டைக்கிராஸ் பண்ணும் குழந்தை எதிரில் வர, அதை மோதும் நிலையில் வரும் காரில் இவர்கள் இருக்கன்னு கதை அடுத்த ஆள் கையில் போய், ஒவ்வொருவரின் பார்வையிலேயும்  வந்து கடைசியில் ஒரு கார் துரத்தலுக்குப்பிறகு, சாகவேண்டியவர்கள் செத்து, வாழ வேண்டியவர்கள் வாழ்ந்து சுபம்!


எல்லாருமே நல்லா நடிச்சிருக்காங்க! ஒரு நிகழ்ச்சியை வேடிக்கை பாக்கவந்த ஒரு சாமான்ய மனிதன் மனசிலும், முகத்திலும் ஏற்படும் உணர்ச்சிகளை அப்படியே சொல்லியிருக்காரு Forest Whitaker ! ஒரு உளவாளியின் வேகத்தையும், துப்பறியும் புத்தியையும் அப்படியே பிரதிபலிச்சிருக்காரு Dennis Quaid 

அட.. ! இப்படியும் யோசிக்கலாம்னு கிழிச்சு எடுத்திருக்கார் இயக்குநர் Pete Travis
ஒரே கதையை பலர் சொல்லும் விதத்திலும், ஒரு இடத்தில் நிறுத்திட்டு, அடுத்தவர் பார்வையில் அந்தக்கதையை நகர்த்துவதிலும், எந்த இடத்தில் யார் கதையை எடுத்துக்கிட்டு போனா சுவாரஸ்யமா இருக்கும்கிறதிலும் கடுமையா ஆராய்ச்சி பண்ணியிருப்பார் போல !

நேரமிருந்தா , VANTAGE POINT - DVD கிடைச்சா கண்டிப்பா பாருங்க! சினிமாவில் என்னவெல்லாம் செய்யலாம்னு சிந்தனை விரியும்! ஒரு சாதாராண கருவோ, ஏற்கனவே தெரிஞ்ச கதையோ- எதுவா இருந்தாலும் சொல்லும் விதத்தில் பார்வையாளனை உக்கார வைக்கலாம்னு நிரூபிச்சிருக்காரு இயக்குநர் !


இது மாதிரி நம்ம ஊர் பாணில ஒரு கதை எழுதலாமுன்னு இருக்கேன். 
நம்ம பதிவுலகத்துக்காக மட்டும்! 
எப்ப வெளிவரும்னு தெரியாது...! ஆனா .....வரும்!

Monday, October 27, 2008

2008ன் தீபாவளியை.....

2008ன் தீபாவளியை
இனிதாகக்கொண்டாடினோம்.

திரையரங்குகளில்
எங்க ஊர் ரசிகர் கூட்டம் 
அம்மாவுக்கு மோர் விடினும்
கட் அவுட்டுக்கு பீர் விட்டாலும்,

சென்ற ஆண்டு
20000 புள்ளிகளில் இனித்துப்போட்ட
பங்குச்சந்தை கோலம்
8000 புள்ளிக்கோலமாய், இளித்துக்கொண்டே
சுருங்கினாலும்,

சட்டைப்பையில் பணம் கொண்டு சென்று
கைப்பையில் வாங்கியவர்,
கைப்பையில் பணம் கொண்டு சென்று
சட்டைப்பையில் தக்காளி வாங்கினாலும்,

கடன்பட்டார் நெஞ்சம் போல்
கலங்கினார் இலங்கை வேந்தன் என்று
எழுதிய சமூகம்,
கடன்பட்டால் போதும் !
தள்ளுபடி காப்பாற்றும்
என்ற தரத்துக்கு வந்தாலும்,

தமிழனுக்கு குரல் கொடுத்தால்
இறையாண்மை என்ற பெயரில்
ஆண்மைக்குறைப்பு அறுவைசிகிச்சை
நடந்தாலும்,

இருண்ட காலம் என்ற ஒன்றை
இன்றே காட்டுகிறோம் என்று
இயன்றவரை முயற்சி செய்யும்
அரசின்கீழ் இன்வர்ட்டர் போட்டு வாழ்ந்தாலும்,

2008ன் தீபாவளியை
இனிதாகக்கொண்டாடினோம்.!

இப்போதுதான் நாங்கள்
சகிப்புத்தன்மை என்ற பெயரில்
சத்தற்றுப்போய்விட்டோம்
அன்றொரு நாள் 
அக்கிரமம் செய்த
நரகாசுரனை நசுக்கித்தான்
இந்தத்திருநாளுக்கு வித்திட்டோம்!

என்றாவது ஒருநாள் 
மீண்டும் வெற்றி பெறுவோம் !
ஏனெனில்
எங்களுடன் ஹிதேந்திரனும்
ராதாகிருஷணனும் இறந்தும்,
இருந்துகொண்டுதான் இருக்கிறார்கள்!

எங்கள் மனிதநேயம்
அந்த நாளில் 
மகத்தான உலகம் காட்டும்!

Saturday, October 4, 2008

ஒரு தாமதமான அறிமுகம்வாழ்க்கையை ஜாலியா, கவனமா, மத்தவங்களுக்கு உபயோகமா வாழணும்னு நினைக்கிற ஒரு சாதா ஆளு!

வாழ்வியல் காரணங்களுக்காக கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுநீக்கல் நிறுவனம் மற்றும் ஒரு மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திக்கொண்டும்,

உள்ளத்தின் தேடல் காரணமாக திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர்,வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர், பதிவர் என ஏதாவது உருட்டிக்கொண்டும்,

சமூக அக்கறை காரணமாக பல்வேறு சமூகத்தொண்டுகளில் ஆட்படுத்திக்கொண்டும், நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், வியாபாரிகளின் அநியாயங்களைத்தட்டிக்கேட்கவும் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலப்பொறுப்பில் இருந்துகொண்டும் 

எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும்
என் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் !

Wednesday, October 1, 2008

அவனைக் கடந்த சவீதாக்கள்
சவீதா  - 1


அவன்...
மிகச்சரியான
வயதில்
அந்த இணைய நிலையத்தை
நடத்தும்
நண்பருக்கு உதவ
தினசரி செல்ல ,
அங்கு வந்த அவளுக்கு
மின்னஞ்சல் பார்ப்பதற்கு
இவனும் அன்பாய் 
உதவப்போக
மின்னஞ்சலுடன் சேர்த்து
அவனையும் பார்க்க
ஆரம்பித்தாள் அவள்!


ஒருநாள் பேச ஆரம்பித்தார்கள்!
தன் தந்தையின் மறுமணமும்
தாயாரின் சிரமங்களும்
தனக்குள் ஒரு வெறியை
தாமாக ஊட்டியதை
கவலையுடன் சொன்னாள் அவள்!
அவளது லட்சியமே
மாவட்ட ஆட்சித்தலைவியாய்
மதிப்பாக வலம்வருவதுதான்!
அதற்கான முயற்சிகள்தான்
இணையம் தேடும் காரணமும்.!

அவனுக்கு அவளைவிட
அவளது லட்சியத்தைப்பிடித்துவிட்டது.
வாழ்வில் அனைத்து சுகமிருந்தும்
சோம்பித்திரிபவர் மத்தியிலே
காப்பாற்ற மனிதரின்றி
கவலைகொண்ட குடும்பத்திலே
கலெக்டராகவேண்டுமென்ற
கனவுகாணும் இவளை
காதலித்தால் என்னவென்று
மனதுக்குள் நினைத்துவைத்தான்.

அவளுக்கும் இவன்மேல்
ஒருவித அபிமானம் 
இயல்பாக வந்ததால்
அவனைவிட்டு தனக்கு
பாடங்கள் சொல்லித்தர
பணிவாகக்கேட்டுக்கொண்டாள்
இவளது லட்சியத்தை
இமயமாய் ரசித்தவனுக்கு
அதற்கான உதவி செய்ய
வாய்ப்பொன்று கிடைத்ததானால்
பூரித்துப் பொங்கிப்போனான்.

இவனது பாடத்தையும்
இவனையும் சேர்த்து
கவனித்த அவளுக்கு
இவன்கொண்ட காதலும் புரிந்தே போனது.
அவளுக்குள்ளும் அவ்வெண்ணம்
அகண்டு போய் நின்றதனால்
அவளாகக் கேட்டுவிட்டாள்.
'என்னைத்திருமணம் செய்துகொள்வாயா?'

'இதற்குத்தானடீ இத்தனை நாளாய்க்
காத்திருந்தேன் என்றுதான் பதில் சொன்னான்.
அன்பும் அக்கறையும் 
அழகாகக் கலந்துவைத்து
ஆழமாகக்காதலித்தார்கள்.
அவள் பேசினாள்.
அவன் பேசினான்.
அவர்கள் பேசினார்கள்
காதல் பேசியது.

கொஞ்சம் அதிக நேரம் பேசினாலும்
அவனுக்குள் அலாரம் அடித்து
அவளைப்போய் படிக்கச்சொல்வான்.

அந்த ஆண்டின் முதன்மைத்தேர்வில்
அவளுக்குக்கிடைத்தது தோல்வி!
அதற்கான அடிப்படைக்காரணம்
அவனுக்குத்தெரிந்தது அப்பட்டமாய்!
இவர்களது காதலால் அவள் 
செலவழித்த நேரம்..!

அவளிடம் தெளிவாகச்சொன்னான்.
உனக்கு முக்கியம் உன் லட்சியம்
என்னிடம் பேச வாழ்க்கையே உள்ளது.
தொலைபேசலை குறைத்துக்கொள்வோம்.
என்னைக்கூட விட்டுவிடு
குறிக்கோளை எட்டிவிடு! 
சொன்னால் அவள் கேட்கவில்லை!
தொல்லை தர ஆரம்பித்தாள்.
எந்தப்படிப்பை நேசித்தாளோ
அதனை வெறுக்கத்தொடங்கிவிட்டாள்
அவனுக்கோ காதல்மீது
பயமே வந்து சென்றது!
அவளுடைய அழைப்புகளை
நிராகரிக்க ஆரம்பித்தான்.!

அவளுக்குக்கோபம் அதிகமாக வந்தது.
நான் என்ன அலைகிறேனா?
என் லட்சியம் பற்றி எனக்குத்தெரியும்!
உன் லட்சியம் புரிந்துவிட்டது.
என்னை விட உனக்கு
என் பதவிதான் கண்!
அதனால்தான் நீ 
அதை அடையத் தூண்டுகிறாய்!

என்றெல்லாம் ஏளனமாய்
எடுத்தெரிந்து பேசிவிட்டு
இனிமே உன் சகவாசம்
எனக்குத்தேவையில்லை!
என்னால் உலகம் மெச்ச
உயர்வாக வரமுடியும்.
அந்த நாளில் உனக்கு
அவமானங்கள் தருகிறேன்.
என்று சொல்லி ஆத்திரமாய்
அவனைவிட்டுச்சென்றுவிட்டாள்.

அந்தக்காதலுக்கு
அன்று அஸ்தமன தினம்!
ஆனால் ஆச்சர்யம்
அன்றுதான் காதலர் தினம்!

அவனுக்குள் அடுக்கடுக்காய்
சங்கடங்கள் தோன்றினாலும்
ஒரு பெண்ணின் 
வீழ்ச்சிக்கு நாம் காரணம் இல்லையென்று
சந்தோஷமாய் நினைத்துக்கொண்டு
வாழ்க்கை ஓட்டத்தில்
கரைந்துவிட்டான்.

என்றாவது ஒருநாள்
அவளுக்குத்தெரியவரும்!
வெற்றிபெற்ற அவளுக்கு
பின்னணியாய் இருந்துவைத்து
இடையிலே வந்தவன்
இடையிலேயே சென்றவன்
எரியும் லட்சிய வெறிக்கு
கொஞ்சம் எண்ணெய் 
ஊற்றிச்சென்றானென்று !

இன்றுவரை இருவரும்
இயல்பாக வாழ்கிறார்கள்.
அவனும் ஒரு பதவியிலே
அழகு வாழ்க்கை வாழ்கிறான்.
அவன் தன்னை ஒதுக்கினானென்று
இன்றுவரை நினைத்துக்கொண்டு
அவளும் இங்கு வாழ்கிறாள்
ஆனால் அவள் சாதித்துவிட்டாள்
நீண்ட நாள் போராட்டத்தில்
அவள் இன்று
ஆட்சித்தலைவி!

அதற்காக அவள் படும்
மகிழ்ச்சி குறைவாகும் !
அவன் மகிழ்ச்சி ஒப்பிட்டால்!
அப்பாடி!
ஒருவருக்கு 
உதவி தர இயலாவிடினும்
இடையூராய் இல்லாமல்
போனோமே என்று
இன்றுவரை மகிழ்ந்திருக்கிறான்.!

அடுத்த சவீதா அவனுக்காக
அங்கும் வந்து காத்திருக்கிறாள்!

நினைச்சதும், கிடைச்சதும்....!

நாம நினைச்ச அப்பா அம்மாவுக்கு பொறக்கலை!
கிடைச்ச அப்பா அம்மாவுக்குத்தான் பொறந்தோம்.
கிடைச்ச அப்பா அம்மாவுக்கு பொறந்ததால
நினைச்ச் பள்ளிக்கூடத்துல படிக்கலை!
கிடைச்ச பள்ளிக்கூடத்துலதான் படிச்சோம்.!
கிடைச்ச பள்ளிக்கூடத்துல படிச்சதால
நினைச்ச டீச்சர் பாடம் எடுக்கலை
கிடைச்ச டீச்சர்தான் பாடம் எடுத்தாங்க
கிடைச்ச டீச்சர் பாடம் எடுத்ததால
நினைச்ச மார்க் கிடைக்கலை
கிடைச்ச மார்க்குதான் கிடைச்சது!
கிடைச்ச மார்க் கிடைச்சதால
நினைச்ச காலேஜ்ல சேரமுடியலை!
கிடைச்ச காலேஜ்ல தான் சேர முடிஞ்சுது!
கிடைச்ச காலேஜ்ல சேந்ததால
நினைச்ச டிகிரி வாங்கமுடியலை
கிடைச்ச டிகிரிதான் கிடைச்சது
கிடைச்ச டிகிரி கிடைச்சதால
நினைச்ச வேலை கிடைக்கலை!
கிடைச்ச வேலைதான் கிடைச்சது !
கிடைச்ச வேலை கிடைச்சதால
நினைச்ச சம்பளம் கிடைக்கலை!
கிடைச்ச சம்பளம்தான் கிடைச்சது
கிடைச்ச சம்பளம் கிடைச்சதால
நினைச்ச வசதி கிடைக்கலை!
கிடைச்ச வசதிதான் கிடைச்சது
கிடைச்ச வசதி கிடைச்சதால
நினைச்ச் வாழ்க்கைத்துணை அமையலை!
கிடைச்ச வாழ்க்கைத்துணைதான் அமைஞ்சது
கிடைச்ச வாழ்க்கைத்துணை அமைஞ்சதால
நினைச்ச் பிள்ளை பிறக்கலை!
கிடைச்ச பிள்ளைதான் பிறந்தது.....!

கிடைச்ச் பிள்ளை பிறந்ததால..
அந்தப்பிள்ளைக்கு
நினைச்ச அப்பா அம்மாவா நாம இருக்கமுடியலை!
அதுனால அந்தப்பிள்ளையும்
நினைச்ச அப்பா அம்மாவுக்கு பிறக்கலை!

- அப்பாடி ஒருவழியா 
என்ன சொல்லவர்றோம்றதையே சொல்லாம 
எஸ்கேப்பாயாச்சு! :)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...