Sunday, September 28, 2008

சஞ்சய்க்கு என் கடுமையான கண்டனங்கள்!

http://podian.blogspot.com/2008/09/blog-post_5240.html


சஞ்சயின் இந்தப்பதிவுக்கு எதிர்ப்பதிவு!


அட....அப்படியா?

பொதுஇடத்தில் புகைபிடிக்கும்போது 
பிடிபட்ட சஞ்சய் :   ஹலோ! பொது எடத்துலதானே புகைபிடிக்கக்கூடாது. என் வாயிலதானே பிடிக்கிறேன்.
அது என்ன பொது எடமா? அது என் சொந்த எடம் சார்!

சுரேகா போன்ற ஒரு லொள்ளுபிடித்த போலீஸ்காரர்:

அப்புடியா கண்ணு! நீ புடிக்கிறியே வாய்... ! அது இப்ப பொது எடத்துலதானே இருக்கு! தனியா பிடிக்கணும்னா
வீட்டிலேயே வாயை வச்சுட்டு வந்திருக்கணுமப்பு!

இப்ப உன்னை விட்டுர்றேன் உன் வாயை அரெஸ்ட் பண்றேன். அதை என் கூட அனுப்பி வை! 


இப்படி யோசிங்கப்பு! இதை சொல்லிக்குடுக்க விட்டுட்டீங்களே ஸ்ரீமதி!

அப்துல்லா என்ன செய்தார்?

எவ்வளவோ
கையில் இருந்தும்
செய்ய மனமில்லாதவர்கள் மத்தியில்
ஒரு சதுரங்க வீராங்கனைக்கு
சகஜமாக உதவிகள் செய்து
எங்கள் அத்துனை பேரின் மனத்திலும்
அழியா இடம்பிடிக்கும்
அப்துல்லாவே!

நீங்கள் என்றென்றும்
அன்புடன்
நட்புடன்
அளவில்லா செல்வத்துடன்
நீண்ட ஆயுளுடன்
நிறைவான மகிழ்ச்சியுடன்
ஆரோக்கிய உடல்நிலையுடன்
நீடூழி வாழ்க வாழ்க!

அத்தனை வாழ்க ! வும்
உங்களுக்காகவும்
இன்னும் உங்கள்
உதவிக்காகக்காத்திருக்கும்
இயலாதவர்களுக்காகவும்!

இறையருள் என்றும்
உங்களிடம் நிலைக்கட்டும்!
இயற்கையும் உங்களுக்கு
எல்லாமும் அளிக்கட்டும்!
நண்பர் புதுகை அப்துல்லா....
தலைப்பில் அற்புதமான கட்டுரை ஒன்றை
எழுதியிருந்தார்.
அதில் வெண்பூவின் பின்னூட்டத்தில்
இதைப்பற்றி குறிப்பிட்டிருந்தார்.

அதன் பிரதிபலிப்புதான் இந்தப்பதிவு!


Tuesday, September 23, 2008

மும்பை என் உயிர்- ஒரு வழியா முடிச்சாச்சு!

ரொம்ப லேட்டா வர்றதுக்கு மன்னிக்கணும் ( இப்ப வரலைன்னு யாரு கவலைப்பட்டாங்கன்னு இவ்வளவு பில்டப்பு?)

மும்பை மேரி ஜான் - இதுதான் படத்தோட பெயர்!

முதல் மற்றும் இரண்டாம் பாகங்களைப்படிச்சுடுங்க!


ஒவ்வொரு கதாபாத்திரமும் தன் தன்மையை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

சுரேஷாக வரும் கேக்கே மேனன். !

ஒவ்வொரு காட்சியிலும் மனுசன் பின்னி எடுத்திருக்கிறார். அதுவும், யூசுப்பை தேடும் காட்சிகளில், அவரது வீட்டுக்குப்போய், யூசுப்பின் அம்மாவிடம் பெயரை மாற்றிச்சொல்வதும், அவர்கள் கொடுக்கும் இனிப்பை வாங்கத்தயங்குவதும், அந்த சந்தின் வழியே செல்லும்போது ஏன் முகம்மது ரபி தான் கேட்பார்களா? கிஷோர்குமார் கேட்கமாட்டார்களா? என்று ஒவ்வொன்றிலும் சந்தேகக்கண்ணோடு பார்க்கும்போதும், கடைசியாக யூசுப்பின் அன்பை 
மதித்து யதார்த்தமாக மனம் மாறும்போதும் அழகாக நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.


தாமஸாக வரும் இர்பான் கான்.!

மனிதருக்கு அப்படி ஒரு முகபாவத்தை இயற்கையே கொடுத்திருக்கிறது. அந்த இயலாமை நிறைந்த குடும்பத்தலைவனாக ஜொலிக்கிறார். பெரிய ஷாப்பிங் மாலில் எஸ்கலேட்டரில் ஏறமுடியாமல் குழந்தையும், மனைவியும் தடுமாறி ஏறும் காட்சி, இன்றும் ஸ்பென்ஸரில் தடுமாறும் சில கிராமக்குடும்பங்களை கண்முன் நிறுத்துகிறது. தன் இயலாமையை மிக அழகாக நடிப்பில் வெளிப்படுத்தியிருக்கும் அதே நேரம், வெடிகுண்டுப்புரளியை ஏற்படுத்தி ,அவர்களது அலறலையும், பீதியையும் கண்டு ரசிக்கும் குரூரமும் , என்னையை வெளில தள்ளினீங்கள்ல? இப்ப எப்புடி இந்தக்கட்டடத்தையே ஒரு ரூபாயில் அலறவைச்சேன்? ' என்று கேட்காமல் கேட்கும் முகபாவத்தில் கலக்கியிருக்கிறார்.

ரூபாலியாக வரும் சோஹா அலிகான்!

ரங் தே பஸந்தியில்....அவர் கூறும் 'மார் டாலோ ' எனும் அந்த ஒரு வசனத்தையே திரும்பத்திரும்ப பார்த்த ஆர்வம், இன்னும் என்னைவிட்டுப்போகவில்லை!  இதில் அவருக்கு சோக முகம்தான். ஆனாலும் தானே பேட்டிகொடுக்கவேண்டியிருக்கும் என்று கனவிலும் நினைத்திருக்கமாட்டோம் என்று  வெளிப்படுத்தும் அழுகையும், தன்னை நேயர்களுக்கு முன் அறிமுகப்படுத்திக்கொள்ளும் முயற்சியும், சோஹா - சோகவாக இருந்தாலும், நன்கு செய்திருக்கிறார்.


சுனிலாக வரும் விஜய் மௌரியா

நேர்மையான போலீஸாக வலம் வர எண்ணும்போதும், போதைப்பொருள் வைத்திருந்தவனைப்பிடித்தும், அவனை மேலதிகாரி விட்டுவிட , கோபத்தில் 
துடிக்கும்போதும் மிளிர்கிறார். தன்னால் ஒரு குற்றவாளியையும் பிடிக்கமுடியவில்லையே என்று கலக்கமடையும்போதும்,மனைவியிடம் பேசும்போதும் அவர் ஒரு மேடை நாடகத்தயாரிப்பு என்பதை வெளிச்சப்படுத்துகிறார். உள்ளத்தில் நேர்மையை மட்டுமே கொண்ட ஒரு 
போலிஸ்காரனுக்கு எப்படிக்கோபம் வரும் என்பதை அழகுற வெளிப்படுத்தியிருக்கிறார்.


நிகில் அகர்வாலாக வரும் மாதவன்.

மாதவனை ஒரு பொறுப்பில்லாத மனிதனாக, ஜாலியான ஆளாக நாம் இங்கு காட்டிக்கொண்டிருக்க, அங்கு அவரை மிகவும் நன்றாகப் பயன்படுத்தி யிருக்கிறார்கள். ரயில்வே ஸ்டேஷனில் ப்ளாஸ்டிக் பையை பயன்படுத்தக்கூடாது என்று கடைக்காரருக்கு புத்தி சொல்வதில் 
இருந்து, ஒவ்வொரு இடத்திலும் அவரது சமூக அக்கறையை மிகவும் எளிமையாக காட்டியிருக்கிறார்கள். மாதவனும் - இதெல்லாம் எனக்கு சகஜம்- 
என்பதுபோல்தான் நடித்திருக்கிறார். அவர் முகத்தில் ஏற்படும் பீதி உண்மை எனவே தோன்றுகிறது. நண்பனிடம் வாதிடும்போதும், வெளிநாட்டு 
வாழ்க்கயைப்பற்றிய தன் பார்வையை வெளிப்படுத்தும்போதும் அழகாக நடித்திருக்கிறார். கடைசியில் மனதில் ஒரு பயமும், வெறுப்பும் கலந்த 
நிலையில் வேறு வழியே தெரியாமல் மீண்டும் ரயிலில் ஏறும் காட்சியில் வெளுத்துக்கட்டியிருக்கிறார். 


துக்காராம் பட்டீலாக வரும் பரேஷ் ராவல்

அய்யா! நீர் புலவர் ! என்று தருமி சொல்வதுபோல் ...அய்யா நீர் நடிகர்! என்று கத்த வேண்டும்போல் உள்ளது. உண்மையில் கொஞ்சம் குண்டான பரேஷ் ராவல் இந்தப்படத்துக்காக தன் எடையைக்குறைத்துக்கொண்டாராம்.  தானும் போலீஸில் சேர்ந்தபோது இப்படித்தான் நடந்தது என்று விளக்கிவிட்டு, மேலதிகாரி போதைப்பொருளை, இல்லையென்று மறுத்து அது சர்க்கரை என்று சொன்னதற்கு அப்படியென்றால் டீயில் போட்டுக்குடியுங்கள் என்று கூறிவிட்டு வந்ததை மிகவும் பொறுமையாக சுனிலிடம் விளக்கும்போதும், சுரேஷை வழியில் பார்த்து ஜீப்பில் ஏற்றிக்கொண்டு செல்லும்போது, அவருக்கு நிதர்சனத்தை உணர்த்தும்போதும் , கடைசியாக ஓய்வு பெறும் நாளில், தன் தந்தை தன்னைப்பற்றி சொன்னதையும், தான் இன்றுவரை போலீஸில் ஒரு பெரிய கேஸையும் பிடித்ததில்லை என்று சொல்லும் போதும் சிம்மாசனம் போட்டு அமர்கிறார். சுனிலிடம் அவர் காட்டும் அன்பில் நம்மையும் சேர்த்து வெல்கிறார்.


இயக்குநர் நிஷிகாந்த் காமத்

நிறைய திரைப்பட பழமைகளை உடைத்திருக்கிறார். முதலில் இயல்பான திரைக்கதை! கதாபாத்திரங்களை கதையின் ஓட்டத்திலேயே உலவ விட்டது. 
நாம் படத்தில் சந்திக்கும் மனிதர்கள் ஒருவருக்கொருவர் எந்தத்தொடர்பும் இல்லாமல் இருப்பதை மிகவும் சாமர்த்தியமாகக் கையாண்டது- கதையின் 
தேவைக்கேற்ப பட்டீல், சுனில்,சுரேஷ், தாமஸ் இவர்களை ஒரு காட்சியில் மட்டும் ஒன்றாகக் காட்டிவிட்டு அந்தத்தொடர்பையும் எளிமையாக்கியது. 
குண்டுவைத்தவனை தேடுகிறேன் பேர்வழி என்று துப்பறியும் கதையாக மாற்றாமல் இருந்தது. பேரிடர் நேரும்போது இப்படித்தான் இருக்கவேண்டும் 
என்று கருத்துச்சொல்லி கலாய்க்காமல் இருந்தது. இயல்பாக சில மனிதர்களின் வாழ்க்கையை அவர்களது மனநிலையுடனே பார்த்து அதை எங்களையும் போகிறபோக்கில் பார்க்கவைத்தது.அனைத்து டப்பாத்தனங்களையும் ஓரங்கட்டியது ( டான்ஸ், சண்டை, பாட்டு ) வெல்டன் டைரக்டர் !இப்படிப்படமெடுங்கள் சார் ! எங்கள் ரசனையும் காலப்போக்கில் மாற்றிக்கொண்டு நாங்களும் இம்மாதிரிப்படங்களை ஆதரிக்கிறோம். இசை, 
ஒளிப்பதிவு என்று எல்லாமே உறுத்தலில்லாமல் இருப்பது அழகு!

இவ்வளவு அழகாக படைத்திருக்கும் ஒரு படைப்பின்மேல் அன்புதான் மேலிடுகிறது. குறைகளோட ஏத்துக்கிறதுதான் அன்பாமே! அப்புறம் என்னங்க!
சிறு சிறு குறைகள் இருந்தாலும், அதோட ஏத்துக்கிட்டு, பாராட்டுவோம்.

ஒரு நல்ல படைப்பைப்பார்த்த திருப்தியுடன்.....


Wednesday, September 17, 2008

மும்பை என் உயிர் - ஒரு பார்வை - பாகம் இரண்டு

மும்பை மேரி ஜான் படப்பார்வை - முதல் பாகம் இங்கே


மாதவனுக்கு ரயில் என்றாலே அலர்ஜியாகிவிடுகிறது. டாக்ஸியில் செல்கிறார். அமெரிக்காவில் வாழ்வது பற்றி நண்பர் சொல்ல, அதை முதலில் மறுத்தவர், பின்னர் யோசிக்க ஆரம்பிக்கிறார். ஆனாலும் தேச விசுவாசம் போகாமல் இருக்கிறார். மனைவிக்கு பிரசவத்துக்கு நாள் நெருங்குகிறது.

ரூபாலி வேலைபார்த்த டிவி கம்ப்பெனி சீனியரும் இன்னொரு நிருபரும் அவளைச்சந்தித்து உன் வருங்காலக்கணவர் இறந்தபோது உன் மனநிலை பற்றி ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என்று கூற, இவளுக்கு அழுகையாக வந்தாலும், ஒத்துக்கொள்கிறாள்.  பின்னர் கேமராவுடன் வீடே அதகளப்பட்டு பேட்டி கொடுக்க ஆரம்பிக்கும்போது , அழுகை வந்து, மீண்டும் மீண்டும் பேச ஆரம்பித்து 22 டேக்குகள் வாங்குகிறாள். அந்தச்சோகம் அப்படியே வியாபாரமாக்கப்படுகிறது. ரூபாலி பனீ ரோத்தாலி - ரூபாலி ஆனாள் அழுகுணி என்ற தலைப்பில் நிகழ்ச்சியாக வருகிறது.

சுரேஷ் ஒரு நாள் நடந்து வந்து கொண்டிருக்கும்போது , அவனால் தள்ளிவிடப்பட்ட போலீஸ்காரர் பட்டீல் , அவனைத்தன் ஜீப்பில் ஏற்றிக்கொண்டு , வாழ்வில் எல்லோரையும் சந்தேகப்படக்கூடாது.  எல்லோரும் பதிலுக்கு பதில் என்று அடிக்கத்தொடங்கினால் என்ன ஆகும் என்று நிதானமாக 
எடுத்துரைத்துவிட்டு, அவனது நிறுத்தம் வந்ததும் இறக்கிவிட்டுவிட்டு சென்றுவிடுகிறார். 

தாமஸ், இரண்டு பேர் பேசிக்கொண்டிருப்பதை வைத்து ஒரு யோசனைக்கு வந்து, ஊரில் உள்ள எல்லா மால்களிலும் வெடிகுண்டு இருப்பதாய் ஒரு ரூபாய் தொலைபேசி நிலையத்திலிருந்து புரளியைக்கிளப்பி விட்டு , அதிலிருந்து மக்கள் அலறி ஓடுவதை வேடிக்கை பார்த்து மகிழ்கிறான். அப்படி ஒரு மாலில் 
புரளிகிளப்பிவிட்டுவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஒரு வயதானவருக்கு மாரடைப்பு வர, அவருக்கு என்ன ஆயிற்றோ என்று பதைபதைத்து மருத்துவமனை வரை சென்று நிலையை அறிகிறான். அன்றே தான் செய்தது எவ்வளவு தவறு என்று வருந்தி, மனைவியிடம் சொல்லி 
அழுகிறான்.

வேலையில் நேர்மையாக இருக்கமுடியவில்லையே என்று சுனில் காதம் தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொள்ள முயல்கிறார். அவருக்கு பட்டீல் அறிவுரைகள் சொல்லி தேற்றுகிறார். இந்நிலையில் பட்டீல் பணி ஓய்வு பெறும் நாள் வருகிறது. அன்று அவர் சக போலிஸ்காரர்கள் முன்னிலையில் பேசுகிறார். இத்தனை ஆண்டுகள் நான் போலீஸ் வேலையில் இருந்து பெரிதாக ஒன்றுமே 
செய்யவில்லை! என்று அழுகிறார்.

மாதவனின் மனைவிக்கு பிரசவ வலி எடுத்ததால் மருத்துவமனைக்கு அவளை கூட்டிக்கொண்டு சென்றுவிடுகிறார்கள். அந்நேரத்தில் மாதவன் அலுவலகத்தில் இருக்க, டாக்ஸியில் போகமுடியாத நிலை
- ட்ராபிக் ஜாஸ்தி சார்..எவ்வளவு வேகமா போனாலும் ஒன்றரை மணி நேரம் ஆகும். வேணும்னா ட்ரெயின்ல போங்களேன். இருபது நிமிஷத்துல போயிடலாம்- டாக்ஸி டிரைவர் சொல்ல...வெடிகுண்டு விபத்துக்குப்பிறகு முதன் முதலில் ட்ரெயினில் ஏறுகிறார்.

சுரேஷ் டீக்கடையில் அமர்ந்திருக்கும்போது , இவரால் சந்தேகப்படப்பட்ட யூசுப் வந்து, இவர் எதிரிலேயே அமர்ந்து மிகவும் அன்பாகப்பேசுகிறான். சகஜமாக நண்பனாக பாவிக்கிறான். மேலும் பாபாவின் படத்தையும் பிரசாதங்களையும் இவனுக்குக்கொடுக்கிறான். சுரேஷ் புரிந்துகொள்கிறான். உடனே, இன்னொரு முஸ்லீம் நண்பர் சொன்ன அந்த 50 கம்ப்யூட்டர் ஆர்டரை ஏற்றுக்கொள்கிறான்.


ரூபாலி தன்னைச்சுற்றி நடக்கும் விஷயங்களை கவனித்துக்கொண்டே வெளிவருகிறாள். ஒரு சாலையில் நடந்துவந்துகொண்டிருக்கிறாள்.

பணி ஓய்வு பெற்ற பட்டீலைக்கட்டிப்பிடித்துக்கொண்டு , சஸ்பெண்ட் செய்யப்பட்ட சுனில் அழுகிறான்.அவர், அவனுக்கு அப்போதும் ஆறுதல் சொல்கிறார்.

மாதவன் ஒரு இனம்புரியாத பயத்துடன் ரயிலில் பயணிக்கிறார்.

சுரேஷ் தன் நண்பர்களுக்கும் யூசூபை அறிமுகப்படுத்துகிறான்.

தாமஸ் மருத்துவமனையிலிருந்து குணமாகி வெளிவரும் அந்தப் பெரியவருக்கு ஒரு ரோஜாப்பூ கொடுத்து வழியனுப்பி நிம்மதியாகிறான்.

எல்லோரும் தத்தமது இடத்தில் மௌனமாக நிற்கிறார்கள்.  

தொழில்நுட்பக்கலைஞர்களின் பெயர்களுடன் திரை இருள்கிறது.


என் பார்வை அடுத்த பாகத்தில் ...............................(என்ன செய்வது? உங்களை வெறுப்பேற்றக்கூடாது என்றுதான்..) 

---------------------------------------இதைவேற சொல்லிடு! 

Tuesday, September 16, 2008

மும்பை என் உயிர் - ஒரு பார்வை


விரும்பி, திரைப்பட விமர்சனம் என்று அழைப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதாலும், நான் ஒரு பெரிய விமர்சகன் இல்லை என்பதாலும்....இதை ஒரு திரைப்படப்பார்வை என்று வைத்துக்கொள்ளலாம். ( இதுக்கே இவ்வளவு பில்டப்பா?)


அந்தப்படத்தின் போஸ்டர்தான் என்னை பார்க்கத்தூண்டியது. மேலும் அதன் தொழில்நுட்பக்கலைஞர்கள் மற்றும் நடிகர்களின் பட்டியல்.

இயக்குநர் நிஷிகாந்த் காமத் ! நமது மாதவனின் நண்பர். "டோம்ப்வில்லி பாஸ்ட்" என்ற படத்தின் மூலம் புகழடைந்தவர். 'எவனோ ஒருவன்' என்று  அதை தமிழில் பேசவைத்தவர்.

மும்பை நகரத்தில் வெவ்வேறு தளங்களில் சில மனிதர்களும் ஒரு குண்டுவெடிப்புக்குப்பின் அவர்களது வாழ்வும், மனநிலையும்தான் கதை!

ஒரு டீக்கடையில் வந்து கூடும் சில நண்பர்கள்..அவர்களில் சுரேஷும் (கே கே மேனன்) ஒருவர். அவருக்கு எப்போதுமே இஸ்லாமியர்கள்மீது ஒரு 
இனம்புரியாத சந்தேகமும், வெறுப்பும். ஆனால நண்பர்களிடம் சகஜமாகப்பழகும் ஒரு கணிப்பொறி விற்பனையாளர். 
"மூணு மாசமா ஒரு கம்ப்யூட்டர்கூட விக்கலை" என்று நண்பர்கள் டீக்காக காசு கேட்கும்போது சொல்கிறார்!


ரூபாலி ஒரு டிவி நிருபர்.  ( சோஹா அலிகான் ). - தன் வருங்காலக்கணவனிடம் தான் எடுத்த பேட்டிகளைக்காட்டி பெருமையடித்துக்கொள்ளும் கதாபாத்திரம். கணவனைக்காணவில்லை என்று கதறும் ஒரு பெண்ணிடம் ' இப்போ எப்படி உணர்றீங்க? ' என்று கேட்கும் அவளைப்பார்த்து...அப்படி கேட்பது நியாயமில்லை என்று சொல்லும் அவளது வருங்காலக்கணவன். 

பெரிய நிறுவனத்தில் நல்ல பதவியில் இருந்தாலும் , தேசத்தின் நலம் கருதியும் , நகரப்போக்குவரத்துக்கு தாமும் இடைஞ்சலாக இருக்கக்கூடாது என நினைத்து கார் வைத்துக்கொள்ளாமல், ரயிலில் -முதல் வகுப்பில் பயணம் செய்யும் நிகில் அகர்வால் (நம்ம மாதவன்)! ரயில்வே ஸ்டேஷனிலும் ப்ளாஸ்டிக் பையில் ஏன் கொடுக்கிறாய்? என்று கடைக்காரனிடம் கடிந்துகொள்ளும் பொதுநலவாதி! அவருக்கு ஒரு கர்ப்பிணி மனைவி!

போலீஸ் வேலையில் சேர்ந்ததும், நேர்மை, நியாயம் என்று பேசித்திரியும் சுனில் காதம் ( விஜய் மௌரியா ) . அவருக்கு நிதர்சனம் இது இல்லைப்பா!
இது ஒரு சினிமா. பாத்துக்கிட்டுத்தான் இருக்கணும். நடிக்கணும்னு ஆசைப்படக்கூடாது! என்னப்பார் ! நான் ஏதாவது செய்றேனா என்று மிகவும் 
நிதானமாக நடந்து, பேசும் சீனியர் போலீஸ்காரரான துக்காராம் பட்டீல் ( பரேஷ் ராவல்)

சைக்கிளில் சென்று தெருத்தெருவாக காபி விற்று பிழைப்பு நடத்தும் தமிழர் தாமஸ் ( இர்பான் கான்) - எது நடந்தாலும் கண்டுகொள்ளாமல் , முகத்தில் உணர்ச்சியைக்காட்டாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று போய்க்கொண்டு இருக்கும் ஒரு மிக மிக சராசரி மனிதன். அவனது 
அதிகபட்ச ஆசையே வார இறுதியில் மனைவி , குழந்தையுடன் , பெரிய மால்களில் சென்று விண்டோ ஷாப்பிங் செய்வதுதான்.! ஒரு செண்ட்டை 
எடுத்து மெதுவாக மூவரும் அடித்துக்கொள்ள,  பார்த்த கடைக்காரன் பத்தாயிரத்திச்சொச்சத்துக்கு அதை வாங்கச்ச்சொல்லி வற்புறுத்த, முடியாமல் 
காபி செண்ட் இருக்கா என்று கேட்டு அந்த மாலிலிருந்தே வெளித்தள்ளப்படும் பரிதாபமான ஜீவன்!


ஒரு நாள் மாதவன் ரயிலில் செல்வதற்காக காத்திருக்கும்போது ஒரு பழைய நண்பரைச்சந்திக்க, அவர் வலுக்கட்டாயமாக இரண்டாவது வகுப்பில் 
தள்ளிக்கொண்டு போக , ரயில் கிளம்பிய சில நிமிடங்களில் முதல் வகுப்புப்பெட்டியில் குண்டு வெடித்துவிடுகிறது. பலர் இறந்துவிடுகிறார்கள். அந்த அதிர்ச்சியிலிருந்து மாதவனால் மீளவே முடியவில்லை.

அதே சமயத்தில் அங்கு காயம்பட்டவர்களுக்கு சுரேஷ் உதவுகிறார். மேலும் இதற்கெல்லாம் காரணம் டீக்கடைக்கு அடிக்கடி வந்து செல்லும் 
யூசூப் தான் என்று சந்தேகித்து அவரைப்பற்றி துப்பு துலக்குகிறார். இடையில் ஒரு இஸ்லாமியர் மூலம் கிடைக்கவிருக்கும் ஐம்பது கம்ப்யூட்டர் 
ஆர்டரையும் தேவையில்லை என்று நினைக்கிறார்.

ரூபாலியின் வருங்காலக்கணவனை , குண்டுவெடிப்புகளுக்குப்பிறகு காணவில்லை. செய்தி கொடுப்பதற்காக சென்ற அவருக்கு இது தெரியவர, எல்லா மருத்துவமனைகளிலும் தேடி, ஒரு மருத்துவமனையில் அவர் இறந்துவிட்டாரென்று தெரிந்தவுடன் ஸ்தம்பித்துப்போகிறார்.


போலீஸ்காரர்களான பட்டீலும், சுனிலும் வெவ்வேறு இடங்களில் -குண்டு வச்சவன் யாருன்னு கண்டு பிடிச்சீங்களா?- என்று பொது மக்கள் கேட்கும் கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். ஒரு சூழலில் சுரேஷ், ஒரு இஸ்லாமியப்பெரியவரை பிடித்து விசாரித்துக்கொண்டிருப்பதைக்கண்டு, 
அவரிடம் பேச, மேனன் கோபமாக பட்டீலைத்தள்ளிவிட்டு விட்டு நண்பர்களுடன் ஓடிவிடுகிறார். சுனிலுக்கு பயங்கரக்கோபமாகி, அதைப்பார்த்துக்கொண்டு தெருவோரமாய் காபி விற்றுக்கொண்டிருந்த தாமஸை மிரட்ட,  ஒன்றும் செய்ய வேண்டாமென்று பட்டீல் அவரை கூட்டிக்கொண்டு சென்று விடுகிறார்.

                                                  (மீதி அடுத்த பாகத்தில்)


டிஸ்கி : படம் பாத்ததே லேட்டு.! அதிலும் அதைப்பத்தி எழுதுறதுக்கு அடுத்த பாகமான்னு திட்டாதீங்க! நீங்க சீக்கிரம் படிச்சுப்புட்டு மத்த வேலையைப்பாக்கலாமுல்ல!  ஹி..ஹி...

Sunday, September 7, 2008

சஞ்சய்க்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்!பொடியன் என்று
பெயரிட்டுக்கொண்டு
பொறுப்பாக பதிவுகள் 
இட்டுக்கொண்டு
அரிசி விளைவதாகட்டும்
அரசை விழைவதாகட்டும்
பெண்கள் நலம் பேணும்
பெரிய செயல்களாகட்டும்

திறம்பட உறவு பேணும்
உத்தம்ர் சஞ்சய் காந்தி
செப்டம்பர் ஏழாம் நாளில்..
இன்றுதான் பிறந்தாராம்!

அத்தகைய நாளுக்கும் நன்றி சொல்லி
சஞ்சய்க்கு வாழ்த்தும் சொல்லி

எந்நாளும் எப்போதும்
தப்பாமல் மகிழ்வு கொண்டு
செல்வங்கள் எல்லாம் கண்டு
சிறப்புற வாழ்க என்று
அன்புடன் இந்த நண்பனும்
வாழ்த்துகின்றேன்.!

Tuesday, September 2, 2008

உள்ளக்குழந்தை எங்கே?

எல்லா அசைவிலும்
இயல்பு காட்டி
எல்லாச் செயலையும்
இனிக்கச் செய்து
எல்லோர் உள்ளமும்
கொள்ளை கொள்ளும்
குழந்தைகள் என்னும்
குதூகலச் சிற்பிகள்!

அவை
பசை எடுத்துத் தின்னும்
இசை கேட்டால் ஆடும்
கை நீட்டி ஓடி வரும்
கைதட்டலில் உலகம் தரும்!
இருப்பதை தர மறுக்கும்!
இல்லாததை பெற நினைக்கும்!

அதிகம் அழுது பார்க்கும்!
அதிலும் தன் அழகு காட்டும்..!

புத்தகம் கிழித்துவிட்டு
புதிதாகச்சிரித்துவைக்கும்
பொக்கைவாயெடுத்து
பொருளெல்லாம் நக்கிப்பார்க்கும்!

வா வென்று சொல்பவரின்
வயதைப்பார்க்காது
அழைக்கும் மனிதரின்
அழகு பார்க்காது.
உரிமையாய் தூக்கினால்
உறவு நோக்காது..!
எல்லோரும் அதற்கு
எல்லாம்தான்!
யாரையும் பிரித்துப்பார்க்க
குழந்தைகள் அறியாது.

குற்றம் கண்டுபிடித்து
குறைசொல்லி மறுகாது!
சுற்றம் எல்லோரிடத்தும்
சுத்தமாய்ச் சிரித்துவைக்கும்!

அத்தகைய குழந்தையாய்
அழகாய்த்தான் இருந்திருந்தோம்...
வளர்ந்து போய்த்தான்
குழந்தை எண்ணம் தொலைத்துவிட்டோம்..!
உள்ளக்குழந்தை எங்கே என்று
உலகம் முழுதும் தேடுகின்றோம்!

எதற்கெடுத்தாலும் பெரியவராய்
எப்போதும் நினைக்கின்றோம்!
அதில் நம் தன்முனைப்பை
முன்னேற விடுகின்றோம்.
அடுத்தவர் தவறு செய்தால்
தண்டனைக்கு அலைகின்றோம்.
நம் தவறை தப்புவிக்க
உலகையே கெஞ்சுகின்றோம்.
சிரிக்காமல் இருப்பதற்கு
சிறப்புப்பயிற்சி எடுக்கின்றோம்!


இத்தனையும் இருந்தாலும்
இப்போதும் ஒரு தருணம்
நம்மையும் மறக்கச்செய்யும்..!

நண்பனின் வீட்டு விழா,
நயமான இசைமுழக்கம்,
துள்ள வைக்கும் நடனங்கள்
துணிவில் கிடைத்த வெற்றிகள்
குழந்தை பிறந்த தருணங்கள்
போட்டி வென்ற சாதனைகள்
பெரியோரின் சந்திப்புகள்
வித்தைக்குக்கிடைத்த விருதுகள்

என எத்தனையோ நிகழ்வுகள்
உங்கள் உவகை கூட்டியிருக்கும்!

அவ்வாறான நிகழ்வுகளில்
சில நிமிடம் நீங்கள்
வயது மறந்து குதூகலித்து
குழந்தையாகவே மாறியிருப்பீர்கள்!

அத்தகைய தருணங்களை
அசைபோட்டுப்பாருங்கள்
குழந்தையாய் மட்டும் எப்போதும்
அடிக்கடி மாறுங்கள்!

தெரியாதவரைப்பார்த்து
சிரிக்கும் மனோபாவம்
சீக்கிரம் வந்துவிடும்.!

தெரிந்தே தவறு செயினும்
அறிந்தே மன்னிக்கும்
அற்புதம் தானாக அமைந்துவிடும்.

அடுத்தவர் துயர்கண்டு அப்படியே
உருகும் உள்ளம் அவசியமாய்
வந்துவிடும்.

ரசனையின் உச்சத்தை
சிரமமின்றித்தொடமுடியும்.!

உங்கள் உள்ளக்குழந்தையை
உசுப்பேற்றிப்பாருங்கள்
எழுந்து நின்று ஆர்ப்பரிக்கும்
இதய மகிழ்ச்சி வாங்குங்கள்!

LinkWithin

Related Posts Plugin for WordPress, Blogger...