Posts

Showing posts from January, 2012

கந்தக சாமி!

Image
அய்யா.. ஏம்பேரு கந்தக சாமி! பொறந்த எடம் பூமிதாஞ் சாமி! நான் வானத்தில் இல்லாத சாமி ஆனா வாணம் செய்யுற சாமி! நாம்பாட்டுக்கும் செவனேன்னு நல்லகாலம் பொறக்குமுன்னு மண்ணுக்குள்ள மகிழ்ச்சியா மக்கிக்கெடந்தேன் சாமி! என்னயத்தேடிவந்து எக்குத்தப்பா நோண்டித்தந்து எதுக்காவது பயன்படுவேன்னு எப்படியோ கண்டுக்கிட்டாங்க.! மொதல்ல நாம்பாட்டுக்கும் மொறயாத்தான் இருந்தேன். பொறவியிலேயே நமக்கு கோபம் கொஞ்சம் அதிகம் சாமி! அதப்போய் மறந்துப்புட்டு அடக்கிவச்சு அடக்கிவச்சு அழுத்தமா மூடிவச்சு ஒருநாள் வெடிக்கவச்சு ஒண்ணுமில்லாம பண்ணிப்புட்டாங்க! நானும் சும்மா இல்ல.. நாலஞ்சு பயலுகளை நயமா நரகத்துக்கனுப்பிட்டு.. அதெப்புடி  நரகம்  னு அசதியா கேக்குறீகளா? என்னய தூக்கிப்போட்டு எகனை மொகனையா வெளயாண்டவன் எப்புடி சாமி சொர்க்கம் போவான்? நல்லதே நடக்காதான்னு கலங்கிப்போய் கெடந்தப்பதான் பளபளப்பா எரிய வச்சு பட்டாசா மாத்தி என்னை பார்புகழ வச்சாங்க.! சிவகாசிப்பக்கம் அந்த சின்னப்புள்ளைங்க என்னைத்தொட்டு வேலைபாத்து அவுக தாத்தா பட்ட கடன தடுமாறி அடச்சாங்க! அதுல ஒரு கொடுமை சாமி! ஏங்கொணம் எனக்கே பிடிக்காது. மனுசப்பய மாதிரியே எங்க...

பொட்டண வட்டி

Image
'எப்புடி இருந்தாலும் ரெண்டு லெச்சம் இல்லாம ஒண்ணும் செய்யமுடியாது.''            நேற்று இளங்கோ அண்ணன் சொன்னது மீண்டும் மீண்டும் வந்துபோனது. அப்பா காலத்திலிருந்த டெடில் மிஷினை வைத்து அச்சகம் நடத்தி ,இன்றைய தேதிக்கு பிழைப்பது என்பது , பேப்பர் வெட்டும் இயந்திரத்தில் தலையைக்கொடுப்பதற்குச் சமம் என்று தெரிந்து போனது. சரி..இருக்கும் பொருட்களை விற்கலாம் என்றால், அதுவும் முடியாது, வேண்டுமானால் அச்சு எழுத்துக்களின் ஈயத்தையும் இரும்பையும் எடைக்கும், படக்கட்டைகளை குப்பைக்கும். எழுத்துக்களை வைத்திருந்த சிறு அறைகளாகப்பிரிக்கப்பட்ட பெட்டிகளை உடைப்பதற்கும்,அந்த பிரம்மாண்டமான லண்டனில் செய்யப்பட்ட , ராயல் சிம்பல் பொறித்த அச்சடிக்கும் எந்திரத்தை பழைய இரும்பு விற்கும் சுரேஷ் அண்ணனிடமும் கொடுக்கலாம்.             அதில் ஒரே மிச்சம், கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் , பெடலால் மிதித்து ஓட்ட முடியவில்லை என்பதற்காக பொருத்திய மோட்டார்.! அதையும் ஆயிரம்கூடப்பெறாது அண்ணே என்று எலக்ட்ரீஷியன் பாலு சொல்லிவிட்டான். நானும் பல்லைக்கடித்து இத்தனை ஆண்டுகள் ஓ...

சாதனை அரசிகள்

Image
வெற்றிக்கதைகள் படிப்பது எப்போதுமே ஒரு சுவாரஸ்யமான அனுபவமாகத்தான் இருக்கும். சாதித்த மனிதர்களின் வெற்றியின் பின்னணியில் இருந்த இடர்களைப் படிக்கும்போது அந்த உழைப்பின் மேன்மை உரைக்கும் செய்திகள் ஏராளம்! அந்த வகையில் ‘நமது பதிவரும்..பிரபல கவிஞர், எழுத்தாளர் என்று அறியப்படுபவருமான தேனம்மை லட்சுமணன் அவர்கள் எழுதி சாதனை அரசிகள்’ என்ற தலைப்பில் வெளிவந்திருக்கும் புத்தகம் சொல்லும் சாதனை மனிதர்கள் உண்மையிலேயே என்னை பிரமிக்க வைத்துவிட்டார்கள். மொத்தம் பதினேழு பெண்மணிகள். வெவ்வேறு துறை சார்ந்தவர்கள். ஆனால், அவர்கள் அனைவரது வெற்றிக்கும் பின்னால் இருந்த ஒரே ஒற்றுமை, -உழைப்பு, விடாமுயற்சி, நம்பிக்கை.! மேலும் அவர்கள் ஜப்பானிலோ, ஜமைக்காவிலோ இல்லை.. நம்மைச் சுற்றி இருக்கிறார்கள். நம் நகரத்தில்..நம் மாநிலத்தில்…நம்முடன் இருக்கிறார்கள். இவர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் ஒரு உண்மையும், நெருக்கமும் உணரமுடிகிறது. முதலில் ரம்யா தேவி! – இவரை நான் ஒருமுறை அப்துல்லா அண்ணனின் அலுவலகத்தில் நடந்த பதிவர் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். சில நிமிடங்கள் பேசினோம். ஆனால்..இவ்வளவு சிறந்த பெண்மணி...

புத்தகக் காட்சி – நேற்று அப்படம் கடைசி

Image
     நேற்று (ஜனவரி 17) மதியம் சென்னை வந்து சேர்ந்ததால், புத்தகக் காட்சியின் கடைசி நாளை தரிசிக்கலாம் என்று முடிவெடுத்து, மாலை சென்று, பச்சையப்பன் கல்லூரி வாசலில் இருந்த பழைய புத்தகக் கடைகளை நோண்ட ஆரம்பித்தேன். முன்னரே நிறையபேர் நோண்டியிருப்பார்கள் போலிருக்கிறது. பெரிதாக ஒன்றும் சிக்கவில்லை. இருந்தாலும், முயற்சியைக் கைவிடாமல் தேடியதில், குஷ்வந்த்சிங் ஜோக்ஸ் – Rs.10 One Night @ call Center – Rs.20 பொதுக் கட்டுரைகள் – Rs.10 Tamil Nadu – A photographical Journey (Raghubir Singh) – Rs.150 அப்பாலுக்கு அப்பால் (நாவல்) – Rs.10 ஆகியவற்றை அள்ளிக்கொண்டு பு.காட்சிக்குள் நுழைந்தேன். நிறைவு நாள் என்ற பிரக்ஞையுடன் கூட்டம் அதிகமாக வந்திருந்தது. தமிழினியில் சிறிது நேரம் மேய்ந்துவிட்டு, ஞானபானு சென்றேன். அங்கு ஞானி அமர்ந்திருந்தார். அரைநிமிடப் பேச்சுக்குப்பின் அங்கிருந்த கூடங்குளம் பற்றிய புத்தகத்தை வாங்கிக்கொண்டு, பாதை பதிப்பகத்தின், ரணம் சுகம், நியான் நகரம் ஆகிய ஒலி நாவல்களைப் பார்த்து, கேட்டுவிட்டு அப்படியே நமது பதிவர் பஸ் ஸ்டாண்டான டிஸ்கவரி புக் பேலஸ் - 334ஐ...

தெர்மக்கோல் தேவதைகள் - இதுக்கு ஒரு....

Image
   ’தலைவரே! நான் BLOGல் எழுதின சிறுகதைகள் ’உ’ பதிப்பகம் மூலம் தொகுப்பா வருது! அந்த ராஜி, ஜெயா அதெல்லாம்… கதைகளின் தலைப்பையே புத்தகத்தலைப்பா வைக்காம, புதுசா ஒரு தலைப்பு வைக்கணும்..!! ஒரு டைட்டில் பிடிங்க! ‘ இதுதான் அன்பு நண்பர் கேபிள் சங்கர் என்னிடம் போனில் சொன்னது..! சில தலைப்புகளைச் சொல்ல ஆரம்பித்தேன்..! அவர் போக்குவரத்தில் இருக்கும்போது, வண்டியை நிறுத்திவிட்டு கேட்க ஆரம்பித்தார். மெழுகுப் பாறைகள் ம்ஹூம்.. தாழம்பூத் தாரகைகள் ம்ஹூம்.. பாதரசப் பறவைகள் ம்ஹூம் மகரந்தச் சாட்டைகள் ம்ஹூம்.. தீக்குச்சி தேவதைகள் ம்ஹூம்.. தெர்மகோல் தீபங்கள்! ம்…இதுல ஏதோ இருக்கே..! இதுக்கு முன்னாடி என்ன சொன்னீங்க? தீக்குச்சி தேவதைகள்! கரெக்ட்…அப்ப அதுல இருக்குற தேவதைகளைத் தூக்கி…இதுல போடுங்க…! எதுல தெர்மக்கோலிலயா? ஆமா.. தெர்மக்கோல் தேவதைகள்! இதான்..இதான் ஜி..! என் அடுத்த புக்கோட டைட்டில்! என்று சடுதியில் முடிவெடுத்துவிட்டார்..!! அப்படி உருவான தெர்மக்கோல் தேவதைகள் , சுகுமார் சுவாமிநாதனின் அற்புதமான வடிவமைப்பில் புத்தகமாக என் கையில...

நான்காம் நாள் நடப்புகள் – புத்தகக் காட்சி

Image
பத்தொன்பது நிமிடங்களாக, பச்சை விளக்கே போடாமல் பாம்புபோல் வாகனக்கூட்டத்தை நிற்கவைத்த, பச்சையப்பா கல்லூரிக்கருகிலேயே யோசித்திருக்கவேண்டும். இன்று அப்துல் கலாம் அவர்கள் வருகிறாரே உள்ளே நுழைவதற்குள் நாக்கு,பேக்கு என அனைத்து உறுப்புகளும் தள்ளிவிடும் என்று! வாகனத்தை உறுமிக்கொண்டே நின்று, நின்று, சென்று சென்று விருகம்பாக்கத்திலிருந்து, புத்தகச்சந்தையில் சென்று வாகனம் யதாஸ்தானத்தை அடைவதற்குள் 1 மணி நேரம் 42 நிமிடங்கள் ஆகியிருந்தது. மொத்த தூரம் 6.8 கிலோமீட்டர் என்று கூகிள் சொல்கிறது. இதே நேரத்தில் பைக்கில், புதுகையிலிருந்து மதுரை (109கி.மீ)சென்று விடலாம்.!! வாழ்க சென்னைப் போக்குவரத்து…!!       உள்ளே நுழைந்தவுடன் மீண்டும் புத்தகப் பட்டியல் எடுக்க ஆரம்பித்தேன். நேற்று விட்ட இடத்திலிருந்து தொடங்கினேன். மீண்டும் நான்கு வரிசைகள்! அப்போது பலாபட்டரை ஷங்கர் அவர்கள் வந்து லந்தினார்.  நான் நேற்று எழுதியிருந்த கூடங்குளம் விழித்தெழும் உண்மைகள் புத்தகம் வாங்கவேண்டும் என்றார். அதை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது, அந்த நூலின் ஆசிரியர் திரு.முத்துக்கிருஷ்ணன் அவர்களே ...

மூன்றாம் நாள் புத்தகக் காட்சி

Image
உண்மைத் தமிழன் அண்ணாச்சியுடன் உள்ளே நுழையும்போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. முரட்டுக் கூட்டம்..! உள்ளே சென்றதும் ,நேராக கிழக்கில் கால்கள் நின்றன. அப்புறம்தான் தெரிந்தது. பாரா இருக்கிறார். அவருடன் பேச ஆரம்பித்தால், பல்வேறு தகவல்கள் தந்தார். அப்போது ட்விட்டர் புகழ் சுப்புடுவும் வந்தார். Samsung, iPhone தொழில்நுட்ப சுவாரஸ்யங்கள் பகிர்ந்துகொண்டோம்.      அப்படியே ஒவ்வொரு கடையாக மேய ஆரம்பித்தேன். சில புத்தகங்களின்மீது நாட்டம் ஏற்பட்டபோது தலைப்பு-ஆசிரியர்-பதிப்பகம்-கடை எண்ணை எழுதிக்கொண்டேன். பொறுமையாக ஒரு பகல் நேரத்தில் வந்து தேவையான புத்தகங்களை வாங்க உத்தேசம்..! முன்னோட்டமாக எல்லாக்கடைகளையும் வரிசையாக பார்வையிடும் நோக்கம்! முழுமையாக பார்த்துமுடித்தபின் நாளை புத்தகப் பட்டியல் பதிவிடலாம் என்று இருக்கிறேன்.      இந்த புத்தகக் காட்சியின் மிகப்பெரிய ஆச்சர்யமாக, தொடங்கி மூன்றே நாட்களில் , காமிக்ஸ் விற்பனைசெய்துவந்த கடையில், எல்லா காமிக்ஸும் விற்றுத்தீர்ந்துவிட்டது. விஷ்வாவும், ரகுவும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார்கள். உண்மையில் இவ்வளவு காமிக்ஸ் ...

சென்னை புத்தகக் கண்காட்சி நாள் # 2

Image
முதல் நாள் கட்டுரையைத் தேடாதீர்கள். நான் போகவில்லை. புத்தகக் கண்காட்சியின் நாள்தான் தலைப்பு ! எனக்கு, இன்றுதான் முதல் நாள்! உள்ளே நுழையும்போதே…..பார்க்கிங்கில் நாம் டென்ஷனில் reflect ஆகக்கூடாதென்று, தானே reflect ஆகும் உடை அணிந்து ஏழெட்டு ஆட்கள் வண்டிகளை நிறுத்தி வலுக்கட்டாயமாக சீட்டு கொடுத்துக்கொண்டிருந்தார்கள். ஏற்கனவே கேபிள் எழுதியதைப் படித்திருந்ததால், பத்தை எடுத்து நீட்டி ‘இங்கயும் ஆரம்பிச்சுட்டீங்களா உங்க அராஜகத்தை’ என்று சொல்லி, அவன் முறைப்பை சோடியம் விளக்கொளிக்கு தின்னக் கொடுத்துவிட்டு வண்டியை நிறுத்தினேன். வாசலை நோக்கி நடக்கத்தொடங்கிய வினாடி, என்னைக் கடந்து சென்ற பைக்கை ஓட்டியவர் ’மஜக்’கென்று சென்றுகொண்டிருந்தார். அட..! இது நம்ப மாமல்லன் சாராச்சே என்று நினைத்து.. உள்ளேஏஏஏ செல்லும்வரை நடைத்துணைக்கு வேண்டுமே என்று அவருக்காக நின்று, பேசிக்கொண்டே உள்நுழைந்தோம். பேராசிரியர் ஞானசம்பந்தன் மேடையில் உரையாற்றிக்கொண்டிருந்தார். ‘நிலவு சொல்கிறது..ஏ..! மனிதா!’ என்று ஆரம்பித்தார். அடுத்த நொடி மாமல்லன் சார் ஒரு கமெண்ட் அடித்தார் பாருங்கள்..!! குபீர்ச் சிரிப்பிவிட்டேன். கமெண்ட...

அழிக்கப்பிறந்தவன் - இப்படியா பண்றது?

Image
      யுவகிருஷ்ணாவின் அழிக்கப்பிறந்தவன் நாவல் நேற்று மாலை ’உ’ பதிப்பகத்தால் வெளியிடப்பட்டவுடன் உடனே படிக்கவேண்டுமென்ற ஆவல் எனக்கிருந்தது. ஏனெனில், அவரது வலைப்பூவில் முதல் 6 அத்தியாயங்களை எழுதியிருந்தார். அந்த சுவாரஸ்யம் என்னை, புதிதாக வாங்கிய சட்டையை உடனே அணிய ஆர்வம் காட்டும் சிறுவனைப்போல் ஆக்கியிருந்தது. அதற்கேற்றார்ப்போல் இரவே எனக்கு வானொலி ஒலிபரப்பு இருந்தது. அது இரவு 11 மணிமுதல் அதிகாலை 3 மணிவரை இருக்கும். அந்த நான்கு மணி நேரங்களும், திரைப்படப்பாடல்களை ஒரு சிறு முன் ஜோடனையுடன் ஒலிபரப்புவது என் வழக்கம்.!        பாடல்களை வரிசையாக முன்னரே எடுத்துவைத்துவிட்டால், பின்னர் ஒவ்வொரு பாடலுக்கிடையிலும் பேசினால்மட்டும் போதும். ஆக..ஒவ்வொரு பாடல் இடைவெளியிலும் ‘அழிக்கப்பிறந்தவனைப் படித்துவிடலாம் என்று எடுத்துச்சென்றேன்.      ஏற்கனவே படித்த ஆறு அத்தியாயங்களிலும் வேறு ஏதாவது சேர்த்திருக்கிறாரா என்ற ஐயம் இருந்ததால், முதலிலிருந்து ஆரம்பித்தேன்.       இயக்குநர் ஷங்கரின் ‘நண்பன்’ படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆ...