Thursday, August 20, 2009

சத்தியமாகக் கடவுளைப்பார்த்தேன்.!

பயணங்கள் எப்போதும் சுவாரஸ்யமானவை ! கவனம் கவர்பவை!
எனக்கு எவ்வளவோ கற்றுக்கொடுத்திருக்கின்றன எனக்கான பயணங்கள் ! ஆகவே ஒவ்வொரு பயணத்திலும் என் விழிப்புணர்வு (தூங்காதபோது) கொஞ்சம் அதிகமாகவே இருக்கும்!

அது ஒரு குறுகிய தூரப் பேருந்துப் பயணம். பேருந்தில் உட்கார இடம் கிடைப்பது, அதுவும் நாமே தேர்ந்தெடுக்கும் வகையில் கிடைப்பது ஒரு மகிழ்வான அனுபவம். கொஞ்சம் குழப்பமானதும் கூட..! நாம் தேர்ந்தெடுத்த இருக்கையை விட இன்னும் கொஞ்சம் நல்ல இருக்கை பக்கத்தில் இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றும்..! கூட்டமாக இருந்தால் குழப்பமே இல்லை. எந்த இருக்கை கிடைக்கிறதோ அதுதான் சொர்க்கம்! எப்போதுமே எந்த அவசரமாக இருந்தாலும், நின்றுகொண்டு பேருந்துப்பயணம் செய்வதில், எனக்கு எப்போதும் உடன்பாடு இல்லை!

அப்படி ஒரு குழப்பம் ஏற்படாதவகையில் -சொர்க்கமாக - மூன்று பேர் அமரும் இருக்கையின் உள் ஓர இடம் எனக்குக்கிடைத்தது. மெதுவாக கூட்டம் சேர ஆரம்பித்து, பேருந்தும் நகர ஆரம்பித்தது.
வழக்கம்போல் ஒரு புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தேன். சிறிது நேரத்தில் அயர்ந்து தூங்கியும் போனேன்.

ஒரு குலுக்கலில் , கண்விழித்தபோது கூட்டத்தில் நெருக்கிக்கொண்டு ஒரு பத்து வயதுச்சிறுவனும், அவன் இடுப்பில் மூன்றுவயதுச்சிறுவனும் இருந்தார்கள். அந்தப்பத்துவயதுச்சிறுவன் நல்ல கறுப்பாக, ஒரு பச்சை நிற பள்ளி பெயரிட்ட பனியனும், வறுமையைப்பறைசாற்றும் ஒரு ஜீன்ஸும் அணிந்திருந்தான். குட்டிச்சிறுவன் இன்னும் கறுப்பாக, ஆனால் அழகாக, ஒரு வெள்ளை டிராயரும், இரண்டு மேல் பொத்தான்கள் இல்லாத சட்டையும் அணிந்திருந்தான். இதுதவிர பெரியவனின் இன்னொரு கையில் ஒரு ஜவுளிக்கடையின் அழுக்கேறிய கட்டைப்பை இருந்தது. இவர்கள், தன் உடல்நலமில்லாத தாயுடன் வந்திருந்தார்கள். தாய் என் அருகில் நின்றிருந்தாள். சிறுவன் எனக்கு முன் இருக்கையின் அருகில் நின்றுகொண்டிருந்தான்.

அப்போதுதான் எனக்கு முன் இருக்கைப்பயணியை கவனித்தேன்.
அவள் ஒரு கல்லூரி மாணவி, சுடிதார் அணிந்துகொண்டு, ஒரு சிறு பையை வைத்துக்கொண்டு, காதில் ஹெட்போன் மாட்டிக்கொண்டு இருந்தாள். அது செல்போனாக இருக்கலாம், ஐ பாடாகவும் இருக்கலாம்!

இப்போது அந்த பெரிய சிறுவன் கூறினான்..

டேய்! தம்பி! வழுக்குதுடா..!

டேய் தம்பி! வலிக்குதுடா ..!

அவன் வயதுக்கு அந்தக்குட்டிச்சிறுவனை தூக்கி வைத்துக்கொண்டு ஓடும்,-நம்மூர் சாலையில் ஆடும்- பேருந்தில் நிற்பது என்பது கொஞ்சம் கடினம்தான்.! இதை நான் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...
அவன் அந்தப்பெண்ணிடம்..

அக்கா! தம்பியை உக்கார வைச்சுக்கிறீங்களா? -என்று கேட்க,

ஹெட்போனை காதிலிருந்து எடுத்து அவன் சொன்னதை மறுபடியும் கேட்டு, பின்னர் ஆக்ரோஷமாக மறுத்தாள்..அவளது முழு முக அசைவும் தெரியாவிடினும், திரும்பிச்சுளித்ததை தெளிவாக கவனித்தேன். என்ன பொண்ணு இவள்!? ஒரு சின்னப்பையன் இப்படிக்கேட்கிறான். கூப்பிட்டு வைத்துக்கொள்ளாமல் , பெரிய அலம்பல் பண்ணுகிறாளே? என்று வருந்தினேன்.

எனக்கென்னமோ குழந்தைகள் எல்லோரும் ஒரே மாதிரிப் பார்க்கத்தோன்றும். ஆகவே , அவள் மறுத்த மறுவினாடி, என்கிட்ட குடுடா..என்று கேட்டு வாங்கினேன். சில நெருக்கல்களுக்குப்பிறகு, அந்த வானமே எல்லை அழகன், என் மடிக்கு வந்தான். ஆனால் அவனுக்கு என்னைப்பிடிக்கவில்லை. சிறிது முறைத்துக்கொண்டு, அண்ணனிடம் மழலையில் பேசிக்கொண்டே வந்தான். அம்மாவிடம் குடும்ப நிலைமைகள் பற்றியும், பள்ளியில் கேட்ட கட்டணம் பற்றியும் முதிர்ந்த மனிதனாக அந்த பத்துவயதுப்பையன் பேசிக்கொண்டு வந்தான்.

நான் இறங்கவேண்டிய நிறுத்தத்துக்கு இரண்டு நிறுத்தம் முன்னால் வண்டி வந்தபோது, அடுத்த நிறுத்தத்தில் இறங்க என் முன்னிருக்கை கல்லூரிமாணவி வேகமாக எழுந்தாள்....

டர்ர்ர்ர் !

அவள் அணிந்திருந்த சுடிதாரின் கீழ்ப்பகுதி (கால்சட்டை) மேலிருந்து கீழாக தொடைப்பகுதியில் ஒரு அடி நீளத்துக்கு கிழிந்துவிட்டது. அப்படியே அவளது தொடை மற்றும் உள்ளாடை பளீரெனத்தெரிந்தது. ஒரு வினாடி அவளுக்குத்தன் உடை கிழிந்தது தெரியவில்லை. நான் நேர் பின்னால் என்பதால் உடனே பார்த்துவிட்டேன். அவள் மானம் போவதை எண்ணிப்பதறுவதை மீறி, கடவுள் இருக்கான்ப்பா! ஒரு குழந்தையை வச்சுக்க மாட்டேன்ன்னு சொன்னவளுக்கு உடனே கூலி குடுத்துட்டான் என்று ஒரு சாத்தான் குரல் எனக்குள் ஓடியது.அவளுக்கு அருகில் இருந்த பெண் 'அய்யய்யோ! சுத்தமா கிழிஞ்சிருச்சுப்பா!' என்றாள். இவளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவள் நிறுத்தம் வந்துவிட்டது.

அந்தப்பத்துவயதுக்காரனும் பார்த்துக்கொண்டிருந்தான்.
படீரென்று தன் கட்டைப்பையைத்திறந்தான்.
ஒரு சிகப்புத்துண்டை எடுத்தான்! அவள் இடுப்பில் ஒருபக்கமாக சுற்றி, அவள் கையில் திணித்தான்.
அக்கா! ஸ்டாப்பிங் வந்துருச்சு ! எறங்குக்கா! கவலப்படாம போக்கா!
அவள் விழிகள் என்ன சொன்னதென்று எனக்குப்படிக்க முடியவில்லை!

நான் அவனையே கண்ணீர் முட்டப்பார்த்துக்கொண்டிருந்தேன்..!

Wednesday, August 12, 2009

சாருவுடன் ஒரு விமானப்பயணம்!

அந்த விமானப்பயணம் திடீரென்று நிகழ்ந்தது.
ஒரு அவசரவேலைக்காக சென்னை வரவேண்டியிருந்ததால்,
இருக்கும் 4 மணிநேர இடைவெளியில் பஸ்ஸிலோ, காரிலோ பயணிப்பது இயலாது என்பதாலும், அத்தனை அவதியாகச் சென்று அமைதியைக்குலைத்துக்கொள்ளாத ஆள் என்பதாலும், திடீரென்று திருச்சி விமான நிலையத்தில் நுழைந்தேன்.

சரியாக காலை 8.45க்கு ஒரு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கிளம்புவதாக அங்கிருக்கும் நண்பர் அரவிந்த் சொல்ல, உடனே டிக்கெட் எடுத்துக்கொண்டு உள்ளே சென்றேன். அது பன்னாட்டு விமானம். சென்னை சென்று, பின் சிங்கப்பூர் செல்லும் என்றார்கள். ஆரம்பகட்டச் சடங்குகளெல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் வாங்கி அமர்ந்தபின் நம்முடன் பயணிக்கப்போகும் அன்பர்களை கவனிக்க ஆரம்பித்தேன்.

முதல்முறையாக வெளிநாட்டுக்கு தாயைக்கூட்டிவரும் மகன்!
அந்தத்தாயின் முகத்தில்தான் எத்தனை மகிழ்ச்சி ! (திடீரென்று
ஈரானியப்பெண்மணி நம் அப்துல்லாவை ஹஜ்ஜுக்கு அம்மாவுடன் சென்றபோது வாழ்த்தியதை நினைத்துக்கொண்டேன்.)

புதுமணப்பெண்ணாக, பெற்றோரிடம் விடைபெற்று கணவனுடன் சிங்கையில் வாழப்போகும் ஒரு பெண்! (அவள் கண்களில்தான் எத்தனை எதிர்பார்ப்புகள்! சகோதரி உன் வாழ்வு இனிதாகட்டும்)

எந்த மூட்டைமுடிச்சுகளும் இல்லாமல் ஒரே ஒரு லேப்டாப்புடன் வெளிநாடு செல்லும் இளைஞன்! ( அவன் விமான நிலையத்தின் உள்ளே நுழையும்போதே லக்கேஜ் இல்லை. இப்படியும் எல்லா நாட்டிலும் துணிமணிகளை வைத்துக்கொண்டு வாழ ஒரு கொடுப்பினை வேண்டும்..!)

4 குழந்தைகளுடன், அதிக அளவு பெட்டிகளுடனும் மிகவும் சிரமப்பட்டு உள்ளே வந்த ஒரு பெண்! ( பாவம்.. ஒருவரிடம் லக்கேஜே இல்லை...ஒரு பெண்ணிடம் இவ்வளவு லக்கேஜ்.. உலகம் சமநிலை பெறவேண்டும்...சீர்காழி கணீரென்று மைண்ட் வாய்சில் பாடிச்சென்றார்..! :) )

அனைவரையும் சந்தேகப்பார்வையுடன் பார்த்துக்கொண்டே இருந்த ஒரு பெண்மணி (அய்யோ...ஒரு இட்லியைக்கூட இவ்வளவு சந்தேகமாகச்சாப்பிட முடியுமா என்று தோன்றினாலும்..பாவம்.எங்கோ அந்த அளவு நம்பிக்கை இழந்திருக்கிறார் என்ற நியாயமும் வந்துபோனது)

வீட்டில் என்ன பிரச்னையோ...கண்கூடாக பீறிடும் அழுகையை அடக்கிக்கொண்டே ...சிரிக்க முயற்சித்து நுழைந்த ஒரு விமானப்பணிப்பெண். (இதை வைத்து ஒரு சிறுகதையே எழுதலாம்..அந்த அளவு அற்புதமான சிரிப்பு அழுகை கலந்த கலவை அது...சுஹாஸினி மேடம்..உண்மையாவே நந்தினி சிஸ்டரைப்பாத்துட்டேன்)

இவர்களெல்லாம் போக, அவசரத்தில் ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறும் வரிசைக்குப்பதிலாக எங்கள் வரிசையில் நின்றுவிட்டு கடைசி வினாடியில் திட்டுவாங்கிக்கொண்டே குடும்பத்தை கூட்டிச்சென்ற ஒரு ரங்கமணி ! (தலைவா! பில்கேட்ஸாவே இருந்தாலும் ...தங்கமணிகளுக்கு நம்ம தகர டப்பாதான்..இதுல இப்படி ஒரு தப்பை ..எல்லாரும் கையில சிகப்பு கலர் டிக்கெட் வச்சிருக்கும்போதே செய்யலாமா?)

அவர் அங்க என்ன செஞ்சு வச்சுருக்காருன்னே தெரியலையேம்மா! வீடெல்லாம் அலங்கோலமாக் கெடக்கும்...போனவுடனே போன் பண்ணலைன்னு கத்தாத..என்று முடிந்தவரை கத்திப்பேசிக்கொண்டிருந்த ஒரு தங்கமணி! (No male is perfect in front of his wife , especially in kitchen - நல்லா அனுபவிச்சு சொல்லியிருக்காய்ங்க! டிக்கெட் எடுத்துக்குடுத்து சூனியத்தை வைத்துக்கொள்ளும் அப்பாவி ரங்கமணி..நீ செத்தடீ இன்னும் 4 மணி நேரத்துல! )

மாப்புள ஒரு அவசரவேலை ..திடீர்ன்னு ஏர்ப்போர்ட் வந்து ப்ளைட் பிடிச்சுட்டேன். இந்தா கிளம்பிரும்..நம்ப ப்ரெண்ட்ஸ்க்கிட்டயெல்லாம் சொல்லிரு...கரெக்டா ஏர்ப்போர்ட்டுக்கு வந்திருடா..! (இதைவிட வெவரமா ப்ளைட்டுல வர்றதை பீத்திக்கவே முடியாது!...கிட்டத்தட்ட நம்பளும் அப்படித்தான்!)

விமானத்தில் ஏறினேன். நினைத்தபடியே எனக்கு ஜன்னலோர இருக்கை!
அருகில் வந்து அமர்ந்தது ஒரு அழகான ஆறுவயதுச் சிறுமி!
நன்றாகப்பேசிக்கொண்டுவந்தாள்! எங்க மாமா கல்யாணத்துக்கு வந்தோம். அப்பா முன்னாடியே ஊருக்குப்போயிட்டாங்க! நாங்க இப்பதான் போறோம். சிங்கப்பூருக்கு எத்தனை மணிக்குபோகும்?...மாமாக்கு புதுப்பொண்ணு ரொம்ப நல்லவங்க! தம்பி என்கிட்ட பாசமா இருப்பான்..அக்கா சொல்லுவான் என்று கலகலவென்று என் விமானப்பயணத்தை மிகவும் சுவாரஸ்யமானதாகவும், கொண்டாட்டமானதாகவும் மாற்றிக்கொண்டிருந்தாள்!
அவளுடைய அம்மாவும், பேசாமல் எல்லாவற்றையும் பார்த்து புன்னகைத்தபடியே, அவளது தம்பியை மடியில் வைத்துக்கொண்டே வந்தார் !
இவ்வளவு அழகாகப்பேசும் அந்தப்பெண்குழந்தையிடம் பெயர் கேட்டேன்.
தண்ணீர் குடித்துவிட்டுச்சொன்னாள்

சாரு...சாருலதா!

Thursday, August 6, 2009

இந்த வினாடி என்ன செய்கிறோம்? -ஒலிப்பதிவு

மறுபடியும் ரேடியோ...மறுபடியும் அறிவுரை மழை..!

இஷ்டப்பட்டவுங்க நனையலாம்!

இல்லைன்னாலும் தூறல் விடாது!

:)


Get this widget | Track details | eSnips Social DNAபயன்படுமா?

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...