Posts

Showing posts from 2008

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம்-பாகம் 2 - அட 100!

Image
உலக நாடுகளின் தீவிரவாத வேட்கை போக, நமது தேசத்துக்குள் பார்ப்போம். வேற்றுமையில் ஒற்றுமை -என்ற உளுத்துப்போன உற்சாக வார்த்தைகளைச்சொல்லிக்கொண்டே இந்திய வரைபடத்தை எந்த  மாநிலத்துக்காரர் பார்த்தாலும், அண்டை மாநிலத்தின் மீது சின்ன சினமாவது ஏற்படுவது தவிர்க்கமுடியாத கொடுமைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். ஆளவந்தானில் கமல் சொல்லுவார். ' அவ ரொம்ப நல்லவ' - அதை, உன் மனசாட்சிய விட்டு சொல்லச்சொல்லிப்பாருன்னு அவலட்சணமும்,அவ நம்பிக்கையும் நிறைந்த முகத்தை வைத்துக்கொண்டு! அதே மனநிலைதான் நம் தேசத்தைப்பற்றி  நினைக்கும்போதும் வரும் இயல்புக்கு இன்றைய சூழலில், நாம் வந்துவிட்டோம். வெள்ளையர்களை எதிர்த்தவரை தெரியாத மாநில நிறங்கள், இப்போது தெரிய ஆரம்பித்ததற்கு அடிப்படைக்காரணம் நமது இனவாத, மொழிவாத, பிரிவினைவாத அரசியல் என்பதை யாராலும் மறுக்கமுடியாது. பக்கத்து மாநிலக்காரன் வந்தால் , இங்கு இடம் கிடையாது என்று அடித்து விரட்டும் ஆட்களை வளர்த்துவிடும் வரைக்கும் எதுவும் தெரியாததுபோல் இருக்கும் மகாராஷ்டிர மாநில அரசின் செயலில் இருக்கும் அஹிம்சை எத்தனை சதவீதம் ? அணையின் உயரத்தை கொஞ்சம் கூட உயர்த்திக்கொள்ளக்கூடாது என்றும

தீவிரவாத(த்துக்கு) மருத்துவம் !

Image
உண்மையில், மனதில் உறுத்திக்கொண்டிருந்தவற்றை கொட்டிவிடும் அவசரத்தை குறைத்து, நிதானமாக எழுத யத்தனித்து இன்று வெளிப்படுகிறது. இதுவுமே அவசரமோ என்றுதான் மனம் நினைக்கிறது. (இந்திய அரசைவிட மெத்தனம் இல்லை!) ஆனாலும் தெகா கொடுத்த கொக்கி இத்துப்போய்விடக்கூடாது என்பதால்.....இதோ..! இந்தியாவில் ஏன் இந்தத்தீவிரவாதம்..? இதை நான் உலக அரசியல், தேச அரசியல், அரசு, தனிமனிதன் என்ற வகையில் அலச விரும்புகிறேன். (இடையில் துளசி டீச்சர் கேட்டிருந்த இயல்பான கேள்விகளையும் உள்ளம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது.) உலகளாவிய அளவில், எங்குமே ஒரு உள்ளார்ந்த வெறுப்பு புரையோடிப்போயிருப்பதை ஒவ்வொரு தேசமும் அதனதன் வழியில் வெளிப்படுத்தவே செய்கின்றன. ஆப்கனில் ஒசாமா இருக்கிறார். அவரைப்பிடிக்கவேண்டுமென்று தான் வளர்த்த தாலிபனிடம் கேட்டுப்பிடிக்காமல், தன் நாட்டில் அவன் ஆட்கள் நுழைந்து இரட்டை கோபுரத்தை தகர்க்கவும், வீறுகொண்டு எழுந்து இன்றுவரை வேட்டையாடும் அமெரிக்காவின் செயலில் எந்த வகை மிதவாதம் இருந்தது?  உலகத்தை அழிக்கும் ரசாயன ஆயுதத்தை- "ஒளிச்சுவச்சிருக்கான்..நான் பாத்தேன்" என்று கூறும் மூன்றாம் வகுப்பு மாணவனைப்போல், உலக

இயற்கை கொடையினைக்காப்போம் -3

Image
நிலத்திலெல்லாம் நோயே விஞ்சும்! நீருக்கெல்லாம் உயிர்கள் கெஞ்சும்! காற்றுக்காட்டில் கனலே மிஞ்சும் வான் மண்டலம் வழியின்றி அஞ்சும்! சுவாசத்தில் விஷமே துஞ்சும்! நெருப்பு மட்டுமே உடலைக் கொஞ்சும் ! சூடு அதிகம் ஆகுமென்று கொஞ்சம்கூடக் கலங்கவேண்டாம்.! கடல்மட்டம் உயர்ந்துவந்து நீருக்குள்ளே வெதுவெதுப்பாய் மூச்சுத்திணறி மூழ்கிச்சாவோம்.! நம் வீட்டுப்பெரியவர்  ஒருவர் நலமாக இருக்கின்றார் நல்வாழ்க்கை நமக்காக நயமாகத்தருகின்றார். அவருக்கும் அகவைகள் ஆக ஆக அவர் சதை பிய்த்தெடுத்து ஆசைமகனுக்குக்கொடுப்போமா? அவர் கண்கள் கொய்தெடுத்து கல்லாங்காய் ஆடுவோமா? அவர் கால்கள் கொண்டுவந்து கட்டில் கால் ஆக்குவோமா? அவர் கைகள் ஆய்ந்துவந்து அரிவாள்கள் செய்வோமா? நல்லவேளை இன்றுவரை நாம் அதனைச்செய்யவில்லை! என்று மட்டும் பூரிக்காதீர்கள்! எப்போதோ அச்செயலை செய்ய நாம் தொடங்கிவிட்டோம். இத்தனை கோடி ஆண்டுகளாய் எடுத்து வளர்த்த இயற்கையை கந்தலாக்கிக் காயவிட்டு கண்களையும் நோண்டிவிட்டு கர்ப்பப்பையை பொசுக்கிவிட்டு சிந்தையில்லாம நாமும் சில்லறைகள் சேர்க்கின்றோம் ! என்னதான் செய்வதிங்கே! இப்படியே உலகம் நிற்க? நிலம் காக்கும் யோசனைக்காய் நெருடுவதைச

இயற்கை கொடையினைக்காப்போம் -2

Image
வளரும் வரை இவனும் வானம் பார்த்து மகிழ்ந்தான் மழையைக்கண்டு முகிழ்ந்தான். கிடைத்த உணவை பயிரிட்டு காட்டுக்குள்ளே திரிந்தான். வயிற்றுக்குஎல்லாம் கிடைக்கும்  இவனுக்கு மூளைக்குக் கிடைக்காமல் மோதி மோதித் திமிர்ந்தான். ஆரம்பமானது வேட்டை! தேவைகள் போக இவன் சேர்க்க நினைத்த பண்டங்கள் இயற்கையின் உறுப்புக்கள்! வேட்டையாடும் விலங்கினத்தின் தோலுக்கும், கொம்புக்கும், தோற்றத்தில் பொலிவு கொண்ட மேல் கடைவாய்ப்பல்லுக்கும் ஆசைகள் அதிகமாகி, அளவுக்கும் மீறி வந்து அறுத்தெரிந்தான் இவன் வளர்ந்த பரிணாமத்தின் சங்கிலியை! இயற்கைக்கு அப்போதே இதயவலி கண்டது. நிலத்தின் ஆழம் தோண்டி, கனிமங்கள் கண்டெடுத்து, ஆயுதம் செய்து, வீடுகட்டி,  ஆபரணம் அழகுறப்பூட்டி, எரிபொருளும் கண்டெடுத்து எடுப்பாக ஊர்வலம் போய் பூமியின் உடலெங்கும்  பொறுப்பின்றிப் பொத்தலாக்கி  உவகையுடன் மெத்தையிட்டான். நீரினில் கழிவு சேர்த்து, நெடுந்தூரம் ஓடவிட்டு பாரெங்கும் அதனை ஆறென்று சொல்லவைத்து மீன்கள் செத்து மிதந்ததை மட்டும் மிச்சமின்றி துடைத்துவிட்டான். மரங்களைக் கொன்றுவிட்டு மழையில்லை என்று வேண்டி பெரும்பொருள் செலவு செய்து வேள்விகள் மூலம் மட்டும்  புகைக்கூட்டம்

இயற்கை கொடையினைக் காப்போம் !

Image
இயற்கையில் இழந்ததையும் இழந்ததில் இருப்பதையும் இருப்பதில் காப்பதையும் காப்பதில் வாழ்வதையும், வாழ்வதில் மடிவதையும் மடிவதில் முடிவதையும் பயத்துடன் பகிர்கின்றேன். அண்டத்தின் பெருவெடிப்பும் பூகோளப்பிறப்பெடுப்பும் புவியியல் புத்தகத்தில் எப்போதோ கண்டதுண்டு! பிறந்தபின் பூமியும்  தன்னைத்தானே செதுக்கியது. நெருப்புடனே பிறந்துவந்து காற்று கண்டு நிலத்தைக் கண்டு காலம் கடந்து நீரைக்கண்டு உயிரினங்கள் ஒன்றிரண்டை ஓடியாட வைப்பதற்குள் களைத்துப்போன  இயற்கைக்கு அப்போதே வயது எழுபது கோடி! வாழ்வியல் ஓட்டத்தில் இருப்பியலின் தாக்கத்தில் தேவைகளின் மாற்றத்தில் ஒன்றையொன்று சார்ந்துவந்து உயிரினங்கள் பெருகின! பெருகிய உயிரினங்களில் நடந்து வந்து பேசி நின்று மூளையெனும் ஆயுதத்தை முழுமையாகக் கண்டுணர்ந்து சிந்தித்து செயல்புரிந்து சிறப்பாக நம்மைக்காப்பான் என்றெண்ணி இயற்கையும் மனிதனென்ற உயிரினத்தை மமதையுடன் படைத்துவிட்டு மார்தட்டி நின்றது! வந்திறங்கியவன் வஞ்சகன் என்றறியா பித்துமனம் கொண்ட பேதைத்தாய் இயற்கையும் பெருஞ்செல்வம் அவனுக்கு பூமியெங்கும் தந்துவிட்டு பொறுமை காத்து வந்தது  ! (வழக்கம்போல தொடரும்..!)

இப்படியும் நடக்கலாம் ...!

Image
அது ஒரு தொடர்வண்டி நிலையம்! அவன் எங்கோ போகவேண்டும் அவளும் வந்திருந்தாள் வழியனுப்ப! திருமணம் ஆன புதிது! விட்டுச்செல்ல மனமில்லை! விலகி இருக்கவும் திறனில்லை! கண்கள் கலங்கவும், கைகள் நடுங்கவும், ஒருவரை ஒருவர்  உயிராய் உருகி ஒன்றிப்போய் பார்க்க்கிறார்கள். அந்தச்சிறு அணைப்பிலேயே அழுத்தம் கொடுத்து சொல்லுகிறான். கவலைப்படாதே! நிறைய நாட்களில்லை! சீக்கிரம் வந்துவிடுவேன்.! நீங்கள் செல்வதே எனக்கு நரகம்தான்! அப்புறம் என்ன  கொஞ்சம் ,நிறைய ? கண்ணீர் உகுத்து கரைகிறாள் அவள்! வண்டி புறப்படும் நேரம் வர மனமின்றி அவனும் ஏறி விட புறப்பட்ட வண்டியையே நீர் படரப் பார்க்கிறாள்! அவ்விடத்திலேயே நின்று ஆசுவாசப்படுத்த, வண்டியும் சென்றுவிட.. அதிசயமாய் எதிரில் பெட்டியுடன் அவன்! ஓடிப்போய் முத்துகிறாள்! என்னவனே! இவ்வளவு காதலா? என்னைவிட மனமிலையா? நான் என்ன தவம் செய்தேன்? இப்படி நீ இருப்பதால்தான் இதயம் முழுதும் நிறைகின்றாய் ! இறுக்கமான முகத்துடன் அவன் சொன்னான்..! அதெல்லாம் சரி! வண்டியின் டிக்கெட்டை உன் பைக்குள் வைத்திருக்கிறாய் ! இனியெப்படி போவது?

உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது..!

நேற்று ஒரு சம்பவம் தூக்கமிழக்கச்செய்துவிட்டது. தஞ்சாவூரில் , ஒரு பெண்ணின் திருமணம் மீறிய ஒழுக்கத்துக்கு(?) இரு சிறுவர்கள் பலியாகி இருக்கிறார்கள். அவளுக்கு காதல் திருமணத்தில் பிறந்த அந்த பிஞ்சுகள் விக்னேஷ், தினேஷ் முறையே 6, 4 வயதுக்கார அழகன்கள். கணவனின் நண்பனுடன் ஏற்பட்ட தொடர்பை விடமுடியாததால், கணவனே அவளைவிட்டுப்போக, நண்பனுடன் குடித்தனம்... பின்னர் அவளது சொந்தக்காரன் இன்னொருவனுடன் அடுத்த........, அதன் தீவிரம் அதிகமாகி, குழந்தைகளையும், இரண்டாமவனையும் கொன்றுவிடுவதென்று முடிவெடுத்து, முதல் கட்டமாக, விளையாட்டுப்போக்கில் காரில் குழந்தைகளை கூட்டிச்சென்று தஞ்சை பெரியகோவில் அருகிலுள்ள பாலத்திலிருந்து இருவரையும் தூக்கிப்போட்டு கொன்றிருக்கிறான் சண்டாளன்.. இதில் சின்னவன் தினேஷ்  தூங்கிக் கொண்டிருக்கிறான். இவள் நல்லவள் போல் போய் போலீஸில் என்  பிள்ளைகளைக்காணவில்லை என்று புகார் கொடுத்து புலம்ப, துருவியதில் சரியான துப்பு கிடைக்காமல் போலீஸ் தடுமாற, மறுநாள் ஆற்றில் , விக்னேஷ் மிதக்க , அதை இவள் சலனமில்லாமல் பார்ப்பதைப்பார்த்த போலீஸின் சந்தேகப்பார்வை திரும்பியபின் இவ்வளவும் வெளிச்சத்துக்கு வந்தது. என்ன சொ

VANTAGE POINT - பாத்ததும் பத்திக்கிச்சு!

பார்த்ததிலிருந்து பிரமித்துப்போய் உட்கார்ந்திருக்கிறேன். என்னடாது இங்க நாம எவ்வளவு ரூம் போட்டு யோசிச்சாலும் இந்தமாதிரி ஒரு திரைக்கதையை உருவாக்கமுடியலியேன்னு! அடடா! ஒரு குண்டுவெடிப்பும், கடத்தலும், அதைத்தொடர்ந்து குற்றவாளிகளைக்கண்டுபிடிப்பதும்தான் கதை!  அமெரிக்க அதிபர், உலக தீவிரவாத எதிர்ப்பு உரை நிகழ்த்த ஸ்பெயினுக்கு வரார். அங்க அவரை கொல்ல முயற்சி நடக்குது..! பின்னர் ஒரு பெரிய குண்டுவெடிப்பும் நடந்து பல பேர் இறந்து போயிடறாங்க! அதை துப்பறிஞ்சு இதுக்குப்பின்னணி என்னங்கிறதை ஒரு அமெரிக்க உளவாளி கண்டுபிடிக்கிறதுதான் முழுக்கதையும்!  அதை சொல்லும் விதத்தை சினிமால ட்ரீட்மெண்ட்டுன்னு சொல்லுவாங்க..! அதில்தான் இவர்கள் பூந்து விளையாடி இருக்காங்க!  ஒரு பொதுப்பார்வையிலும் சொல்லாம, ஒரு தனிமனிதப்பார்வையிலும் சொல்லாம, அகிரா குரோசோவாவோட ரோஷமான் மாதிரியும்  சொல்லாம, நம்ம விருமாண்டி மாதிரியும் சொல்லாம, 8 வெவ்வேறு மனிதர்களின் பார்வையில் வித்யாசமாகச் சொல்லியிருக்காங்க! ஒரே விஷயத்தை 8 பேரும் சொல்லியிருந்தா போரடிச்சிடும். ஒருத்தர் பார்வையிலேருந்து சொல்லி, அவர் விட்ட எடத்துலேருந்து ஆரம்பிச்சு  இன்னொருத்தர் அவர்

2008ன் தீபாவளியை.....

2008ன் தீபாவளியை இனிதாகக்கொண்டாடினோம். திரையரங்குகளில் எங்க ஊர் ரசிகர் கூட்டம்  அம்மாவுக்கு மோர் விடினும் கட் அவுட்டுக்கு பீர் விட்டாலும், சென்ற ஆண்டு 20000 புள்ளிகளில் இனித்துப்போட்ட பங்குச்சந்தை கோலம் 8000 புள்ளிக்கோலமாய், இளித்துக்கொண்டே சுருங்கினாலும், சட்டைப்பையில் பணம் கொண்டு சென்று கைப்பையில் வாங்கியவர், கைப்பையில் பணம் கொண்டு சென்று சட்டைப்பையில் தக்காளி வாங்கினாலும், கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினார் இலங்கை வேந்தன் என்று எழுதிய சமூகம், கடன்பட்டால் போதும் ! தள்ளுபடி காப்பாற்றும் என்ற தரத்துக்கு வந்தாலும், தமிழனுக்கு குரல் கொடுத்தால் இறையாண்மை என்ற பெயரில் ஆண்மைக்குறைப்பு அறுவைசிகிச்சை நடந்தாலும், இருண்ட காலம் என்ற ஒன்றை இன்றே காட்டுகிறோம் என்று இயன்றவரை முயற்சி செய்யும் அரசின்கீழ் இன்வர்ட்டர் போட்டு வாழ்ந்தாலும், 2008ன் தீபாவளியை இனிதாகக்கொண்டாடினோம்.! இப்போதுதான் நாங்கள் சகிப்புத்தன்மை என்ற பெயரில் சத்தற்றுப்போய்விட்டோம் அன்றொரு நாள்  அக்கிரமம் செய்த நரகாசுரனை நசுக்கித்தான் இந்தத்திருநாளுக்கு வித்திட்டோம்! என்றாவது ஒருநாள்  மீண்டும் வெற்றி பெறுவோம் ! ஏனெனில் எங்களுடன் ஹிதேந்

ஒரு தாமதமான அறிமுகம்

வாழ்க்கையை ஜாலியா, கவனமா, மத்தவங்களுக்கு உபயோகமா வாழணும்னு நினைக்கிற ஒரு சாதா ஆளு! வாழ்வியல் காரணங்களுக்காக கணிப்பொறி விற்பனை மற்றும் பழுதுநீக்கல் நிறுவனம் மற்றும் ஒரு மனிதவள மேம்பாட்டு ஆலோசனை மற்றும் பயிற்சி நிறுவனம் நடத்திக்கொண்டும், உள்ளத்தின் தேடல் காரணமாக திரைத்துறையில் உதவி இயக்குநர், எழுத்தாளர்,வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளர், பதிவர் என ஏதாவது உருட்டிக்கொண்டும், சமூக அக்கறை காரணமாக பல்வேறு சமூகத்தொண்டுகளில் ஆட்படுத்திக்கொண்டும், நுகர்வோர் விழிப்புணர்வை மேம்படுத்தவும், வியாபாரிகளின் அநியாயங்களைத்தட்டிக்கேட்கவும் ஒரு நுகர்வோர் அமைப்பின் மாநிலப்பொறுப்பில் இருந்துகொண்டும்  எல்லோரும் நன்றாக இருக்கவேண்டும் என்று எப்போதும் எண்ணிக்கொண்டும் என் வாழ்வை, நான் விரும்பியபடி வாழும் ஒரு மிகச்சிறிய மனிதன் !

அவனைக் கடந்த சவீதாக்கள்

சவீதா  - 1 அவன்... மிகச்சரியான வயதில் அந்த இணைய நிலையத்தை நடத்தும் நண்பருக்கு உதவ தினசரி செல்ல , அங்கு வந்த அவளுக்கு மின்னஞ்சல் பார்ப்பதற்கு இவனும் அன்பாய்  உதவப்போக மின்னஞ்சலுடன் சேர்த்து அவனையும் பார்க்க ஆரம்பித்தாள் அவள்! ஒருநாள் பேச ஆரம்பித்தார்கள்! தன் தந்தையின் மறுமணமும் தாயாரின் சிரமங்களும் தனக்குள் ஒரு வெறியை தாமாக ஊட்டியதை கவலையுடன் சொன்னாள் அவள்! அவளது லட்சியமே மாவட்ட ஆட்சித்தலைவியாய் மதிப்பாக வலம்வருவதுதான்! அதற்கான முயற்சிகள்தான் இணையம் தேடும் காரணமும்.! அவனுக்கு அவளைவிட அவளது லட்சியத்தைப்பிடித்துவிட்டது. வாழ்வில் அனைத்து சுகமிருந்தும் சோம்பித்திரிபவர் மத்தியிலே காப்பாற்ற மனிதரின்றி கவலைகொண்ட குடும்பத்திலே கலெக்டராகவேண்டுமென்ற கனவுகாணும் இவளை காதலித்தால் என்னவென்று மனதுக்குள் நினைத்துவைத்தான். அவளுக்கும் இவன்மேல் ஒருவித அபிமானம்  இயல்பாக வந்ததால் அவனைவிட்டு தனக்கு பாடங்கள் சொல்லித்தர பணிவாகக்கேட்டுக்கொண்டாள் இவளது லட்சியத்தை இமயமாய் ரசித்தவனுக்கு அதற்கான உதவி செய்ய வாய்ப்பொன்று கிடைத்ததானால் பூரித்துப் பொங்கிப்போனான். இவனது பாடத்தையும் இவனையும் சேர்த்து கவனித்த அவளுக்கு இவன

நினைச்சதும், கிடைச்சதும்....!

நாம நினைச்ச அப்பா அம்மாவுக்கு பொறக்கலை! கிடைச்ச அப்பா அம்மாவுக்குத்தான் பொறந்தோம். கிடைச்ச அப்பா அம்மாவுக்கு பொறந்ததால நினைச்ச் பள்ளிக்கூடத்துல படிக்கலை! கிடைச்ச பள்ளிக்கூடத்துலதான் படிச்சோம்.! கிடைச்ச பள்ளிக்கூடத்துல படிச்சதால நினைச்ச டீச்சர் பாடம் எடுக்கலை கிடைச்ச டீச்சர்தான் பாடம் எடுத்தாங்க கிடைச்ச டீச்சர் பாடம் எடுத்ததால நினைச்ச மார்க் கிடைக்கலை கிடைச்ச மார்க்குதான் கிடைச்சது! கிடைச்ச மார்க் கிடைச்சதால நினைச்ச காலேஜ்ல சேரமுடியலை! கிடைச்ச காலேஜ்ல தான் சேர முடிஞ்சுது! கிடைச்ச காலேஜ்ல சேந்ததால நினைச்ச டிகிரி வாங்கமுடியலை கிடைச்ச டிகிரிதான் கிடைச்சது கிடைச்ச டிகிரி கிடைச்சதால நினைச்ச வேலை கிடைக்கலை! கிடைச்ச வேலைதான் கிடைச்சது ! கிடைச்ச வேலை கிடைச்சதால நினைச்ச சம்பளம் கிடைக்கலை! கிடைச்ச சம்பளம்தான் கிடைச்சது கிடைச்ச சம்பளம் கிடைச்சதால நினைச்ச வசதி கிடைக்கலை! கிடைச்ச வசதிதான் கிடைச்சது கிடைச்ச வசதி கிடைச்சதால நினைச்ச் வாழ்க்கைத்துணை அமையலை! கிடைச்ச வாழ்க்கைத்துணைதான் அமைஞ்சது கிடைச்ச வாழ்க்கைத்துணை அமைஞ்சதால நினைச்ச் பிள்ளை பிறக்கலை! கிடைச்ச பிள்ளைதான் பிறந்தது.....! கிடைச்ச் பிள்ளை பிற

சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!

http://podian.b logspot.com/200 8/09/blog-post_ 5240.html சஞ்சயின் இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவு! அட....அப்படியா? பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது  பிடிபட்ட சஞ்சய் :   ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன். அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்! சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்: அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு! இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை!  இப்படி யோசிங்கப்பு! இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி!

அப்துல்லா என்ன செய்தார்?

எவ்வளவோ கையில் இருந்தும் செய்ய மனமில்லாதவர்கள் மத்தியில் ஒரு சதுரங்க வீராங்கனைக்கு சகஜமாக உதவிகள் செய்து எங்கள் அத்துனை பேரின் மனத்திலும் அழியா இடம்பிடிக்கும் அப்துல்லாவே! நீங்கள் என்றென்றும் அன்புடன் நட்புடன் அளவில்லா செல்வத்துடன் நீண்ட ஆயுளுடன் நிறைவான மகிழ்ச்சியுடன் ஆரோக்கிய உடல்நிலையுடன் நீடூழி வாழ்க வாழ்க! அத்தனை வாழ்க ! வும் உங்களுக்காகவும் இன்னும் உங்கள் உதவிக்காகக்காத்திருக்கும் இயலாதவர்களுக்காகவும்! இறையருள் என்றும் உங்களிடம் நிலைக்கட்டும்! இயற்கையும் உங்களுக்கு எல்லாமும் அளிக்கட்டும்! நண்பர் புதுகை அப்துல்லா.... திராவிடமும், கம்யூனிசமும் என்ற தலைப்பில் அற்புதமான கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதில் வெண்பூவின் பின்னூட்டத்தில் இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தார். அதன் பிரதிபலிப்புதான் இந்தப்பதிவு!

மும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு!

ரொம்ப லேட்டா வர்றதுக்கு மன்னிக்கணும் ( இப்ப வரலைன்னு யாரு கவலைப்பட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?) மும்பை மேரி ஜான் - இதுதான் படத்தோட பெயர்! முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப்படிச்சுடுங்க! ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள். சுரேஷாக வரும் கேக்கே மேனன். ! ஒவ்வொரு காட்சியிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கிறார். அதுவும், யூசுப்பை தேடும் காட்சிகளில், அவரது வீட்டுக்குப்போய், யூசுப்பின் அம்மாவிடம் பெயரை மாற்றிச்சொல்வதும், அவர்கள் கொடுக்கும் இனிப்பை வாங்கத்தயங்குவதும், அந்த சந்தின் வழியே செல்லும்போது ஏன் முகம்மது ரபி தான் கேட்பார்களா? கிஷோர்குமார் கேட்கமாட்டார்களா? என்று ஒவ்வொன்றிலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும்போதும், கடைசியாக யூசுப்பின் அன்பை  மதித்து யதார்த்தமாக மனம் மாறும்போதும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். தாமஸாக வரும் இர்பான் கான்.! மனிதருக்கு அப்படி ஒரு முகபாவத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. அந்த இயலாமை நிறைந்த குடும்பத்தலைவனாக ஜொலிக்கிறார். பெரிய ஷாப்பிங் மாலில் எஸ்கலேட்டரில் ஏறமுடியாமல் குழந்தையும், மனைவியும் தடுமாறி ஏறும் காட்சி, இன்றும

மும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு

மும்பை மேரி ஜான் படப்பார்வை - முதல் பாகம் இங்கே !  மாதவனுக்கு ரயில் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. டாக்ஸியில் செல்கிறார். அமெரிக்காவில் வாழ்வது பற்றி நண்பர் சொல்ல, அதை முதலில் மறுத்தவர், பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் தேச விசுவாசம் போகாமல் இருக்கிறார். மனைவிக்கு பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது. ரூபாலி வேலைபார்த்த டிவி கம்ப்பெனி சீனியரும் இன்னொரு நிருபரும் அவளைச்சந்தித்து உன் வருங்காலக்கணவர் இறந்தபோது உன் மனநிலை பற்றி ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று கூற, இவளுக்கு அழுகையாக வந்தாலும், ஒத்துக்கொள்கிறாள்.  பின்னர் கேமராவுடன் வீடே அதகளப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பிக்கும்போது , அழுகை வந்து, மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து 22 டேக்குகள் வாங்குகிறாள். அந்தச்சோகம் அப்படியே வியாபாரமாக்கப்படுகிறது. ரூபாலி பனீ ரோத்தாலி - ரூபாலி ஆனாள் அழுகுணி என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக வருகிறது. சுரேஷ் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது , அவனால் தள்ளிவிடப்பட்ட போலீஸ்காரர் பட்டீல் , அவனைத்தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு , வாழ்வில் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது.  எல்லோரும் பதிலுக்கு பதில் என்று அடிக்கத்தொடங

மும்பை என் உயிர் - ஒரு பார்வை

Image
விரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா?) அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல். இயக்குநர் நிஷிகாந்த் காமத் ! நமது மாதவனின் நண்பர். "டோம்ப்வில்லி பாஸ்ட்" என்ற படத்தின் மூலம் புகழடைந்தவர். 'எவனோ ஒருவன்' என்று  அதை தமிழில் பேசவைத்தவர். மும்பை நகரத்தில் வெவ்வேறு தளங்களில் சில மனிதர்களும் ஒரு குண்டுவெடிப்புக்குப்பின் அவர்களது வாழ்வும், மனநிலையும்தான் கதை! ஒரு டீக்கடையில் வந்து கூடும் சில நண்பர்கள்..அவர்களில் சுரேஷும் (கே கே மேனன்) ஒருவர். அவருக்கு எப்போதுமே இஸ்லாமியர்கள்மீது ஒரு  இனம்புரியாத சந்தேகமும், வெறுப்பும். ஆனால நண்பர்களிடம் சகஜமாகப்பழகும் ஒரு கணிப்பொறி விற்பனையாளர்.  "மூணு மாசமா ஒரு கம்ப்யூட்டர்கூட விக்கலை" என்று நண்பர்கள் டீக்காக காசு கேட்கும்போது சொல்கிறார்! ரூபாலி ஒரு டிவி நிருபர்.  ( சோஹா அலிகான் ). - தன் வருங்க

சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!

பொடியன் என்று பெயரிட்டுக்கொண்டு பொறுப்பாக பதிவுகள்  இட்டுக்கொண்டு அரிசி விளைவதாகட்டும் அரசை விழைவதாகட்டும் பெண்கள் நலம் பேணும் பெரிய செயல்களாகட்டும் திறம்பட உறவு பேணும் உத்தம்ர் சஞ்சய் காந்தி செப்டம்பர் ஏழாம் நாளில்.. இன்றுதான் பிறந்தாராம்! அத்தகைய நாளுக்கும் நன்றி சொல்லி சஞ்சய்க்கு வாழ்த்தும் சொல்லி எந்நாளும் எப்போதும் தப்பாமல் மகிழ்வு கொண்டு செல்வங்கள் எல்லாம் கண்டு சிறப்புற வாழ்க என்று அன்புடன் இந்த நண்பனும் வாழ்த்துகின்றேன்.!

உள்ளக்குழந்தை எங்கே?

எல்லா அசைவிலும் இயல்பு காட்டி எல்லாச் செயலையும் இனிக்கச் செய்து எல்லோர் உள்ளமும் கொள்ளை கொள்ளும் குழந்தைகள் என்னும் குதூகலச் சிற்பிகள்! அவை பசை எடுத்துத் தின்னும் இசை கேட்டால் ஆடும் கை நீட்டி ஓடி வரும் கைதட்டலில் உலகம் தரும்! இருப்பதை தர மறுக்கும்! இல்லாததை பெற நினைக்கும்! அதிகம் அழுது பார்க்கும்! அதிலும் தன் அழகு காட்டும்..! புத்தகம் கிழித்துவிட்டு புதிதாகச்சிரித்துவைக்கும் பொக்கைவாயெடுத்து பொருளெல்லாம் நக்கிப்பார்க்கும்! வா வென்று சொல்பவரின் வயதைப்பார்க்காது அழைக்கும் மனிதரின் அழகு பார்க்காது. உரிமையாய் தூக்கினால் உறவு நோக்காது..! எல்லோரும் அதற்கு எல்லாம்தான்! யாரையும் பிரித்துப்பார்க்க குழந்தைகள் அறியாது. குற்றம் கண்டுபிடித்து குறைசொல்லி மறுகாது! சுற்றம் எல்லோரிடத்தும் சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்! அத்தகைய குழந்தையாய் அழகாய்த்தான் இருந்திருந்தோம்... வளர்ந்து போய்த்தான் குழந்தை எண்ணம் தொலைத்துவிட்டோம்..! உள்ளக்குழந்தை எங்கே என்று உலகம் முழுதும் தேடுகின்றோம்! எதற்கெடுத்தாலும் பெரியவராய் எப்போதும் நினைக்கின்றோம்! அதில் நம் தன்முனைப்பை முன்னேற விடுகின்றோம். அடுத்தவர் தவறு செய்தால் தண்டன

கொள்(கை)ளைக் கோமான்கள்

வீட்டுக்குள் நுழைந்தபோது, தொலைக்காட்சியில் கலைஞர் அலைவரிசை ஓடிக்கொண்டிருந்தது. அது விளம்பர இடைவேளை... ஒரு அறிவிப்பு பரபரப்பாக.....நமது கலைஞர் தொலைக்காட்சியில்.. செப்டம்பர் 3 விடுமுறையை முன்னிட்டு.... ப்ளா ப்ளா என்று பல்வேறு நிகழ்ச்சிகளையும், திரைப்படங்களையும் பட்டியலிட்டார்கள். அது என்ன..செப்டம்பர் 3 விடுமுறைக்கு என்று ஒரு சிறப்புக்கொண்டாட்டம் என்று பார்த்தால் அன்று விநாயகர் சதுர்த்தியாம்..! அடேயப்பா என்ன ஒரு கலை(ஞர்) சாமர்த்தியம்! கடவுள் இல்லை எனும் இவர்களது கொள்கையை விட்டுக்கொடுக்கமாட்டார்களாம்.ஆனால் அதே சமயம், சன் ட்டிவி, விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு என்று பகிரங்கமாக அறிவித்து நிகழ்ச்சி நடத்தி சம்பாதிப்பதை தாங்கவும் முடியாது. அதனால் அன்று வரும் வருமானத்தையும் விட்டுக்கொடுக்கமுடியாதாம். உண்மையில் கொள்கைவாதியாக இருந்தால், வினாயகர் சதுர்த்தி என்று ஒரு நாள் நடப்பதைப்பற்றியே அலட்டிக்கொள்ளாமல் எப்பவும்போல கேவலமான நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டுபோகவேண்டியதுதானே? இல்லை..! எங்க கட்சிக்கு மட்டும்தான் கடவுள் இல்லை ! ஹி.ஹி.அது எங்க அரசியல் ஓட்டுப்பிச்சைக்காரத்தனம்...எங்க ட்டிவிக்கு எல்லா சா

கால ஓட்டத்தில் காணாமல் போனவை !

அகில இந்திய வானொலி திருச்சிராப்பள்ளி ரெயின்போ பண்பலை 102.1 ல் தினமும் காலை 8 மணிமுதல் 10 மணிவரை 'வசந்த அழைப்பு' ன்னு ஒரு நிகழ்ச்சி பண்றோம். ஏதாவது ஒரு தலைப்பு கொடுத்து நேயர்களை அது சம்பந்தமா பேசச் சொல்றது. அழைக்கும் நேயர், அந்தத்தலைப்புக்கு ஏற்றார்ப்போல் பேசவேண்டும். இரண்டு மணிநேரம் போவதே தெரியாது. சரியா கலாய்க்கலாம். அப்படி நான் கொடுத்த தலைப்புகளில் சிலவற்றின்... என் துவக்க அறிமுகத்தை மட்டும் கொஞ்சம் பதிவா போடலாமேன்னு.. (வேற மேட்டரே இல்லையோ?) கால ஓட்டத்தில் காணாமல் போனவை ! அதெல்லாம் அந்தக்காலம்’ என்று அங்கலாய்க்கும் மனோபாவம் அனேகமாய் எல்லோருக்கும் ஆங்காங்கே வருவதுண்டு! அடிப்படைக்காரணமாய் சிறுவயதில் சிறப்பாக நீங்கள் பார்த்த ஒரு விஷயம் மாறிப்போய் வந்திருக்கும்! கால ஓட்டம் அதன் காரணமாய் கட்டாயம் இருந்திருக்கும்! எத்தனையோ ஆண்டுகள் உங்கள் உணர்வோடு கலந்துவிட்டு இப்போது திடீரெனறு இல்லாமல் போய்விட்ட அவ்விஷயம் உங்களுக்குள் தாக்கங்கள் தந்திருக்கும்! மாற்றம் ஒன்றே மாறாதது என்றாலும் மாறியவை என்னவென்று மறக்காமல் இருப்போம் ! வேப்பங்குச்சிகள் செய்துவந்த பல்விளக்கும் வேலைதன்னை பிரஷ்கள் தட்டிப

அதுக்காக இப்புடியா சுருங்கணும்? - பாகம் 2

முதல் பாகத்துல இதுதான் நடந்தது...! ம்..சொல்லு...நைன் ...செவன்...எய்ட்....நைன்....போர்......ம் அட...இந்த நம்பரோட ஆரம்ப நம்பரெல்லாம் நம்ப நம்பர் மாதிரியே இருக்கே...!ன்னு நினைச்சு வியக்க ஆரம்பிச்சேன். அடுத்த நம்பர் என்னவா இருக்கும்ன்னு லேசா .ஆரம்பிச்ச ஆர்வம் தீப்பிடிக்க ஆரம்பிச்சது... சொல்லு..கேக்குது கேக்குது...! பீப்...பீப்...பீப்... சார் சார்....ஒரு ரூபா காயின் இருக்குமா? ட்டொய்ங்க்! லைன் கட்டாயிடுச்சு! அடக்கடவுளேன்னு சொல்லிக்கிட்டே...எக்ஸ்க்யூஸ்மீ சார்..ன்னு பக்கத்து ஜூஸ் கடைக்காரரிடம் அஞ்சு ரூபாய்க்கு ஒன் ருப்பீ காயின் குடுங்கன்னு கேட்டு வாங்கி... மறுபடியும் முயற்சியைத்தொடர்ந்தார்...! ம்..மறுபடியும் சொல்லுப்பா... 97894....அப்புறம்..நைன்...மறுபடியும் நைனா..? சரி..சரி...செவன்.. அட...நம்ப சீரீஸ்லயே உள்ள ஆளா இருப்பார் போல இருக்கே...நமக்கும் இந்த நம்பர்லதானே வருது...கடைசி மூணு நம்பர் வேறவா இருக்கும்! ன்னு நினைச்சுக்கிட்டே கவனிக்க... ஓ...பைவ்...த்ரீ...ஒன் னா....சரிப்பா..ரொம்ப தேங்ஸ்ப்பா...! (இந்த இடத்தில் ஒண்ணு நினைச்சேன்...அதான் கடைசி பாரா...) சார்.. ரொம்ப தேங்ஸ்ன்னாரு! அது கெடக்கட்டும்

அதுக்காக இப்புடியா சுருங்கணும்?

அன்னிக்கு ஒரு வேலையா அந்த மாநகரத்தின் பஸ் ஸ்டாண்டுல நின்னுக்கிட்டிருந்தேன். எல்லாரும் ஆளுக்கொரு செல்போன வச்சுக்கிட்டு அப்புடி என்னத்தத்தான் பேசுவாங்களோ.....பேசிக்கிட்டே இருந்தாங்க! ரொம்ப நாளைக்கு முன்னாடி ஒரு புக்குல படிச்ச விஷயம் ஞாபகத்துக்கு வந்தது..! அதாவது நாம பேசுற எல்லா ஒலிகளும் காத்துலதான் அலைஞ்சுக்கிட்டிருக்கு.. அந்த ஒலி அலைகளைத் தேடினா...ஏசுநாதர் பேசின விஷயங்களைக்கூட கண்டுபிடிச்சுடலாம்ன்னு போட்டிருந்தது.   ஆனா இப்ப காலம் போற போக்கப்பாத்தா...இந்த செல்போன் வந்தப்புறம் மக்கள் ஓவரா பேசித்தள்ளி...இந்த பிரபஞ்சம் , வான்வெளி...சூரியக்குடும்பம்ன்னு எங்கெல்லாம் ஒலி போகமுடியுமோ அங்கெல்லாமே போய் நம்ம பேசின பேச்செல்லாம் போய் அடைச்சுத்தள்ளியிருக்கும். அதிலயும்,   அந்த மாதிரி ஆராய்ச்சி பண்ணினா... அப்புறம்.... அப்புறம். ங்கிற வார்த்தை மட்டுமே எல்லாத்தையும் விட ஜாஸ்தியா இருக்கும்.   நம்மகிட்டயும் செல்போன் வச்சிருக்கோமே...! அதுவும் ஒரு நம்பருக்கு ரெண்டு நம்பரா...நாமளும் ஓவராத்தான் பேசித்தள்றோம்.. ரோட்டுக்கு அந்தப்பக்கம் இருக்குறவன்கிட்ட கூட இந்தப்பக்கத்திலேருந்து பத்து பைசா கால் தைரியத்துல எவ்வ

என் இனிய அந்தோணி முத்து..!

நீங்கள் சாதாரணமாகச் சொல்லிப்போன இந்தப்பதிவை என்னால்  இவ்வளவு நேரமாகியும் மறக்கமுடியவில்லை..! உங்கள் வலிகள் வாங்கவில்லை நான்! உங்கள் வரிகளை வாங்கி  அமர்ந்திருக்கிறேன்.! இந்தச்சிந்தனைக்கு எத்தனை மனிதம்  வேண்டுமென்று.. எண்ணி எண்ணி  மாய்ந்திருக்கிறேன். இவ்வளவு ஆழமாக வாழ்க்கை பார்த்த  உங்களுக்கு வாழ்வியல்  உதவிகளைச்செய்யவைத்து  மனிதம் வளர்க்கும் பெரியவர்களை  மனதில் வாங்கிக் கசிந்திருக்கிறேன். எறும்புகள் இப்படி ஒரு மனிதரை எப்போதும் சந்திக்கப்போவதில்லை! இனிமேலும் அவை கடிக்கும் இடம் அதற்கு கோவிலென்றுதான் வந்துபோகும்! வலிக்காக வலிகொடுக்கும் வாழ்க்கையை வலியற்ற வலியாக மாற்றிவிட்டீர்கள் அய்யா! யார் சொன்னார்கள் நீங்கள்  வாங்கப்பிறந்தவர் என்று...! நிறைய அள்ளிக்  கொடுக்கப்பிறந்தவர் நீங்கள் ! எறும்புகளுக்கு உணவையும்... எங்களுக்கு  தன்னம்பிக்கையையும்! நாங்கள்தான் வாங்கப்பிறந்திருக்கிறோம்..! வாழ்வின் நிதர்சனத்தையும் வலிகளின் ஏற்றலையும், எதிர்காலப்பிரகாசத்தையும் இதயமெல்லாம் உறுதியையும் அள்ளி அள்ளிக்கொடுங்கள் ! அசராமல் கொடுங்கள் ! வாங்கப்பிறந்தவர்கள் நாங்களென்று மார்தட்டிச்சொல்லுகிறோம் கொடுப்பது அந்தோணிமு

கடைசி விருந்தாளி !

Image
சென்ற வாரம் ஒரு நாள் மிகச்சாதாரணமாய்த்தான் விடிந்தது . என் அன்பு நண்பர் ஷேக் அப்துல்லா...ஊரில் ஒரு நிறுவனத்தை நடத்திவருகிறார். புதுக்கோட்டை போன்ற ஒரு பின் தங்கிய மாவட்டத்திற்கு ஒரு ஏற்றுமதி நிறுவனத்தைக் கொண்டு வரவேண்டுமென்று முயன்று , அதில் வெற்றியும் பெற்று—கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு ஏற்றுமதி நிறுவனத்த்தைத் தன் சகோதரர்களுடன் சேர்ந்து தொடங்கி , மிகவும் வெற்றிகரமான நிறுவனமாக்கி அந்தப்பகுதியில் சுமார் 120 பேருக்கு வேலையும் அளித்து கலக்கிக்கொண்டிருக்கிறார். வயது 32தான் ஆகிறது. எல்லாச்செயல்களிலும் ஒரு தெளிவு, பண விஷயத்தில் மிகவும் நேர்மை ஆகியவை நான் பல சந்தர்ப்பங்களில் அவரிடம் கண்கூடாகக்கண்டது. யாருக்கும் பயப்படாமல் தன் மனதுக்குத்தோன்றியதை அப்படியே கூறும் விஷயத்தில் நாங்கள் இருவருமே ஒத்துப்போனதால் எங்கள் நட்பு நீடித்தது. குடும்பத்திலும் மிகவும் அக்கறை கொண்டவர்..! அவருக்கு ஒரு மகள், ஒரு மகன் ....மனைவியிடம் மிகவும் பிரியமாக இருப்பார். அண்ணன்களிடம் மிகவும் மரியாதையாக , அன்பாக நடந்துகொளவார்... நல்ல வீடு ஒன்று தனக்காகக் கட்டவேண்டுமென்று நினைத்து ஆறு மாதத்துக்கு முன்னால் மிகுந்த பொருட்செ

எங்க ஸ்டைல் சோதனை!!!

நம்ப தமிழ்நாட்டு எல்காட் நிறுவனம் மாணவர்களுக்கான மடிக்கணிணி திட்டம் அறிவிச்சிருக்காங்க!  அது உண்மையிலேயே பயனுள்ளதாகவும், விலை மலிவானதாகவும்தான் இருக்கு! ஆனா அந்த ஏசர் லேப்டாப்பை இந்த மாதிரி சோதனைக்கு உட்படுத்தினதுதான்....ஏன்னு புரியலை!    இந்த வீடியோவைப்பாருங்களேன்...! நாம ஏன் ஏறி நிக்கப்போறோம்? நான் ஏண்டா நடுராத்திரில சுடுகாட்டுக்குப்போனும் ன்னு வடிவேல் கேக்கறதுதான் ஞாபகத்துக்கு வருது!

இழந்தது போதும்...எழுந்து நிற்போம்!

புதுக்கோட்டை நாடாளுமன்றத்தொகுதி—தொகுதி மறு சீரமைப்பில் கலைக்கப்பட்டு அருகிலுள்ள தொகுதிகளோடு இணைக்கப்பட்டுவிட்டது. தேர்தல் ஆணையத்தின் முடிவுப்படி இனிமேல் புதுக்கோட்டைக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அந்தஸ்து இல்லை! புதுக்கோட்டை- இந்தியாவிலேயே சிறப்பாக வடிவமைக்கப்பட்ட நகரங்களில் ஒன்று!ஒரு சமஸ்தானமாக தனி ஆட்சி செய்த பெருமையும் உண்டு! சுதந்திரத்துக்குப்பின்னர் இயற்கை வளம் இல்லாததால் பின் தங்கிய மாவட்டமாக அறிவிக்கப்பட்டு அதற்கான சலுகைகளை அனுபவிக்கக்கூட முடியாமல் வழிவழியாக அவமானப்படுத்தப்பட்டு வந்திருக்கிறது !   இம்மாவட்ட எல்லைக்குள் இருக்கும் பாரதிதாசன் பல்கலைக்கழகம்..புதுக்கோட்டை மாவட்டம் என்று தன் முகவரியில் போட்டுக்கொள்வதில்லை.    புதுக்கோட்டை மாவட்டத்துக்குள் இருக்கும், அண்ணா பல்கலைக்கழகத்தின் கிளையும் புதுகையோடு தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளவில்லை. திருச்சி கிளை என்றே கூறிக்கொள்கிறார்கள்.ஆட்சியாளர்களும் அதைக்கண்டுகொள்ளவில்லை. நாமும் பெயரில் என்ன இருக்கிறது. நம் மாவட்டத்தில்தானே உள்ளது என்று விட்டுவிட்டோம்.   புதுக்கோட்டை மாவட்ட எல்லையில் இருக்கும் மாத்தூர் தொழிற்பேட்டையின் அனைத்து தொழிற்சால

ஒரு பண்ணையின் மரணப்படுக்கை - இரண்டாம் பாகம்

Image
இதெல்லாம் இங்க இருக்கும் அலுவலகங்களின் பெயர்ப்பலகைகள்....ஆனா அலுவலகங்கள் !?  :( இங்கு ஆயிரக்கணக்கான தாவரங்கள் வளர்ப்பதும், அதை ஆராய்ச்சி செய்வதும்..  தமிழகத்தில் பண்ணை வளத்தை பெருக்கவும் உருவாக்கப்பட்டு...இன்று இந்த அளவில் இருக்கு! இதையெல்லாம் காணச்சகிக்காம அரசாங்கத்துக்கு ஒரு மாதிரியா லெட்டரும் போட்டு விட்டுட்டேன்.....! அய்யா என்ன நினைச்சு ஒரு விஷயத்த ஆரம்பிக்கிறீங்க! அதை ஏன் அப்புறம் அம்போன்னு விட்டுடுறீங்க!   எங்க அடுத்த தலைமுறையெல்லாம் இப்படி ஒரு பண்ணை 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஆரம்பிக்கப்பட்டு சீரழிக்கப்பட்டதுன்னு வரலாறுல படிக்கவா? எவ்வளவு அழகான பகுதி! இதை இன்னும் மேம்படுத்தினா...இந்த மாவட்டத்துக்கான சுற்றுலா வருமானத்தை சர்வசாதாரணமா வாங்கித்தரும் போல இருக்கே!ன்னு புலம்பித்தள்ளிட்டேன். அவுங்களுக்கு போட்டோ எல்லாம் அனுப்பலை! கெடுத்தவுங்களுக்குத் தெரியாதா ...அதை எப்படிக்கெடுத்தோமுன்னு? அதை படம் போட்டு வேற விளக்கணுமாக்கும் !? :) இதுதான் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் கிளையோட நிலைமை! இதுதான் அந்த அழகான சாலை! (சூப்பரா பராமரிச்சிருக்க வேண்டியது ! ) ஆனா ஒண்ணுமட்டும் நல்லா தெரிஞ்சுச்

ஒரு பண்ணையின் மரணப்படுக்கை

Image
   மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் ன்னு காச் காச்ன்னு கத்திக்கிட்டே இருந்தாலும் கான்கிரீட் பில்லரும் மரம் மாதிரிதானே   இருக்குன்னா   கன்னா   பின்னான்னு  வீங்கிக்கிட்டே போகும் பூமில.... முப்பது வருசத்துக்கு   முன்னாடி   தோட்டக்கலை மூலமா சிறு மரங்களை பயிரிட்டு, ஆராய்ச்சி செஞ்சு  பல்வேறு  பண்ணைகளை உருவாக்க முன்னோயா இருக்கணும்னு .. அண்ணா பண்ணைன்னு ஒரு பண்ணையை புதுக்கோட்டைக்கிட்ட  குடுமியான் மலைல தோட்டக்கலைத்துறை மூலமா அரசாங்கம் உருவாக்கியிருக்கு! (எம்.ஜி.ஆர் அரசு என்று கேள்வி)  அது ஒரு காலத்துல சோலைவனமா இருந்துச்சு!  இனிமே இது வரண்ட மாவட்டமில்லை! வளங்கள் அனைத்தும் திரண்ட மாவட்டம்ன்னு அடுக்குமொழி வசனமெல்லாம் பேசினாங்க!  அண்ணா பண்ணைக்கு கல்விச்சுற்றுலாவா பசங்க எல்லாம் போய்ட்டு வந்த காலமெல்லாம் உண்டு.!  விவரம் தெரியாத வயசுல ஒரு தடவை பஸ் அந்தவழியா போகும்போது பாத்திருக்கேன். பள பளன்னு நிறைய கட்டிடங்களும், மரங்களுமா வளமா பாத்த ஞாபகம் அலையடிக்குது !  இங்கதான் இருக்கே பாத்துக்கலாம்ன்னு...இவ்வளவு வருஷமா ஓட்டிட்டேன். ( பக்கத்துல இருக்குற அற்புதமான ஆள், பயனுள்ள பொருள், புகழ்பெற்ற இடத்தோட