Friday, May 24, 2013

குமரன் தியேட்டரும்.. ..குடுவைத் தண்ணீரும் . .


          சூது கவ்வும் படம் பார்க்கலாம் என்று திடீர் யோசனை வந்தபோது நான் சென்றுகொண்டிருந்தது மடிப்பாக்கம் சாலை. நேரமும் மாலை 6:10 ஆகியிருந்தது. அருகில் என்ன தியேட்டர் இருக்கிறது என்று பார்த்தால், குமரன் என்று போஸ்டர் ஒட்டியிருந்தது. உடனே அதே சாலையில் சென்று குமரனை அடைந்தேன்.

     டிக்கெட்டில் இருக்கை எண் எல்லாம் போட்டு கொடுத்தார்கள். அட! என்று எண்ணிக்கொண்டே உள்ளே சென்றால், வாங்கிய 80 ரூபாய்க்கு, தியேட்டர் ஓரளவு சுத்தமாகவே இருந்தது. மால் அளவு எதிர்பார்க்காமல் இருந்தால், நல்ல தியேட்டர்தான். இடைவேளையில், தண்ணீர் தாகமெடுக்க, குடிநீர் எங்காவது வைத்திருக்கிறார்களா என்று தேடினேன். இல்லை. தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று கேண்ட்டீனை அணுகினால், 25 ரூபாய் சொன்னார்.

     நான், அதன் MRP 20 தான். நீங்கள் அந்த விலைக்குத்தான் கொடுக்கவேண்டும். என்று சொன்னவுடன்,

’MRPன்னா…என்ன?’ ‘அதெல்லாம் தியேட்டருக்குக் கிடையாது.’ என்று அந்த ஆள் திமிராகச் சொல்ல,

’ஏன் தியேட்டர் என்ன எத்தியோப்பியாலயா இருக்கு! மொத்த இந்தியாவுக்கும் ஒரே சட்டம்தான் . நீங்க அதிகபட்ச சில்லறை விலைக்குத்தான் கொடுக்கணும்’ என்றேன்.

’இல்லை சார்! அதெல்லாம் தர முடியாது… கொஞ்சம் நகருங்க!’ என்று வியாபாரத்தை கவனிக்க ஆரம்பித்தார். அதுவும் பல புரட்சியாளர்கள் அவர்கள் சொன்ன விலைக்கு வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள்.

எனக்கு தண்ணீர் தாகம் வேறு.. ஆனால், அ.சி.வி (அதிகபட்ச சில்லறை விலை) விட ஒரு ரூபாய்கூட அதிகம் கொடுத்து வாங்குவதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். மீண்டும் அவரை சத்தமாகக் கேட்டேன். என்னைக் கண்டுகொள்வதாகவே இல்லை.

சுற்றுமுற்றும் பார்த்தால், மேலாளர் அறை அருகிலேயே இருந்தது. அங்கு சென்றேன். அது கண்ணாடிக்கதவு. நான்கைந்து பேர் உள்ளே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் நான் வெளியில் நிற்பதைப் பார்த்துவிட்டு, கதவைத்திறந்துகொண்டு வந்தார்.

மேனேஜரைப் பார்க்கணும் என்றேன்.

உள்ள ஓனர் உக்காந்திருக்காரு! என்ன விஷயம்?  என்றார்.

“சார்! நான் வாட்டர் பாட்டில் வாங்க வந்தேன். 20 ரூபாய் பாட்டிலை 25 ரூபாய்க்கு விக்கிறாங்க! அது சட்டப்படி குற்றம். அ.சி.வி க்கு மேல் விற்கப்படும் அனைத்துப் பொருட்களையும் என்னால் பறிமுதல் செய்ய வைக்க முடியும். நீங்கள் சொந்தமாக பாக்கெட் போட்டு விற்கும் பொருளுக்கு என்ன விலை வைத்தாலும் அது உங்கள் பொறுப்பு. ஆனால், விலை அச்சிடப்பட்டுள்ள பொருளில் அதைவிட அதிகமாக விற்கக்கூடாது.” என்றேன்.

ஒரு நிமிஷம் இருங்க! என்றுவிட்டு உள்ளே சென்றார்.

மீண்டும் வெளியில் வந்தார். நேராகக் கேண்ட்டீன் சென்றார். விற்பனையாளரிடம் ஏதோ பேசினார். ஒரு தண்ணீர் பாட்டிலை எடுத்தார். என்னிடம் வந்தார். கொடுத்தார்.

நான்  20 ரூபாய் பணம் கொடுத்தேன். 

அதெல்லாம் வேண்டாம் சார்! என்றார்.

நான் உங்களிடம் சும்மா கேக்கலை. அதிக விலை வைத்து விக்காதீங்கன்னேன். இதுக்கான விலையை வாங்கிக்குங்க என்று பணத்தை நீட்டினேன். வாங்கி கடைக்காரரிடம் கொடுத்தார். கேட்டால் கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.

இதை எவ்வளவுக்கு விக்கிறீங்க என்றார்…

25 என்றான் இன்னொரு விற்பனையாள இளைஞன்.

ஏண்டா இவ்ளோ ஜாஸ்தியாக்கிட்டீங்க… என்று கேட்டுக்கொண்டே அறைக்குள் நுழைந்துவிட்டார்.


     எல்லாப் பொருட்களுமே திரையரங்க கேண்ட்டீன்களில் விலை அதிகமாகத்தான் இருக்கின்றன. இதை யாரும் கேட்பதும் இல்லை. வாடிக்கையாளர் குறைவு..! முழுநேரக் கடை இல்லை.. என்ற பல காரணங்கள் சொல்லலாம். ஆனால், உங்கள் திரையரங்கில் நுழைந்த ஒரு காரணத்துக்காகவே வந்தவனின் டவுசரை உருவுவது எந்தவிதமான வியாபார நோக்கம் என்று புரியவில்லை.

       ஆனால், இதில் நான் முழுமையாகக் குற்றம் சாட்ட விரும்புவது பொதுமக்களைத்தான். நான் அவ்வளவு நேரம் கேள்வி கேட்டுக்கொண்டிருந்தேன்.  யாரும் கண்டுகொள்ளக்கூட இல்லை. குறைந்தபட்சம்  15 பாட்டில்கள் விற்பனை ஆகியிருந்தன.  ஒரு சிறு எதிர்ப்பைக் கூட தெரிவிக்காமல், தனக்கான தீனியில் மையம் கொண்டிருந்தார்கள். இவர்களால்தான் தவறு செய்பவர்களுக்கு தைரியம் வருகிறது. 

    தனக்கு முன்னால் நடக்கும் சிறு தவறைக்கூட தட்டிக்கேட்க திராணியற்ற கூட்டத்துக்கு , தன் இனத்துக்கு நடக்கும் மிகப்பெரிய துரோகங்களை தட்டிக்கேட்க எங்கிருந்து திராணி வரும்..?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...