Monday, October 31, 2011

பெயருக்கு முன்னால் 

           பிறந்தவுடன் , அழைப்பதற்காக வைக்கப்பட்ட பெயர் சிலருக்கு ஒன்றோடு நின்றுவிடும். ஆனால் சிலருக்கு, வீட்டில் கூப்பிட ஒரு பெயர், அதிகாரப்பூர்வமாக பதிவேடுகளிலும், பள்ளியிலும் ஒரு பெயர், நண்பர்கள் மத்தியில் ஒரு பட்டப்பெயர் என்று பல்வேறு பெயர்களில் வலம் வருவது உண்டு.
     அதில் விதவிதமான பெயர்கள் கொண்டு இருந்தால், எந்தக்கூட்டத்தில் இருக்கிறோமோ, அதற்கு ஏற்றார்ப்போல் காதுகளையும் தயார் செய்து கொள்ளவேண்டும். 

எங்கள் வீட்டில் எனக்கு சுரேஷ் என்று பெயர்! பள்ளியில் சுந்தர்…! 

     வீட்டில் என்னை யாரும் பள்ளிப்பெயர் கொண்டு அழைக்கமாட்டார்கள். ஆனால் பொதுவில், பள்ளியில், கடைவீதியில் சுரேஷ் என்று யாராவது கூப்பிட்டால், ஒரு கணம் திரும்பிப்பார்க்கத் தோன்றிவிடும். ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்த பள்ளி நண்பர்கள், அந்தத்தெருவில் வந்து பெயர் சொல்லிக்கேட்க, அப்படி யாரும் இந்தத் தெருவில் இல்லை என்று சொல்லிவிட்டார்கள். பின்னர் பல்வேறு விளக்கங்களுக்குப் பிறகு..ஓ..சுரேஷா..! அடுத்தவீடுதான் .என்று சொல்லி, வெறுப்பேற்றியிருக்கிறார்கள்.

           அனேகமாக எங்கள் தெருவில் எல்லோருக்கும் அந்தப்பிரச்னை இருந்தது. எனக்காவது பரவாயில்லை. இரண்டு பெயர்களும் சொல்லிக்கொள்ளும்படி இருக்கும். சிலருக்கு வீடுகளில் கூப்பிடும் பெயரில் பல்வேறு ஆச்சர்யங்களும், அதிர்ச்சியும் ஒளிந்திருக்கும்..


எங்கள் வீட்டுக்கு வைக்கோல் கொண்டுவரும் பெரியவரைக் கூப்பிடும் பெயர் கூளார்.! எதிர்வீட்டு பெரியம்மாவை அழைக்கும் பெயர் அக்கம்மா ! அவரின் அக்கா பெயர் பட்டம்மா! அவர்களின் இயற்பெயர் அனேகமாய் நாங்கள் அறிந்திருக்கவே இல்லை.

     பெயர் வைப்பது வைபோகமாகக் கொண்டாடப்பட்டாலும், ஆண்டாண்டு காலம் நம்மை அடுத்தவர் அழைக்கும் பெயர் கணநேரத்தில் வைக்கப்பட்டு விடுகிறது. காரணப்பெயர் நிலைத்துப்போய் , காகிதப்பெயர் ஒளிந்து நிற்கிறது. அதையும் மீறி பதிவுலகம், எழுத்து என்று வரும்போது, நாமே ஒரு பெயரைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்கிறோம்  சில நேரங்களில் காரணப்பெயரை வேண்டாமென்று நினைத்தாலும், இறுக ஒட்டிக்கொண்டுவிடுகிறது. பின்னர் அதுவே பழகிப்போய் ஏற்றுக்கொள்ளும் மனோபாவம் வந்துவிடுகிறது.. சில நேரங்களில் காரணமில்லாத பெயர்கள் காலாகாலத்துக்கு வருகிறது.

   எங்கள் அத்தையின் மூன்றாவது மகனுக்கு ‘இண்டாயி’ என்று பெயர்..! இன்றுவரை அதற்கான சரியான அர்த்தம் எங்கள் யாருக்கும் தெரியாது. இப்போதுதான் அவன் இயற்பெயர் சொல்லிக்கூப்பிடுகிறோம்.

என் நண்பன் ஒருவனை நாங்கள் அழைக்கும் பெயர் – அப்புரு, அவன் உண்மையான பெயர் அந்தோணி ராஜேந்திரன். 

    இன்னொரு நண்பனை மாரிமுத்து என்று அன்போடு அழைத்துவந்தோம். ஒருமுறை திருவிழாவுக்கு வாங்கடா என்று அவர்கள் கிராமத்துக்கு எங்களை வலுக்கட்டாயமாக அழைத்து வினையை வீட்டுக்கு அழைத்துச்சென்றான். ஆரம்பத்தில் வீட்டில் அனைவரிடமும் கண்ணைக்காட்டிக்கொண்டே இருந்தான். அவன் அக்கா ஒரு முறை..கூ..மாரிமுத்து ! என்று அழைத்ததை கவனித்தாலும் அர்த்தம் தெரியவில்லை. இரவு சாப்பிட்டுவிட்டு நானும், இன்னொரு நண்பனும் ஊரில் நடக்க ஆரம்பிக்க, எங்களைப்பார்த்து ஒரு பெரிசு..’ கூளையன் கூட்டாளிகளா?’ என்று கேட்டார். நாங்கள் குழப்பமாக, ‘இல்லை! மாரிமுத்து வீட்டுக்கு வந்திருக்கோம் என்றோம். ஓ! இப்படித்தான் பேரு வச்சிக்கிட்டு பள்ளிக்கூடத்துல திரியிறானா அந்தக் கூளையன்? என்று பெரிசு கேட்க, எங்களுக்கு ஏரியலில் துவைத்ததுபோல் 'பளிச்'சென்று விளங்கியது. பின்னர் இரண்டு ஆண்டுகள், மாரிமுத்து என்ற பெயரை அவனே மறக்குமளவுக்கு கூளையனுக்குக் கொடி ஏற்றிவிட்டோம்.

      என் தூரத்து உறவுக்காரப்பையன் ஒருவனை ‘அய்யா’ என்றுதான் அவன் குடும்பம் அழைக்கும். நிறைய குடும்பங்களில் ‘தம்பி’, சின்னவனே, ராஜா, குட்டி என்ற பெயர்கள் மிகப்பிரபலமாக இருக்கும். கொஞ்சம் அன்பான பிள்ளையை ‘சாமீ’ என்று அழைப்பார்கள்.

    கிராமங்களில் அழைக்கும் பெயர்களில் இருக்கும் நையாண்டி உலமறியாதது. பெருமூக்கன், கோழிவாயன், சிலுப்பி, செண்ட்டரு, பாவாடை, சொம்பு, ஊத்தை, புளிச்சட்டி, கிளீனு, எலந்தப்பழம்…இவர்களெல்லாம் நான் சந்தித்த கிராமத்து மனிதர்கள்.! இவர்களது உண்மையான பெயர் இன்றுவரை எனக்குத்தெரியாது.
        
        வட இந்தியக்குடும்பங்களில் மிகவும் வேடிக்கையான பெயர்கள் இருக்கும். ஜிக்கு, பப்லூ, பண்ட்டி, முன்னா, சோனு, புஜ்ஜு என்று அழைக்கும்போது மூன்றெழுத்தில் அவர்கள் காட்டும் அன்பு வியக்கவைக்கும். நான் டெல்லி நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, எனக்கு ஒரு வட இந்திய அதிகாரி இருந்தார். அவர் பெயர் சதீஷ் அஹுஜா..! ஆனால் போனில் பேசும்போது ‘மைன் டிங்கி போல்ரஹாஹூம்! என்று ஆரம்பிப்பார். எனக்குச் சிரிப்பாக வரும்.

       நான் தஞ்சையில் வேலை பார்த்தபோது சொல்யூசன் என்ற சைக்கிள் ரிப்பேர் பார்க்கும் ஒரு பெரியவர் அறிமுகமானார்.. சிறுவயதிலிருந்தே அந்தப்பெயர்தான் என்றார். யார் வச்சாங்க? என்று கேட்டபோது புன்னகைத்தார். 
   சில மாதங்களில் அவர் நோய்வாய்ப்பட்டு, அரசு மருத்துவக்கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, சென்று பார்த்தேன். அவரை உற்சாகப்படுத்தும் வகையில் பேச ஆரம்பித்து, உங்க உண்மையான பெயர் என்ன என்று கேட்டேன். 

        இதுவரைக்கும் யாருமே கேட்கலை! நீயாவது கேட்டியே? பாவம் எல்லாருக்கும் அவுங்க அவசரம். என்றுவிட்டு…’ரமணி’ என்று புன்னகைத்தார். 
 
     ’நான் சைக்கிள் கடையில் வேலை பாத்தப்ப ஒரு புள்ளையப் பாத்தேன். அதுவும்  பாக்கும். ரெண்டுபேருக்கும் பிடிச்சுப்போச்சு! ஏஞ்சொல்லு? அது பேரும் ரமணி! அதூட்டு சைக்கிளைப் பஞ்சர் பாக்க அன்னிக்கு கடையில சொலூஷன் இல்லை. மழைத்தூறல் வேற,! நானே அலைஞ்சு திரிஞ்சு வாங்கியாந்து ஒட்டிக்குடுத்தேன். அது சந்தோசத்துல வரேன் சொல்யூஷன்னு சொல்லிட்டுப் போச்சு! அதான் நானே அந்தப்பேரை வச்சுக்கிட்டேன்.!’ என்றார்.

அவுங்க எங்க ? என்றேன். 

அதெல்லாம் எதுக்கு? நாந்தான் தனியா இருக்கேனே! பத்தாதா? என்றார்.

பின்னர் நான்கைந்து நாட்கள் வெளியூர் சென்றுவிட்டு வந்து பார்த்தபோது, சைக்கிள் கடையைப் பார்த்தேன். பூட்டியிருந்தது. பக்கத்துக்கடைப் பையன் சொன்னான். 

‘அண்ணே! விசயம் தெரியாதா? சொல்யூஷன் காலியாயிருச்சு!’

Sunday, October 30, 2011

யுடான்ஸ் வணக்கம்!
திரட்டியாக ஆரம்பிக்கும்போது , நண்பர்கள் ஆரம்பித்திருக்கிறார்கள் என்ற அளவில்தான் தெரியும். அப்புறம் அது பதிவர்களிடையே பரவ ஆரம்பித்தது. அப்புறம் குறும்படங்கள் காட்ட டிவியும் இணைத்தார்கள். பின்னர் நேரடியாக ஒரு விழாவை ஒலிபரப்பினார்கள். திடீரென்று பரிசலும்,ஆதியும் நடத்தும் சவால் சிறுகதைப்போட்டியை வழங்கினார்கள். அலெக்ஸாவில் ரேட்டிங் அள்ளினார்கள். வார நட்சத்திரம் தேர்ந்தெடுத்து, முகப்பில் வைத்தார்கள். குடான்ஸாக ஆரம்பித்தவர்கள் யுடான்ஸாக , நீங்களும் ஆடுங்களென்று பிரமிக்கவைக்கிறார்கள் என்று நினைத்துக்கொண்டிருக்கும்போதே, கேபிள் அண்ணன் கூப்பிட்டு நீங்க அடுத்த வாரம் என்றார். நான் அதற்கடுத்த வாரம் என்றேன்.சரி என்றார். நானும் விட்டுவிட்டேன். சொன்னபடி சரியாகக் கூப்பிட்டார். நான் ஜகா வாங்க முயற்சித்தேன். நடக்கவில்லை. 

இதோ.. வந்து நிற்கிறேன்.

அதுவும் வாரம் ஒரு பதிவாவது எழுதாமல், மாதத்துக்கே இரண்டு, மூன்று என்று சுருங்கிப்போன சுண்டெலிப் பதிவனான என்னைத் தூக்கி நிறுத்தினால், இந்த வாரம் கட்டாயம் 7வது தேறிவிடும் போலிருக்கிறது. ஜெய் ஜோசப் சங்கர ஜேகே !  

திரட்டியின் முகப்பில், நான் இருப்பதைப் பார்த்து நம்பி எதிர்பார்த்தீர்களென்றால் ஏமாந்து போகும் சாத்தியம் நிறைய உண்டு! ம்க்கும்..என்று செருமினீர்களென்றாலும் ஏமாறும் வாய்ப்பு இருக்கிறது. பதிவர்களின் அன்பும், அறிவும் அறிந்தவன் என்ற முறையில், என்னால் முடிந்ததை..(சட்டியில்………..அகப்பையில்…..….) டைப்புகிறேன்.

இது..உளறலாகத் தெரிந்தால்,..மிகச்சரி! திடுக்கென்று மேடை ஏறி, அதுவும் ஸ்பாட் லைட் நம்மைத் துரத்தும்போது இருக்கும் கிடுக்….மிரட்சிதான்..! வேறொன்றுமில்லை.

அனைவருக்கும். யுடான்ஸ் வார வணக்கங்கள்!

Thursday, October 27, 2011

ஏழாம் அறிவு

    


      பிரம்மாண்டமான எதிர்பார்ப்பைத் தூண்டியிருந்த ஏழாம் அறிவு , தமிழர்களின் பெருமையை உலகத்துக்குப் பறைசாற்றும் படைப்பாக வெளிவந்திருக்கிறது.
1600 ஆண்டுகளுக்கு முன், காஞ்சியை ஆண்ட பல்லவ வம்ச போதிவர்மன் (சூர்யா) , ராஜமாதாவின் உத்தரவுப்படி சீனாவுக்குச் செல்கிறான். அங்கு ஒரு கிராமத்தில் ஏற்பட்ட கொடிய நோயைத் தன் மூலிகை மருத்துவத்தால் தீர்க்கிறான். அதன் சூட்சுமத்தை சீன மருத்துவர்களுக்குக் கற்றும் கொடுக்கிறான். மேலும், சீன மக்களை எதிரிகளிடமிருந்து காத்து, தற்காப்புக்கலைகளை போதிக்கிறான். அவர்களால் போற்றப்பட்டு தாமோ என்று அழைக்கப்படும் குருவாகிறான். இந்தியா திரும்ப நினைக்கும்போது, சீனர்களின் ஆசைப்படி, அவர்கள் கொடுத்த நஞ்சு கலந்த உணவை உண்டு அங்கேயே அடக்கம் செய்யப்படுகிறான்.
         
        கதை நிகழ்காலத்துக்கு வருகிறது.

       அர்விந்த் என்ற சர்க்கஸ் கலைஞனாக சூர்யா! அங்கு குரங்கு கேட்டு வரும் மரபணு அறிவியல் மாணவி சுபா (ஸ்ருதி)வைக் கண்டு மயங்கி,  அவளைச்சுற்ற ஆரம்பித்து, சில சுவாரஸ்ய கலாட்டாக்களுக்குப்பிறகு தன் காதல் சொல்ல, அவள் மறுக்கிறாள்.
      சீனா, இந்தியாவில் ஆபரேஷன் ரெட் என்ற ஒரு தாக்குதலை திட்டமிடுகிறது. அதற்காக அவர்கள் நியமிக்கும் ஆள், டாங்.லீ.(ஜானி). அவன்மூலம் இந்தியாவில் 1600 ஆண்டுகளுக்கு முன் சீனாவில் வந்த கொடிய நோய்க்கிருமியை ஒரு நாய் மூலம் பரப்பி, இந்தியா கைபிசைந்து நிற்கும்போது, அதற்கான மருந்தைக் கொடுத்து,  பதிலாக சீனா கேட்பதை இந்தியாவைச் செய்யவைக்கலாம் என்பதுதான் திட்டம். மேலும், இந்த மூலிகை ரகசியம் தெரிந்த, ஒரே ஆளான போதி தர்மரின் டி என் ஏ பற்றி ஆராய்ச்சி செய்து மீண்டும் அவரது வம்சாவளி மூலம்  போதி தர்மரை கொண்டுவரும் முயற்சியில் இருக்கும் ஸ்ருதியைக் கொல்லும் பணியும் டாங் லீக்குத் தரப்படுகிறது.
    
   போதிவர்மரின் வாரிசான அரவிந்தை , சுபா நீண்ட நாட்களாக திட்டமிட்டு பின் தொடர்ந்து, அவனது டி என் ஏவை எடுத்து ஆராய முயற்சிப்பது அவனுக்குத் தெரியவருகிறது. இது பற்றி அவன் சுபாவிடம் கேட்க, அவள் கூறும் தகவல்களில் பற்றிக்கொள்கிறது பரம்பரை டி என் ஏவுக்கும், அதை பலி வாங்க நினைக்கும் சீன டாங்குக்குமான பகை!

    டாங்கின் மிகப்பெரும் சக்தி என்ன? அரவிந்த்துக்கு போதி தர்மரின் ஆற்றல் வருவது எப்படி? போன்ற சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் நிறைந்த காட்சிகளுடன்,  அறிவியல் கலந்து அழைத்துச்செல்கிறது மீதிக்கதை.!

    
     தமிழன் கற்றுக்கொடுத்த வித்தையை , தமிழனுக்கு எதிராகவே பயன்படுத்தினால் என்ன ஆகும்? என்பதுதான் அடிநாதம். அது மிகச்சிறிய முடிச்சில் ஆரம்பித்து, பிரம்மாண்டத்தைத்தொடுகிறது.

அதையும் மீறி, நம் தேசத்தின் அறிவியல் என்பது வாழ்வு சார்ந்தது. அதை நாம் காரணமே இல்லாமல் புறக்கணித்து இன்று வெளிநாடுகளில் கையேந்துகிறோம் என்று கதாபாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் இயல்பாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ்!
ஒரு புராணக்கதையுடன் , நிகழ்காலத்தைப் புனையும்போது ஒரு சமூகக்காரணம் இருந்தால்தான் வெற்றிபெறும் என்பது திரை நியதி! அதை தெளிவாகப் பயன்படுத்தியிருக்கிறார். இயக்குநரின் பெயர் போடும்போது எழுந்த கைதட்டல் மற்றும் விசில் ஒலியே அவரைப்பற்றிய எதிர்பார்ப்பின் வெற்றி!
ஷாவ்லின் கோவில் வரலாறு, குங்பூவில் சூறாவளி உருவாக்கும் முறை, பல்லவ, சீன கால உடைகளில் கவனம், போதிதர்மனின் குதிரைப்பயண நிலப்பரப்புகள் என பார்த்துப் பார்த்து செய்த குழு முயற்சியைப் பாராட்டவேண்டும்.
எல்லாக் கொலைகளையும் காட்டிக்கொண்டிருக்காமல், சிறு சிறு சுவாரஸ்யங்களில் புரியவைத்திருக்கிறார் இயக்குநர். கால்டாக்சி அலுவலகத்திலிருந்து கடலை தின்றுகொண்டே படியிறங்கி வருவது, பாலத்தில் அனைவரும் ஒருபக்கம் ஓடிப்போய் எட்டிப்பார்ப்பது என தமிழ் ரசிகனை அடுத்தகட்டத்துக்கு அழைத்துச் செல்லும் முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.


போதிதர்மனான சூர்யாவை சீன மக்கள் எதிரியாகப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான புன்னகையுடன் குதிரையைப்பிடித்துக்கொண்டு வெளியேறும் காட்சியில், அவமானப்படும்போது இருக்கவேண்டிய அமைதியைக் கண்முன்னே கொண்டுவந்திருக்கிறார் சூர்யா!.. தமிழ், வீரம், துரோகம் பற்றிப்பேசும்போது காட்டும் உணர்ச்சிகளில் நடிப்பா, உண்மையா என்று இனம் காணமுடியவில்லை. சூர்யாவுக்கு அழுத்தமான வாய்ப்பு! அவரது அறுபது வயதுக்குப் பின்னும் பேரன்களிடம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளும்படியான பாத்திரம்.!
வித்தியாசமான குரல் வளத்துடன், நல்ல தமிழ்பேசும் நாயகியாக ஸ்ருதிஹாசன்! காட்சிப்பொருளாக வராமல் நன்றாகவே நடித்திருக்கிறார். அவர் தன் அப்பா பற்றி சொல்லும்போது தியேட்டரில் மிகப்பெரிய ஆரவாரம்.! அவர் கூறுவது வேறு! ஆனாலும் ஆடியன்ஸ் கமல், கமல் என்று கத்தாமல் அந்தக்காட்சி முடியவில்லை.
படத்தின் அடுத்த ஹீரோ...வில்லனான ஜானி! சிறு கண்ணில் சீற்றம் காட்டி, தன் வித்தையை வெளிப்படுத்துவதில் பின்னுகிறார். ஒவ்வொருவராகப் பார்த்து அடிக்க அனுப்பும் காட்சியில் அவருக்கும் கைதட்டல் அள்ளுகிறது.
அந்தச் சாக்கடை அள்ளும் தொழிலாளியும், பை வைத்த பெண்ணும் குங்பூ சண்டை போடும்போது அதகளப்படுத்தியிருக்கிறார்கள்.
இன்னும் ஒரு ஹீரோவைப்பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். சண்டைப்பயிற்சியாளர் பீட்டர் ஹெய்ன்.! விளையாடியிருக்கிறார் மனிதர். ! ஒரு தவம்போல் சண்டைக்காட்சி அமைத்திருப்பது தெரிகிறது. தமிழ்ப்படத்துக்கு இது மிகவும் புதிது. அந்நியனின் கராத்தேவும், 7ம் அறிவின் குங்பூவும் முழுக்க வேறு விதமாகத் தெரியவைத்திருக்கிறார்.
இசையில் கொஞ்சம் கஜினி வாசனை! அதுவும் உன்னித்துப்பார்த்தால்(கேட்டால்)தான் தெரியும். நிறைய போலீஸைக் கொன்றவனை போலீஸ் தேடவே இல்லையா? நாட்டைக் காட்டிக்கொடுக்கும் விஞ்ஞானியை மாணவி ஏன் அரசிடம் ஒப்படைக்கவில்லை? சர்க்கஸ் கலைஞர் பாதிப் படத்துக்குப்பின் ஏன் வேலைக்கே போவதில்லை? இடையில் ஏற்பட்ட கொலைகள் மற்றும் டாங் லீ பற்றி ஏதாவது விசாரணைக் காட்சிகள் இருந்திருக்க வேண்டாமா? என சிறு சிறு கேள்விகள் எழுந்தாலும், சுவாரஸ்யமான திரைக்கதை தலையைத் தடவிக் கூட்டிச்செல்கிறது.


ஒரு முழுமையான பொழுதுபோக்குச் சித்திரத்தில் , அறிவியலும், அறிவுரையும் சுவாரஸ்யத்துடன் மிகச்சரியாகக் கலந்து கொடுக்கப்பட்டிருக்கிறது. 
எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒரு வித்தியாசமான புனைவுடன் கூடிய பொழுதுபோக்குப்படம் பரிமாறப்படுகிறது.

Tuesday, October 18, 2011

கண்ணனும், கண்ணனும் (சவால் சிறுகதைப்போட்டி 2011)வாகனங்கள் எரிபொருளைத் தின்றுவிட்டு, எரிச்சல் தாங்காமல் ஓடிக்கொண்டிருந்தன. அவ்வப்போது சிகப்பு, மஞ்சள், பச்சை என்று விளக்குகளைப்போட்டு ஓட்டத்தைத் சீராக்கிக்கொண்டிருந்தன மஞ்சள் மரங்களாய் நின்றுகொண்டிருந்த சிக்னல் கம்பங்கள்.

சென்னையில், தனது அலுவலகத்தின் 3வது மாடியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த கண்ணன், ‘அட ! எப்படியெல்லாம் நமக்கு சிந்தனை வருது?’ என்று நினைத்துக்கொண்டே திருப்பூரிலிருக்கும் தன் நண்பன் கண்ணனுக்கு போனை ஒற்றினான்.

‘டேய்! ஆபீஸ் வந்துட்டியா?’

’வந்துட்டேன்! சொல்லு?’

’இந்த வருஷமும் ஒரு சிறுகதைப்போட்டி வச்சு,நம் மக்கள் சிந்தனையைத் தட்டிவிடுவோமா?’

’நானும் நினைச்சுக்கிட்டே இருந்தேன் கண்ணா! ஓ. எஸ்.! செஞ்சுரலாம்.’

சென்னைக் கண்ணனும், திருப்பூர் கண்ணனும் நண்பர்கள். தங்கள் வாழ்வியல் சூழல் தடுத்ததால், கற்பனைக் குதிரைகளை லாயத்தில் கட்டி வைத்திருந்தவர்கள். இணைய தளத்தில் வலைப்பூ என்று ஒன்று உருவானபோது, அதைப்பயன்படுத்தி குதிரையை ஓடவிட, அற்புதமான பதிவுலக எழுத்தாளர்கள் என்று அறியப்பட்டவர்கள். கதைகள், அனுபவங்கள், சினிமா விமர்சனங்கள் என கலந்து கட்டி அடிப்பார்கள். இருவருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை, கிண்டலும், நகைச்சுவையும் எழுத்தில் ஒட்டிக்கொண்டிருக்கும் பாங்குதான்! இதனாலேயே மிகப்பெரிய வாசகர் கூட்டம் இவர்களுக்கு இருந்தது.  

எப்போதாவது நேரில் சந்தித்தாலும், அடிக்கடி போனில் நட்பை வளர்த்து உறுதி ஆக்கியிருந்தார்கள். ஏறத்தாழ இருவரின் இயல்பும், ரசனைகளும் ஒன்றாயிருந்ததே காரணம்.! இருவர் பெயரும் கண்ணன் என்று இருந்தது ஒரு கூடுதல் சிறப்பே!

இருவருக்கும் கதை எழுதுவதில் இருந்த ஆர்வம், நாம் ஏன் வலையுலகத்தில் இயங்கும் எழுத்தாளர்களுக்கென கதைப்போட்டி வைக்கக்கூடாது என்று தோன்ற, ஒரு ஆண்டுக்கு முன் ‘கண்ணனும், கண்ணனும் கலக்கும் கதைப்போட்டி ‘ என்று அர்த்தப்படும் ’4க’ என்று போட்டிக்குப் பெயரிட்டான் திருப்பூர் கண்ணன். அவன் எப்போதும் இது போன்ற வார்த்தை ஜாலங்கள் செய்வதில் வித்தகன்.!

     உரையாடலை, திருப்பூர் கண்ணன் தொடர்ந்தான்.

‘போன வருஷம் சம்பந்தமில்லாத வார்த்தைகளைக் கொடுத்து எழுதச்சொன்னோம். அதுவும் ஒரு க்ரைம் சப்ஜெக்ட்!’

’ஆமா! நம்ப மக்கள் கலக்கிட்டாங்க இல்ல?’

‘இந்த வருஷம் இன்னும் புதுமையா நம்ப ’4க’ போட்டியை நடத்தணும் கண்ணா!

எப்படிப் பண்றது?

’எனக்கு ஒரு யோசனை!’

’சொல்லு!’

’ஏதாவது ஒரு காட்சியை வச்சு கதை பண்ணச் சொல்வோமா?’

’ம்.. செய்யலாம்..! ஆனா அதுதான் எல்லாப் பத்திரிக்கையிலயும், காட்சிக்கு கதை, கவிதைன்னு போட்டுத் தாக்குறாங்களே!’

’பரவாயில்லை..! ஆனா அந்தக் காட்சியை ஒரு வித்யாசமான, நாம் நினைக்கிற மெத்தட்ல வரமாதிரி செஞ்சுருவோம். நைட் வீட்டுக்குப் போயிட்டு கூப்புடுறேன்.’

’சரி! நானும் யோசிக்கிறேன்!’

போனை வைத்துவிட்டு மீண்டும் சீட்டுக்கு வந்தான் சென்னைக் கண்ணன்
.
அது ஒரு சரக்குப்பெட்டக அலுவலகம். வெவ்வேறு நாடுகளிலிருந்து கப்பலில் வரும் சரக்குகளை, உரிய நிறுவனங்களுக்கு க்ளியர் செய்து தருவதுதான் வேலை.! சென்னைக் கண்ணன் அங்கு மேலதிகாரி!

பல கடத்தல் சரக்குகள், முறையான ஆவணங்கள் இல்லாமல் வரும். வாடிக்கையாளர்கள் வரும் கடத்தல் சரக்கு பற்றி இவர்களிடம் உண்மையைக் கூறிவிடுவார்கள். அவற்றை தங்கள் வாடிக்கையாளருக்காகப் பேசி வாங்கித்தருவதில் ஏகப்பட்ட தகிடுதித்தங்கள், அதிகாரிகளுக்கு கூழைக்கும்பிடுகள் போடவேண்டிய நிர்ப்பந்தம் அந்த நிறுவன ஊழியர்களுக்கு உண்டு.

ஆனால், அன்று வேறு ஒரு பிரச்னை வந்தது. அவர்கள் அலுவலகத்திலேயே யாரோ ஒருவர் கஸ்டம்ஸுக்கு இன்பார்மராக செயல்பட்டு, தொடர்ச்சியாக தகவல் கொடுக்கிறார்கள். அலுவலகத்திலிருந்து கண்ட்டெய்னர் எண்ணை எப்படியோ சொல்லி, அதை முழுமையாக சோதனையிட வைத்து, ஏதாவது பொருள் சிக்கும்போது, நிறுவனத்திடமிருந்து பெரிய தொகை கறக்கிறார்கள். அதை இந்த ஊழியரும் பங்கு போட்டுக்கொள்கிறார். ஆனால் யாரென்று தெரியவில்லை என்று அந்த நிறுவனத்தின் ஒரு நேர்மையான் ஊழியனான செல்வா புகார் சொன்னான்.

கண்ணன் உடனே, அவன் முன்பாகவே, ஒரு நம்பிக்கையான ஊழியனை வைத்து எல்லோருடைய மேஜையையும் தேடச்சொல்லியிருந்தான். இன்று அவன் சிக்கிவிடுவான் என்று செல்வாவுக்கு நம்பிக்கை கொடுத்து,  அந்த டென்ஷனிலேயே நாள் கழிய, மாலை வீடு வந்தான்.

உடை மாற்றி, ரிலாக்ஸாக அமர்ந்தபோது, திருப்பூர் கண்ணனிடமிருந்து அழைப்பு!

‘சொல்லு கண்ணா!’  என்ன செய்யலாம்?

‘நான் ஏதாவது க்ரைம் கதை க்ளு தரலாமான்னு யோசிக்கிறேண்டா!’

’இன்னிக்கு எங்க ஆபீஸில் ஒரு சம்பவம் நடந்துச்சு ! கேக்குறியா, அது ஏதாவது உதவுதான்ன்னு பார்க்கலாம்.’

சொல்லு!
சென்னைக்கண்ணன் தன் அலுவலகத்தில் நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தான்.

ம்! ம்.! எனக் கேட்டுக்கொண்டிருந்தான் திருப்பூர் கண்ணன்.

திருப்பூர் கண்ணனுக்கு ஒரு மகள் ! அம்மு என்று அழைப்பான். 7ம் வகுப்பு படிக்கிறாள். அப்பாவைப்போலவே அறிவாளி! இவன் அளவுக்கு புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டவள். தான் எழுதும் கட்டுரைகளையும், சிறுகதைகளையும் அவளையும் படிக்கவைப்பான். அவளும் தனக்குத்தெரிந்த கருத்துக்களை சொல்லுவாள். பாராட்டுவதை விட, அவனை விட்டுக்கிழிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவாள்.

அவளும் அப்பாவிற்கு அருகிலேயே ஒரு நாற்காலியைப்போட்டுக்கொண்டு அப்பா ‘ம்’ எனச்சொல்லிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டே , ஒரு ராஜேஷ் குமார் நாவல் படித்துக்கொண்டிருந்தாள். வீட்டுப்பாடங்களையெல்லாம் முன்னரே முடித்துவிட்டதால், இந்த சுதந்திரம்..!

கண்ணனும்,கண்ணனும் தொடர்ந்தார்கள்.

’மேட்டர் நல்லாருக்கு கண்ணா! இதையே கொஞ்சம் ஆல்ட்டர் பண்ணி, நான் ஒரு கதை யோசிச்சு காலைல ஐடியா பார்ம் பண்ணிடுறேன்.’

’ஓக்கே! பை!’

தனது ஐ-போனை ஒற்றி, தொடர்பைத் துண்டித்தான்.

‘என்னப்பா மேட்டர்?’ அம்மு கேட்டாள்.

’நானும், கண்ணன் அங்கிளும் சேந்து இந்தவருஷமும் 4க கதைப்போட்டி நடத்தப்போறோம். அதைப்பத்திதான் பேசிக்கிட்டிருந்தேன்.’

‘சரி! சரி! இந்த வருஷம் என்ன Theme?’

‘அதாண்டா செல்லம் யோசிச்சிக்கிட்டிருக்கோம்.’

’சரி! ஃபைனல் பண்ணிட்டு சொல்லுங்க!’

’சரிம்மா!’

மகளின் ஆர்வமும், அன்பும் பெருமிதம் கொள்ளவைத்தது.

அடுத்தநாள் காலை, சென்னைக்கண்ணனுக்கு அழைத்தான்.

’கண்ணா!’

’சொல்லு!’

’உங்க ஆபீஸ் மேட்டரை வச்சே, ஒரு சூப்பர் ஐடியா பிடிச்சுட்டேன்.’

’சொல்லேன்.’

’ஒரு கண்டெய்னர் கம்பெனியில் இன்பார்மரான விஷ்ணு வேலை பாக்குறான். அவன் ஒவ்வொரு தடவையும் முறையான பேப்பர் இல்லாம மாட்டக்கூடிய கண்டெய்னர் பத்தின தகவல்களை கஸ்டம்ஸ் ஆபீசர் எஸ்.பி. கோகுலுக்கு கொடுப்பான். 
அதன்படி பிடிபட்டு, கப்பம் கட்டுறாங்க! ஆனா, தகவல் எப்படிப் போகுதுன்னு ஆபீஸில் பிச்சுக்கிறாங்க! மேனேஜர் சிவா அதை ஆராயுறான். அதே சமயம், அவன் கொடுத்த தகவல்படி, எஸ்.பி கோகுல் சோதனை போடுறார். 
‘Sea Wolf ஷிப்பில்  2H Row வில் 6F , அதாவது ஆரீஃப் ன்னு பேர் போட்ட கண்டெய்னரில் பெரிசா ஒண்ணும் இல்லை. குறைவான சரக்கும், அதுக்கு கப்பமா ஆயிரக்கணக்கான ரூபாயும்தான் பிராயுது. ஆனா, வேற கண்டெய்னரில் கோடிக்கணக்கான ரூபாய்க்கான சரக்கு கை மாறியிருக்கு.!
 இதை ஒரு கட்டத்தில் சிவாவும், கோகுலும் சேந்து கண்டுபிடிக்கும்போதுதான் ஒரு உண்மை தெரியுது. அவுங்க கம்பெனி ஓனர்தான் இதுக்கு மாஸ்டர் மைண்ட். விஷ்ணு அவரோட ஆள். ஒவ்வொரு தடவையும் போலீஸை திசை திருப்ப, சின்ன சரக்குள்ள கண்டெய்னரை க்ளூவா குடுத்திருக்கான். பெரிய ஐட்டம் நைசா வெளில போயிருக்கு!
அதுல கோகுல் எல்லா க்ளூவையும் கண்டுபிடிக்கும்போது, அவனுக்கு விஷ்ணுவே போன் பண்றமாதிரி ஒரு  சீனை வச்சு ஒரு போட்டோ எடுத்துர்றேன். இன்னிக்கே அறிவிச்சுறலாம்.’

சூப்பர் கண்ணா! செஞ்சுரு! என்று சொல்லிக்கொண்டே, திருப்பூர் கண்ணனின் மூளையை நினைத்து வியந்தான்.
***

திருப்பூரில் , கண்ணன் அலுவலகம் வந்ததும்

ஒரே A4 தாளில்,

Mr.கோகுல் S W H2 6F இதுதான் குறியீடு. கவனம்- விஷ்ணு

கொஞ்சம் இடம் விட்டு,

Sir, எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன். கவலை வேண்டாம்.  -விஷ்ணு

என்று டைப் செய்து அந்தப்பேப்பரை சின்னதாக மடித்து, மடிப்பு தெரியும்படி, விரித்தான்.

பின்னர் அதனை இரு, தனித் துண்டுகளாக ஸ்கேலை வைத்து கிழித்தான்.

அலுவலக உதவியாளர் பாஸ்கரை அழைத்து அவரது எண்ணை தன் ஐ போனில் ஏற்றி, அவரை குனிந்து பார்க்கச்சொல்லி, அந்த போஸில் போட்டோவும் எடுத்துக்கொண்டு, அதற்கு VISHNU INFORMER என்று பெயரிட்டு, அவரை தன் எண்ணுக்கு அழைக்கச்சொன்னான்.

அது,  தெளிவாக கேமராவில் விழுமாறு பார்த்துக்கொண்டான்.

பாஸ்கரை விட்டு மூன்று நான்கு போட்டோக்கள் எடுத்துக்கொண்டான்.

அதில் சிறப்பாக வந்திருந்த ஒரு போட்டோவை, சென்னை கண்ணனுக்கு அனுப்பினான்.


அவனும், சூப்பரா இருக்கு! அறிவிச்சிடு! என்று மெயில் அனுப்பினான்.

கண்ணனும், கண்ணனும் :  கலக்கும் கதைப்போட்டி ’4க -2011’ என்று பெயரிட்டு, போட்டோவை பதிவேற்றி, போட்டி விதிகளை அடித்து, அன்றே அறிவிப்பும் வெளியிட்டான்.

பதிவுலகம் பற்றிக்கொண்டது. கதைகள் வர ஆரம்பித்தன.
***
சென்னைக்கண்ணனின் முதலாளி தீபக். இவன் அறிமுகப்படுத்தியதால் வலைப்பூக்கள் பார்க்க ஆரம்பித்தவர். இப்போது தீவிர வலைப்பூ வாசகர் ஆகிவிட்டவர். அவரும் போட்டிக்கான இந்தப் படத்தைப் பார்த்தார். கண்ணனை அழைத்தார்.
‘என்னய்யா இது?’

சார்…அது வந்து…..!!

***

ஒரு வாரம் ஆனது.

அன்று அம்முவுக்கு விடுமுறை..! திருப்பூர் கண்ணனும் வீட்டில் ட்விட்டரை நோண்டிக்கொண்டிருந்தான்.

’அப்பா!’

’சொல்லும்மா!’

’அந்தக்கதைப்போட்டி அறிவிச்சிட்டீங்களா?’

’ஆஹா..அறிவிச்சிட்டோமே!! ஸாரிடா உன்கிட்ட சொல்ல மறந்துட்டேன்.’

இட்ஸ் ஓக்கே! என்ன க்ளூ குடுத்திருக்கீங்க!

விபரமனைத்தும், பெருமையுடன் சொல்லி, புகைப்படத்தையும் கம்ப்யூட்டர் திரையில் காட்டினான்
.
ஆர்வமாகக் கேட்க ஆரம்பித்தவள், புகைப்படத்தைப் பார்த்தவுடன் கண்ணனை ஏற இறங்கப்பார்த்தாள்.

‘எந்தக்காலத்துல இருக்கீங்க? கையில் ஐ-போனை வச்சிருக்கிற ஆபீஸருக்கு ஏன் இன்பார்மர் பேப்பரில் தகவல் குடுக்கணும்.? உக்காந்து யாருக்கும் தெரியாம டைப் பண்ணி, ப்ரிண்ட் எடுத்து, மடிச்சு, அவுங்க இருக்குற எடத்துக்கு அனுப்பி……சாதாரண வேலையா? ஒரு எஸ் எம் எஸ், இல்லன்னா இ-மெயில் பத்தாது.?  அதுவும் தவிர அவுங்க பாஸுக்கும் பேப்பரில் தகவல் குடுப்பாராமா? மேலும். விஷ்ணு இன்பார்மர்ன்னு சரியான பேரையே வச்சுக்கிட்டு, அவன் போட்டோவையும் போனில் வச்சிக்கிட்டு ஒரு ஆபீஸர் அலைவானா? சரியான லூசுப்பா நீ! பாவம் பதிவர்கள்! நீ குடுத்த க்ளூவை அடிப்படையா வச்சு கதை எழுதுவாங்க!! இன்னும் நல்லா சிந்திப்பா!  எங்க அம்மா அப்பவே சொன்னுச்சு! உங்கூட சேர வேண்டாம்னு!’

ஏதோ சொல்லி, சமாளிக்கத் தோன்றி…திக்கித்து நின்றான் கண்ணன். மனதுக்குள் மகளின் புத்திசாலித்தனத்தை எண்ணி பெருமிதம் வேறு…!

 ***

சென்னைக்கண்ணன் தன் முதலாளி தீபக்கிடம் சொன்னதை விட்டுவிட்டேனே..!

‘ஸார்.! நான் ஒரு லைன் தான் குடுத்தேன். ராத்திரி யோசிச்சு, காலைல கரெக்டா பாஸுதான் தப்பான ஆளா இருக்கணும்னு முடிவெடுத்துட்டான். ஆனா விஷுவலா யோசிக்கிறேன்னு பேப்பர் க்ளூ போட்டு ,லாஜிக்குல கோட்டை விட்டுட்டான். நம்ப தொடர்பெல்லாம் எஸ் எம் எஸ்ஸுல, இ-மெயில்லதான்! அதே மாதிரி நம்ப கம்பெனியைப் பொறுத்தவரைக்கும் அந்த இன்ஃபார்மரே நாந்தானே! என்மேல, கஸ்டம்ஸ் ஆபீசருக்கு சந்தேகம் வர வாய்ப்பே இல்லை. கவலையை விடுங்க! கண்டெய்னர் கம்பெனின்னு கண்ணனுக்கு மட்டும்தான் தெரியும். வர்ற சிறுகதைகளைப் படிப்போம். நாமும், செல்வா மூலமா கஸ்டம்ஸ்ல மாட்டாம இருக்கிறதுக்கு, வேற லூப் ஹோல் இல்லாம வேலை பாக்கமுடியுதான்னு பாப்போம்.!’

*************** 

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...