Monday, December 30, 2013

ஹெல்மெட்
சென்ற ஜுலையில் ஒரு நாள்!

அன்று தொலைக்காட்சியில் நேரலை. 2 மணிநேரம் தொடர் நிகழ்ச்சி..! முடித்துவிட்டு வெளியில் வந்தால், மதியம் மணி 2 என்றது.
வீட்டிலிருந்து அழைப்பு!

சாப்பிட வரீங்களா?

ஆமாம்.. இதோ சேனல்லேருந்து கிளம்பிட்டேன். இன்னும் 15 நிமிஷத்தில் வீட்டில் இருப்பேன்.

என்று சொல்லிவிட்டு, பைக்கைக் கிளப்பினேன்.

காசி தியேட்டர் சிக்னல் தாண்டி, .அடுத்த நூறு மீட்டரில், BSNL அருகில் சிக்னல் இல்லாமல் ஒரு சந்திப்பு. அதில் திடீரென்று நான்கைந்து வாகனங்கள் இடது புறத்திலிருந்து குறுக்கிட, நானும் என் அருகில் வந்துகொண்டிருந்த காரும் கொஞ்சம் நிதானித்து நிறுத்தினோம்.

நான் வண்டியை நிறுத்திய கணம் ‘டொம்’ என்ற ஒரு சத்தம் கேட்டது.

மறுவிநாடி நான் வானத்தில் பறந்துகொண்டிருந்தேன்.

என் பைக் எனக்கு முன்னால், தரையில் பயணித்துக்கொண்டிருந்தது. சாலையில் நேராகப் போய் மோதப்போகிறோம் என்று தெரியும். ஆனால் என்ன செய்வது என்று முடிவெடுக்கத் தோன்றவில்லை. நேரமும் இல்லை. கை கால்கள் இலக்கின்றி அலைகின்றன.

“ச்சொட்” என்ற சத்தத்துடன் என் தலை நேரடியாகச் சாலையில் மோதியது. உடல் எடை முழுவதும் தலையில் இறங்கி அது, தரையிலும் இறங்குவதை அந்த நொடி உணர முடிந்தது.

ஆனால், அதிசயமாக, ஒரு கீறல் கூட இல்லாமல் எழுந்தேன். வலது கணுக்காலில் மட்டும் சரியான வலி! நிச்சயம் எலும்பு உடைந்திருக்க வேண்டும்.

சுற்றி இருந்தவர்கள் ஓடிவந்தார்கள். என் பைக்கிலிருந்து பெட்ரோல் சாலையில் வழிந்துகொண்டிருந்தது. ஆளாளுக்கு உதவி செய்துகொண்டிருந்தார்கள்.

என் பேனாவை ஒருவர் எடுத்துக்கொடுத்தார்.

பைக்கை நிமிர்த்தி, சாலையோரம் ஒருவர் நிறுத்தினார்.

ஒரு ஸ்கூட்டி பெண்மணி
“இப்பத்தான் உங்கள டிவில பாத்தேன்.. என்னாச்சு சார்? ” என்று அக்கறையுடன் விசாரித்தார்.

அப்படி இன்னா வேகமா வந்து இப்டி இட்ச்சிட்டு நிக்கிற? என்று அவர்கள் கைநீட்டித் திட்டிக்கொண்டிருந்தபோதுதான் கவனித்தேன். என்னை மோதிய அந்தக் காரின் ஓட்டுநரை!

என் பைக்கில் மோதியது ஒரு நட்சத்திர ஹோட்டலின் டிராவல் டெஸ்கின் கார்! அது மோதிய வேகத்தில்தான் நானும் பைக்கும் நிலை குலைந்திருக்கிறோம். காரின் நம்பர் ப்ளேட் கீழே கிடந்தது. அதனை எடுத்து வைத்துக்கொண்டு, அந்தக் கார் ஓட்டுநரை எல்லோரும் திட்ட, அந்த இளைஞனும் பயந்துவிட்டான்.

என்னைச் சுற்றி சிலர்.. அவனை விசாரிக்க சிலர் என்று இருக்க..

நான் அருகில் சென்றேன்.

அவனும் என்னிடம் ஓடிவந்தான்.

“ரொம்ப அடிபட்டிருச்சா சார்?. ஸாரி சார்! பேஸஞ்சர் வேகமா போங்க!ன்னாங்க ! புத்தி கெட்டுப்போச்சு! உங்க வண்டியை ஓரமா நிறுத்திட்டு வாங்க! காரில் ஆஸ்பத்திரி கூட்டிட்டுப்போறேன். என்று தீர்வை நோக்கிப் பேசினான்.

நானும் சண்டை போடும் மனநிலையில் இல்லாமலும், அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலும் இருந்ததால்,
“சரி வாங்க போலாம்” என்று சொன்னேன்.

ஆனால், அந்தக் காரில் பயணியாக வந்தது ஒரு தனியார் விமானப் பணிப்பெண். அவள் மனிதாபிமானத்துக்குக் கூட காரை விட்டு இறங்கவில்லை.

தனக்கான மாற்றுக்காரை ஏற்பாடுசெய்துவிட்டு , எங்குவேண்டுமானாலும் போ! என்று சொல்லியிருக்கிறாள்.

நான் சிரித்துக்கொண்டே அவளைப் பார்த்தேன். வெள்ளைத் தோலுடன்,முகம் முழுக்க சரியான அலங்காரத்துடன், அழகாகத் தெரியவேண்டியவள், அப்போது மிகவும் அசிங்கமாகத் தெரிந்தாள். சுற்றியிருந்தவர்கள் போட்ட சத்தத்தில் , காரை விட்டு இறங்கி, செல்ஃபோனை நோண்டிக்கொண்டே, சடுதியில் காணாமல் போனாள்.

அதற்குப் பிறகு , அருகிலேயே “மாயா” மருத்துவமனைக்குச் சென்றோம். மருத்துவர் மிகவும் நட்பாக உரையாடி, காலுக்கு மட்டும் எக்ஸ்ரே எடுத்து, கணுக்காலில் ஒரு எலும்பு மிக மிக லேசாக விரிசல் விட்டிருப்பதாகவும். ஓரிரு நாட்கள் ஓய்வெடுத்தால் போதும் என்றும் சொன்னார். அதற்குள் அந்த நட்சத்திர ஹோட்டலின் மேலாளர் உள்ளிட்ட இரண்டுபேர் வந்து என்னைப் பார்த்து, விசாரித்து, மருத்துவச் செலவுகளைப் பார்த்துக்கொண்டார்கள். பைக் சரி செய்யும் செலவையும் ஏற்றுக்கொள்வதாகச் சொல்லி, எண்கள் கொடுத்து, தனியாகச் சென்றுவிடுவீர்களா? வீட்டில் கொண்டு வந்து விடட்டுமா என்று கேட்டு, நான் வேண்டாம் போய்விடுவேன் என்று சொன்னதும்தான் சென்றார்கள்.

ஆனால் இவையெல்லாம் நடந்தேறும்போது நேரம் 4 மணி ஆகியிருந்தது.

வீட்டிலிருந்து 11 மிஸ்டு கால்கள்!

அழைத்தேன்.

கிளம்பிட்டேன் இன்னும் 15 நிமிஷத்தில் வரேன்னீங்க !! ரெண்டு மணி நேரமாச்சு! எங்க இருக்கீங்க? என்று அந்தப்பக்கம் கேட்க,

“ஒரு சின்ன வேலையாயிடுச்சும்மா! கொஞ்ச நேரத்தில் வந்துருவேன். நீ சாப்பிட்டுரு” என்றேன்.

பரவால்ல…சீக்கிரம் வாங்க ! சேந்து சாப்பிடுவோம்.! என்றது எதிர்முனை!

கண்ணீர் துளிர்க்க, ஒரு கலவையான மனநிலையுடன் பைக்கை எடுத்தேன்.

மகிழ்ச்சியாக சேனலிலிருந்து கிளம்பிய நான், வீட்டிற்கு போய் சேராமலேயே இருந்திருப்பேன். அந்த விபத்தில், என் தலை சாலையில் நேரடியாக மோதி, நான் கனவுகளுடன் சிதறிப்போவதை தடுத்து நிறுத்திய ஒரே பொருள்… ஹெல்மெட்!

விபத்து நடந்து சில நிமிடங்கள் வரை நான் ஹெல்மெட்டைக் கழட்டாமலேதான் நின்றுகொண்டிருந்தேன். யாரோதான் கழட்டி விட்டார்கள். அதற்குப்பிறகுதான் ஒரு சிலர் “எங்கேயோ பார்த்திருக்கிறேன்” என்ற ரீதியில் பேசினார்கள். எனக்கு “ஹெல்மெட் மட்டும் இல்லைன்னா?” என்ற சிந்தனைதான் திரும்பத்திரும்ப ஓடிக்கொண்டிருந்தது.

வானில் பறந்துகொண்டிருந்த அந்த வினாடியும், தரையில் தலை மோதியபோது ஏற்பட்ட சத்தத்தையும் இன்னும் நான் அனுபவித்து, நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த சம்பவம் நடப்பதற்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர்தான், எனது உறவினர் ஒருவர், சாலை விபத்தில் தலையில் காயம்பட்டு உயிரிழந்தார். அவர் செய்த ஒரே தவறு ஹெல்மெட் அணியாததுதான்.!!

எப்போதுமே ஹெல்மெட் போடுவதை நான் விரும்பிச் செய்வேன். ஏனெனில் , முகம் நேரடியாக வெயிலில் படாது. கண்களில் தூசி விழாது. குறிப்பாக, தேவையில்லாமல், போக்குவரத்துக் காவலர்களிடம் பதில் சொல்ல வேண்டியிருக்காது. அவர்கள் முதலில் சொல்வதே “உங்க நல்லதுக்குத்தானே சார் சொல்லுறோம்?”

ஆனால், அதையெல்லாம் மீறி அதன் உண்மையான வேலையான, உயிர்காக்கும் செயலை மிக அற்புதமாகச் செய்து தெய்வமாகவே மாறிப்போனது எனது ஹெல்மெட்!

பொதுவாக நாம் ஹெல்மெட் போடாததற்கு சொல்லும் சப்பைக் காரணங்கள்.. முடி கொட்டுது!  வேர்த்துக்கொட்டுது,  uneasyஆக இருக்கு! ஆகியவைதான். இதையெல்லாம் கொஞ்சம் மறுபரிசீலனை செய்யுங்க பாஸ்! நமக்காக வீட்டில் சாப்பிடாம காத்திருப்பாங்க! அவங்க கண்ணீருக்கு நம்ம காரணமாகிடக்கூடாது.

இது என் அறிவுரையெல்லாம் இல்லை. ஆனால், அந்த மரண வினாடியை அனுபவித்தவன் சொல்கிறேன்.

தயவுசெய்து ஹெல்மெட் அணியுங்கள்.!


தலை முடியை விட, உயிர் முக்கியம்!


Thursday, October 31, 2013

நீயெல்லாம் நண்பனாடா?
என் பள்ளி நாட்களில் சங்கர் ன்னு கிளாஸ்மேட் ஒருத்தன் இருந்தான், படிக்கும்போதே ரொம்ப அலைப்பறையக்குடுப்பான். எல்லாரையும் கலாய்ப்பான். நட்புன்னா இப்படித்தான் இருக்கணும்னு லெக்சரெல்லாம் குடுப்பான்.எல்லாரையும் காலைக்காட்சிக்குபோகலாம்னு கிளப்பிவிட்டுட்டு பசங்க எல்லாம் கவுண்ட்டரில் வரிசையில் நிக்கும்போது நைஸா எஸ்கேப் ஆகி வாத்தியார்க்கிட்ட போட்டுக்குடுப்பான்.
ஏண்டா இப்படிப்பண்ணினன்னு கேட்டா...
நட்புன்னா நீங்க கெட்டுப்போறதை தடுக்கணும்டான்னு கருத்து சொல்லுவான்!
நீதானேடா கூப்புட்டன்னா,
நான் உங்களை டெஸ்ட் பண்ணினேன்னு சொல்லி டெரர் பண்ணுவான்.
அவன் நல்லவனா ? கெட்டவனா? ன்னு யோசிச்சு யோசிச்சே பசங்க எல்லாம் படிப்பை கோட்டை விடும் அளவுக்கு லந்து பண்ணுவான்.

கட் பண்ணினா...நாங்கள்லாம் +2க்கு அப்புறம் ஏதோ படிச்சு ஆளுக்கொரு வேலையில் தொத்திக்கிட்டோம்.

அது நான் சென்னையில் வேலைக்கு சேந்திருந்த நேரம்..! பட்டுக்கோட்டையில் நண்பனோட சேந்து டீ ஏஜென்ஸி எடுத்து நடத்திக்கிட்டிருந்தோம். நான் வாரம் ஒருதடவை அல்லது ரெண்டு வாரத்துக்கு ஒருமுறைன்னு போய்வந்துக்கிட்டிருந்தேன்.

அப்படி ஒருநாள் வந்தப்ப ,முருகையா தியேட்டருக்கு படம் பாக்கப்போகும்போது, டிக்கெட் கவுண்ட்டரில் கையை வுட்டா உள்ளேருந்து -நட்பைப்பத்தி ஒரு லெக்சர் கேக்குது- அட நம்ம சங்கரு! ன்னு சந்தோஷமாகி...

என்னடா இங்கன்னு கேக்க!

அது ஒரு மேட்டரு மாப்புள! ன்னான்.

என்ன மேட்டருடா?

இரு டிக்கெட் குடுத்துட்டு வந்து சொல்றேன்.

சரின்னு..படத்தின் சுவாரஸ்யத்தைவிட நம்ம நண்பன் ஒருத்தன் ஒரு தியேட்டரில் டிக்கெட் குடுக்குற அளவுக்கு வளந்திருக்கானேன்னு பெருமையா (!) அதன் பிண்ணனி தெரிஞ்சுக்குற ஆவலில் காத்திருந்தேன்.
கிடைச்ச கேப்பில் அவனைப்பாத்து என்னடான்னு கேக்க,
அது ஒரு இது நம்ம ப்ரெண்டோட தியேட்டர்...டிக்கெட் யாருமே சரியா குடுக்குறதில்லையாம் ! (அதுல என்ன சரியா குடுக்குறதுன்னு இன்னிக்கு வரைக்கும் நான் தலையைப்பிச்சிக்கிட்டிருக்கேன் )நான் கரெக்டா வேலை பாப்பேன்ல ! அதான் நான் நட்புக்காக உதவி பண்ண வந்தேன்னான்.
(உள்ளபடியே படிப்பை நிறுத்திட்டு சம்பளத்துக்கு தியேட்டரில் வேலைக்கு சேந்திருக்கான் டுபாக்கூரு)


சரிடா ! எப்படியோ நல்லா இருன்னுட்டு.....பெரிய மேட்டரா எதிர்பார்த்தது இப்படி 'சப் 'ன்னு போச்சேன்னு கவலைப்பட்டுக்கிட்டே படம் பாத்துட்டு வெளில வந்தா...மறுபடியும்
சங்கரு!
என்னடா..!
நீ எங்க தங்கியிருக்க?
இடத்தைச்சொன்னேன்.
தியேட்டருக்குள் யாரோ அழைக்க உள்ளே போய்ட்டான்.

இது நடந்து 2 மாசத்தில்..
ஒரு நாள் நள்ளிரவு...அன்று நானும் அங்க இருந்தேன். டப டபன்னு கதவு தட்டப்பட...
திறந்தால்...கையில் ஒரு பையுடன் வேர்க்க விறுவிறுக்க சங்கர் !
என்னடா இந்தக்கோலம்?

இல்ல மாப்புள ஓடிப்போறோம்.

என்னது ? ஓடிப்போறியா? எங்க ? யாரோட?

அப்பதான் சொன்னான்.

டிக்கெட் கொடுக்கும்போது உள்ள ஒரு வெள்ளைக்கை நுழைஞ்சது...அதுக்கான முகம் எதுன்னு பாக்கப்போய்...அந்தப்பொண்ணு பழக்கமாச்சு...! நான் தியேட்டர்க்காரரோட ப்ரெண்டுன்னு (எங்களிடம் சொன்ன அதே கதையை) அந்தப்பொண்ணிடமும் சொல்ல, நாங்க ஒருத்தரை ஒருத்தர் விரும்ப ஆரம்பிச்சோம். இப்ப அவுங்க வூட்டுல ஒத்துக்கமாட்டேங்கிறாங்க! நாங்க ஓடிப்போலாம்னு முடிவுக்கு வந்துட்டோம். அதான் பஸ்ஸ்டாண்டுல ஒளிச்சுவச்சுட்டு வந்திருக்கேன். கோயம்புத்தூர் போலாம்னு ப்ளான் போட்டிருக்கேன்னான்.
எனக்கு கடுமையான அதிர்ச்சி!
ஒருபக்கம் என்னடாது இப்படி திடீர்ன்னு ஒரு முடிவு எடுத்துருக்கானேன்னு !
மறுபக்கம்..இவனுக்கெல்லாம் காதலிக்க பொண்ணு கிடைக்குதே, நாமளும்தான் இருக்கோமேன்னு புகைச்சல் வேற !

சரிடா...இருந்தாலும் இதெல்லாம் தப்புடா ! நீ மரியாதையா அந்தப்பொண்ணை அவுங்க வூட்டுல விட்டுட்டு ஒழுங்கா உன் வேலையப்பாருன்னு லேசான வில்லத்தனத்துடன் நான் சொல்ல,

பரவாயில்ல மாப்புள ..! செஞ்சது செஞ்சுட்ட ! நல்லபடியா போய்ட்டுவான்னு என் நண்பன் சொல்ல...

சங்கருக்கு வந்ததே கோபம்..
என்னது? உங்கிட்ட ஆசீர்வாதமோ அட்வைஸோ வாங்கவா நான் வந்தேன்.! நீங்கள்லாம் ப்ரெண்டாடா.. ? நட்புன்னா என்னன்னு தெரியுமா? உங்களுக்கு எங்க தெரியப்போகுது...இந்த வயசிலேயே பிஸினஸ் பண்ணி சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டீங்கங்கிற திமிரு! சரி சரி...அதெல்லாம் போகட்டும். 1000 ரூபா காசு குடுங்க! ன்னு அடுத்த அதிர்ச்சி கொடுத்தான்.

என்னது? காசா?

ஆமா ! கிளம்புற அவசரத்துல காசைப்பத்தி யோசிக்கலை! எங்கிட்ட காசு சுத்தமா இல்ல! அந்தப்பொண்ணுக்கிட்ட அதைச்சொன்னா என்னை என்ன நினைக்கும்..? அதான் உங்கிட்ட குடுத்து வச்சிருக்கேன், வாங்கிட்டு வந்துடுறேன்னு சொல்லிட்டு வந்திருக்கேன்னு அடுத்த குண்டை தூக்கிப்போட்டான்.

காசெல்லாம் தரமுடியாது! - இது நான்!

போனாப்போறான்டா ! ஏதாவது குடுத்தனுப்புவோம்...நம்பளை நம்பி வந்துருக்கான்! - இது என் நண்பன்!

என்னடா பட்டிமன்றம் நடத்திக்கிட்டிருக்கீங்க! மரியாதையா காசைக்கொடுத்து
அனுப்பிவைங்கடா! பெத்த அப்பா அம்மாக்கிட்டகூட சொல்லிக்காம ,வாழலாம்னு ஓடிப்போக உங்ககிட்ட வந்து நிக்கிறேன் பாரு...! என்னையச்சொல்லணும்! என்னமோ உண்மையிலேயே குடுத்துவச்சவன் மாதிரி கோவிச்சுக்கிட்டான்.

நான் பிடிவாதமா மறுத்தேன். டேய் இந்தக்காச வச்சுக்கிட்டு 3 நாள்கூட ஓட்டமுடியாது! அப்புறம் எப்படிடா சமாளிப்ப?

இல்ல..! கோயமுத்தூர்ல எனக்கு நிறைய ப்ரெண்ட்ஸ் இருக்காங்க அவுங்க வேலை வாங்கித்தந்துருவாங்க! சமாளிச்சுருவேன்.

சரிடா..வேலயே கிடைச்சாலும் ஒரு மாசம் கழிச்சுத்தானே சம்பளம் கிடைக்கும்...! அதுவரைக்கும் என்ன பண்ணுவ? நான் இப்ப கிளம்பாத....உன்னைய கொஞ்சம் ஸ்டடி பண்ணிக்கிட்டு ஓடிப்போன்னு சொல்றேன்.

டேய் என்னடா இவன் இவ்வளவு விதண்டாவாதமா பேசுறான்..! என் நிலைமையப்புரிஞ்சுக்குங்கடா ! அந்தப்புள்ள காத்துக்கிட்டிருக்கு ! இப்ப உங்க அட்வைஸெல்லாம் வேண்டாம்டா...காசுதான் வேணும்...நண்பன்னா அவனவன் வேன் வச்சு கூட்டிட்டுப்போய் ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிவைக்கிறாய்ங்க..நீங்க என்னடான்னா பிச்சைக்காசு(!) 1000 ரூவாய்க்கு அழுவுறீங்க! - நாங்கள் அவன் பாக்கெட்டில் இருந்து எடுத்ததை குடுக்காதது மாதிரி ராவடி பண்ண ஆரம்பிச்சான்.

என் வாதம் பலவீனப்பட ஆரம்பிக்க, என் நண்பன் காசை எடுத்துக்கொடுத்துட்டான்.

அப்பவும்....என்னமோ அவன் சோத்தில் மண்ணள்ளிப்போட்டமாதிரியே
முறைச்சுக்கிட்டே...போய்ட்டு வரேன்டா..! உன் காசை மணியார்டர் பண்ணி வச்சுடுறேன் னான்.

அப்புறம் அவனை மறந்தே போனோம்....!

7 வருஷத்துக்கப்புறம் , கோயம்புத்தூரில் ஒரு சொந்தக்காரங்க வீட்டு விசேஷத்துக்கு உதவி செய்யப்போனப்ப, பாத்திரம் வாங்க ஒரு பெரிய கடைக்குப் போனோம். பாத்திரமெல்லாம் வாங்கிட்டு , பேர் வெட்டணும்னா அங்க வாசல்ல உக்காந்திருக்கிறவர்க்கிட்ட கொடுங்கன்னு சொல்ல, பாத்திரத்தைக்கொண்டு போய் வச்சா...பேர் வெட்டுற எடத்தில்...அட..! 
நம்ம சங்கரு!

பாத்தவுடனே...டேய் ! சங்கரு! எப்படிடா இருக்க?

திடீர்ன்னு எழுந்தான்..என் சட்டையப்பிடிச்சான்..!

நீயெல்லாம் ப்ரெண்டாடா..? நட்புன்னா என்னன்னு தெரியுமாடா?

எனக்கு ஒண்ணுமே புரியலை! என்ன ஆச்சு இவனுக்கு?

ஏண்டா..நாங்கதான் பணம் குடுத்துத்தானே அனுப்பி வச்சோம்!?

அதத்தாண்டா சொல்றேன்....ஏன்டா அனுப்பி வச்சீங்க! ஒரு அறை அறைஞ்சு ரூமுக்குள்ள வச்சு பூட்டியிருந்தீங்கன்னா...இப்படி நான் சீரழிஞ்சு சிரிப்பா சிரிக்கமாட்டேன்ல..! ஓடிவந்து...சரியான வேலை இல்லாம, நாங்க ரெண்டுபேருமே செரமப்பட்டு ....அந்தப்புள்ளயும் வேலைக்குப்போய்,
தெனம் சண்டை போட்டுக்கிட்டு - பொழப்பே நாறிப்போச்சு..! என் வாழ்க்கையையே கெடுத்துட்டீங்களேடா...- இன்னும் பேசிக்கொண்டே போனான்.

அன்னிக்குத்தான் நான் உண்மையிலேயே மண்டை காஞ்சேன்...!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...