Sunday, June 5, 2016

இறைவி - எண்ணங்கள் எனது ! ஒவ்வொரு திரைப்படமும், தனிப்பட்ட மனிதர்களின் எண்ண ஓட்டத்தில் ஏற்படுத்திய தாக்கத்தைத்தான் நாம் எழுதமுடியும். அதை விமர்சனம் என்று சொல்ல இயலாது. விமர்சனம் என்பது, ஒரு திரை ஆர்வலன், சினிமா ரசிகனின் பொதுக்கருத்தாக எழுதுவது ! ஆகவே, இதனை ஒரு தனிநபர் பின்னூட்டமாக நினைத்துக்கொண்டால் நன்று!

இறைவி பற்றி எழுதவேண்டும் என்று இரவு முழுவதும் யோசித்த எண்ணங்கள் எழுத்துவடிவம் பெறுவதற்குள் சிந்தனை வேகமெடுத்து எங்கெங்கோ பயணித்து முட்டி நின்று, முன்னோக்கிச் சென்று அலைக்கழிக்கிறது.


கார்த்திக் சுப்புராஜ் ! இவ்வளவு யோசிக்கும் இயக்குனரை வணங்கிவிட்டுத்தான் துவங்கவேண்டும். பெண்களை நேசிக்கும், மதிக்கும் அனைவருக்கும் , நேசிக்காத, நேசிக்கமுடியாத, மதிக்காதவர்கள் மூலமாக கதை சொல்லியிருக்கிறார்.


ஆண் – நெடில்..  பெண்- குறிலை எப்படி நினைத்துக்கொண்டிருக்கிறோம். அல்லது.. நினைத்துக்கொண்டிருக்கிறோமா என்று நினைத்துப்பார்க்க வைத்திருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன், ஒரு பெரிய சிறையில் ஆயுள்தண்டனைக் கைதிகளுக்கு உளவியல் பயிற்சியளிக்கச் சென்றிருந்தபோது, நிதானம் இழந்ததால், அவர்கள் இழந்தவற்றைச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

”அன்னிக்கு மழை சார்..! பொண்டாட்டி ஃபோன் பண்ணி, சூடா இட்லி செஞ்சுருக்கேன். பிள்ளைங்க காத்திருக்கு! சீக்கிரம் வந்துருங்கன்னா! சரின்னு சொல்லிட்டு, வண்டியை எடுத்தேன். எனக்கு 40ஆயிரம் தரவேண்டியவன் வேகமா முன்னாடி போனான். ரொம்ப நாளா டபாய்ச்சிக்கிட்டிருந்தான். உடனே அவன் பின்னாடியே போனேன். வீட்டுக்குள் போய் கதவைச் சாத்தினான். உடனே போய் கதவைத் தட்டுறேன். அவன் பொண்டாட்டி வந்து, “அவர் வீட்டில் இல்லைங்கிறா!” மரியாதையா இப்போ வெளிய வரச்சொல்லுங்கிறேன். ஆம்பிளை இல்லாத வீட்டில் தகராறு பண்றியான்னு கேட்டுட்டு பட்டுன்னு கதவைச் சாத்திட்டா! எனக்கு “சுர்”ருன்னு ஏறிடுச்சு! பக்கத்தில் கிடந்த கடப்பாரையை எடுத்து கதவைக் கொத்தினேன். ரெண்டாவது கொத்துக்கு கொஞ்சம் பின்னாடி போய்ட்டு வேகமா வந்தேன்.. அந்த கிறுக்கன் கதவைத் திறந்துட்டான். கடப்பாரை நேரா நெஞ்சுல ஏறிடிச்சு! அவன் போய்ட்டான். நான் வந்துட்டேன்! ஆனா.. என் பொண்டாட்டி ”யாரைப்பத்தியுமே யோசிக்காம அப்படி என்னய்யா கோபத்தைக்கண்ட?”ன்னு கேட்டுட்டுப் போய்ட்டா! அதுக்கப்புறம் என்னைப் பாக்கவே வரலை! 4 வருஷம் ஆச்சு என்றார்.

இப்படி ஒருவர் இல்லை… ஆத்திரத்தில் ஒரு விநாடியில் குற்றம் செய்துவிட்டு, அதனால், குடும்பம் பாதிக்கப்பட்டவர்கள், மனைவியை இழந்தவர்கள், குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்ட மனைவிகள், வேறு ஒருவருடன் குடும்பம் நடத்தும் பெண்கள், கொலை செய்தவர்கள் வீட்டிலேயே வேலை பார்க்கும் சகோதரிகள் என்று பல்வேறு கதைகள்! அன்று அவர்களுக்கு மன அழுத்தம் போக்கச் சென்ற நான், மன அழுத்தத்துடன் வெளிவந்தேன் என்பதுதான் உண்மை. ! திரும்ப வரும்போது, காரில் தெரியாமல் இடித்த ஆட்டோக்காரரிடம் சினேகமாகப் புன்னகைத்ததுதான் என்னுள் ஏற்பட்ட மாற்றம்!

அப்படி ஒரு மாற்றத்தை,  ஆ- நெடில்களிடம் ஒரு மைக்ரோ மீட்டர் அளவுக்காவது இறைவி ஏற்படுத்தியிருக்கும்.

கனியிருப்பக் காய் கவராததால்..படத்தில் சிலாகிக்க நிறைய இருப்பதாகவே உணர்கிறேன். அடிப்படையில் பெண்களைப் பார்த்தாலே நமக்குப் பிடிக்கும். ஆனால், அவர்களை மதித்தால்தான் அவர்களுக்குப் பிடிக்கும். அதைச் செய்யச்சொல்லி ஆண்கள் வழியே வெளிவந்திருக்கிறாள் இறைவி!

     வடிவுக்கரசி ! அவர் , தன் சொந்தங்கள் முன் அவமானப்படுத்தியதைச் சொல்லி வருந்திவிட்டு, கடைசியில் அவர் கண்ணாடியை எடுத்துவைக்கச் சொல்லும் அக்கறை கலந்த நிதானம்தான் – இறைத்தன்மை!

    யாழினி ! சொல்லச் சொல்ல குடிக்கிறான் என்று தெரிந்தும், ஏதோ ஒரு நப்பாசையில், அவனது அப்பா, அம்மாவுக்கும் சேவைகள் செய்துவிட்டு, தன் நேரத்தை குழந்தைக்காகச் செலவழித்து, சொந்தக் கனவுகளைப்புதைத்த நிதானம்தான் – இறைத்தன்மை

    மலர் !  காமம் தேவைப்பட்டது – காதலும் உண்டு! ஆனால், இவனுடன் வாழத்துவங்கினால், சராசரியாக முன் வாழ்க்கைபற்றி கேட்டு ஏதாவது பிரச்னை வந்துவிட்டால்? அவன் புதிய வாழ்க்கை துவங்கட்டும்! நம் பேர் கெட்டதாகவே இருக்கட்டும்! – நம் ஆசைக்கு முடிவெடுத்தால், பின்னர் அவன் குடும்பம் அவனை ஒதுக்க வாய்ப்பிருக்கிறது என்று ஒதுங்கும் நிதானம்தான் – இறைத்தன்மை!

    பொன்னி ! – நிறையக் கனவுகளுடன் ஆரம்பித்தோம். சொதப்புகிறது. ஆனால், அதற்காக விட்டுவிடக்கூடாது. அவனுக்கு பிரச்னை வரும் இடத்திலிருந்து விலகச் சொல்வோம். காதலிக்கிறேன் என்று இன்னொருவன் சொல்கிறான். அது நம் விருப்பமாக இருக்கலாம். ஆனால், இதை நம்பிச்சென்றால், நம்மை நம்புபவன், குழந்தை என்னாவது? விலகிச்செல்வோம். விருப்பம் புதைப்போம்! கணவனாக வந்த ஆணை, சரிப்படுத்தி, கனவு வாழ்க்கையை முயல்வோம் என்று நம்பி நம்பி நொந்து போனாலும், அதற்காக யாரையும் குறைசொல்லிச் சீறாத நிதானம்தான் – இறைத்தன்மை!

    ஆணுடன் சேர்ந்து வாழ்ந்தே ஆகவேண்டும் என்று வலியுறுத்துவதை விட… இதோ பார்! அவளால் தனியாக இன்னும் சிறப்பாக வாழமுடியும். மலர் மாதிரி வாழ்ந்தா, எவ்வளவு வேகமா மழைல நனைஞ்சுகிட்டே பைக்கை எடுத்துக்கிட்டு போற,.. அப்படித்தான் போவ! உன்னை ஒரு இடத்தில் சரியாகப் பயணிக்க வைக்க, அவள் அறுத்துக்கொண்டு போகாமல் இருக்கிறாள் என்று சொல்லியிருக்கிறது இறைவி!

    ராதாரவியின் குற்ற உணர்ச்சி, - வித்தையில் சிறந்தவர், ஆனால் வீட்டில் சரியில்லாமல்தான் இருந்திருக்கிறார். அது அவள் நோயில் படுத்தபின் உணர்ந்து பயனில்லை.

    எஸ் ஜே சூர்யாவின் திசைமாற்றம் – நல்ல படம் எடுத்து, வெளிவராததால், குடிப்பேன். குடும்பம் பற்றிக் கவலை இல்லை!

    விஜய் சேதுபதியின் ஆவேசம் – நல்லவந்தான்.. ஆனா கோவக்காரன்! அதுதான் மூன்று குடும்பங்களைச் சிதைக்கும் ஆயுதம்!

    ஜெகன் – தேவைக்காக சட்டத்தையும், ஒழுக்கத்தையும் மீறலாம் என்ற தைரியம்! இது பெண்ணிடம் இல்லை என்பதை, அவர் வாயாலேயே சொல்லவைத்த அழுத்தம்!


        சித்தப்பா -( சீனு)  அனைவரது தவறுகளையும் ஏற்றுத் தாண்டிச் சென்று, நிதானமாக அனைத்தையும் அணுகும் ஒரே ஆண்! எல்லா ஆணும் மோசமில்லை என்பதற்கான ஒரு சோறு!
    மற்றபடி நிறையக் குறியீடுகள் !!

மைக்கேல், அருள் இருவருக்குமே பெண் குழந்தைகள்தான் ! – பொம்பளப்புள்ள இருந்தும் இப்படி பொறுப்பில்லாம இருக்கானே? என்று சொல்லவைக்கும் யதார்த்தம்!

மழையில் நனைவதைப்பற்றி கவலைப்படாமல், ஆண்கள் நனைவதும்…   நனைந்தால் நனைந்துவிடுவோமே என்று பெண்கள் ஒதுங்குவதும்!  இதில் இன்னொரு சிறப்பு என்னவென்றால், ஆண் – ஆசைப்பட்டு நனையவில்லை..!! பெண் ஆசைப்பட்டும் நனைய இயலவில்லை!

கோபம் – அவளுக்கு வந்தால், குடும்பத்துக்குக்கேடு ! அவனுக்கு வந்தால் வீரம் ! இதுதான் பிரச்னை! (அவன் சொல்லாமல் கொள்ளாமல் கொலை செய்யலாம். அவள் வீட்டை விட்டுப் போகக்கூடாது) அதனை சித்தி கதாபாத்திரம் மூலம் ஒற்றை வரியில் சொல்லியிருப்பது.!

யாழினி, மலர், பொன்னி என்று தமிழ்ப்பெயர்கள் வைத்து, இது தமிழ்ச் சமூகத்தில் இந்தப்பெயர் மூலமாகவே நாம் அவர்கள் நடத்தையை நிர்ணயிப்பதைக் கடந்திருப்பது!

அற்புதமாக, கோடிக்கணக்கில் விலைபோகும் பெண் தெய்வச் சிலையை வடிக்கத்தெரிந்த குடும்பத்தைச் சேர்ந்த ஆண்களுக்கு, தன் வீட்டில் இருக்கும் பெண்களின் மதிப்புத் தெரியவில்லை. இன்னொருவன் களவாடும்போது ஆத்திரம் வருகிறது. சீண்டுவாரற்றுக் கிடக்கும்போது சோகம் வருகிறது. திருவிழாச் சமயத்தில் ஞானம் வருகிறது.

கொலை செய்யப்பட்ட தயாரிப்பாளரின் மனைவி, அவர் என்ன வாங்கியிருக்கார், எவ்வளவு கடன் இருக்குன்னே தெரியாது. இப்போதான் சொத்தெல்லாம் வித்தோம் , படம்தான் மிச்சம் என்று சொல்லி, படத்தை விற்கும் நிதானம்! இதை அந்த ஆள் செய்திருந்தால் ?

மருத்துவமனையில், நர்ஸ் மூன்று முறை அமைதியாக இருக்கச்சொல்லி கெஞ்சிவிட்டு, நான்காவதுமுறை கொஞ்சம் குரல் உயர்த்தியதும், நோயாளியின் கணவரான பெரியவர் (ராதாரவி) இன்னும் அதிகமாகச் சத்தம்போட, ஒன்றுமே சொல்லாமல் திரும்பச் செல்லும் நடையில் தெரியும் இயலாமையைச் சொல்லியிருப்பது! ( இந்த இடத்தில் ஆண் இருந்தால் என்ன செய்திருப்பான் என்று கொஞ்சம் ஓட்டிப்பார்த்தால்.. அந்த இயலாமை இன்னும் ஆழமாகத் தெரியும்)

இதில்.. கடைசியில் எஸ் ஜே சூர்யாவின் கடைசி நிதானம் மூலம், யாழினிக்கு ஏதாவது நன்மை நடந்துவிடும் என்ற நம்பிக்கையை விதைத்து, அவனிடம் கடைசியாக இறைத்தன்மை புகுந்ததை சொல்லியிருப்பதுதான் நிறைவு!

தாயாக, சகோதரியாக, மனைவியாக, குழந்தையாக அவள் நம்மை நிதானிக்கச் செய்கிறாள். நாம்தான் அவளை நிதானமிழக்க வைக்கிறோம் என்று கதைச் சூழல் மூலம் வெளிப்படுத்தியிருப்பதுதான் கார்த்திக் சுப்புராஜ் படைப்பின் அழுத்தம்!

மற்றபடி… ஒரு திரைப்படத்துக்கான அம்சங்களான, திரைக்கதை, இசை , ஒளிப்பதிவு, படத்தொகுப்பு இவற்றைப்பற்றிப் பேச அறிவைப்பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்தப்படத்தை நான் உணர்வைப் பயன்படுத்திப் பார்த்ததால், அதனை லூசில் விட்டுவிட்டேன்.


எனக்கு பாகற்காய் பொறியல் பிடித்திருக்கிறது. அவ்வளவுதான் !

Friday, June 3, 2016

ஜில்லெட் - கேட்டால் கிடைக்கும்

பொதுவாக ஷேவிங்குக்கு ஜில்லெட் நிறுவனத்தின் மாக் 3 (Mach 3) அல்லது வெக்டர் பிளஸ் (Vector Plus) ஆகிய ரேஸர் மற்றும் பிளேடு ரகங்கள்தான் வாங்குவது வழக்கம்! 

அன்று கொஞ்சம் ஆர்வமாக வெக்டர் 3 என்ற ரகத்தில் 3 பிளேடு கொண்ட ஒரு ரேஸரைக்கண்டவுடன் , இதை முயன்றால் என்ன? என்ற எண்ணத்தில் வாங்கி வந்துவிட்டேன்.

 இரண்டு நாட்களுக்குப்பிறகு அதனைப் பிரித்து பயன்படுத்தினால், முதல் ஷேவே தோலின்மீது எரிச்சலாகப் பரவியது. பொதுவாக புதிய ப்ளேடில் இருக்கும் வழுக்கும் தன்மை இல்லை. இந்த ப்ளேடு மட்டும்தான் இப்படி என்று நினைத்து, அடுத்தடுத்தவற்றைப் பயன்படுத்தினால், அன்று முழுவதும் முகத்தில் யாரோ உண்மையிலேயே வன்மத்தில் ப்ளேடு போட்டமாதிரி எரிச்சல்.! அப்படியே அடுத்தது சரியாக இருக்கும் என்று முயற்சித்தே, அந்தப் பெட்டியில் இருந்த நான்கு ப்ளேடுகளும் காலி! மொத்தத்தில் வெக்டர் 3 ப்ளேடு சரியில்லை என்பதுதான் முடிவாக வந்தது.

 உடனே சிரமம் பாராமல், ஜில்லட்டின் இணையதளத்தைத் தேடி, அதன் வாடிக்கையாளர் பின்னூட்டப் பக்கத்துக்குள் நுழைந்து, வெக்டர் 3 உடனான எனது அனுபவத்தைப் பகிர்ந்து, இதுக்கு என்ன செய்யப்போறீங்க என்று எழுதினேன். 

அடுத்த இரண்டு மணி நேரங்களில், ஜில்லட்டின் வாடிக்கையாளர் சேவைப்பிரிவில் இருந்து அழைப்பு! 

வணக்கம் சார் ! உங்கள் பிரச்னையைத் தெரிந்துகொண்டோம். சிரமத்துக்கு மன்னிக்கவும். உங்கள் தோல் எரிச்சல் இப்போது எப்படி உள்ளது? 

அது பரவாயில்லை. வேறு ப்ளேடுக்கு மாறிவிட்டேன். சரியாகிவிட்டது.

 இல்லையென்றால் சொல்லுங்கள் சார்! அதற்கான மருத்துவச்செலவை நாங்களே ஏற்கிறோம். 

இல்லை.. ஒன்றும் பிரச்னை இல்லை! ஆனால், ஏன் அந்த வெக்டர் 3 இப்படி மோசமாக இருந்தது. 

அது தெரியவில்லை சார்! நீங்கள் வாங்கிய ரேஸர் மற்றும் ப்ளேடின் புகைப்படங்களையும், உங்கள் வீட்டு முகவரியும், நான் சொல்லும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். 

ஓக்கே அனுப்புகிறேன்.

இப்போது, உங்கள் பிரச்னையை தீர்க்கும் விதமாக, மீண்டும் ஏதாவது ரேஸர் அனுப்பி வைக்கட்டுமா? அல்லது உங்கள் தொகை திரும்ப வேண்டுமா? 

எனக்கு என் தொகையைத் திரும்ப அளித்தால் போதும்! 

நல்லது. நீங்கள் 150 ரூபாய்க்கு வாங்கியிருப்பீர்கள். நாங்கள் ரூ 300 க்கான BIG BAZAAR பரிசுக்கூப்பன் அனுப்பிவைக்கிறோம். உங்களுக்கு சம்மதமா? 

சரி! 

அப்படி முடிந்த உரையாடலுக்குப் பிறகு, 5 நாட்களில் எனது முகவரிக்கு, P&G நிறுவனத்திடமிருந்து, ஒரு கடிதமும், 300 ரூபாய்க்கான BIG BAZAAR VOUCHER ம் வந்திருக்கிறது. 


சாதாரண ப்ளேடுதானே என்று தூக்கிப்போட்டுவிட்டுப் போகாமல் சிறிது மெனக்கட்டதன் விளைவு, உழைத்த தொகை வீணாகாமல் இருந்திருக்கிறது. கொஞ்சம் விழிப்புணர்வோடு யோசித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் நியாயமாகக் கேட்டால் போதும், நியாயம் கிடைக்கும். #கேட்டால்கிடைக்கும்
by Surekaa Sundar

June 03, 2016 at 01:52PM
from Facebook
via IFTTTfrom Facebook
via IFTTT

Saturday, May 7, 2016

சரவணா ஸ்டோர்ஸ் ! BRANDமாண்டமாய் !!சரவணா ஸ்டோர்ஸ் விளம்பரம் பார்த்து ஏகப்பட்ட விவாதங்கள்!
அதற்குள் இருக்கும் நேர்மறை சூட்சுமம் நமக்கு புரிவதில்லை.
சரவணா ஸ்டோர்ஸ் 20 ஆண்டுகளுக்கு முன் ஒரு சாதாரண பெரும் கடை! ஆனால் இப்போது ஒரு பிராண்ட்..!
அதற்கு தேவையில்லாமல் ஒரு நடிகருக்குக் கோடிக்கணக்கில் கொடுத்து, அவர் முகத்தை அந்த நிறுவனத்துக்கு அடையாளமாக்குவது ஒரு பிராண்டுக்கு தேவையில்லை.
மேற்கத்திய பிராண்டுகள் , பெரும்பாலும் ஒரு குறியீட்டைக் கொண்டிருக்கும் அல்லது அதன் முதலாளியின் படத்தைத்தான் கொண்டிருக்கும்.
உலகெங்கும் பொரித்த கோழி விற்கும் KFC யின் பிராண்ட் பாருங்கள்.. அதன் முதலாளியின் படம்தான் இருக்கும்.
நிதி நிர்வாகம் செய்யும் FRANKLIN TEMPLETON பாருங்கள்! அதன் முதலாளி படம்தான் இருக்கும்.
பாலு ஜுவல்லர்ஸ் முதலாளிதான் அதன் பிராண்ட்
ரத்னா ஸ்டோர்ஸுக்கு முதலாளிதான் பிராண்ட்
வசந்த் அண்ட் கோவுக்கு முதலாளிதான் பிராண்ட்
சரவணா ஸ்டோர்ஸின் மூலக் குடும்பத்துக்கு இன்னும் அண்ணாச்சியின் சிரித்த முகம்தான் பிராண்ட்!
அதனால், அவர் முகம் காட்டியதில் ஒன்றும் தவறில்லை.!!
நடிகர்களோ, விளையாட்டு வீரர்களோ, இன்னொரு பிராண்டுக்குச் செல்ல வாய்ப்பிருக்கிறது. ஆனால், அந்த முதலாளிகள் மாற மாட்டார்கள்.
மேலும், அவரை நமக்கு முன்னரே தெரியாது என்பது மட்டும்தான் நமது பிரச்னை!
தெரிந்திருந்தால் இவ்வளவு கலாய்த்தல் நடந்திருக்காது.
மேலும்..
அவர் ஒன்றும் விபரம் தெரியாதவரோ, விளம்பரத்துக்கு முகம் காட்ட ஆசைப்படுபவரோ கிடையாது.
அந்த விளம்பரத்தில் வருபவரின் மகளுக்குத் திருமணமாகிவிட்டது.
அவர் ஆரம்பத்திலிருந்தே பிராண்ட் பற்றி அறிவு கொண்ட மனிதர்!
பெரிய நடிகரை அணுகி.. அவர் கேட்ட தொகை இவர்களுக்கு அதிர்ச்சி அளித்ததால்கூட களத்தில் இறங்கியிருக்கலாம்.
ஆனால்.. அவர் முகம் இப்போது சரவணா ஸ்டோர்ஸின் பிராண்ட் ஆகிவிட்டது.
இதனை ஒரு சரியான பிராண்ட் நடவடிக்கையாகத்தான் பார்க்கிறேன்.
மேலும்.. அவரது முகம் 1:1.6 எனப்படும் பிராண்ட் விதிப்படி சரியாக இருக்கிறது.
அழகை மீறி, விளம்பர உளவியலுக்குச் சரியான முகம்...!!
இன்னொரு செய்தி.. கடந்த ஒரு ஆண்டில், உலகளாவிய வகையில், பிராண்டுக்கு பிரபலங்களை புக் செய்வது 31% குறைந்திருக்கிறதாம்.
ஆக.. சரவணா ஸ்டோர்ஸ் உண்மையிலேயே Brandமாண்டமாய்த்தான் திட்டமிட்டிருக்கிறார்கள்.

Friday, December 18, 2015

வாயுள்ள பிள்ளை Ver. 2.0


இந்த மாத பில் மழை !

ஏர்டெல் பிராண்ட்பேண்ட் பில் வந்தது... 

சென்னையில் ஒன்றுமே நடக்காததுபோல், முழு வாடகையும் போட்டு சத்தமில்லாமல் 100 ரூபாய் அதிக பில்லும் ஆக்கி அனுப்பியிருந்தார்கள்.

உடனே..
1ம் தேதி முதல் 10 தேதி வரை உங்கள் சேவையே இல்லாதபோது எப்படி முழு பில்லும் அனுப்பியிருக்கிறீர்கள்? என்று கேட்டு ஒரு மெயில் அனுப்பினேன்.
சில மணி நேரங்களில் ஒருவர் பேசினார்.

ஓக்கே சார் ! உங்களுக்கான 10 நாட்களுக்கான பில் தொகையை கழித்துவிடுகிறோம் என்றார். அதேபோல் கழித்து SMS வந்தது.

மகிழ்ச்சி.. !! அதே நேரத்தில் மொத்தத் தொகைக்கு போட்டிருக்கும் சர்வீஸ் டேக்ஸையும் சரியாகக் கழித்து பில் போடுங்கள் என்று சொல்லியிருக்கிறேன்.

ஏனெனில்..உங்களுக்கு 1299 ரூபாய் வாடகை எனில் 14.5% சேவை வரி சேர்த்துப் போடுவார்கள் . அதாவது 188.35. ஆக நீங்கள் கட்டவேண்டிய தொகை 1487.35. ஆனால், நீங்கள் கழிக்கச் சொல்லி கேட்டதும். திறமையாக 1299/30 = 43.3... அதை 10 நாட்களுக்கு சேர்த்து 433 கழித்து உங்களை குஷிப்படுத்துவார்கள். 

ஆனால், 1299- 433 = 866 அதற்கு சேவை வரி 125.57 தான்... அதற்குப் பதிலாக நாம் சேவை வரி 188.35 கட்டுவோம். அதில் 63 ரூபாயை அடிப்பதில் அவர்களுக்கு ஒரு குரூர வியாபார தந்திரம்.. அதை உடைக்கத்தான் மீண்டும் மெயில் போட்டிருக்கிறேன். 

இவங்க செய்யும் பாவத்துக்குத்தான் நம்பளும் அனுபவிக்கிறோம்.. ! 


UPDATE : இன்று (18.12.2015) காலை 63 ரூபாயும் கழித்து, மின்னஞ்சல் வந்துவிட்டது. வாயுள்ள பிள்ளை பிழைக்கும் Ver.2.0 !! 


Sunday, November 29, 2015

ஏமாற்டெல்!


இந்த மாத ஏர்டெல் பில் கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது...!
கொஞ்சம் நோண்டலாம் என்று பார்த்தால்..
பெரிய டகால்ட்டி வேலை நடந்திருக்கிறது.

நான் பேசியது 14 மணி நேரம் 13 நிமிடங்கள் : அப்படியெனில் 853 நிமிடங்கள்தான் எனக்கு பில் செய்திருக்கவேண்டும். ஆனால், கொஞ்சம் தள்ளி அதனை யுனிட்டாக மாற்றுகிறேன் என்று சொல்லி 950 ஆக மாற்றியிருக்கிறார்கள். இதைக் கணக்கு செய்தால்.. 97 நிமிடங்கள் அதிகம் : அதன் படி ஒரு நிமிடத்துக்கு 40 பைசா வீதம் என்னிடம் 38.80 அதிகமாக பில் செய்திருக்கிறார்கள்.


இதைக் குறிப்பிட்டு ஒரு விரிவான மெயில் அனுப்பினேன்.

அது அப்படி இல்லை.. இப்படி என்று ஒரு மொக்கை கால்குலேஷன் சொல்லி மெயில் வந்தது.

அதற்கும் கேள்வி கேட்டு, யூனிட் என்றால் என்ன நிமிடம் என்றால் என்ன.. ஒரு நிமிடத்துக்கு எத்தனை யூனிட்? அதனை நான் இணைப்பு வாங்கும்போது ஏன் சொல்லவில்லை.. ஆக, இத்தனை ஆண்டுகளாக என்னை இப்படித்தான் ஏமாற்றுகிறார்களா என்று கேட்டு அடுத்த மெயில் போட்டேன்.

இப்போது ஒரு நபர் அழைத்து.. உங்கள் கணக்கில் 38 ரூபாய் கழித்துவிட்டோம் என்றார்... அதற்கான வரியையும் சேர்த்து 44.42 வருது.. அதனையும் கழியுங்கள் என்றேன். உடனே ஏதோ கணக்குப்போட்டு, என் கேள்விகளுக்கு பதிலும் சொல்லமுடியாமல், 42 ரூபாயை கழித்துவிட்டார்.

ஆக..
நேரடியாகக் கேள்வி கேட்பார்கள் என்று தெரிந்தால், இவனிடம் இப்படி காசை அடி என்று ஒரு நிர்வாகமே செயல்படுகிறது !!

இந்த 43 ரூபாய்க்கு இத்தனை நேர விரயமா? இந்த நேரத்தில் உங்கள் வேலையில் 1000 ரூபாய் சம்பாதித்திருக்கலாம் என்று குதர்க்கமாகத் தோன்றும் !!

இப்படி 43 ரூபாய்களாக கொள்ளை கொடுக்காமல் இருந்தாலே போதும். இவர்களுக்கும் கொடுக்க சேர்த்து சம்பாதிக்க வேண்டியிருக்காது. !!

யார் நம்மிடம் கொள்ளை அடித்தாலும் என்ன பெரிய விஷயம் என்று நினைப்பதால்தான்.. நாமும் யாரிடமும் கொள்ளை அடிக்கலாம் என்ற எண்ணம் எல்லா இடத்திலும் புரையோடிப்போயிருக்கிறது.

200 ரூபாய் கொடுத்தா குறைஞ்சா போயிடுவீங்கன்னு கேட்பவர்கள் அதிகமானதுக்குக் காரணம்.. எங்கெங்கு நோக்கிலும் இதுபோன்ற அடாவடி அல்லது அறிவாளித் திருடர்கள் அதிகரித்தால்தான்!

விலைவாசி எப்படி ஏறுகிறது என்று இப்போது புரியும் என்று நினைக்கிறேன். வேறு யாரும் ஏற்றவில்லை. நாம் கேள்வி கேட்கவிடாமல் வாங்குகிறோம். கேள்வி கேட்காமல் கொடுக்கிறோம்.

மீண்டும் செல்வேந்திரன்தான் நினைவுக்கு வருகிறார் !

“கண்டக்டரிடம் ஒரு ரூபாய்க்குச் சண்டை போடுபவனை ஏளனமாகப் பார்க்காதீர்கள்.. பாவம்! உழைத்துச் சம்பாதித்தவனாய் இருப்பான்!” என்ற ரீதியில் எழுதியிருப்பார்.

கொஞ்சம் விழிப்புணர்வுடன் கேட்போம்..!! நம் பிள்ளைகள் நம்மைப் பார்த்துதான் வளர்கின்றன ! ‪#‎கேட்டால்கிடைக்கும்‬

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...