Thursday, December 31, 2009

2010ஏ வருக!

இந்த ஆண்டும்
வாழ்வை வளமையாக்கும்
இன்னொரு ஆண்டாக அமையட்டும்.

நல்ல நண்பர்கள்
நல்ல குடும்பம்
நல்ல வாசிப்பு
நல்ல படைப்பு
என எல்லாமே
நம் பதிவர்கள் அனைவருக்கும் தொடரட்டும்..

“The woods are lovely, dark and deep. But I have promises to keep, and miles to go before I sleep.”


- Robert Frost.

2 0 1 0 ஏ வருக..! உனக்கும் நிறைய வேலை இருக்கிறது!


நம்புங்க டீச்சர்!

அந்தத்தனியார் பள்ளியில் போய் 9ம் வகுப்பில் சேர்கிறார்கள் இரண்டு சிறுமிகள். முதல் நாள் ! முதல் வகுப்பு!

ஆங்கில ஆசிரியை வருகிறார்.. அனேகமாக எல்லோரும் அந்தப்பள்ளியிலேயே 8ம் வகுப்பு படித்துவிட்டு 9ம் வகுப்புக்கு வரும் மாணவிகள். புதிதாகச்சேர்ந்த சொற்ப மாணவிகளை எழுந்து அறிமுகப்படுத்திக்கொள்ளச்சொல்கிறார் ஆசிரியை ! அதில் இந்த இருவரைத்தவிர மீதமுள்ளவர்கள் எல்லோரும் முன்னர் படித்ததாக,ஒரு தனியார் பள்ளியின் பெயரைச்சொல்கிறார்கள். இவர்கள் முறை வரும்போது..எழுந்து தங்கள் பெயர் சொல்லிவிட்டு...8ம் வகுப்பு படித்தது...அரசு நடுநிலைப்பள்ளி என்று சொல்கிறார்கள்.

உடனே அந்த ஆசிரியை எகத்தாளமாக சிரிக்கிறார். கவர்மெண்ட் ஸ்கூல்ல படிச்சுட்டு வந்துட்டு...எந்த நம்பிக்கைல இந்த் ஸ்கூல்ல வந்து சேந்த? எங்க ஸ்டாண்டர்ட் என்னன்னு தெரியுமா?

இல்ல டீச்சர்..நாங்க நல்லா படிப்போம்.!

ஆமா..கிழிச்சீங்க! எங்க நான் ஒரு கேள்வி கேக்குறேன் பதில் சொல்லுங்க பாப்போம். ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம்!
ஆங்கில உயிரெழுத்துக்கள் எல்லாம் வர்ற மாதிரி ஒரு வார்த்தை சொல்லு!

EDUCATION என்று பட்டென்று பதில் வருகிறது..

ஆமா.. இது மட்டும் சொல்லிக்கொடுத்திருக்காங்க...அந்த ஸ்கூல்ல இங்கிலீஷ் டீச்சர் மட்டும் நல்லா நடத்தி இருப்பாங்க! போகப்போக பாப்போம்! ஒரு கேள்விக்கு பதில் சொல்லிட்டா புத்திசாலின்னு அர்த்தமாயிடுமா?
அமிலமாய்த்தெரிக்கின்றன வார்த்தைகள்!

அடுத்த பாட நேரம்...
இப்போது கணித ஆசிரியை..

முதலில் எல்லாம் அச்சுப்பிறழாமல்... இதே விசாரிப்புகள், இதே நக்கல்கள்...இதே சாடல்கள்..!

கணிதம் நடத்த ஆரம்பித்து....ஏதோ ஒரு வழிமுறையில் ஆசிரியை திணறி நின்று....கரும்பலகையையே முட்டிக்கொண்டு நிற்க...

அழகாக எழுந்து சென்று...டீச்சர்..என்று அருகில் சென்று அழைத்து..அவர்கள் செய்த தவறைச்சுட்டி அந்த இடத்தில் திருத்துகிறாள் அந்த அரசுப்பள்ளியிலிருந்து வந்த பெண்ணில் ஒருத்தி!

இவரும் அதையே சொல்கிறார்.... ஆமா..உங்க கவர்மெண்ட் ஸ்கூல்ல கணக்கு டீச்சர் மட்டும் ஒழுங்கா நடத்தி இருப்பாங்க!

ஏற்கனவே அரசுப்பள்ளி என்றால் மட்டம் என்பதுபோல் அனைவரும் பார்த்திருக்க...இரண்டாவது ஆசிரியையும் இவ்வாறு கூறுவதைக்கேட்ட மறுவிநாடி...அந்தப் பெண் பிள்ளைகள் இருவரும் ஓ..என அழுக ஆரம்பிக்கின்றனர்...

அன்று முழுவதும்...பல்லைக்கடித்துக்கொண்டு ஓட்டிவிட்டு...மாலை நேராக அவர்கள் சென்ற இடம்..!?

(தொடரும்)


Wednesday, December 30, 2009

கல்விக்கடன்..ஒரு பின்னூட்டமே.. பதிவாக...


கல்விக்கடன் குறித்த...என் முந்தைய பதிவுகளைப்படித்துவிட்டு..திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் பின்னூட்டமாக எழுதியிருந்த கருத்துக்களே இந்தப் பதிவாகிறது.....! ஒரு முன்னாள் வங்கியாளராக தனது கருத்துக்களை மிகச்சிறப்பாகச் சொல்லியுள்ளார். திரு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ! இடையிடையே எனது விளக்கம் மட்டும்....

ஒரு முன்னாள் வங்கியாளனாக இந்த மூன்று பதிவுகளையும் ஆர்வத்தோடு கவனித்துக் கொண்டிருந்தேன்.

முதலில், இந்த மூன்றாம் பகுதியில் இருக்கும் சில விஷயங்களைப் பற்றி....

என்ன வரையறைக்கு உட்பட்டு , கடன் கொடுக்கலாம் என்பதை யாரும் சொல்லவே இல்லை என்று சொல்லியிருப்பது சரியல்ல.

வரையறைகள் இருக்கத் தான் செய்கின்றன. ஆனால், அன்று நிதியமைச்சராக இருந்த பானா சீனா என்ன செய்தார்? கல்விக் கடன் கொடுக்க மறுக்கிறார்களா, எனக்கு ஒரு போன், தபால் கார்ட் போடுங்கள், தலையைச் சீவுகிறேன் என்ற மாதிரி மிரட்டல்கள்! கொஞ்ச நாட்களில், அதுவும் அலுத்து விட்டது.

இதைத்தான் வாய்மொழி என்று நாசூக்காகச்சொன்னேன்...! :) நீங்கள் போட்டு உடைத்துவிட்டீர்கள்.

கல்விக் கடன் என்பது ஒரு அரசியல் ஆதாயம் தேடுகிற முயற்சியாகத் தான் ஆரம்பித்தது!

அடுத்ததாக, நம்முடைய மக்களுக்கும் சரி, அரசியல்வாதிகளுக்கும் சரி, ஒரு அடிப்படை விஷயம் எப்போதுமே புரிவதில்லை.

கடன் என்பது திருப்பிச் செலுத்தவேண்டிய ஒன்று. தர்மம், இலவசம் என்பது வேறு! வங்கிகள், கடன் கொடுப்பதை, ஒரு தொழிலாகச் செய்கின்றன. அதுவும் தவிர, அப்படிக் கொடுக்கப் படும் பணம், வங்கியுடையதோ அல்லது அரசின் சொத்து ஒன்றும் இல்லை. அது வங்கிகளில் முதலீடு செய்து வைத்திருக்கும் முதலீட்டாளர்களுடையது.


ஆம்.. இதுவும் முதல்பாகத்திலேயே...தள்ளுபடி என்ற கோணத்தில் சொன்னேன்..ஆனால் உங்கள் வரிகளில் நிறைய உண்மை தெறிக்கிறது.


இந்த இடத்தில் இரண்டு விஷயங்கள் தெளிவுபடச் சொல்லப்பட வேண்டும்.

இப்படி சமூகப் பொறுப்புடன், வழங்கப்படும் கடன்களுக்கு, இந்திய அரசு, உத்தரவாதம் எதையாவது அளித்திருக்கிறதா?

இல்லை!

கடன் வாங்கும்போது ஆயிரம் கேள்விகள் கேட்டுத் துளைத்து வாங்கும் அத்தனைபேருமே, தங்களுடைய கடன் திருப்பிச் செலுத்தப்படவேண்டியது என்ற உணர்வோடும் பொறுப்போடும் இருக்கிறார்களா?

இல்லை!

ஆக, வங்கிகள் தட்டிக் கழிக்கின்றன என்ற குற்றச்சாட்டை வைப்பதற்கு முன்னால், கல்விக்கடன் என்பது, வங்கித் தொழிலின் மற்ற கடன்களைப் போலத் தானா, அல்லது அரசினால் மறைமுகமாக, எவருடைய பணத்தையோ எடுத்து, அரசியல் ஆதாயத்திற்காகச் சூறை விடப்படும் தேங்காய் தானா?

வங்கிகள் செய்வது ஒன்று வியாபாரமாக இருக்க வேண்டும் அல்லது வங்கித் தொழிலை விட்டு விட்டு அரசு நடத்தும் தர்ம சத்திரமாக இருக்க வேண்டும். இந்த ஒன்று தான் அரசினால் வரையறை செய்யப் படாமல் இருப்பது!

கல்விக் கடன் என்று மட்டுமில்லை, எந்தக் கடனாக இருந்தாலும், திருப்பிச் செலுத்தும் சக்தி கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

பொதுத்துறை வங்கிகள் பாவம்!

அப்புறம் கடைசிப்பாராவில் சொல்லியிருப்பது,அதற்கும் மாற்று இருக்கிறதே!

எண்பது சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றுப் பொருளாதார ரீதியாக அதாவது பெற்றோரின் வருமான அடிப்படையை வைத்து, கல்வி நிறுவனங்கள் குறைந்தது இருபத்தைந்து சதவீத இடங்களையாவது இலவசமாகத் தான் ஒதுக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கலாமே!

அதுவும் சரிதான்..என் கோணமே அதுதான்..! நல்லாப்படிக்கிறியா? ஏழையா? எங்கவேணும்னாலும் சேந்து படி...பணம் கட்டவேணாம்னு சொல்லும் அளவுக்கு அரசுக்கு திராணி இல்லை!

இங்கே மாற்றம் நிறைய விஷயங்களில் தேவைப்படுகிறது!

கண்டிப்பா சார்...!


கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள் - பாகம் 3கல்விக்கடன் ஏன் ?...கல்வி என்ன ஆச்சுன்னு முதல்ல இங்கயும்...அடுத்து இங்கயும் இருக்கு..

இப்ப வங்கிகள் பக்கம் வருவோம்.

ப.சிதம்பரம் நிதி அமைச்சரா இருந்தபோது, கல்விக்கடனைப்பற்றி ஒரு விழிப்புணர்வைக் கொண்டுவந்து, எல்லா தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளும், அதைக் கொடுக்கணும்னு சொல்லிக்கிட்டிருந்தாரு!

ஆனா...என்ன ஒரு பெரிய காமெடின்னா..எந்த ஒரு வங்கிக்கும் , இன்னின்ன வரையறைகளில் கல்விக்கடன் குடுக்கலாம்னு அரசாங்கம் கடைசிவரைக்கும் சொல்லவே இல்லை! எல்லாம் வாய்மொழி உத்தரவுதான்..!

அதுனால, அந்தந்த வங்கி மேனேஜர்கள் தலையில் பொறுப்பு விழுந்துச்சு! அவுங்க நினைச்சா கொடுக்கலாம். இல்லைன்னா இல்லை! அதிலயும் அடுத்த ரெண்டு வருஷங்களில் ரிட்டையராகப்போற எந்த மேனேஜரும் கல்விக்கடன்னாலே காத தூரம் ஓடினாங்க! ஏன்னா, அது அவுங்க ரிட்டையர்மெண்ட் சமயத்தில் வராக்கடன் லிஸ்டில் வந்து நின்னுரும். அதையும் மீறி குடுத்தா, நம்ம பையனோட ஏதாவது ஒரு பேப்பரில் தப்பு இருந்திருக்கும். அதை வச்சு அந்த மேனேஜரைக் குடையுவாங்க !

இதுக்கு பயந்துக்கிட்டே, கூடை வச்சிருக்கவுங்களுக்கெல்லாம் பெட்ரோமாக்ஸ் தர்றதில்லைங்கிறமாதிரி என்ன உங்க அப்பா உயரமா இருக்காரு.. நீ என்ன கண்ணாடி போட்டிருக்க...உன் வீட்டில் ஏன் ஆறு பேர் இருக்கீங்கன்னு ஏதாவது சொத்தைக் காரணம் சொல்லி தட்டிக்கழிக்க ஆரம்பிச்சாங்க! அப்ப இது வங்கி மேலாளர்கள் தப்பும் இல்லை. அந்த வங்கி அந்த லட்சணத்தில், அரசாங்கத்தோட அறிவுறுத்தலின் பேரில் சும்மா உலுலுவாங்காட்டிக்கும் கடன் கொடுக்குறமாதிரி இங்கொண்ணும் , அங்கொண்ணுமா பாவ்லா காட்டிக்கிட்டிருக்கு! அதிகாரிகளும் அதைக் கண்டுக்கிறதில்லை. உண்மையிலேயே.. இதுவரை கொடுக்கப்பட்ட கல்விக்கடன் எதிலயும் எந்த வங்கிக்கும் விருப்பமே இல்லைங்கிறது, அந்தந்த உயரதிகாரிகளோட கருத்து!

அதுக்கும்மேல ஒண்ணு இருக்கு....நம்ம கடன் வாங்குற பெருமக்கள்...சரி.. நீ படிக்கணும்னு ஆசைப்படுற..! தனியாரில்தான் சீட் கிடைக்குது...! அவுங்களுக்கு பீஸ் கட்டணும்..! அதுவும் சரி! அதுக்காகத்தான் வங்கில ரொம்ம்ம்ம்ப போராடி கடன் வாங்குற! அந்தக்கடனைக்கொண்டாந்து காலேஜுலயும் கட்டியாச்சு! அதுக்கப்புறம்.........???? இனிமே என்ன கவலை...படிக்கவேண்டியதில்லைன்னு நினைச்சுக்கிட்டு...சரியா படிக்காம...50-60% மார்க் எடுத்துட்டு, ஏதாவது ஒரு சுமாரான வேலைல ஒட்டிக்கிட்டு வாங்கின கல்விக்கடனுக்கு வாய்தா சொல்லிக்கிட்டு...அப்புறம் என்னிக்காவது ஒருநாள்.. கல்விக்கடன் வாங்கி நொடிச்சுப்போயிட்டேன். அதைத்தள்ளுபடி பண்ணனும்னு ரோட்டுக்கு வந்து போராடுவான். ஆனா அதே சமயம் அந்தக் கல்விக்கடனை நல்லபடியா பயன்படுத்தி நல்ல வேலைல சேந்து அதைக்கட்டின பையன் இளிச்சவாயனாய்டுவான். மேலும் அவன் தம்பிக்கு கல்விக்கடன் கிடைக்காம போயிடும்.

ஆக... ஒரு தீர்வு தேடிப்போகும்போது எல்லாத்தரப்பும் இறங்கி வரணும். அரசாங்கம் ஒரு வரையறை வைக்கணும். 90 சதவீதத்துக்கு மேல் மார்க் வாங்கியிருக்கியா? ஏழையா? அப்ப எந்த காலேஜ்ல வேணும்னாலும் சேந்துக்க! நான் கல்விக்கட்டணத்தை பாத்துக்குறேன். நீபாட்டுக்கும் படிங்கணும்.

அடுத்து 70-90 எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கு வட்டியில்லாக்கடன் ! அடுத்த 10 வருஷத்தில் அதை அடைக்கணும்னு எந்த நிபந்தனையும் இல்லாம குடுக்கணும். ஒரே ஒரு நிபந்தனை..அதை கண்டிப்பா தள்ளுபடி பண்ணச்சொல்லி கேக்கமாட்டேன்னு சொல்லணும்.

அடுத்து 50-60 மார்க் எடுத்து ஏழையா இருக்கியா? உனக்கும் கடன் தரேன் . ஆனா வட்டி உண்டு.. ஆனா இந்தப்படிப்பில் 90% எடுத்தா.. எல்லாமே தள்ளுபடின்னு சொல்லிப்பாருங்க ! நம்ம நினைக்கிற விஷயம் நடக்கும்..

ஆனா..என்ன ஒரு சோகம்னா...நோக்கத்தை விட்டுட்டு வேற ரூட்டைப்பிடிச்சுப்போய் எங்கயாவது முட்டிக்கிட்டு நிக்கிறதுதான் நம்ம நாட்டோட தலையெழுத்து...! கல்விக்கடன் தப்பிச்சுருமா என்ன?

Sunday, December 27, 2009

கல்விக்கடன் - கோபிநாத்- சில எண்ணங்கள் 2கல்விக்கடன் குடுக்குறதே ஒருவிதமான கடனாளியாக்கும் தன்மைன்னு முதல் பகுதில சொல்லியிருந்தேன்.


உண்மையிலேயே ஒரு மாணவன் நல்லா படிக்கிறான். அவன் குடும்பமே அவன் படிப்பால் சிறப்படையும்னு தெரியும்போது, அரசாங்கம் அவனுக்கு , இலவசக்கல்வியைத்தான் கொடுக்கணும். கடனை இல்லை. இப்படிக்கொடுக்குறதால , பெரிசா பயனடையப்போறது தனியார் கல்லூரிகள்தான்..! அல்லது.. அவனுக்கு கடன் கொடுக்கும்போதே, பீஸை குறைச்சுக்கச்சொல்லி அந்தக் கல்லூரியை வலியுறுத்தலாம். ஆனா இது ரெண்டுமே பண்ணாம, தனக்குன்னு ஒரு அளவுகோல் வச்சிக்கிட்டு கடன் கொடுத்து , மறுபடியும் மக்களை தள்ளுபடி எதிர்பாக்குறவுங்களா ஆக்குது அரசாங்கம்!


சரி...யாராவது ஒருத்தர்தான் இதுக்கு காரணம்னா.. அதுவும் சொல்ல முடியலை!

இப்ப முதல்ல...கல்வியை எடுத்துக்குவோம்.

இந்தியாவில்...அதுவும் தமிழ்நாட்டில்... தனியார் கல்லூரிகள் அதிகமாப்போச்சு! அரசுக்கல்லூரிகள் கொஞ்சமாத்தான் இருக்கு! அதுவும் பாடாவதியா இருக்கு! நான் பள்ளிப்படிப்பை முடிக்கும்போது, எனக்கு அரசு பொறியியல் கல்லூரியில் சீட் கிடைக்கலை...தனியாருக்கு போகலாம்னா, எங்க ஏரியாவில் ஒரே ஒரு தனியார் பொறியியல் கல்லூரிதான்.. அதுலயும் சீட் இல்லைன்னு நான் அரசு பாலிடெக்னிக்கில் போய் படிச்சேன். ஆனா இப்ப நிலைமை அப்படி இல்லை! எங்க ஏரியாவுலயே எட்டு தனியார் பொறியியல் கல்லூரிகள் இருக்கு! எவ்வளவு குறைவா மார்க் எடுத்திருந்தாலும், ஏதாவது ஒரு கல்லூரியில் கண்டிப்பா சீட் கிடைச்சுடும். ஆக, உயர்கல்வி இன்றைய மாணவர்களுக்கு சுலபமாயிடுச்சு!

அரசாங்கமே, எல்லாக்கல்லூரிகளையும் ஆரம்பிக்கணும்னு காத்திருக்க ஆரம்பிச்சோம்னா, பல நடுத்தரக்குடும்பங்கள்ல, இன்னும் 10 வருஷம் ஆனாலும் ஒரு இஞ்சினியரையும் பாக்க முடியாது. அரசாங்கம் செய்யாததை...தனியார் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க! ஆனா இந்த கல்லூரி நடத்துறதை தொழிலாக்கினவுங்க யாருன்னு பாத்தா.. தன்னிடம் இருக்கும் அளவுக்கு மிஞ்சின பணத்தை வெள்ளையாக்கும் முயற்சில இருக்கும் கனவான்கள்தான்! அவுங்க எந்த நோக்கத்துக்காக பண்ணியிருந்தாலும் கல்வி ன்னு ஒரு விஷயத்தை எடுத்துக்கிட்டா அது ஒரு விதத்தில் பிரமிக்கவும், பாராட்டவும் தக்க வளர்ச்சிதான். ! இப்படி நிறைய தனியார் கல்லூரிகள் இருந்ததாலதான் நிறைய IT இளைஞர்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு சர்வசாதாரணமா கொடுக்க முடியுது!

இந்தியாவிலேயே கர்நாடகாவிலும், தமிழகத்திலும்தான் தனியார் கல்லூரிகள் அதிகமா இருக்கு! அதுனால நிறைய நல்லதும் நடக்குது! எழுத்தறிவில் 100 சதவீதம்னு சொல்லிக்கிற கேரள மாநில மாணவர்கள் நிறைய பேர் தமிழ்நாட்டு தனியார் கல்லூரிகள்லதான் படிக்கிறாங்க! ஆக, தனியார் கல்லூரிகளால் கல்வியின் தரம் உயர்ந்திருக்குங்கிறதை மறுக்க முடியாது.
பல தனியார் கல்லூரிகள் தங்கள் தரத்தால், இந்த மாநிலத்துக்கே நல்ல பேரை வாங்கிக்கொடுத்திருக்கு! பல கல்லூரிகளோட பேரைச்சொன்னாலே பெரிய கம்பெனிகளின் நேர்முகத்தேர்வில் உடனே consider பண்றாங்க! சில கல்லூரிகளின் கேம்பஸ் தேர்வுகளில் எல்லா மாணவர்களுக்குமே வேலை கிடைச்சிருக்கு! அதனால், இந்தக்கல்லூரிகள் இல்லைன்னா கண்டிப்பா தமிழ்நாடு இந்த அளவுக்கு கல்வில வளந்திருக்க முடியாது.

இந்தக் கல்லூரிகளை நாடித்தான் நம்ம பசங்க படிக்க வராங்க! இந்தக் கல்லூரிகள் கேக்கும் கட்டணத்தை கட்டத்தான் பசங்க வங்கிகளை நாடுறாங்க!

ஆக்சுவலா, வங்கிகள் என்ன பண்ணுது?

மறுபடியும் தொடரும்தான்....!

Sunday, December 20, 2009

கல்விக்கடன் - கோபிநாத் - சில எண்ணங்கள்


இரு வாரங்களுக்கு முன்பு நீயா? நானா? வில், கோபிநாத் கையாண்ட விஷயம் கல்விக்கடன்.

மாணவர்கள் தரப்பு - எவ்வளவுதான் டாக்குமெண்ட் காட்டினாலும் கடன் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிட்டா தரமாட்டேங்குறாங்கன்னு பேங்க் மேனேஜர்களை குற்றம் சாட்டினாங்க!

வங்கிகள் தரப்பில் - ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமா பதில் சொல்லி , தங்கள் இயலாமையை தன்னை அறியாமல் வெளிச்சம் போட்டுக்கிட்டாங்க!

கடைசியா...ஒரு பொண்ணு தனக்கு கடன் கிடைக்காம தான் கஷ்டப்பட்டதை சொல்ல, ஒரு மேனேஜர் நான் தரேன் அந்தப்பொண்ணுக்கு லோன் - ன்னு சொன்னவுடனே எல்லோரும் உணர்ச்சிவசப்ப்டுறமாதிரி, அந்தப்பெண்ணின் கண்ணீரில் உண்மை இருந்தது. கோபியும் அந்த அளவுக்கு அதைப் பெருமையா
கொண்டுபோனார். - அவர் சொன்னது போல் - எதையுமே திட்டமிடாம, ஆனா இயல்பெல்லாம் மீறி ரொம்ப அற்புதமா அந்த நிகழ்வு இருந்தது. அதில் அந்த மேனேஜர்க்கிட்டேருந்து ஒரு வார்த்தையை கோபி வாங்கினார். அது ' ஹ்யூமன் கன்சிடரேஷன்' ! அந்த ' மனிதனை கருத்தில் எடுத்துக்குறது' ங்கிற விஷயத்தில்தான் எல்லா பேங்கும் தோத்துப்போயிடுது.. அதே சமயம் மாணவர்களும் , எல்லாருக்கும் கல்விக்கடன் தந்தே ஆகணும்கிறமாதிரி இதை நினைக்கக்கூடாதுன்னு முடிச்சார்.


இந்த கல்விக்கடன் விஷயத்தில் அதுக்கப்புறம் நான் கொஞ்சம் ஆழமா சிந்திக்கவும், அது சம்பந்தப்பட்டவர்கள்கிட்ட விசாரிச்சு, கருத்துக்கேட்கவும் ஆரம்பிச்சேன்.

முதல்ல.. நான் சிந்திச்சது.. இது கொஞ்சம் ராவா இருந்தாலும்...இதில் அந்த ஹியூமன் கன்சிடரேஷன் இருக்கிறமாதிரிப் பாத்துக்கிட்டேன்.

1. இன்னிக்கு உலக நாடுகள், இந்தியாவின் கலாசார மாற்றங்களை கவனிச்சுப்பாத்துக்கிட்டே வந்து அதுக்கேத்தமாதிரி சந்தைக்கடையை விரிக்கிறாங்க! அதில் அவுங்க கலாசார விஷயங்களையும் புகுத்துறாங்க! அதே சமயம் , நம்ம கலாசார விஷயங்களையும் தொட்டுக்கிறாங்க...!

உதாரணமா... பீஸா , பர்கர் உணவுகள், க்ரெடிட் கார்டுகள் போன்றவை...அவுங்க கலாச்சாரம்.

சோனி ப்ளேஸ்டேஷன்ங்கிற - யாரோடயும் பழகவோ பேசவோ தேவையே இல்லாம, வூட்டுக்குள்ளயே யாரைவேனாலும் அடிக்கலாங்கிற -விளையாட்டுல இப்ப புதுசா கபடி, கில்லியெல்லாம் வந்திருச்சு! - இதுமாதிரி விஷயங்கள் நம்ம கலாசாரத்தை புகுத்துறது. ஆனா இதுலயும், நம்ம கலாசார விளையாட்டிலேயே அவன் குடுக்குற கேம்ஸ் ரூலைத்தான் நம்ம பசங்க கடைபிடிப்பாங்க!
இந்த வகையில் உருவானதுதான்.. எதுக்கெடுத்தாலும் கடன் குடுத்து இந்தியனை கடனாளியாக்கும் பழக்கம்.! ஆனா சேமிச்சு, அதில் செலவு பண்ணி வாழ்க்கை நடத்துறதுதான் நம்ம கலாச்சாரம்னு இன்றைய தலைமுறைக்கு மறந்துபோய் ஒரு மாமாங்கமாயிடுச்சு!

2. கல்வி - மேலை நாடுகள்ல எனக்குத்தெரிஞ்சு ஓவரா தனியார்க்கிட்ட இல்லைன்னு நினைக்கிறேன். அப்படி இருந்தா..அது இந்தியா அளவுக்கு தனியார்வசம் இருக்கான்னு விபரம் தெரிஞ்ச நண்பர்கள் சொன்னாங்கன்னா உதவியா இருக்கும். ஆனா.. இன்னிக்கு மனசாட்சிக்கு பயந்து கல்விக்கூடம் நடத்துறவுங்க மிகக்குறைவானவர்கள்தான். அதுவும் இதுல சம்பாதிக்க வேண்டியதில்லைன்னு, நடத்துறவங்களால எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனா..இதை ஒரு முழுத்தொழிலா நடத்தும் புண்ணிய...ஸாரி பாவவான்கள் செய்யும் அட்டூழியங்களுக்கு அளவே இல்லை! அவுங்க நடத்துற காலேஜ்களை நம்பித்தான் இன்னிக்கு இந்தியாவோட உயர்கல்வியே இருக்கு!

3. முதல் ரெண்டு பாயிண்ட்டும் சேரும் இடம்தான் கல்விக்கடன்....அதாவது.. நல்லாப்படிக்கிற ஒரு ஏழைக்குடும்பத்துப்பையனோ, பொண்ணோ மேற்படிப்பு படிக்கணும்னு ஆசைப்பட்டா.. அரசாங்கம் குறைவான இடமே ஒதுக்குறதால, ஏதாவது ஒரு மொக்கையான தனியார் கல்லூரிக்கு கவுன்சிலிங்கிற பேர்ல தள்ளிவிடப்படுவாங்க! அங்க போய் நின்னா...அரசாங்கம் வாங்குற பீஸே அதிகம்... அதை விட பல மடங்கு அதிகமா இவுங்க ஒரு வவுச்சரை நீட்டுவாங்க! அந்த வவுச்சரை , வவுத்தெரிச்சலோட இவுங்க எடுத்துக்கிட்டுப் போகும் இடம்தான் எதை எடுத்தாலும் கடன் தரேன்னு சொல்லும் வங்கிகள்! அதாவது...இவுங்க கல்விக்கடனா குடுக்குற காசை வாங்கி அந்த தனியார் காலேஜ் மொதலாளிக்கிட்ட குடுத்துட்டு இவுங்க கடனாளியா நிக்கணும். அவர் தான் காலேஜ் கட்டுறதுக்காக வாங்கின கடனை அதை வச்சுக்கட்டிப்புட்டு ஜாலியா திரிவாரு!

இதுல எங்க இருக்கு மாணவர் நலன்?

இன்னும் இதில் பல்வேறு கோணங்கள் இருக்கு! ஒரேயடியா ஒரு தரப்பை குத்தம் சொல்ல முடியாது..!


(தொடரும்)

Saturday, December 19, 2009

சுகம் எங்கே? காண்டேகரின் யுக்திகள்!

சுகம் எங்கே பற்றி இங்கே படித்துவிட்டு தொடர்ந்தால் நலம்...

கதை ஒரு மூன்றாம் மனிதனின் கோணத்தில் சொல்லப்படாமல், கதாபாத்திரங்களின் வாயிலாக சொல்லப்பட்டிருக்கிறது.

அதுவும் ஒரே கதாபாத்திரம் சொல்லாமல் எல்லோரும் சொல்லுமாறு, குழப்பமின்றி அமைக்கப்பட்டிருக்கிறது.

முதலில் முத்தண்ணா கதையை ஆரம்பித்து, ஆனந்தன் தொடர்ந்து, உஷா தன்னிலை கூறி என கதை மாந்தர்கள் மூலமாக அவர்கள் நிலையும் எடுத்துரைக்கப்பட்டு, கதையும் அடுத்த கட்டத்துக்கு நகர்த்தப்படுகிறது.

கடைசிவரை இந்த யுக்தியில் சுவாரஸ்யம் குறையாமல் கையாண்டிருக்கிறார் காண்டேகர்.

பல அத்தியாயங்களில்...முதல் கதாபாத்திரம் விட்ட வார்த்தையிலிருந்து , அடுத்த கதாபாத்திரம் அதே வார்த்தையில் ஆனால் வேறொரு கோணத்தில் தொடர்கிறார்.

எடுத்துக்காட்டாக...
முத்தண்ணா கூறுகிறார்...

' விசுவாமித்திர முனிவர் அறுபதினாயிரம் வருஷங்கள் தவம் புரிந்தும் அவருக்கு இந்திரப்பட்டம் கிடைக்கவில்லை. ஆனால் முத்தண்ணாவுக்கோ மொத்தம் ஒன்பது வருஷங்களிலேயே..!

ஆனந்தன் தொடங்குகிறார்.

ஒன்பது வருஷங்கள் ! ஒன்பது வருஷங்களாக நான் இடைவிடாது ஓடிக்கொண்டிருக்கிறேன். இந்த ஒன்பது வருஷங்களில் ஒருமுறையாவது திரும்பிப்பார்க்கவில்லை. போர் வீரனுக்கு பின்னே திரும்பிப்பார்க்க ஓய்வு ஏது?

இப்படி மிகவும் அற்புதமாக ஒரு நாவலைக்கையாண்டிருக்கிறார் காண்டேகர்.

இவற்றையெல்லாம் மீறி, வாழ்வியல் வார்த்தைகள் எவ்வளவோ கொட்டிக்கிடக்கின்றன. இணையத்தில் ஒரு வரி படித்தேன்.
காண்டேகரின் நாவலைப்படிக்க உட்காரும்போது ஒரு பென்சிலையும் வைத்துக்கொள்ளவேண்டும் என்பதாக! அது உண்மைதான்! நானும் அடிக்கோடிட்டேன். அந்த வார்த்தைகள் இதோ!

'பெண் தீவிரமான அன்பினால் வாழ்கிறாள். ஆனால் அத்தகைய அன்பு உலகத்தில் எங்கே இருக்கிறது.? பெண் அன்பின்றி உயிர் வாழ்வதில்லை. ஆனால் சாவுதான் அவள்மீது உண்மையான அன்பு செலுத்தமுடியும்'

'உலகம் என்றாலே உயிர்களை மாய்க்கும் பெரிய ஆலை போலிருக்கிறது. எலிகளைப்பூனை கொன்றுவிடுகிறது. மனிதனை மனிதன் வாழவிடுவதில்லை. இந்த ஆலையை ஆண்டவன் எதற்காக அமைத்திருக்க வேண்டும்.'

'நம்முடைய மனத்துக்குத்தான் காதல், சினேகம், உறவு - இவற்றில் அற்புத ஆசை! இறந்த பின்புங்கூடத்தன்னோடு யாராவது இருக்கவேண்டுமென்று அது விரும்புகிறது..

உண்மையான அன்பு என்பது அக்கினியைப்போல் தெய்வீகமான பொருள். தியாகமின்றி, அகங்காரத்தை மறந்தாலன்றி, உள்ளத்தை உள்ளம் உணர்ந்தாலன்றி, உண்மையான அன்பு செய்ய முடியாது.


லட்சியத்துக்காக உயிரைக்கொடுக்கவேண்டும். உயிருக்காக உயிரைக்கொடுக்க வேண்டும். மண்ணுக்காக அல்ல!

காதல் என்பது ஒரு ரப்பர் பலூன். காற்றை நிரப்ப நிரப்ப அது அழகாகத் தோன்றும். நன்றாக உப்பும். ஆனால் அது எப்போது உடையும் என்பது மட்டும் நிச்சயமில்லை.

ஆண் பெண்ணின் உடலைக்காதலிக்கிறான். பெண் ஆணின் பணத்தைக்காதலிக்கிறாள்

வாழ்க்கை என்பது ஒரு சூதாட்டம்

தனக்காக வாழ்வது என்பது தற்கொலை!

சுகம் பற்றற்ற தொண்டில் இருக்கிறது. சுகம் உயிருக்காக உயிரைத்தரும் மனிதர்களை நேசிப்பதில் இருக்கிறது. வாழ்க்கைச்சங்கீதம் இரு கம்பிகளால் இசைக்கப்படுகிறது. ஒன்று தொண்டு. மற்றொன்று அன்பு. தொண்டு உலகத்தைக் களிக்கச்செய்கிறது. அன்பு மனத்தைக் களிக்கச்செய்கிறது.

வாழ்க்கை என்பது கணிதப்புத்தகமல்ல. விசித்திரமான நாவல்..!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்.

வேற்றுமொழி நாவல் என்ற எண்ணமே ஏற்படாத அளவுக்கு இதை மொழிபெயர்த்த கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்களுக்குத்தான் தமிழ் உலகம் தன் நன்றியைச்சமர்ப்பிக்கவேண்டும்.

இன்னும் நிறைய காண்டேகர் படிக்கவேண்டும்...

Thursday, December 17, 2009

'ஆனந்த' மகிழ்ச்சி!


இன்று ஒரு ஆனந்தம்..!

என் கவிதை ஆனந்தவிகடன் இதழின் 44ம் பக்கத்தில் வந்திருக்கிறது.இதில் இன்னுமொரு மகிழ்ச்சி என்னவென்றால்.. அன்புநிறை நர்சிம் அண்ணனின் கவிதை உள்ள பக்கத்திலேயே என் கவிதையும் வந்திருப்பதுதான்.

அன்புகாட்டும் அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும் இந்தக்கவிதைப்பக்கம் சமர்ப்பணம்.

நன்றி நண்பர்களே !

சுகம் எங்கே?


கதைசொல்லிகளால்தான் கதைகள் எப்பவும் மெருகடையும் என்பதில் எனக்கு அபார நம்பிக்கையுண்டு. சொல்லும் விதத்தில் உள்ள வேறுபாட்டால், ஒரு நல்ல கதையை சுவாரஸ்யமாகவும் ஆக்கலாம். அப்படியே சொதப்பவும் செய்யலாம்.

இந்தக்காலகட்டத்தில் பல யுக்திகள் கையாளப்படுகின்றன. ஆனால், 1940 களில் மராட்டிய எழுத்தாளர் வி.ஸ. காண்டேகர் (1898 - 1976) இந்த அற்புதத்தை சுலபமாகச்செய்துவிட்டுப்போயிருக்கிறார்.

ஞானாலயா நூலகத்தின் (இந்த நூலகத்தைப்பற்றி இன்னொரு சமயம் விரிவாக எழுதுகிறேன்) நிறுவனர் திரு.பா.கிருஷ்ணமூர்த்தி அவர்கள், 'சினிமால வேலை பாக்குறேங்கிறீங்க! இதைப் படிச்சுப்பாருங்க! ' என்று கொடுத்ததுதான் வி.ஸ.காண்டேகரின் 'சுகம் எங்கே?' என்ற நாவல்.
இதை தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ. மொழிபெயர்த்துள்ளார்.
இவரைப்பற்றி மேலதிக தகவல்களை முவளர் என்ற பதிவர் குறிஞ்சி எனும் வலைப்பூவில் அழகாக எழுதியுள்ளார். சுட்டி இதோ!


சுகம் எங்கே நாவலின் பாத்திரங்கள் ஆனந்தன், முத்தண்ணா, உஷா, மாணிக்கம்(பெண்), சஞ்சலா,தனஞ்சயன் ஆகியோரைச்சுற்றி பின்னப்பட்டது.

ஆனந்தன் ஒரு இன்ஷூரன்ஸ் ஏஜெண்ட் , வக்கீலுக்குப்படித்திருக்கிறான். அவன் அண்ணன் முத்தண்ணா..அவர் சமூகப் பிரசங்களில் காலம் கழிப்பவர். குடும்பத்தைப்பற்றி சிறிதும் நினைப்பதில்லை. மனைவியை இழந்தவர். மீரா, பாலு என்ற இரண்டு குழந்தைகளுக்குத் தந்தை. ஆனந்தனும் முத்தண்ணாவும் தங்களது தாயுடன் சேர்ந்து வாழ்ந்துவருகிறார்கள். முழுக்குடும்பமும் ஆனந்தனின் வருமானத்தை மட்டுமே நம்பி இருக்கிறது.

ஆனந்தன் ஒரு வேலையாக பயணிகள் படகில் செல்லும்போது, கடலில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயலும் உஷாவைக்காப்பாற்றுகிறான். அவளுடன் பேசி தன் வீட்டுக்குக்கூட்டி வருகிறான். உஷா சிறுவயதிலேயே பெற்றோரையும் , திருமணமானவுடனே கணவனையும் இழந்து, மைத்துனரால் பாலியல் பாதிப்புக்குள்ளாகி வாழ்க்கை வெறுத்துப்போய் தற்கொலை முடிவெடுத்தவள். அன்றிலிருந்து ஆனந்தனை தெய்வமாகவே வழிபட ஆரம்பித்துவிடுகிறாள். உள்ளத்துக்குள் உண்மையான காதலும் துளிர்க்கிறது.

ஆனால், ஆனந்தனுக்கு, முத்தண்ணா தான் பிரசங்கம் செய்யுமிடங்களில் பார்த்த புத்திசாலிப்பெண் மாணிக்கத்தை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அது ஆனந்தனின் சம்மதத்துடன் நடந்தும் விடுகிறது. ஆனந்தன் ரசனை மிக்கவன். மாணிக்கமோ நடைமுறை வாழ்க்கையில் பிடிப்பானவள். பிரசங்கி, அதிகம் படித்த மமதை கொண்டவள். அவள் ஆனந்தனை இம்மியளவும் மதிக்காமல், அவனது ரசனையான அணுகுமுறைகளை, தன் உணர்வால் பார்க்காமல், அறிவால் பார்த்து முட்டாள்தனமென்று சொல்லி அவமானப்படுத்திக்கொண்டே இருக்கிறாள். உஷாவின் இருப்பு அவளுக்கு இன்னும் எரிச்சலை ஏற்படுத்தி அவளை அவமானப்படுத்துகிறாள். ஆதலால், உஷா ஒரு மகளிர் விடுதியில் போய் தங்கிக்கொள்கிறாள்.

இந்நிலையில், ஆண் வர்க்கமே தனக்கு அடிமை என்று தன் அழகில் பெருமை கொண்ட சஞ்சலா என்ற நடிகையை இன்ஷூரன்ஸ் பாலிஸி விஷயமாக ஆனந்தன் சந்திக்கிறான். அவனது அலட்சியம் அவளுக்கு கோபத்தை ஏற்படுத்தி, அவனை வசியம் செய்ய தன்னாலான எல்லா முயற்சிகளும் எடுத்து மயக்கிவிடுகிறாள்.

மாணிக்கத்துக்கு ஒரு செல்வந்தரான, படித்த நண்பன் தனஞ்செயன். அவனும் சேர்ந்துகொண்டு ஆனந்தனின் குடும்பத்தையே அவமதிக்கிறார்கள். இதை முத்தண்ணா மட்டும் கண்டுகொள்ளவே இல்லை. அதே தனஞ்செயன் சஞ்சலாவின் வீட்டுக்குள்ளும் தன் செல்வத்தை வைத்து நுழைந்து, ஆனந்தனை சஞ்சலாவை வைத்து கேவலப்படுத்துகிறான்.

இந்நிலையில், சஞ்சலாவே கதி என்று ஆனந்தன் மதுவின் பிடியில் மயங்கிக்கிடக்க, இதை அறிந்த உஷா, அவனை சஞ்சலாவின் வீட்டிலிருந்து வெளியில் கொண்டுவந்து புதிய வாழ்க்கைக்கு அடிகோலுகிறாள். ஆனந்தன் ஒரு குடிசைப்பகுதி மக்களுக்கு உதவும் வக்கீலாக உருவெடுக்கிறான். இருவரும் அதே குடிசைப்பகுதியில் புதிய வாழ்க்கை வாழத்துவங்குகிறார்கள். என்றாவது மாணிக்கத்துக்கு ஆனந்தனை தாரை வார்க்க வேண்டியிருக்கும் என்று உஷா பயந்துகொண்டே இருக்கிறாள். இந்நிலையில் ஒருநாள் மாணிக்கத்திடமிருந்து ஒரு கடிதம் வருகிறது.

அதில் தனஞ்செயன் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும், அதனால் தான் கர்ப்பமடைந்துவிட்டதாகவும், இப்போதுதான் ஆனந்தன், உஷாவின் நற்பண்புகள் தெரியவந்ததாகவும், சுகம் என்பது அறிவில் இல்லை என்பதைப்புரிந்துகொண்டதாகவும், அவர்கள் இருவரும் சேர்ந்துவாழ்வதே நியாயம் என்றும், தனக்குப்பிறக்கும் குழந்தைக்கு ஆனந்தன் அல்லது உஷா என்றே பெயர் வைக்கப்போவதாகவும் எழுதியிருக்கிறது என்று முடிகிறது நாவல்.

இந்தக்கதையில் பல்வேறு யுக்திகளை மிகவும் அற்புதமாகக்கையாண்டிருக்கிறார் காண்டேகர். அவை..... .


(தொடரும்)

Saturday, November 28, 2009

என்ன செய்யலாம்?

லவ்டேல் மேடியின் திருமணம், ஈரோட்டில்..

கண்டிப்பாகப்போய்விடவேண்டும் என்று திட்டமிட்டிருந்தேன். திருமண கொண்டாட்டங்களை மீறி அதற்கு வேறு ஒரு காரணமும் இருந்தது. ஆனால் இப்போது செய்ய ஆரம்பித்துள்ள வேலையின் திடீர் அழைப்பால் , போக இயலவில்லை. நிறைய பதிவர்கள் வருவதாக வால்பையன் கூறியிருந்தார். நண்பர்களைச் சந்திப்பதில் வெறி பிடித்தலையும் எனக்கு இது மிகப்பெரிய வாய்ப்பை நழுவவிட்டதில் பெருத்த ஏமாற்றம்தான்.

பதிவர்களின் நட்பு மிகவும் அன்பும், ஆச்சர்யமும், மகிழ்ச்சியும், ஒற்றுமையும், உதவும் எண்ணமும் நிறைந்ததாக உணர்கிறேன். பள்ளி, கல்லூரிக்கால நண்பர்கள்கூட எங்கெங்கிருக்கிறார்கள் என கண்டுபிடித்து நட்பைத்தொடர்வது மிகவும் இயலாத சூழலாக உள்ளது. ஆனால் பதிவர் நட்பு, உலகம் முழுக்க வியாபித்து, எல்லாத்துறைகளிலும் கோலோச்சி, நம்மை வேறொரு தளத்துக்குக்
கொண்டுசெல்வதை நான் பலமுறை அனுபவித்துள்ளேன்.

இத்தகைய சந்திப்புகளை, நம் நட்பை பலப்படுத்தும் நிகழ்வாக மட்டுமின்றி, நமக்குள் இருக்கும் சமூக அக்கறைக்கு செயல்வடிவம் கொடுக்க ஒரு வாய்ப்பாகவும் பயன்படுத்தவேண்டும் என்று விரும்புகிறேன்.

நாம் பல்வேறு செயல்பாடுகளால் சமூக வளர்ச்சியை ஏற்படுத்த முனையலாம். எனக்குத்தோன்றிய சிலவற்றை (ஈரோட்டில் பகிர நினைத்தவை) இங்கு பகிர்கிறேன்.

1. பதிவர்கள் அனைவரும் லஞ்சம் கொடுப்பதில்லை (வாங்குவதில்லை) என உறுதி எடுப்பது...அதை செயல்படுத்துவது!

2. பதிவர்கள் அனைவரும் ஏதாவது ஒருவகையில் விவசாயத்துக்கு தன் பங்களிப்பை அளிப்பது. (அதற்கான திட்டம் தயாராக உள்ளது)

3. அந்தந்தப்பகுதி பள்ளி , கல்லூரி இளைஞர்களின் படைப்புத்திறனை அதிகப்படுத்த கூட்டுப்பயிற்சிகள் அளிப்பது.

4 பதிவர் சமூகம் மூலம் ஒரு சிறு காட்டையே உருவாக்குவது ( இது சாத்தியம் )

5. நுகர்வோர் விழிப்புணர்வை நாம் இருக்கும் பகுதிகளில் நாள்தோறும் ஏற்படுத்துவது. (குறைந்தபட்சம் MRP க்கு மேல் விற்கும் பொருட்களை புறக்கணிப்பது அல்லது போராடி நியாய விலைக்கு வாங்குவது)

6. நம் பகுதி இளைஞர்களுக்கு வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துவது அல்லது அதிகப்படுத்துவது.

7. கல்விக்கூடங்களில் நடக்கும் ஊழல்கள், முறைகேடுகளை - ஆயிரக்கணக்கில் ஒன்று சேர்ந்து மின்னஞ்சல் மூலம் - அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்வது.

8. இளைஞர்களுக்கான தன்னம்பிக்கைப்பயிற்சிகள் அளித்து அவர்களின் சுயஒழுக்கத்தை மேம்படுத்துவது.

9. எல்லாத்துறைகளிலும் நமக்கு ஏற்படும் சந்தேகங்கள் தீர்க்க , நாமே ஒரு நிபுணர் குழுவை உருவாக்கி ஆலோசனை அளிப்பது. - ( இணையம்வழிதான் )

10. இது சாத்தியமா என்று தெரியவில்லை...கொஞ்சம் ஓவராகவே இருந்தாலும்.....பதிவர்கள் பொது இடங்களில் புகைப்பதை நிறுத்துவது.


இவற்றில் சிலவற்றை சாத்தியப்படுத்தினால்கூட...மீதமுள்ளவை தானே சாத்தியமாகும் காலம் சீக்கிரம் வந்துவிடும். பின்னர்தான் என் 11 வது விஷயமான மிகப்பெரிய திட்டத்தைக் கூற முடியும்.


இது முதலில் படிக்கும்போது சிறுபிள்ளைத்தனமாகவோ, லூசுத்தனமாகவோ இருந்தால்....மன்னிக்கவும்!

எனக்கு நம்பிக்கையிருக்கிறது.Friday, November 27, 2009

வாழ்த்துக்கள் மேடி


நமது அன்புப்பதிவர், நண்பர் லவ்டேல் மேடிக்கு இன்று திருமணம்...!
அவர் வாழ்வில் எல்லா வளமும் பெற்றுஅன்பே அரசாய்
அறிவே அமைச்சாய்
அறமே அரணாய்
இல்வாழ்க்கை அமைய
எல்லோரும் வாழ்த்துவோம்....!
Saturday, November 7, 2009

மகிழ்துக்கம்...!


மறுபடியும் யூத்புல் விகடனில்...கவிதை!

இன்னிக்கு யூத்ஃபுல் விகடனில் என் கவிதை வந்திருக்கு! ஆச்சர்யமா இருக்கு!
கவிதை இதுதான்..!


காணாமல் போன
தோழியைத் தேடும் முயற்சியில்
காவலர்கள் வந்து
பார்க்கச்சொன்ன,
விபத்தில் இறந்த பெண்ணை
அடையாளம் காட்டும்
அந்த விநாடியில்
அவளில்லை என்று
சொல்லும்வரை
பரிதவித்த மனம்
அகமகிழ்ந்தாலும்
அடுத்து
யாரோ ஒருவனுக்கு
அந்தப் பெண்ணை
’அவள்தான்!’
என்று கூறவேண்டியதன்
அவலம் கொஞ்சம்
அதிகமாகவே கனத்தது.

நன்றி: யூத்ஃபுல் விகடன்.காம்

Saturday, October 31, 2009

செய்யாச் சிந்தனை!
எதை எழுத நினைத்தாலும்
ஒன்றும் எழுத முடியாமல்
நண்பர்கள் சிந்தனையை
வேடிக்கை பார்த்துவிட்டு
கணிணியை மூடும்போதுதான்
மூளைக்குள் முளைத்திருக்கும்
வேர்களுக்கு
நான் ஊற்ற நினைத்த நல்நீர்
நாக்கில் ஊறியும்
வெளிப்படாமல்
விரல்களின் வழியும்
இலைவிடாமல்
சோம்பேறித்தன வெந்நீராய்
வேர்களைப் பொசுக்கிவிட்ட
செய்தியொன்று
கைதவறிய பூங்கொத்தாய்
என்னை ஏளனப்படுத்திச்
சிரிக்கிறது!
பொசுக்கிய வேர்களின்
ஏதாவதொரு வித்து
நண்பரின் மூளைக்குள்
முளைவிடும்போது
வெந்நீரைக்குளிரவைக்க
வெட்டிச் சமாதான
பனிப்பாறைகளை
கொட்டக்கொட்ட
விஞ்ஞானம் மீறி
வெந்நீர் கொதித்து
வெடித்தெழும் எரிமலையாய்
விடியல்கள் கனக்கிறது!

ஒன்றுமட்டும் தெரிகிறது

சிந்திப்பது சுலபம்!
செயல்படுவதே கடினம்!


Wednesday, October 21, 2009

மகளென்னும் தேவதை!

காணாமல் போன
செல்போனை
வீடெங்கும் தேடினால்
தண்ணீர் அண்டாவில்
கிடக்கிறது!

பால் காய்ச்ச வைத்திருந்த
பாத்திரத்தைக்காணவில்லை
என்று அம்மா அலற, அது
குப்பைக்கூடைக்குள்ளிலிருந்து
எட்டிப்பார்க்கிறது !

தொலைக்காட்சியின்
ரிமோட்டின்
உடலெங்கும் கட்டுக்கள்!
அடுத்த ரிமோட்
வீட்டுக்குள் அடியெடுத்து
வைக்கிறது!

வெளியில் கிளம்பும்
எல்லோருக்கும் விளையாட்டு
காத்திருக்கிறது!
உங்கள்செருப்பைத்
தேடுங்கள் பார்ப்போம்.!

படுக்கையறையில்
இடம்மாறிய பலபொருட்களை
கண்டுபிடிப்பதே பாதிநாள் பணியாய்
வேலைக்காரி கூறுகிறாள் !

அசந்த நேரங்களில்
தண்ணீர்ப் பாத்திரங்கள்
தலையில் ஊற்றியதுபோக
மீதத்துடன் நிற்கின்றன!

கதவுகளின் சாவித்துவாரங்களெங்கும்
குச்சிகள் அடைக்கப்பட்டு
அவசரத்துக்கு பூட்டமுடியலை
என்று அத்தனைபேரும்
அலறுகிறோம்.!

அம்மா என் புத்தகத்தின்
ஆறாம் பக்கத்தை காணலை!
அலறுகிறான் அஸ்வின்!


அடுக்கிவைத்திருந்த
துணிகளெல்லாம்
அறையெங்கும் சிதறிக்கிடக்க
மனைவியின் புலம்பலால்
நிறைகிறது இரவு உணவு!

நடமாடும் பகுதியெல்லாம்
சோற்றுப்பருக்கை,
கஞ்சி என
காலெங்கும் பிசுபிசுப்பு!

என் மகளென்னும் தேவதை
நடமாட ஆரம்பித்துவிட்டாள்!

அவள் எச்சில் படாத இடமிருந்தால்
எங்கள் வீட்டில் காட்டுங்கள்!
அவளிடம் தரச்சொல்கிறேன்
அன்பான ஒரு எச்சில் முத்தம் !

Thursday, October 1, 2009

ஒரே சமயத்தில் 22 !இந்தமாதிரி மேட்டருக்குத்தான் இவன் லாயக்குன்னு ..டேக்கின அன்னத்துக்கு....! நற...நற...நன்றியுடன்! :)


1.Grab the book nearest to you, turn on page 18 and find line 4?

எடுத்துவிட்டேன்...ஆம்...18ம் பக்கம்..4வது வரி இருக்கிறது...! (எப்புடி?)


புத்தகம் : ஒரு தமிழ்ப்பாமரனின் பயணம் - மு.தனராசு

"நான் தலையை மட்டும் ஆட்டினேன். நான் சந்தேகப்..."

2. Stretch your left arm out as far as you can & touch air?

இல்லை...அதற்குமுன்னரே அது என்னைத்தொட்டுவிட்டது


3.What is the last thing you watched on TV?

சுஃபி ஞானிகளைப்பற்றிய டிஸ்கவரி தொகுப்பு

4.Without looking, guess what time it is?

இரவு 8 மணி....15 நிமிடங்கள் 20 வினாடிகள்


5. Now look at the clock, what is the actual time?

இரவு 8 மணி ....17 நிமிடங்கள் 10 வினாடிகள்

6. With the exception of the computer, what can you hear?

தொலைக்காட்சி


7. When did you last step outside? What were you doing?

நட்சத்திரங்கள் மொட்டைமாடியில்...! நண்பனிடம் உலாபேசிக்கொண்டே!

8.Before you started this Q&As, what did you look at?

அப்துல்லாவின் பதிவு


9. What are you wearing?

இதுவேறயா....டீ ஷர்ட்..


10. When did you last laugh?

ஸ்வாமி ஓம்காரின் பதிவை அப்துல்லா பதிவு வழியே சென்று படித்துவிட்டு..!

11. What is on the walls of the room you are in?

இந்திய வரைபடம்....


12. Seen anything weird lately?

இல்லை!


13. What do you think of this quiz?

என்னத்த சொல்ல...! வேலையில்லாம இருக்கேன்னு யாரோ அன்னத்திடம் சொல்லியிருக்காங்க! :)


14. What is the last film you saw?

SURROGATES

15. If you became a multimillionaire overnight, what would you buy?

அது சம்பந்தப்பட்ட ஆவணங்களை (எவ்வளவு செலவானாலும் ) வாங்குவேன்! :)


16. Tell me something about you that I dunno!

எல்லாம் உங்களுக்குத்தெரியும்...சும்மா விளையாடாதீங்க!


17. If you could change one thing about the world, regardless of guilt or politics, what would you do?

மனிதர்களின் தட்டிக்கேட்கும் மனோபாவத்தை அதிகரிப்பேன்

18. Do you like to Dance?

கண்டிப்பா!


19. Imagine your first child is a girl, what do you call her? .

சைந்தவி


20.Imagine your first child is a boy, what do you call him?problem..

அஸ்வின்


21. Would you ever consider living abroad?

எல்லாம் 4 வருஷம் வாழ்ந்து பாத்தாச்சு..!


22. What do you want GOD to say to you when you reach the pearly gates?

கொஞ்சம் இங்க இருந்து பாத்துக்க..! நான் வெளில போய்ட்டு வரேன்..!


இனிமே யாரைக்கோத்துவிடறது..

பாவம்..ஏதாவது பொழப்பிருந்தா பாருங்கப்பா! புள்ளைங்கள படிக்கவைங்கப்பா! :))

Sunday, September 27, 2009

காகங்களல்ல! மேகங்கள்!

நீங்களா இப்ப்டி ரிப்போர்ட்டில்
இத்தனை தவறு செய்கிறீர்கள்?
மேலதிகாரியின் மெயிலில் 
அனலாய்க் காய்கிறது வேலையிடம்!

சாதம் ஏன் இனிக்கிறது?
பாயசம் ஊற்றிப்பிசைந்தபின்னே
குழம்புக்கிண்ணம் பக்கத்தில்
கொக்கரித்துச் சிரிக்கிறது.

ஆறுமாதமாய் அடிக்காமல விட்ட
பாழாய்ப்போன சரக்குகூட 
சகலத்துக்கும் உதவிசெய்யும்
சகோதரனாய்த் தோன்றுகிறது!

வாகனம் ஓட்டிக்கொண்டே
சிந்தித்ததில் வழியெங்கும்
வசவுப்போக்குவரத்தின் 
வாய்கொள்ளா இரைச்சல்!

இருந்தாலும் மாப்பிளை நீ
இப்படி எழுதியிருக்கக்கூடாது!
சூப்பர்டா என்றவன் கூட
சூத்திரம் சொல்லித்தருகிறான் !

இதுக்கு என்ன பதில் எழுதலாம்?
அதை எப்படி மறுத்துச்சொல்லலாம்!
எண்ணச்சங்கிலிகள் சுற்றிவந்து
என்னைக் கொல்லாமல் விடாதுபோல!

இத்தனை நாள் காத்திருந்த
எல்லா ஹிட்டும் தாண்டிவிட்டேன்!
தேடித்தேடித் தின்னும்
பின்னூட்டங்கள் கசக்கின்றன.

மனம் நோகவேண்டாமென்று
மட்டுறுத்தினாலும் பின்னூட்டம்
பெருகுகிறது.
கூரான வார்த்தைகளால்
குறையாமல் விழுகிறது குருதி!

அந்தப்பதிவை மட்டும்
அனேகம்பேர் படிக்கக்கூடாதே..
அல்ப ஆசை ஒன்று
ஆக்கிரமிக்கும் நெஞ்சுக்குள்!


சொன்னது சரிதானென்று
சொக்காய் கிழிய வாதிடலாம்!

சொன்னது முற்றிலும் தவறே என்று
சொக்கவைத்து காலில் விழலாம்!

அப்படிச்சொல்லவே இல்லை என்று
அழித்துவிட்டு அரசியல் செய்யலாம்!


ஒரு எழவும் எழுதாமல்
ஒழுங்காக இருந்திருக்கலாம்.!

'ஒளியத்தெரியாதவன்
தலையாரி வீட்டில் ஒளிந்த கதையா'

சோக்கா சொன்னய்யா சுரேகா!


(இப்ப இருக்குற  ' ட்ரெண்ட'  பாத்துட்டு எண்ணத்தில் தோன்றியது ! )நாம் ஒரு பிரம்மாண்டமான பதிவர்கள் சமூகத்தை நம்மையறியாமல் கட்டமைத்துக்கொண்டிருக்கிறோம். அதன் வளர்ச்சி நிலையில் ஏற்படும் சில குளறுபடிகள்தான் இப்போது நடந்து கொண்டிருப்பதும்!  

இது ஒரு தனிமனிதனை எப்படி பாதிக்கும் என்று நினைத்தபோது வந்த வார்த்தைகள்தான் இவை!  :)

திரு. செந்தில்நாதனை காப்பாற்ற தோள்கொடுத்த கூட்டம்தான் நாம்!

பதிவர் பட்டறைகளை நடத்திய கூட்டம்தான் நாம்!

சிறுகதைப்போட்டிகளை சிறப்பாக நடத்தியவர்கள்தான் நாம்!

குட் டச்! பேட் டச்! குறைவில்லாமல் நடத்திக்(கொண்டு) காட்டியவர்கள்தான் நாம்!

எத்தனையோ பத்திரிகைகளின் எதிர்(நிகழ்)காலத்தீனிதான் நாம்!

எத்தனையோ திரைப்படங்களின் இலவசக்  காட்சி வழங்கிகள் நாம்! 

பிரபலங்களும் தன்னை இச்சமூகத்தின் அங்கமென்று பெருமைப்பட வைத்தவர்கள்தாம் நாம்!

நமக்குள் ஏற்படும் சச்சரவுகள் நம் வீட்டுப் பிரச்னை!

நாம் பொழுதுபோக்காய் ஆரம்பித்தது , மன உளைச்சலின் சாவியாகக்கூடாது!

அழகாகச்சிந்திப்போம்..! 
அனைவரையும் அரவணைப்போம்!  
தெரியாமல் தவறுசெய்தால் 
தெளியவைக்கும் திறன் கொடுப்போம்!
தனிமனிதத் தாக்குதல்களை
தரம்பிரித்து தள்ளி நிற்போம்!

மீண்டும் மீண்டும் பணிவுடன் விளம்புகிறேன் !

கூடிக்கரையும் காகங்களல்ல நாம்!
கூடி மழை பொழியும் மேகங்கள்!

Saturday, September 26, 2009

டெக்னாலஜி குலோத்துங்கன் - 5


நாடகத்தின் முந்தைய பாகங்கள் 1, 2, 3, 4....


இளவரசி என்ன யோசனை சொல்லவேண்டும் தந்தையே!?

மன்னர்        வாம்மா..இளவரசி! உன் லேப்டாப் சரியாகிவிட்டதா..அந்த அடிமை வந்தானா?

இளவரசி வந்தார்..நன்றாக லேப்டாப்பை ரிப்பேர் செய்தார் (மனதுக்குள்)(என் மனத்தைத்தான் கெடுத்துவிட்டுப்போய்விட்டார்)

மன்னர் மிக்க மகிழ்ச்சி!

இளவரசி அது கிடக்கட்டும்.  என்னவோ யோசனை என்று அன்னையிடம் பேசிக்கொண்டிருந்தீர்களே அது என்ன?

மகாராணி : அதுவா! உன் தந்தை தும்பை விட்டுவிட்டு வாலைப்பிடிப்பது பற்றி யோசித்துக்கொண்டிருக்கிறார்.

இளவரசி என்ன தும்பு? என்ன வால்? ஒன்றும் புரியவில்லையே!

மன்னர் இவளுக்கு எப்போது நேரம் கிடைத்தாலும் என்னை ஓட்டுவதில்தான் இன்பம்! அது ஒன்றுமில்லை மகளே! நாட்டில் உணவு உற்பத்தியை பெருக்கலாம் என்று யோசித்தேன். அதனைச்செயல்படுத்த தகுந்த ஆள் இல்லை..அதான்..!

இளவரசி நீங்கள் எப்போதுமே இப்படித்தான் அப்பா! கையிலேயே ஆளை வைத்துக்கொண்டு ஊரெங்கும் அலைவீர்கள்!

மன்னர் நீ யாரைச்சொல்கிறாய்? உங்கள் அம்மாவையா? அவளுக்கு உணவு உண்ணத்தான் தெரியுமே அன்றி உற்பத்தி பற்றிய யோசனைகள் எதுவும் தெரியாது!

இளவரசி அய்யோ ! தந்தையே! நான் சொல்லவந்தது வேறொரு ஆளைப்பற்றி!

மன்னர் வேறொரு ஆளா? யாரது?

இளவரசி நீங்கள் தண்டனை கொடுத்து என் லேப்டாப்பை சரி செய்ய வந்தாரே திரு.புவன் அவர்கள் -அவர்தான்!

மன்னர் யார்!? அரசுக்கு வருமானவரி கட்டாமல், என்னைத்திட்டிக்கொண்டே சென்றானே அவனா?


இளவரசி அவர் பக்க நியாயத்தை நீங்கள் யோசிக்கவே இல்லை !

மன்னர் கிடையவே கிடையாது! அவன் திமிர் பிடித்தவன். அவனை என் பக்கத்தில் வைத்துக்கொண்டால், நாட்டில் ஒரு புரட்சியையே கிளப்பிவிடுவான். 

மகாராணி ஆமாம் ஆமாம் ! நம் மன்னர் புத்திசாலி! மொபைல் மணிவாசகம் போன்ற மொக்கைகளைத்தான் தம் அருகில் வைத்துக்கொள்வார் நமது அரசர்! அவனைப்போன்ற நல்லவர்களை வைத்துக்கொள்வாரா? அவனை வைத்து பின்னர் நாடு விளங்கிவிட்டால் என்னாவது?

மன்னர் போதும்.எப்போதுபார்த்தாலும் என்னை கிண்டல் செய்துகொண்டே இருக்காதே! அவன் நல்லவன் என்று உனக்கெப்படித் தெரியும்.?

மகாராணி என் மகள் ஆட்களின் தரம் அறிவதில் வல்லவள்! சைக்காலஜி படித்திருக்கிறாள். அவள் சொன்னால் கண்டிப்பாக ச்சரியாகத்தான் இருக்கும்.

மன்னர் ஓ..அப்படியா? சரி..இளவரசி.! அவன் எப்படி என் பிரச்சனைக்கு உதவுவான் என்று சொல்லமுடியுமா?

இளவரசி அவரையே அழைத்துப் பேசுங்களேன்.


மன்னர் அதுதான் சரி! நாளைக்காலை அரசவை கொலுமண்டபத்துக்கு அவனை அழைத்து வரும்படி எல்லா காவலர்களுக்கும் எஸ் எம் எஸ் செய்துவிடு! ஆனால் அவனை நான் மன்னிப்பதாக இல்லை ! சரியா!? 

இளவரசி சரி தந்தையே! மிக்க நன்றி!

காட்சி 7
(இளவரசி, புவன்)
(செல்போன் மணி அடிக்கிறது)

புவன் வணக்கம் ! புவன் பேசுகிறேன்!

இளவரசி வணக்கம் ! நான் இளவரசி பேசுகிறேன்!  

புவன் :     வணக்கம் ..சொல்லுங்கள் ! இதற்குமுன் இரண்டு மிஸ்டுகால் விட்டதும் நீங்களதானா?

இளவரசி ஆம். நான் தான் ! ஏன் நீங்கள அழைக்கவில்லை!

புவன் எனக்கு உங்கள் எண் என்று தெரியாது. மேலும் இளவரசியே ஆனாலும் பெண்கள் மிஸ்டு கால் விடுவதை நிறுத்தமாட்டீர்கள் போல!

இளவரசி சரி ! சரி ! என் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டேன்.

புவன் அதற்குள்ளாகவா? அவர் நம் திருமணத்துக்கு சம்மதித்துவிட்டாரா?

இளவரசி அய்ய! ஆசையைப்பாரேன்! நான் சொன்னது நீங்கள் நாட்டை வளப்படுத்த சொல்லப்போகும் யோசனைகளுக்கு !

புவன் ஓ..அதுவா? சரி ..சரி!

இளவரசி நாளைக்காலை ஷார்ப்பாக 9 மணிக்கு அரண்மனை கொலுமண்டபத்தில் உங்கள் யோசனைகள் அடங்கிய ப்ராஜெக்ட் ரிப்போர்ட்டுடன் போங்கள் வெற்றி நிச்சயம்.!

புவன் கண்டிப்பாக! தங்கள் உதவிக்கு இந்த நாடே நன்றி சொல்லும்!

இளவரசி தங்கள் உதவிக்குத்தான் நாடு நன்றிசொல்லும்.

புவன் சரி..சரி..வேலையைப்பார்க்கிறேன். பிறகு பேசலாம்!

இளவரசி ஓக்கே ! வாழ்த்துக்கள்!
              

(கடைசி பாகத்தை நோக்கிய பாய்ச்சலில்....)
Thursday, September 24, 2009

டெக்னாலஜி குலோத்துங்கன் - 4

டெக்னாலஜி குலோத்துங்கன் - நாடகம் தொடர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்கிறது..!

இளவரசி
ஏன் நிகழக்கூடாதா? யோசித்துப்பாருங்கள் ..ஏன் நீங்கள் வருமானவ்ரி கட்டாமல் இருக்க வேண்டும்.அதற்கு ஏன் என் தந்தையார் இந்த தண்டனை கொடுக்கவேண்டும்? என் லேப்டாப் ஏன் ரிப்பேராகவேண்டும்.? எல்லாம் நம் சந்திப்பு நிமித்தமாகத்தானே? என்னைப் பிடிக்கவில்லையென்றால் சொல்லிவிடுங்கள்! :(

புவன் அப்படியில்லை!

இளவரசி அப்படியென்றால் பிடித்திருக்கிறது..சரிதானே!

புவன் பிடித்திருக்கிறது...ஆனால் நீங்கள் மன்னரின் மகள் ..நானோ ஒரு குடிமகன்! மன்னருக்குத்தெரிந்தால் என்னை கொன்றுவிடுவார்.

இளவரசி உங்கள் மொபைல் நம்பர் கொடுங்கள் ! இனிமேல் நாம் நம் காதலை செல்பேசியில் வளர்ப்போம்.

புவன் எனக்கென்னமோ நெருடலாகத்தான் இருக்கிறது

இளவரசி எனக்கெந்த நெருடலும் இல்லை! நீங்கள் எனக்கெனவே பிறந்தவர் என்று உறுதி செய்துவிட்டேன்.

புவன் நீங்கள் ஒன்றுக்கு இரண்டுமுறை யோசித்துப்பார்த்துவிடுங்கள். ஒரு சாமனியனுக்கு இளவரசிமேல் காதல் வருவது இயல்பு..ஆனால் இளவரசிக்கு சாமானியன் மேல் காதல் வரும்போது பல்வேறு சோதனைகளைச் சமாளிக்க வேண்டியிருக்கும்.

இளவரசி நீங்கள் ஒன்றும் கவலைப்படவேண்டாம். நான் பார்த்துக்கொள்கிறேன். முதலில் உங்கள் மொபைல் நம்பரைக்கொடுங்கள்

புவன் இதோ என் ஸ்மார்ட் கார்ட் க்ளோனையே வைத்துக்கொள்ளுங்கள்!


காட்சி—6

அந்தப்புரம்
(மன்னர், மகாராணி, இளவரசி)

மன்னர் : மகாராணி லினக்ஸி...பக்கத்து நாட்டில் சென்று சிகையலங்காரம்செய்துகொண்டு வந்தாயே! திருப்தியாகச்செய்தார்களா?

மகாராணி ஆமாம். மன்னா..இப்போது நான் செய்துகொண்டுள்ள சிகையலங்காரத்தின் சிறப்பு என்னவென்றால், தலைக்கு மேல் இருபுறமும்
ஆண்டெனா வைத்துள்ளார்கள். வேண்டுமென்றால் நீட்டிவிட்டுக் கொண்டால்...காதுக்குள்..அனைத்து சேனல்களும் கேட்கும். ஏதாவது
வேலைசெய்துகொண்டே இருப்பதால், சில நேரங்களில் மெகா சீரியல் பார்க்கமுடிவதில்லை. இது இருந்தால் அந்த நேரத்துக்கு காதில்
கேட்டுக்கொள்ளவாவது செய்யலாமே!

மன்னர் ஆஹா..என்ன ஒரு யோசனை! இதெல்லாம் ஒரு பிழைப்பு என்று அந்த நாட்டினர் பிழைக்கின்றன்ரா?

மகாராணி இங்குமட்டும் என்ன வாழ்கிறதாம்...சோற்றுக்கு வழியில்லாமல். ..செல்போன், எல்சிடி என்று செய்து தள்ளிக்கொண்டிருக்கிறீர்கள் !

மன்னர் நான் என்னடீ செய்வேன்! என்னை எல்லோரும் டெக்னாலஜி பென்டியம் செவன் பே சேனல் குலோத்துங்கன் என்று கூப்பிடுகிறார்களே என்று மயங்கி...எல்லா இடங்களிலும் தொழில்நுட்பத்தை வளர்த்தேன். அது வந்து இப்படி நிற்கிறது. இன்று காலையில் அரிசிச்சோறு இல்லாமல் நானே திண்டாடினேன் என்றால் பார்த்துக்கொள்ளேன்.

மகாராணி ஆமாம்..ஆமாம் எல்லாத்தவறையும் செய்துவிட்டு பின்னர் யோசிப்பதுதான் உங்கள் வழக்கம்!

மன்னர் நீ சொல்வது மிகச்சரி! உன்னைக்கூட ஏண்டா மணந்தோம் என்று இப்போதுதான் யோசிக்க ஆரம்பித்திருக்கிறேன்.

மகாராணி ம்..க்கூம்..இந்த கிண்டலுக்கொன்றும் குறைச்சலில்லை.! நம் மகளுக்கு திருமணவயதாகிவிட்டதே! அதைப்பற்றி ஏதாவது யோசித்தீர்களா?

மன்னர் யோசிக்காமல் இருப்பேனா? , அமெரிக்காவின் மிகப்பெரிய கணிப்பொறியாளரான பில்கேட்ஸின் தலைமுறையில் ஒரு பையனைப்பார்க்கச்சொல்லியிருக்கிறேன். மேலும் உலகமகா தொழில்நுட்பம் வளர்க்கும் மன்னர்களின் மகன்களுக்கும் சொல்லியிருக்கிறேன். எவனாவது ஒருவன் சிக்கிவிடுவான். ஒரே அமுக்கு ! முடித்துவிடுகிறேன்.

மகாராணி நம் மகளுக்கு ஒன்றும் குறைச்சலில்லை ! ஆனால் நம் நாட்டைப்பற்றிதான் குறைசொல்லிவிட்டு மாப்பிள்ளைகள் ஓடிவிடுவார்கள்.அந்த அளவுக்கு அல்லோகலப் படுத்திவைத்திருக்கிறீர்கள்!

மன்னர் சரி கோவித்துக்கொள்ளாதே லினக்ஸி! இப்போது என் தலையில் பல பிரச்னைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதற்கு யார் தீர்வு சொல்வார்களென்றே தெரியவில்லை!

மகாராணி அப்படி என்ன பிரச்னை? நீங்கள் அனுப்பிய சாட்டிலைட்டுகள் ஏதும் வேலை செய்யவில்லையா? ரோபோட்டுகள் சம்பளம் கேட்கின்றனவா? இணையத்தில் உங்கள் வெப்சைட்டை பார்க்க முடியவில்லையா? என்ன பிரச்னை ? சொல்லுங்கள்!

மன்னர் அய்யோ ! கொடுமைப்படுத்தாதே! நான் வளர்த்த டெக்னாலஜிதான் இப்போது பிரச்னை! அதனைப்பாலூட்டி சீராட்டி வளர்த்துவிட்டு , விவசாயம், கால்நடை வளர்ப்பில் கவனம் செலுத்தாமல் இயற்கையையே சீரழித்துவிட்டேன்! இப்போதுதான் உணவு எனும் அத்தியாவசியத்தேவைக்காக நம்மையே அடகு வைக்கவேண்டியிருக்குமோ என்று அச்சப்பட ஆரம்பித்திருக்கிறேன். இதற்கு என்ன தீர்வு என்று சொல்ல வேண்டிய விவசாய நிபுணர்களையும், விஞ்ஞானிகளையும் இஷ்டம்போல கொன்றும், நாடுகடத்தியும் சுத்தாமாக அப்படிப்பட்ட மனிதர்களே இல்லாமல் செய்துவிட்டேன். இப்போது இடிக்கிறது. இதை வெளியிலும் சொல்லமுடியவில்லை!

மகாராணி சரி..சரி..இப்போது வருந்தி என்ன பிரயோஜனம்! எப்போதுபார்த்தாலும் ஈமெயில், சாட்டிலைட், தகவல் தொழில்நுட்பம், மொபைல் டெக்னாலஜி என்று பீற்றிக்கொண்டிருந்தபோதே யோசித்திருக்கவேண்டும். அண்டை நாட்டு மன்னன் விவசாயவேந்தனைப்பாருங்கள்! அங்கு எல்லா உணவுப்பொருட்களும் விலை குறைவு! மின்னணு சாதனங்கள் தான் விலை அதிகம்..! யோசித்துப்பாருங்கள்! ஒரு சாதாரண சிம் கார்டைக்கூட சாம்பாரில் கொதிக்கவைத்து சாப்பிட முடியாது.

மன்னர் சரி..சரி..நீயும் வேதனைப்படுத்தாதே! இப்போது எத்தனை கோடி கொடுத்தாவது உணவு உற்பத்தியை தொடங்க எண்ணுகிறேன் . யோசனை சொல்லத்தான் யாருமில்லை!

(மன்னிக்கணும் மக்கா..! அதுபாட்டுக்கும் வளந்துக்கிட்டே போயிருச்சு! )
அடுத்த பாகத்திலயாவது முடிக்கப்பாக்குறேன்..!

Tuesday, September 22, 2009

டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 3

காட்சி 5 - அரண்மனை அந்தப்புரம்
( புவன், இளவ்ரசி விண்டோ மகாலெஷ்மி)

புவன் : இளவரசி ! இளவரசி!

இளவரசி : யாரது?

புவன் : நான் தான் புவன்! தங்கள் லேப்டாப் வேலை செய்யவில்லையென்று வரச்சொல்லியிருக்கிறார்கள்.

இளவரசி : ஓ..நீங்களா வாருங்கள் ! (மனதுக்குள்) ...ஆஹா..என்ன ஒரு கம்பீரம்?. கண்களில்தான் என்ன ஒரு ஒளி..நிச்சயம் இவன் ஒரு பெரிய புத்திசாலியாகத்தான் இருக்கவேண்டும். நான் இணையத்தில் பார்த்த சிறந்த ஆண்களைவிட நன்றாக இருக்கிறானே!

புவன் இளவரசி..இளவரசி!

இளவரசி (சிந்தனை கலைந்து) ஆ..என்ன? என்ன?

புவன் இல்லை..லேப்டாப் எங்கே ..என்ன பிரச்னை என்று கேட்டேன்.

இளவரசி ஓ....இதோ உள்ளே இருக்கிறது எடுத்துவருகிறேன். வேலைபார்த்துக்கொண்டிருக்கும்போது அப்படியே நின்றுவிட்டது.

புவன் சரி..கொண்டுவாருங்கள் ! பார்த்துத்தருகிறேன்.

(இளவரசி லேப்டாப்பை கொண்டுவருகிறாள். புவன் அதைப்பார்க்கிறான்)இளவரசி : ஆமாம்.. நீங்கள் தண்டனையில் இங்கு வேலை பார்ப்பதாக தந்தையாரும், மந்திரியும் பேசிக்கொண்டிருந்தார்களே..! என்ன குற்றம் செய்தீர்கள்..!

புவன் நான் ஒரு குற்றமும் செய்யவில்லை ! தங்கள் தந்தை செய்த குற்றத்தால் பாதிக்கப்பட்டேன் அவ்வளவுதான்.

இளவரசி என் தந்தையைப்பற்றி என்னிடமே குறை கூறுகிறீர்களா? அவர் என்ன குற்றம் செய்தார்!?

புவன் நீங்கள் கோபித்துக்கொள்கிறீர்கள். வேண்டாம் விட்டுவிடுங்கள்.

இளவரசி சரி..சரி..சும்மா சொன்னேன்...விஷயத்தைச்சொல்லுங்கள்

புவன் தங்கள் தந்தையின் தவறான கொள்கைகளால், நாட்டில் விவசாயமே கிட்டத்தட்ட இல்லை! நீர் விலைகொடுத்து வாங்குகிறோம். உணவுப்பொருட்களின் விலையோ பல ஆயிரங்களில் உள்ளது.

இளவரசி மின்னணு சாதனங்களும், வாகனங்களும்தான் மிகவும் விலை மலிவாகக்கிடைக்கிறதே! சென்ற ஆண்டுகூட விமானத்தின் விலையை சாமனியர்களும் வாங்கும் வண்ணம் 1லட்ச ரூபாய்க்குக் கொண்டு வந்து விட்டார் என் தந்தையார்.

புவன் இளவரசி! நீங்கள் தெரிந்து பேசுகிறீர்களா? தெரியாமல் பேசுகிறீர்களா என்று தெரியவில்லை! நீங்கள் கூறும் சாதனங்களையும், வாகனங்களையும் சமையல் செய்து உண்ணமுடியாது அல்லவா?

இளவரசி புரிகிறது. உங்களைச் சீண்டிப்பார்த்தேன். என் தந்தையின் இந்த முடிவுகளில் எனக்கும் உடன்பாடு இல்லைதான்..ஆமாம்.இதில் உங்கள் குற்றம் எங்கே வருகிறது?

புவன் அதான்... சொல்லவந்தேன். உணவுப்பொருட்களை வாங்கவே முடியாமல் மக்கள் தவிக்கும் நேரத்தில், வருமான வரியை 80 சதவீதமாக்கி வாழவே வழியில்லாமல் செய்துவிட்டார். என்னால் கிடைக்கும் வருவாயில் என் வயதான பெற்றோருடன் வாழமுடியவில்லை. ஆகவே வருமான வரி கட்டமுடியாது என்றேன்.

இளவரசி ஓ...அப்படியா? உங்கள் சிரமம் எனக்குப்புரிகிறது. ஆனால் நாடே இந்த நிலையில்தானே உள்ளது.

புவன் அதற்குத்தான் ஒரு யோசனை சொல்ல வந்தேன். அதற்குள் என்னை பேசவிடாமல் செய்து இந்த தண்டனை கொடுத்துவிட்டார்.

இளவரசி இதை ஏன் தண்டனை என்று நினைக்கிறீர்கள்.? என்னைச்சந்திக்க கிடைத்த நல்ல வாய்ப்பாக நினைத்துக்கொள்ளுங்களேன். உங்கள் பிரச்னைகளை தந்தையாரிடம் பக்குவமாக எடுத்துச்சொல்லி உங்களை விடுவிக்க ஏற்பாடு செய்கிறேன்.

புவன் மிக்க நன்றி ! நீங்கள் இவ்வளவு நல்லவராக இருப்பீர்கள் என்று நினைத்துக்கூட பார்க்கவில்லை இளவரசி!

இளவரசி நீங்களும் ஒரு நல்ல சமூக சிந்தனை உள்ளவராக இருக்கிறீர்களே அதுதான் எனக்கும் பிடித்திருக்கிறது..ஆமாம்...நம்நாட்டின் பிரச்னைகளைத் தீர்க்க என்ன யோசனை வைத்திருக்கிறீர்கள்?

புவன் அதுவா...! இப்போதே தரிசு நில மேம்பாட்டுக்கு அதிக நிதி ஒதுக்கி விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும். மீண்டும் மரங்களைக்கொண்டுவர நாட்டுக்கு ஒரு காடு என்ற திட்டத்தை அமல்படுத்த வேண்டும். விவசாயப்படிப்புகளுக்கு அரசு உதவித்தொகை தரவேண்டும். நீர் ஆதாரங்களைப்பெருக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். இவற்றைச்செய்தால் கண்டிப்பாக மீண்டும் நம் இயற்கை வளங்களை நாம் அடையலாம்.

இளவரசி ஓ..நல்ல யோசனையாக இருக்கிறதே..! நானும் இன்று அதுபற்றிய தகவல்களைத்தான் இணையத்தில் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த லேப்டாப் மூச்சை விட்டுவிட்டது.

புவன் அது மூச்சுவிட்டதும் நல்லதற்குத்தான். இல்லையென்றால் உங்களை நான் சந்தித்திருக்க முடியாது.

இளவரசி அதைத்தான் நானும் சொன்னேன்.

புவன் இதோ உங்கள் லேப்டாப் தயாராகிவிட்டது.

இளவரசி பரவாயில்லை. நல்ல அருமையான கணிப்பொறி வல்லுநர்தான் நீங்கள்..! பேசிக்கொண்டே சரி செய்துவிட்டீர்களே?

புவன் உங்கள் முன்னால் இதெல்லாம் சாதாரணம் இளவரசி!

இளவரசி அது என்ன இளவரசி!? பெயர்சொல்லித்தான் கூப்பிடுங்களேன்...விண்டோ மகாலெஷ்மி என்று அழகாக!

புவன் அதில்லை..! நீங்கள் இளவரசி! நான் ஒரு சாதாரணன்!

இளவரசி ஆனால் நீங்கள் என் இதயத்தில் குடியிருக்க ஆரம்பித்துவிட்டீர்கள்.ஆகவே இனி சாதாரணன் என்று சொல்லாதீர்கள்.

புவன் என்னது? கண்டதும் காதலா?....!!!

:) (இதே கொலைவெறியுடன் ,தொடரும்)

Saturday, September 19, 2009

டெக்னாலஜி குலோத்துங்கன் - பாகம் 2

காட்சி 3 அந்தப்புரம்( மன்னரின் மனைவி லினக்சி, மகள் விண்டோ மகாலெட்சுமி, தோழி ஐபாட் அம்புஜம்)

மகாராணி
: மகளே விண்டோ மகாலெட்சுமி ! எப்போது பார்த்தாலும் கணிப்பொறி முன்னாலேயே அமர்ந்திருக்கிறாயே..! அப்படி என்னதான் பார்த்துக்கொண்டிருக்கிறாய்!

மகள் விண்டோ மகாலெட்சுமி : அம்மா ! நமது முன்னோர்கள் எப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறார்கள் என்று இணையத்தில் பார்த்துக்கொண்டிருக்கிறேன்.

மகாராணி அப்படி எப்படி வாழ்ந்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்!?

இளவரசி : அப்போது பல விஷயங்கள் மிகவும் அதிகமாகக்கிடைத்திருக்கின்றன அன்னையே!

மகாராணி
என்னனென்ன அதிகமாகக்கிடைத்திருக்கின்றன?

இளவரசி இப்போது நமது அருங்காட்சியகத்தில் உள்ளனவே மரங்கள் என்பவை! அவை அதிகமாக இருந்திருக்கின்றன. அடுத்து நீர் ! நாம் கூட சென்ற ஆண்டு அண்டை நாட்டிடம் போரிட்டு வென்றோமே!

மகாராணி ஆம்..ஆம். ஆனால் அதில் நாம் போரிட்டது ஒரு அண்டா குடிநீருக்காக..அவர்கள் பதுக்கிவைத்திருந்து ஏய்த்துவிட்டார்கள். போரின் முடிவில் ஒரு குடம்தான் கிடைத்தது.அதிலும் அரைக்குடம் தண்ணீர்தான் இருந்தது.

இளவரசி ஆம்..அம்மா..அந்த நீர் அதிகமாக இருந்திருக்கிறது. மேலும் விளைநிலங்கள் எனப்படும் நிலப்பரப்பு அதிகமாக இருக்கிறது. அவை அனைத்தும் பசுமையாக இருந்திருக்கிறது.

மகாராணி : ஆமாம். நானும் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் இப்போதுதான் நம் மூதாதையர் செய்த பெருந்தவறுகளினால், உலகமே பாலையாகிவிட்டதே! என்ன ஒன்று....நாம் டெக்னாலஜியை வைத்து பிலிம் காட்டிக்கொண்டிருக்கிறோம்.

இளவரசி : அம்மா! ஆம்...பிலிம் என்றதும் நினைவுக்கு வருகிறது.அந்தக்காலத்தில் மக்கள் தொலைக்காட்சி என்ற பெட்டியிலேயே வாழ்க்கையை ஓட்டியிருக்கிறார்கள்.

தோழி அது எப்படி ஒரு பெட்டியில் வாழ்க்கையை ஓட்டியிருக்கமுடியும்..?

இளவரசி வாடீ ஐபாட் அம்புஜம்! எப்படி இருக்கிறாய்? எப்படிப்போய்க்கொண்டிருக்கிறது உனது ரோபா மேனேஜ்மெண்ட் வாழ்க்கை?

தோழி நாளொரு டேட்டா லாஸும், பொழுதொரு ப்ரோக்ராம் எரருமாக அமோகமாகப்போய்க்கொண்டிருக்கிறது இளவரசி! ஆமாம்...ஏதோ பெட்டியைப்பற்றி சொன்னீர்களே! அது என்ன?

இளவரசி நமது மூதாதையர் வாழ்வின் பெரும்பகுதியை தொலைக்காட்சி எனும் பெட்டியைப் பார்ப்பதிலேயே கழித்திருக்கிறார்கள். அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன்.

தோழி ஓ..அப்படியா? இப்போதுதான் அது உருமாறி...டிஜிட்டல் டிவியாகி விபாட் என கையடக்கமாக வந்துவிட்டதே! என் அன்னையார் கூட பல நூறாண்டுகளாக அதில் வந்துகொண்டிருக்கும் ஒரு மெகா சீரியலைப்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

இளவரசி
ஆமாம். ஐபாட்.! நம் மூதாதையர் விட்டுச்சென்ற ஒரே விஷயம் மெகா சீரியல்தான்! என் அன்னையும் ஒரு மெகாசீரியல் பிரியைதான். இரவு 9 மணிக்கு அவர் யாரிடமும் பேச மாட்டார். அவருண்டு அவர் வி பாட் உண்டென்று இருந்துவிடுவார்.

தோழி அதெப்படி மகாராணி! நீங்கள் பிறப்பதற்கு முன்னால் வந்த ஒரு மெகா சீரியலின் கதையை தெரிந்துகொள்கிறீர்கள் ?

மகாராணி என்ன இப்படி கேட்டுவிட்டாய்? என் அன்னையார் நான் வளரும்போது அமுதுடன் சேர்த்து மெகா சீரியலின் கதையையும் சேர்த்து ஊட்டிவிட்டார். நான் உன் தோழிக்கு சிறுவயது முதலே கதை சொல்ல முற்படும்போதெல்லாம் ஓடிவிடுகிறாள்.

இளவரசி
அதில்லை ஐபாட் அம்புஜம்! இந்த வகை சீரியல்களை எந்த நூற்றாண்டில் பார்த்தாலும் கதை சுலபமாகப்புரிந்துவிடும். இதை ஏதோ இதிகாச புராணங்களைக்கற்றுக்கொள்வதுபோல் பார்க்கவைப்பது என்னால் சகிக்கமுடியவில்லை.

மகாராணி
சரி சரி என்னை கிண்டல் செய்யாதீர்கள்...இன்னும் சில நூற்றாண்டுகளில் அந்த மெகா சீரியல் முடிந்துவிடுமே என்று கவலையாக நான் இருக்கிறேன். சரி! விண்டோ மகாலெஷ்மி! உனக்கு உன் தோழி கிடைத்துவிட்டாள்! நான் கிளம்பட்டுமா? நமது அரண்மனைப் பைலட்டை வரச்சொல்லியிருந்தேன். விமானத்தில் பக்கத்து நாடு வரை சென்று சிகையலங்காரம் செய்துகொள்ளவேண்டும். சீரியல் மிச்சத்தை விமானத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொள்கிறேன்.

தோழி நம் நாட்டில் இப்போது அடுத்ததாக ஒரு செயற்கைக்கோள் விடப்போகிறார்கள் தெரியுமா?

இளவரசி எதற்கு?

தோழி நாட்டில் வேலைக்கார ரோபாட்டுகள் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. மேலும் அவை மனிதர்களிடமிருந்து வேலை ஏய்ப்பதையும் கற்றுக்கொண்டுவிட்டன. சென்ற வாரம்கூட இரண்டு ரோபாட்டுகள் வேலயிலிருந்து காணாமல் போய்விட்டன. இரண்டு மணிநேரம் கழித்து வந்திருக்கின்றன. எங்கே சென்றீர்கள் என்று கேட்டாலும் திமிராக பதில் சொல்கின்றனவாம்.

இளவரசி மனிதர்கள் போலவே இயந்திர மனிதர்களை உருவாக்குகிறேன் என்று உங்கள் பொறியாளர்கள் கூறிக்கொண்டிருந்தது உண்மையாகிவிட்டது. ஹாஹா....(சிரிப்பு) ஆக..அவற்றைக்கண்காணிக்க செயற்கைக்கோள் அனுப்புகிறார்கள் என்று சொல்!

தோழி அதெப்படி..பளிச்சென்று சொல்லிவிட்டீர்கள்!

இளவரசி இதென்ன பிரமாதம்..உன்னிடம் பேசிக்கொண்டே என் லேப்டாப்பில் , இன்றைய செய்திகளில் தேடினேன். கிடைத்துவிட்டது.

தோழி டெக்னாலஜி குலோத்துங்கனின் மகளா ? சும்மாவா?

இளவரசி
கேலி செய்யாதே! என் அன்னைக்கு மெகா சீரியல்போல், எனக்கு இணையம்..! இது மட்டும் இருந்தால் எனக்கு உணவே தேவையில்லை!

தோழி பார்த்து...உங்களை மணக்கப்போகும் இளவரசர் இணையம் வழி வந்து இதயத்தில் அமர்ந்துவிடப்போகிறார்.!

இளவரசி
: ச்சீ போடி..எப்போதும் ஏதாவது கிண்டல் செய்துகொண்டு...இதோபார் எவ்வளவு விதமான வரலாற்றுத்தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன என் மடிக்கணிணியில்...

தோழி எங்கே காட்டுங்கள்

இளவரசி
இதோ பார் ! எவ்வளவு அபாரமான தகவலக்ள்....அய்யஹோ...என்னது இது ? எல்லாம் அப்படியே நிற்கிறதே. எதை க்ளிக் செய்தாலும் ஒன்றும் நிகழவில்லையே! லேப்டாப் பழுதாகிவிட்டதே... என்ன செய்வேன்..!?


காட்சி 4— அரண்மனை வளாகம்

( மன்னர் , மந்திரி, இளவரசி ,அரண்மனை சமையல்காரர் பாஸ்ட் புட் பரமன்)

மன்னர் : மந்திரி ! என்னய்யா இது! பல நாடுகளில் கேட்டாயிற்று ! அரண்மனை உபயோகத்திற்கென்று கொஞ்சம் பொன்னி அரிசி கேட்டேன். எகத்தாளமாகப்பேசுகிறார்கள்.

மந்திரி ஏன் மன்னா ? சென்ற ஆண்டு இறக்குமதி செய்த அரிசி என்னாயிற்று?

மன்னர் நாந்தான் கொஞ்சம் கூட சிக்கனமில்லாமல்...எச்சில் கையாலேயே பலமுறை காக்காய் ஓட்டிவிட்டேன். அதிலேயே பல கிலோ அரிசி போய்விட்டது.

மந்திரி சரி! கவலைப்படாதீர்கள் மன்னா ! செவ்வாய்க்கிரகத்திலிருந்தாவது அரிசியை வரவழைத்துவிடுவோம். ஆமாம்...கேட்பதற்காக கோபித்துக்கொள்ளக்கூடாது! அரசவையில் சொன்னீர்களே ! அதுபோல் நீங்களும் ஏன் பீஸா ,பர்கர் போன்றவற்றை சாப்பிடக்கூடாது.?

மன்னர் அதை ஏன் கேட்கிறீர்? நானும் அவற்றை அள்ளி அடித்துக்கொண்டுதான் இருந்தேன். அதனால் ஏதோ ஒபிசிட்டியாம் அது வந்துவிட்டதாம்.அரண்மனை பிரதான மருத்துவர்தான் பொன்னி அரிசிச்சோறு சாப்பிடுங்கள் எல்லாம் சரியாகிவிடும் என்றார்.!

மந்திரி ஓ..அப்படியா?

மன்னர் என்ன நொப்படியா? நான் என்ன கதையா சொல்லிக்கொண்டிருக்கிறேன். எனக்கு வந்த நோயைப்பற்றி கவலையோடு கூறிக்கொண்டிருக்கிறேன். கதை கேட்பதுபோல் மண்டையை மண்டையை ஆட்டிக்கொண்டிருக்கிறீர் !

மந்திரி இல்லை மன்னா! பொன்னி அரிசியை எப்படி ,,,எந்த நாட்டிலிருந்து தருவிப்பது என்பது பற்றி யோசித்துக்கொண்டிடிருக்கிறேன்.

மன்னர் நீர் யோசிக்கவே வாய்ப்பில்லையே! உமக்குத்தான் மூளையே கிடையாதே!

மந்திரி என்ன மன்னா! சிறிது நேரத்துக்குமுன் தான் ரோபோ என்றெல்லாம் கூறினீர்கள்!

மன்னர் அது ஒரு ஃப்ளோவில் கூறிவிட்டேன்...!

மந்திரி
ஆ !

மன்னர் அது கிடக்கட்டும்..! அரிசியின் ஆதாரமான நெல்லாவது அண்டை நாடுகளில் கிடைக்கிறதா என்று பாருமய்யா!

மந்திரி ஒரே ஒரு நாட்டில் மட்டும் கிடைக்கிறது மன்னா..! அது அக்ரிபுரி என்ற நாடு. ! என்ன ஒரு கொடுமையென்றால் அவர்கள் நெல்லாக யாருக்கும் தரமாட்டார்கள். ஏனெனில் நெல்லாகக்கொடுத்தால் நாம் அதை பயிரிட்டு விடுவோம் என்று அரிசியாக்கிதான் அண்டை நாடுகளுக்கு சப்ளை செய்கிறார்கள்.

மன்னர் அப்போது அவர்களிடம் அரிசியை வாங்கிவிட வேண்டியதுதானே!

மந்திரி அதில்தான் மன்னா சிக்கலே இருக்கிறது! அந்த நாட்டு மன்னன் விவசாய வேந்தனுக்கு தங்கள் மீது அடங்காத கோபம்..! அதனால் எந்த உணவுப்பொருளும் நம் நாட்டுக்கு மட்டும் தரக்கூடாது என்று வியாபாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறான்.

மன்னர் ஏனாம்...!?

மந்திரி அதையும் கேட்டேன் மன்னாஅந்த மன்னனைப்போல் நாம் விவசாயத்தில் நாட்டம் கொள்ளாமல் டெக்னாலஜியை மட்டுமே வளர்த்து நாட்டின் அடிப்படைத்தேவைகளில் கோட்டை விட்டுவிட்டோமாம்!

மன்னர் : நான் என்னத்த்ய்யா கண்டேன்..! தொழில்நுட்ப உற்பத்தியைப்பெருக்கினால் நாட்டின் பொருளாதாரம் வளரும்..!
அதன் மூலம் மக்கள் எந்தப்பொருளை வேண்டுமானாலும் விலைகொடுத்து வாங்கிவிடலாம் என்று நினைத்தேன். அது ஒரு குற்றமா?

மந்திரி நான் அப்படிக்கூறவில்லை மன்னா! ஆனால் நாம் பாட்டுக்கும் கணிப்பொறி, செல்போன், டிஜிட்டல் உபகரணங்கள் மற்றும் இன்னபிற பொருட்கள் செய்யும் தொழி்ற்சாலைகளை விளைநிலங்களில் கட்டித்தள்ளினோம். அப்போதே நாட்டு விவசாய வல்லுநர்களும், அறிஞர்களும் தடுத்தார்கள். விமர்சித்தார்கள். ஆனால் நீங்கள்தான் அவர்கள் எல்லோருக்கும் விதவிதமாக தண்டனை கொடுத்தீர்கள்.

மன்னர் சரி..சரி..அவையெல்லாம் நடந்து முடிந்த கதை! பேசிக்கொண்டே உணவு உண்ணும் பகுதிக்கு வந்துவிட்டோம். நான் சாப்பிடப்போகிறேன். நீர்?

மந்திரி
நீங்கள் சொன்னால் மறுக்கவா முடியும் ? சாப்பிடுகிறேன் மன்னா!

மன்னர்
ம்.க்கும்.. அரண்மனை உணவில் அவதி அவதியாய்க் கைவைத்துவிட்டு அரசர் கம்ப்பெல் செய்தார் என்று ஊருக்குள் சென்று சொல்லத்தான் போகிறீர். வந்து தொலையும்..சாப்பிடலாம்.

மந்திரி
ஹி..ஹி...நீங்கள்தான் மக்கள் மனமறிந்த மன்னர் !

மன்னர் சரி ..சரி..இதை அரசவையில் சொல்லும்..இங்கே தனியறையில் சொல்லி என்ன பிரயோஜனம்.! .யாரங்கே ? எவ்வளவு டெக்னாலஜி இருந்தாலும்...இந்த யாரங்கே வை மட்டும் விடமுடியவில்லையே!!

தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமன் :
வந்தேன் மன்னா! உள்ளே இன்று வந்த உணவுப்பெட்டிகளை ப்ரிட்ஜில் வைத்த்துக்கொண்டிருந்தேன்.

மன்னர் :ஓ..புதிய தலைமை சமையல்காரர் ஃபாஸ்ட் ஃபுட் பரமனா.. அது சரி ! இப்போது, எனக்கு என்ன உணவு இருக்கிறது?

பரமன் : எல்லாவிதமான பாஸ்ட்புட் ஐட்டங்களும் உள்ளது மன்னா!

மன்னர்
: அதைவிட்டால் வேறு எதுவுமே இல்லையா?

பரமன் இல்லை மன்னா! அரண்மனை அக்கவுண்ட்ஸ் ஆபீஸரிடம் சில காய்கறிகள் வாங்கச்சொல்லி பரிந்துரைத்திருந்தேன். ஆனால் அவற்றை வாங்குவது மிகவும் கடினம் என்று கூறிவிட்டார் மன்னா!

மன்னர் அப்படியா...! மந்திரியாரே ! அது என்னவென்று விசாரியும்!

மந்திரி
ஆம் மன்னா..அவர் என்னிடம் இது பற்றி டிஸ்கஸ் செய்தார். காய்கறிகளும் அக்ரிபுரியிலிருந்துதான் இறக்குமதி செய்தாக வேண்டும். அது இயலாத காரியம் என்று பேசிக்கொண்டிருந்தோம்.

மன்னர்
என்னய்யா இது ! பெரிய ரோதனையாகப்போய்விட்டது! சரி உமக்கு என்னன்ன சமைக்கத்தெரியும்?

பரமன்
ஹி..ஹி...எல்லா பதப்படுத்தப்பட்ட உணவுகளையும் நன்றாக சுடவைப்பேன். எல்லா விதமான பாஸ்ட் புட்களூம் உடனுக்குடன் வதக்கித்தருவேன். இறக்குமதியான உணவுப்பெட்டிகளை பதமாக ப்ரிட்ஜில் வைப்பேன். பல்வேறு நாடுகளில் ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்களில் ஓவன் குக்கிங் மாஸ்டர் என்று பெயர் வாங்கியிருக்கிறேன் மன்னா!

மன்னர் மொத்தத்தில் ஒன்றும் சொந்தமாக சமைக்கத்தெரியாது! இதற்கு இவ்வளவு பீற்றல்!

பரமன் அதில்லை மன்னா ! எங்கள் பாட்டனாரெல்லாம் அரிசி , காய்கறிகள் வைத்து நிறைய உணவுவகைகளை சமைத்திருக்கிறார்கள்.

மந்திரி பழம்பெருமை இப்போது எதற்கு? இப்போது மன்னர் உண்ண என்ன இருக்கிறது ? அதைக்கூறுங்கள் முதலில்..

பரமன்
வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட குளிர்பானங்கள், ரொட்டி, நூடுல்ஸ், ஆகியவை உள்ளன அய்யா!

மன்னர்
: சரி ..இப்போதைக்கு எங்கள் இருவருக்கும் நூடுல்ஸ் கொண்டுவாருங்கள்.பரமன் சரி மன்னா!

மன்னர்
அமைச்சரே..! சாப்பாடு கிடைப்பது பற்றி நினைத்தாலே எனக்கு டென்ஷனாகிறது ! பேசாமல் அக்ரிபுரி மீது படையெடுத்தால் என்ன?

மந்திரி
அதற்கு வாய்ப்பே இல்லை மன்னா! அந்த நாட்டு மன்னனுக்கு படைபலமும், மக்கள் செல்வாக்கும் அதிகம்.

மன்னர்
நம்மிடம்தான் அதைவிட பலம் வாய்ந்த ரோபோ படடை உள்ளதே அய்யா!


மந்திரி அதில் ஒரு சிக்கலும் உள்ளது மன்னா! நமது ரோபோ படையின் பேட்டரியைப் பிடுங்கும் சூட்சுமத்தை அந்த வீரர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அதனால் ஈஸியாக அவற்றை சாய்த்து விடுவார்கள்.

மன்னர் ஆக, ஒன்றும் செய்யமுடியாது என்பதை, சுற்றிவளைத்துக்கூறுகிறீர்.

மந்திரி ஹி..ஹி..

மன்னர் இதோ நூடுல்ஸ் வந்துவிட்டது. நன்றாக சாப்பிடும்..! நானே ஏதாவது யோசித்து முடிவெடுக்கிறேன். என்ன ஒரு தவறு இழைத்துவிட்டேன். விவசாய வல்லுனர்கள் பேச்சைக்கேட்டு கொஞ்சம் நிலத்தையாவது விட்டுவைத்திருக்கலாம். சரி நடந்ததைப்பற்றி பேசி பலனில்லை.! பரமா!
பரமன் மன்னா!


மன்னர் நூடுல்ஸுக்கு தொட்டுக்கொள்ள சாஸ் இருந்தால் கொண்டுவாரும்.!

பரமன் ஓக்கே மன்னா!

(இளவரசி ஓடி வருகிறாள்)


இளவரசி : தந்தையே ! தந்தையே!

மன்னர் : வாம்மா விண்டோ மகாலெஷ்மி..! என்னம்மா?

இளவரசி : எனது லேப்டாப் திடீரென பழுதாகிவிட்டது. எனக்கு அதிமுக்கிய மெயில் அனுப்பவேண்டிய வேலை இருக்கிறது. என்ன செய்வதென்றே தெரியவில்லை!

மன்னர் : உடனே அதை சப்ளை செய்த நிறுவனத்தின் கஸ்டமர் கேரில் கேட்கவேண்டியதுதானே!

இளவரசி : கேட்டேனே! நமக்கு வாரண்ட்டி முடிந்துவிட்டதாம். இனிமேல் சரிசெய்வதானால் பணம் கேட்கிறார்கள். அதுவும் நாளைதான் அவர்களது சர்வீஸ் எஞ்சினியரை அனுப்புவார்களாம்.

மன்னர் : அரண்மனையிலிருந்து இந்த டெக்னாலஜி குலோத்துங்கனின் மகள் பேசுகிறேன் என்று சொன்னாலுமா அப்படிச் சொன்னார்கள்!?

இளவரசி : ஆம்..! நான் அப்படிச்சொன்னபின்னால்தான் மிகவும் கொடூரமாகப்பேசினார்கள். ஆனால் இளவரசி என்பதால்,நாளை அனுப்புகிறோம். வேறொருவர் என்றால் ஒரு மாதம் கழித்துதான் சரி செய்வோம் என்றார்கள்.

மன்னர் : யோவ் மந்திரி ! என்னய்யா இது ? எவனுமே நம்மை மதிக்கமாட்டேன் என்கிறான்.

மந்திரி
: மன்னா! அது அயல்நாட்டுக்காரன் நிறுவனம்! நாம் அவனிடம் ஒரு பெரிய தொகையை சேவை வரியாக வசூலித்துவிட்டோம். ஆகவே அவன் கொடுக்கும் கணிப்பொறிகளுக்கு அவன் தான் முதலாளி.. அவன் கூறியபடிதான் கஸ்டமர்கள் கேட்கவேண்டும். நாம் ஒன்றும் செய்யமுடியாது மன்னா! அதான் நாளை வந்துவிடுவதாகக்கூறியிருக்கிறார்களே!

இளவரசி அப்படியெனில்..இதற்கு வேறு வழியே இல்லையா?

மன்னர் :அமைச்சரே! உம்மைத்தான் ...என்ன விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர் !

மந்திரி : ஒரு யோசனை மன்னா!

மன்னர் : என்ன அது? கூறித்தொலையும்!

மந்திரி : இன்று காலை நாம் ஒரு கணிப்பொறியாளருக்கு தண்டனை கொடுத்தோமே!

மன்னர் என்னது? நாமா?


மந்திரி : ஸாரி மன்னா! நீங்கள் தண்டனை கொடுத்தீர்களே!

மன்னர் : ம்...ஆமாம..ஆமாம்.. அந்த வருமானவரி பார்ட்டி..! பெயர் ஏதோ...

மந்திரி :அவன் பெயர் புவன் மன்னா! அவனை அழைத்து இளவரசியின் லேப்டாப்பை ரிப்பேர் செய்யச்சொன்னால் என்ன?

மன்னர் : ஆஹா..அபாரமான யோசனை! மொபைல் மணிவாசகத்தை நான் மந்திரியாக்கியது வீண்போகவில்லை! சரி! அவனையே அழைத்து இளவரசியின் லேப்டாப்பை சரி செய்யச்சொல்லுங்கள்!

இளவ்ரசி மிக்க நன்றி தந்தையே!


(வேற வழியே இல்லை..! கண்டிப்பா தொடர்ந்தே தீரும்..!)

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...